தினமணியும் நானும்!

தினமணி எனும் சொல்லுக்கு முன்னால் நான் எனும் சொல் பொருட்டே இல்லை. அந்தச் சொல்லுக்கே சூரியன் என்று பொருள். அதாவது Sun, ஞாயிறு, பருதி, பகலவன், கதிரவன், அருணன், வெய்யோன், பகலோன் எனப் பல. தமிழ் இலக்கியங்கள் பலவும் சூரியனைக் குறிக்கத் தினமணி எனும் சொல்லை ஆண்டுள்ளன. எனவே தினமணி நாளிதழுக்குத் தினமணி எனப் பெயர் சூட்டிய வரைப் பாராட்ட வேண்டும்.
நாஞ்சில்நாட்டில், வீரநாராயணமங்கலம் என்று சிறு கிராமம், பழையாற்றங்கரையில். பழையாற்றங்கரையில் தான் தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, திருப்பதிசாரம், நாகர்கோயில், சுசீந்திரம் முதலாய ஊர்களும். ஆனால் எம்மூர் சிறுகிராமம். அன்று நூற்றிருபது வீடுகள், மக்கட்தொகை எண்ணூறுக்கும் கீழே. வேளாள இனத்தின் மூன்று உட்பிரிவுகள், யோகீசுவரர், பண்டாரம், தலைக்கொரு வீடாய் தேவர், கோனார், ஆசாரி, நாவிதர் என சொருமிப்பாய் வாழ்ந்தனர். வேளாள சமுதாய வகையினர் இடமும் கொடுத்து நூலகமும் கட்டிக்கொடுத்தனர். ‘தமிழர் நூல் நிலையம்’ என்ற பெயரில்
சகல சாதிக்காரர்களும் சந்தாதாரர். சந்தா என்பது பூவுக்குக் குறுணி நெல். குறுணி என்றால் ஒரு மரக்கால். இருபத்தோரு மரக்கால் ஒரு கோட்டை. கோட்டை நெல் பதின்மூன்று ரூபாய் விற்ற காலம். இன்று பதின்மூன்று ரூபாய்க்கு ஒரு சாயாவும் பாதி வடையும் கிடைக்கும்.
நூலகத்தின் கணக்கில் தினமணி முதலாய நான்கு நாளிதழ்கள் வந்தன. அன்பளிப்புக் கணக்கில் பல கட்சி நாளிதழ்களும். உள்ளூர்ச் செய்திகளுக்கு ஒன்று. மாநிலச் செய்திகளுக்கு ஒன்று. குத்து – வெட்டு – கொலை – திருட்டு – கற்பழிப்பு – இரவு ராணிச் செய்திகளுக்கு ஒன்று. தேசியச் செய்திகளுக்கு என்று தினமணி.
எனக்கு விளையாட்டில் அத்தனை ஆர்வம் இல்லாத காரணத்தால், பள்ளிவிட்டு வந்த பின் பெரும்பொழுது நூலகத்தில்தான். அன்றே எங்களூரில் இன்டர்மீடியட் வரை வாசித்த ஏழெட்டுப் பேருண்டு. சோற்றுக்கு நெல்லும், கறிக்குத் தேங்காயும், வயற்கரையில் வாழையும் முருங்கையும் மாவும் கீரைப் பாத்திகளும் காய்கறிச் செடிகளும் படவரைகளும் கிடந்த போது, “என்ன மயித்துக்கு வே, இன்னொருத்தன் கிட்ட கைதட்டி நிண்ணு சேவகம் செய்யணும்?” என்ற மனப்போக்கு.
ஆனால் அவர்களுக்கு சங்கீத ஞானம் இருந்தது, உலக நடபடிகள் தெரிந்திருந்தது, தேவாரத் திருவாசக தேன்சுவை தெரிந்து இருந்தது. பலாப்பழப் பிரதமனுக்கு நாரத்தங்காய்ப் பச்சடி தொட்டுக் கொள்ளும் ரசனை இருந்தது. திருவாழிமார்பன் சந்நிதியில் நம்மாழ்வார் பாசுரம் சொல்லத் தெரிந்திருந்தது.
பத்துப் பன்னிரண்டு வயதில், நூலகத்தில் தொடங்கியது, எனக்கு அவர்கள் சேர்க்கை . ஈ.வெ.ராமசாமி நாயக்கரும், ஸ்ரீ நாராயணகுருவும் அவர்கள் நா மூலம் நடமாடினார்கள். குணங்குடி மஸ்தானும் பட்டினத்தாரும் சிவவாக்கியரும் வள்ளற்பெருமானும் ஒலித்தனர். அறுத்தடித்த களத்தில் நெல் விற்று கட்சிக்கூட்டமும் நடத்துவார், வைரவன் சாமிக்குக் கோமரமும் ஆடுவார். ஆத்திகமும் நாத்திகமும் இன்று நடிப்பு, அன்று இயல்பு.
