எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது


எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும்.
பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. ஸ்ரீநிவாசன் எழுதிய கட்டுரைகளும் 2009-2014-ல் ‘சொல்வனம்’ இணைய இதழில் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய நூல் இது. எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. முதலில் தலைப்புக்கு ஒரு தனி வணக்கம்.
வ.ஸ்ரீ. என்று நண்பர்களால் குறிக்கப் பெறும் இந்த 67 வயதான ஓய்வு பெற்ற வங்கி உயரதிகாரியை எனக்கு 2000-க்குப் பிறகே தெரியும். நண்பராகி, இன்று யாதுமாகி, குடும்ப உறவாகத் தூர் பெருத்த கரும்பனையாக நிற்கிறார். நானறிந்த வரையில் அவர் மிக நுட்பமான வாசகர். பகவான் ரமண மகரிஷி. ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது நெஞ்சுக்கு நெருக்கமான தளங்கள். பிரமிள், அசோகமித்திரன், ஜெயகாந்தன் அவரது உயரிய நட்பு வட்டம். திருச்சி மோதி ராஜகோபால் அவர்களின் நற்பண்புகளுக்கும் பத்மநாபனின் தீவிர வாசிப்புக்கும் ஆராதகர். இன்னும் எத்தனையோ நண்பர்கள் பாஸ்டன் ரவிசங்கர் போல. ‘ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்’ என்பார் கம்பர். வ.ஸ்ரீ. காரணமாகவே எனக்கு மோதி நண்பரானார்.  ‘எறிகடல் நித்திலம்’ என்றொரு இரங்கல் கட்டுரை எழுத நேர்ந்தது எனக்கு, அவரைப்பற்றி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.
தத்துவம், ஆன்மீகம், இலக்கியம் எனப் பன்முக வாசிப்பு வ.ஸ்ரீ.க்கு. அது இந்தக் கட்டுரைகளில் ஆங்காங்கே துளிர்த்திருக்கும். பல்லாண்டுகளுக்கு முன்பே எழுத வந்தவர் எனினும் இத்தனை தாமதமாக முதல் புத்தகம் வெளியாகிறது. குறிஞ்சி பூக்கப் பன்னிரண்டு ஆண்டுகளும் மூங்கில் நெல் உதிர இருபத்தைந்து ஆண்டுகளும் ஆகும் என்பதைப் போல, ரிஷி கர்ப்பம் ராத்தங்காது. ஆனால் இது கஜ கர்ப்பம்.
தலைப்பு முன்னறிவிப்பு செய்திருப்பதைப் போல, தீர்மான சட்டகத்தினுள் அடக்க இயலாத கட்டுரைகள் இவை. உலகத் தரத்து சினிமாக்கள், இலக்கியங்கள், கிரிக்கெட், தமிழ் – இந்தித் திரைப்படங்கள் பற்றித் தெளிவான பரிந்துரைகள். மிகப் பொருத்தமான, ஆழமான மேற்கோள்கள். இந்த நூல் சிறந்ததோர் வாசிப்பு அனுபவம் தரும், நுணுக்கம் நாடும் எந்த வாசகருக்கும்.
வ.ஸ்ரீநிவாசன் இயல்பில் எளிமையான, இயல்பான, நட்பான, இணக்கமான மனிதநேயர். மற்றெந்த முற்போக்குக்காரனையும் சுயமரியாதைக்காரரையும் விடவும் மத, இன, குழு நம்பிக்கைகள் அற்றவர். அவரது ஆன்மீகம் என்பது சமயமோ, சாதியோ அல்ல. முரண்பட்ட கருத்துக்களையும் குரல் உயர்த்தாமல் பேசக்கூடியவர். அதேவேளையில் சவரக் கத்தியின் கூர்மை இருக்கும். நூல் முழுவதும் இதை வாசகன் பரக்கக் காண இயலும்.
உயர்தரத்து வாசிப்புத்தன்மையும் கறாரான அரசியல், சமூக, இலக்கிய, சினிமாப் பார்வைகளும் கொண்ட கட்டுரைகள் இவை. மெல்லிய அங்கதமும். உளுந்த வடையில் கடிபடும் குறுமிளகு போல் ஆரோக்கியமான காரமும் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது, இத்தனைதாமதமாக வ. ஸ்ரீநிவாசனின் எழுத்துக்கள் நூலாக வருவது வாசக உலகின் இழப்பு என்றே தோன்றுகிறது.
‘எதைப் பற்றியும்….’ வரிசையில் நான்காவது கட்டுரையின் இறுதிப்பகுதி, B.R. பந்துலுவின் ‘கர்ணன்’ திரைப்படம் பற்றிய குறிப்பு. கர்ணனைக் கொன்றவர் யாவர் என்று கண்ணனின் விளக்கம். இறுதி வரியாக வ.ஸ்ரீ. சொல்கிறார், ‘- ஆனால் படத்தில் கர்ணனைக் கொன்றது அந்த ஆறு பேரோ, அர்ச்சுனனோ அல்ல, கட்டபொம்மன்’. இது வ.ஸ்ரீ.யின் நுட்பமான விமர்சனம், நகைச்சுவை, தெளிவு.
தனது பெயரை வ.ஸ்ரீநிவாசன் என்று எழுதுகிறார் வ.ஸ்ரீ. சில நண்பர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், சற்றே அரும்பிய எரிச்சலுடன். ‘ஏன் வ.ஸ்ரீநிவாஸன் என்று எழுதலாமே?’ என்று. ஸ்டாலின் என்று எழுதலாம், ஆனால் ராஜாஜிதான் இராசாசி என்று ஆகவேண்டும் என்பது என்ன தர்க்கம்?
