#Reading_Marathon_2020_75
ID #RM091 Book no:- 40/75
நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தொகுப்பு:- ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ்
சொல்லுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் எத்தனை எளிதான சொல்லாக இருக்கிறது இந்த சிறுகதை எனும் சொல். ஆனால் செயலில் இவைகள் கண்ணிவெடியைப் போன்றவை. அவைகளைத் தீண்டாத வரையிலும் அவைகள் வெடிப்பதேயில்லை. அதிலும் நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பல கண்ணிவெடிகளின் வீரியமிக்கதென உணர்கிறேன்.
நாஞ்சில் நாடனை வாசிக்க வேண்டுமென்ற தாகம் சில மாதங்களாகவே இருந்தது. ஆனால் எங்கிருந்து துவங்குவதென தயக்கமும் இருந்தது. அந்தத் தயக்கதுடனேயே தான் வாசிக்கவும் ஆரம்பித்தேன். முடித்தபிறகு நாஞ்சில் நாடனை அறிந்த கொள்ள இந்தத் தொகுப்பு தான் மிகச்சரியான புத்தகமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஏனென்றால் 1970களில் ஆரம்பித்த நாஞ்சில் நாடனின் இலக்கியச்சிந்தனை 2015 வரை மெல்ல மெல்ல எப்படி வளர்ந்திருக்கிறது என ஒரு கோட்டுவிளக்கப்படம் போல் கண்ணாடி போட்டு காட்டுகிறது இந்த புத்தகம்.
14 சிறுகதைகளில் (அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது) எனும் கடைசிச் சிறுகதையைப் பற்றி முதலில் பார்ப்போம். பங்காளித் தகராறில் நிலம் பிரிக்கப்படுகிறது. அந்த நிலத்தில் வீற்றிருந்த அவர்களின் குடிதெய்வமான புலைமாடன், புலைமாடத்தியின் பீடங்கள் பெயர்க்கப்படுகிறது. அந்த தெய்வங்கள் அங்கிருந்து கிளம்பி வேறு போக்கிடம் நோக்கி பயணிப்பதாய் கதை. கடைசியில் அந்த தெய்வங்கள் “கும்பிடறதுக்கு தெய்வம் வேணுமோ தெய்வம்”னு கூவிக்கொண்டே அலைவதாய் முடித்திருப்பார். இந்தக் காலத்துக்கு மிகவும் ஏற்ற கதை. தெய்வங்கள் அண்டக்கூட ஒரு இடமில்லாமல் பல இடங்களை மனிதர்களும், மனிதர்களின் குப்பைகளும் இந்த பூமியை எவ்வாறு ஆக்கிரமித்திருக்கிறது எனும் கருத்தைத் தாங்கிய கதை.
(யாம் உண்பேம்) எனும் சிறுகதை பஞ்சத்தால் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. ரேஷன் கடைகளையும், ஆள்பவர்களையும் தீக்கனலாய் கேள்வி கேட்கும் கதை.
என் வெசனமெல்லாம் ஒன்றே ஒன்று தான் இந்தக்கதையை படித்துவிட்டு ஆள்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கணும்.
(கதை எழுதுவதன் கதை) ஒரு கதையை படித்துவிட்டு அது ரொம்ப புடிச்சு போச்சுனா உடனே அந்தக் கதையைப்பற்றி இணையத்துல தேடறது வழக்கம். இந்தக் கதையையும் இணையத்துல தேடும்போது இந்தக்கதை இதைத் தொடர்ந்த இவரது பல கதைகளுக்கான ஆரம்பம் எனத் தெரிந்தது. இதில் கும்பமுனி மற்றும் தவசிப்பிள்ளை எனும் இரண்டு கதாப்பாத்திரங்கள், அவர்களின் உரையாடல்கள் மட்டுமே. அதுவும் எள்ளளும், நையாண்டியுமாக வெடிச்சிரிப்புக்கு உத்திரவாதம். நானெல்லாம் நெனச்சு நெனச்சு சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.
கும்பமுனி வயதான எழுத்தாளர்.
அவரது சமையற்காரன் தவசிப்பிள்ளை. இருவரும்பேச ஆரம்பித்தால்
நவீன கால இலக்கியத்தை பொரித்துத்தள்ளுகிறார்கள்.
இந்த கும்பமுனி எனும் பாத்திரத்தை யாரை முன்னிறுத்தி எழுதுகிறார். கவிமணியையா? நகுலனையா? அல்லது அவரையே முன்னிறுத்தி எழுதிக்கொள்கிறாராங்ற ஆராய்ச்சி இன்னைக்கி வரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு. எது எப்படியோ புனைவு கதாப்பாத்திரங்களிலேயே உனக்கு புடிச்ச கதாபாத்திரம் எதுனு கேட்டா கொஞ்சமும் யோசிக்காம கும்பமுனினு சொல்றதுக்கு எனக்கு ஒரு கதாபாத்திரம் கெடச்சுது.
[பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்] தலைப்பே வெவகாரமே இருக்கே கதையும் அதே அளவு வெவகாரமான கதை தான். [அறைவாசிகள்] குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று வேலைபார்க்கும் ஆண்களின் கதை. கணவனைத்தேடி மனைவி அந்த அறைக்கு வருகிறாள். ஒரு பெண்ணின் இருப்பு அங்கிருக்கும் சூழ்நிலையை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். இதுபோல ஒவ்வொரு கதையையுமே அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். எதைச் சொல்வது எதை விடுவது. நான் சொல்லாமல் விட்டுவிட்ட மற்ற கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகள் இருக்கிறது. சுடலை மற்றும் சங்கிலி பூதத்தான் இந்தக்கதைகளை என்னால் ஓரிரு பத்திகளில் சுருக்கி சொல்ல முடியாதுங்கற காரணத்தால அதப்பபத்தி சொல்லமுடியலையேங்கறது பெரும் வருத்தம் தான்.
இந்தக் கதைகளை தொகுத்ததற்காகக ந.முருகேச பாண்டியன் எங்கிட்ட செம்மயா வாங்கி கட்டிக்கொண்டார் நன்றியையும்,பாராட்டையும்.
நன்றி: https://www.facebook.com/photo.php?fbid=291894688834360&set=a.118378239519340&type=3