– அவர்கள் எல்லோரும் தினமும் தவறாமல், மனப்பாடச் செய்யுள் வாசிப்பதுபோல் நாளிதழ்கள் வாசித்தார்கள். அவற்றுள் குறிப்பாகத் தினமணி. எனக்கும் அது படிந்து போயிற்று. இன்றைக்குத் தினமணிக்கு வயது எண்பத்தைந்து என்றால், எனக்கு அதனுடன் தொடர்பு அறுபது ஆண்டுக் காலம்.
1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு, தினமணிக்குப் பெரும்பங்கு இருந்தது. 1967-க்கு முந்திய, ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய அரசியல் நடப்புக்களைப் பேசும்போது, என்னிடம் பலரும், “தினமணி படிச்சுக்கிட்டு தர்க்கம் செய்யாதடே!” என்பார்கள். என்னை ஒத்தவர்கள், தினமணி வாசிக்கிறவர்கள் என்றும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறோம்.
இன்று என்னால் ஐயம் திரிபு அறப் பேச இயலும், ஒரு எழுத்தாளனாக நான் உருவானதில் தினமணிக்கும் பங்கு உண்டு என்பதை. அன்று அதன் ஆசிரியராக இருந்தவர் ஏ.என்.சிவராமன். எல்லா விதத்திலும் அவரோர் மேதை. அன்று லீடர் என்று வழங்கப் பெற்ற அவரது தலையங்கங்கள் அரசியல் பொருளாதாரக் கட்டுரைகள் மாணவர் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன.
‘கணக்கன்’ என்ற பெயரிலும், ‘பாமரன்’ எனும் பெயரிலும் அவர் எழுதிய கட்டுரைகள் வெளியான தினங்களில் எல்லாம் என்னால் இருமுறை வாசிக்கப் பெற்றன. பின்னர் அந்தக் கட்டுரை களைத் தொகுத்து, தினமணி, தீபாவளி மலர் அளவில் நூலாக்கினர். ஊரில் பரணில் கிடக்கக்கூடும் அந்த நூல்கள், பெட்டகங்களின் உள்ளே இன்னும்.
அன்றெல்லாம் நினைத்தும் பார்த்திருக்கவில்லை, தினமணிக் கதிரில் என் கதைகள் வெளியாகும் என்றும், தீபாவளி மலர்களில் என் கட்டுரைகள் வரும் என்றும். எனதொரு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு பேய்க்கொட்டு’ அந்தக் கதை தினமணிக்கதிரில் வெளியானது.
தினமணி ஆசிரியர் திரு.ஏ.என்.சிவராமன் அவர்களைப் பொது நிகழ்ச்சிகளில் கூட நான் பார்த்ததில்லை. 1972-ல் நான் பம்பாய்க்குச் சென்ற பிறகு, ‘Free Press Journal’ ஆங்கில நாளிதழின் ஆசிரியராக இருந்த மணிக்கொடி சீனிவாசன் என்ற ஸ்டாலின் சீனிவாசன் அவர்களைப் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் பார்த்திருக் கிறேன். ‘தினமலர்’ ஆசிரியராக இருந்த ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை வணங்கியிருக்கிறேன். திருவாளர்கள் குஷ்வந்த்சிங், பிரீத்திஷ் நந்தி ஆகியோரை பம்பாய் விக்டோரியா டெர்மினஸ் இரயில் நிலையத்தின் பக்கவாட்டில் இருந்த ‘Times of India’ அலுவலகத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன். அன்றைய விக்டோரியா டெர்மினஸ் தான், பின்பு சந்திரபதி சிவாஜி மார்க் ஆயிற்று. அஃதேபோல் அன்றைய சென்னை சென்ட்ரல் இன்றைய எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ஆயிற்று என்று எண்ணும்போது ஏற்படும் உணர்ச்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதறியேன்!