குடும்பத்துப் பெரியோரும் தகப்பனாரும் சூடிய பெயரை எதற்கு திராவிட இயக்க வசதிக்காக ஒருவர் மாற்றிக்கொள்ள வேண்டும்? புனைபெயர் என்றால் அது வேறு கதை! தனித்தமிழ் என்று ஒன்று இல்லையா என்ற கேள்வியின் பொருள் நமக்குப் புரிகிறது. தொல்காப்பியரின் ‘வடவெழுத்து ஒரீஇ’ எனும் கட்டளைக்கும் நான் கட்டுப்பட்டவன்தான். ஆனால் சொல்பவர்கள் அதைச் செய்து காட்ட வேண்டாமா? ஈ.வெ.ரா. என்றுதானே எழுதினார்கள், ஈ.வெ.இரா என்றா?
சுத்தமாக வடசொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் தமிழாக்கிப் பயன்படுத்திய கம்பன், தனது ஆறாவது காண்டத்துக்கு யுத்த காண்டம் என்றே பெயர் வைத்தார். எனினும் யுத்த காண்டம் எனும் முழுப் பகுதிக்குள்ளும், 4310 பாடல்களிலும், யுத்தம் எனும் சொல்லே அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் அந்தக் காவியத்தையே எரிக்கத்தானே சொன்னோம்.
ரஜினிகாந்த், கமலஹாஸன், ஸ்டாலின், ரஹ்மான், விஜயகாந்த், அஜித், விஜய், விஷால் இருக்கலாம். ஆனால் வ.ஸ்ரீநிவாஸன் இருக்கலாகாதா? தமிழ்ப் பற்றும் பள்ளம் பார்த்துத்தான் பாயுமா?
ஸ்ரீ என்பதைத் திரு என்றோம். ‘அரவிந்த மலருள் நீங்கி, அடியிணை படியில் தோய, திரு இங்கு வருவாள் கொல்லோ ?’ என்பான்கம்பன். நிவாசன் என்றால் வசிப்பவன். ஸ்ரீநிவாசன் எனில் திருவாழி. திருவாழ் மார்பன் என்று நம்மாழ்வார் பாடும் திருப்பதி சாரத்துப் பெருமாளுக்கே மார்பன் என்பது அதிகப்படியான சொல்தான். திருவாழி என்றால் போதும். அது முழுமையான பெயரே! ஏதும் தொக்கி நிற்குமோ என்று தோன்றும். வ.ஸ்ரீ.க்கும் தோன்றியது. மலையாளத்தில் குறுநில மன்னனைக் குறிக்க நாடு வாழி என்றொரு சொல் உண்டு. அறவாழி எனும் பெயர் கொண்டவர் உண்டு நம்மிடம். திருவண்பரிசாரம் என்ற பண்டைய பெயர் கொண்ட திருப்பதிசாரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில், போன தலைமுறை வரை திருவாழி என்ற பெயருடன் ஊருக்கு நான்குபேர் இருந்தனர். எனவே வ.ஸ்ரீ. மனக்குழப்பம் தவிர்க்கலாம்.
The Hindu எனும் ஆங்கிலத் தினசரி பற்றிய குறிப்பில், ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்று அன்று அண்ணாதுரை கிண்டல் செய்தார் என்று பலரும் மேடைகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். வ.ஸ்ரீ. அந்தச் சொற்றொடரை முதலில் பயன்படுத்தியது காமராஜ் என்றார். வியப்பாக இருந்தது.
ஆன்மீகம் பற்றியும், உலகாயுதம் குறித்தும், நூலாசிரியருக்குப் பரந்த பார்வை இருக்கிறது. ஆதலால், அவரால், ‘எப்போதும் என்று கூட அல்ல, எல்லாமும் ஒன்று என்பதால்தான் ஒருவர் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார். ஒருவர் வானில் பறக்கும் புள்ளெலாம் நான் என்று பாடினார்’ என்று எழுத முடிகிறது.
இவற்றுள் பல கட்டுரைகளை நான் ஏற்கனவே வாசித்தவன். மொத்தமாகத் திருப்பிப் படிக்கும்போது எனக்குப் புலப்படுகிறது. வ.ஸ்ரீ. குறிப்பிடும் பல திரைப்படங்கள் நான் கண்டவை அல்ல. வாசித்த பல புத்தகங்கள் வாசித்தவனல்ல. இவற்றால் எல்லாம் அவர் மீது எனக்கு அழுக்காறு இல்லை . வியப்பும் மதிப்பும் பெருகுகிறது.
இந்த நூலின் சிறப்புகளாக நான் பார்ப்பது, வாசிப்புத் தரம், வாசிப்பு ஈர்ப்பு, கருத்துத் தெளிவு, நிதானம். முரண்கள் இருக்கலாம்.
‘நட்பு முரண், பகை முரண்’ என்பார்கள். முரணில் நட்பென்ன, பகை என்ன? எப்போது பகை தோன்றிவிட்டதோ, அப்போது புரிதல் எங்கிருந்து வரும்? நகுலன் என்னிடம் ஒருமுறை நேரில் சொன்ன து, If you hate some one, you can’t understand him’ என்றார்.
வ.ஸ்ரீநிவாசனுக்கும் சிறுவாணி வாசகர் மையத்துக்கும், பவித்ரா பதிப்பகத்துக்கும், வாசகருக்கும் வாழ்த்துக்கள்.
ஜனவரி, 2018

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s