நான் பம்பாய் சென்று சேர்ந்த காலகட்டத்தில், தினமணி பம்பாய்க்கு வர மத்தியானம் இரண்டுமணி ஆகிவிடும். அதிகாலையில் ஆங்கில நாளேடுகள் வாசித்து விட்டிருந்தாலும், தினமணி வாசிக்க என்றே அலுவல் முடிந்து மாலையில் பம்பாய்த் தமிழ்ச்சங்கம் போவேன். கோவைக்கு 1989-ல் மாற்றலாகி வந்தபோது, இராமநாத புரம் பங்கஜா மில் சாலையில் குடியிருந்தேன். நான்கு கட்டிடங்கள் தாண்டி தினமணி அச்சாகும் அச்சகமும் அலுவலகமும். கோவையில் நான் வாழும் முப்பதாண்டுக் காலத்தில், எங்கு குடியிருந்தாலும், வாசல் திறந்ததும் கையில் எடுப்பது தினமணி.
திரு.ஏ.என்.சிவராமனைத் தொடர்ந்து திருவாளர்கள் சம்மந்தம், ஐராவதம் மகாதேவன், வைத்தியநாதன் என்று பொறுப்புடன் நாளிதழை நடத்திச் செல்கிறார்கள். தினமணி கதிருக்குப் பொறுப்பாக இருந்த திரு.நா.பார்த்தசாரதி, சிவகுமார், திரு.பாவைச்சந்திரன் ஆகியோர் தனிப்பட்ட முறையில் நம்மிடம் அன்புடையவர்கள். ‘அடடே’ கேலிச் சித்திரங்கள் வரைந்த கார்ட்டூனிஸ் மதி மீது எனக்கு அபிமானம் உண்டு.
‘பரதேசி’ திரைப்படத்துக்கு வசனம் எழுதி, முப்பதுக்கும் மேற்பட்ட விமர்சனக் கட்டுரைகளில் என்மீது வசவு வாரித் தூற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் காலையில் தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் என் வீட்டுக்கு வந்தார். முந்திய நாள் ‘பரதேசி’ பார்த்துவிட்டு என்னைப் பாராட்டுவதற்காக.
சற்று எண்ணிப்பாருங்கள்! பன்னிரண்டு வயதில், ஒரு எளிய கிராமத்தின் ஏழைச் சிறுவர் தினமணி வாசகன். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் வீட்டுக்கு தினமணி ஆசிரியர் வந்து வாழ்த்துகிறார்! தினமணி நாளிதழின் பண்பாட்டுச் செல்வம் அது.
‘தினமணி’யில் வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளும், தலையங்கங்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்பதல்ல. யாவற்றையும் மீறி, கடந்த எண்பத்தைந்து ஆண்டுகாலம், தமிழனின் வாசிப்புத் தரத்தை மேம்படுத்தியதில் தினமணிக்குப் பெரும்பங்கு உண்டு என்பதில் எனக்கு உறுதியுண்டு.
அதன் நூற்றாண்டுச் சம்பவத்திலும் இதுபோலொரு கட்டுரை எழுத ஆசை கிடந்து அடித்துக் கொள்கிறது.
தினமணி, செப்டம்பர் 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to தினமணியும் நானும்!

 1. Nagarajan சொல்கிறார்:

  அருமை . நன்றி

 2. செ. அன்புச்செல்வன் சொல்கிறார்:

  அருமை ஐயா!! உங்கள் எழுத்துக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!!

 3. harikarthikeyanramasamy சொல்கிறார்:

  அருமை நல்ல பகிர்வு

 4. சலீம் சொல்கிறார்:

  ஆத்திகமும் நாத்திகமும் இன்று நடிப்பு அன்று அயல்பு.
  நச்சென்று போகிற போக்கில்

 5. rajendranunnikrishnan சொல்கிறார்:

  அருமை. தமிழ் நாளிதழ் வாசகனின் அற்புதமான வரிகள் 👌😊

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s