வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

Suresh Subramani
விசும்பின் துளி
– நாஞ்சில் நாடன்
~~~~
புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு தேவையில்லை.அந்தளவிற்கு படைப்புலகில் பிரபலம் பெற்றவர் அவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் என தமிழிலக்கியப் பரப்பில் அவரின் இலக்கியப்பணி பரந்து விரிந்து உள்ளது. இது இவரின் பதிமூன்றாவது கட்டுரை நூல். இவரின் கட்டுரைகள் பல யாவும் செறிவான தமிழ் காப்பியங்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்டவை. கட்டுரைகளின் கருத்துக்கேற்றாற்போல காப்பியங்களிலிருந்து பொருத்தமான உதாரணங்களை அவர் எடுத்தாள்வதுபோல வேறு எந்த எழுத்தாளரும் தற்காலத்தில் முனைவதில்லை என்றே சொல்லலாம். அவ்வளவிற்கு அவரின் தமிழ் காப்பியங்களின் மீதான ஞானம் அடர்த்தியானது.
இத்தொகுப்பில் காணப்படும் நாற்பது கட்டுரைகளும் 2014 மற்றும் 2016 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் பல பருவ இதழ்களிலும், மின்னிதழ்களிலும், புத்தகங்களிலும் எழுதப்பட்டவை. இத்தொகுப்பில் பெரும்பாலும் தமிழ் மொழியின் அதன் சொற்களின் மகத்துவம் பற்றியும் அதன் வீச்சின் எல்லைகள் பற்றியும் மிகவும் சிலாகித்து பேசி இருக்கிறார். சில நூல்களுக்கான முன்னுரைகளும் இதில் அடங்கும்.
முதல் கட்டுரையான ‘ஒளவியம் பேசேல்’ என்ற கட்டுரையில் ‘ஒள’ என்ற எழுத்தின்பாற்பட்டு வரும் சொற்களைப் பற்றியும் அதன் பல்வேறு பொருள்களைப் பற்றியும் விரிவாக அலசுகிறார் நாஞ்சில் நாடன். தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 என்பதை,

“எழுத்து எனப் படுவ
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப”

என்ற தொல்காப்பிய நூற்பா கொண்டு விளக்குகிறார். கிரந்த எழுத்துக்களான ஜ்,ஷ்,ஸ்,ஹ் போன்ற எழுத்துகள் அரசியல் காரணங்களுக்காகவும் தூய தமிழ் காரணங்களுக்காகவும் பாடதிட்டங்களிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை அவர் ஏற்க மறுக்கிறார். இந்த மொழி அரசியலை தற்கால அரசியல் தலைவர்களின் பெயர்களைக் உதாரணமாகக் காட்டி சாடுகிறார். ஆனால் கம்பன் தனது 10,368 பாடல்களில் எங்குமே இந்த கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தவில்லை என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார். ‘ஒள’ வரிசையில் அவர் பதிவிட்டிருக்கும் ஏராளமான தமிழ் சொற்களைக் காணும்போது தமிழில் இத்தனை அர்த்தமுள்ள சொற்களா என நாம் பிரமிப்பு அடைகிறோம்.
புகழ்பெற்ற உச்ச நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் வரும் சொற்களான ‘ஆம்பல்’ மற்றும் ‘மெளவல்’ குறித்த பொருளை அவர் கூறும்போது நாம் ஆச்சர்யமடைகிறோம்.
இராமபிரான் தன் தாய் கோசலைக்கு சேவை செய்ததைப் போல தன் நண்பர் மோத்தி ராஜகோபால் வயதான தன் தாய்க்கு சிருஷை செய்வித்ததை பார்த்து தானும் தன் என்பத்தைந்து வயதுடைய தாய்க்கு கை, கால் , தோள் பிடித்தி விட்டு சிருஷை செய்ததை சொல்லும்போது முதலில் கூச்சமாக இருந்தாலும் பிறகு அது பழகிப்போய்விட்டது என சொல்கிறார்.
எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல நினைக்கும் தாய்மையின் சிறப்பை குறித்து சொல்லும்போது காக்கைக்கும் தன் குஞ்சு என்ற சொற்றொடரில் வரும் உம்மையை இழிவு சிறப்பு உம்மை என இலக்கண ஆசிரியர்கள் சொல்வதை ஏற்க மறுக்கிறார் நாஞ்சில். அந்த இழிவு அநியாயமாக ஏற்றப்பட்ட இழிவு, மன்னுபுகழ்க் கோசலை தன் மணிவயிறு வாய்த்தன தான் என கம்பராமாயண கோசலையை உதாரணம் காட்டி சொல்கிறார்.
பழமை வாய்ந்த சொற்களை படைப்புகளில் எடுத்தாண்டால் அதை வட்டார வழக்கு மொழி என பகுத்துப் பார்ப்பதை சாடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
‘உமக்கு தெரியாத சொல்லை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இம்மொழிக்குள் புழங்கிய சொல்லை படைப்பாளி எடுத்தாண்டால் அதை வட்டார வழக்கு என தரமிறக்கிக் காண்பது பண்டித வல்லாண்மை’ என்கிறார். யானை என்ற சொல்லுக்கு பிங்கல நிகண்டு தரும் 45 மாற்றுச் சொற்களை அவர் வரிசைப்படுத்துவது அழகு. வட்டாரங்களில், மக்கள் மொழியில் விரவிக் கிடக்கும் சொற்களைச் சேகரம் செய்வது என்பது தமிழில் தப்புக்காய்கள் பொறுக்குவது அல்ல. மொழியின் மொத்த விளைச்சலுமே அங்குதான் கிடக்கிறது என்கிறார்.
ஆதி என்ற சொல் சங்க இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் எங்கெங்கு புழங்கி வருகிறது எனவும் ஆதி என்ற புலவருடனான தன் நட்பைப் பற்றியும் ஒரு கட்டுரையில் நினைவு கூர்கிறார்.
Adverbial prefix ஆக வரும் ‘உப’ என்ற தமிழ் சொல் பயன்படுத்தப்படும் இடங்களை அவர் பட்டியலிடுவது சிறப்பான ஒன்று. உழவுத் தொழிலில் உபநெல் என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் அபாரம். தற்கால வாசகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் உழவுத் தொழிலின் பாடுகளை அவர் படிநிலையாக வரிசைப் படுத்தி சொல்லியிருப்பதும் 49 வகையான சம்பா நெல் வகைகளை அவர் கூறியிருப்பதும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. பயிரின் ஊடே விளையும் களைகளை தற்கால அரசியல்வாதிகளுடன் அவர் ஒப்பிட்டு பேசுவது நல்ல நிதர்சனமான ஹாஸ்யம்.
குலங்களைப் பற்றி பேசும் தமிழிலக்கிய சதகங்களைப் பற்றி எழுத்தாளர் விரிவாக அலசியிருப்பது அருமை. தமிழிலக்கியங்கள் பேசும் குலங்களைப் பற்றி சொல்லும்போது வேளாளர் குலத்தை பற்றியும் அதன் இயல்புகள் மற்றும் சிறப்புகள் பற்றி சொல்கிறார்.
வ.விஜயபாஸ்கரன் அவர்கள் தொடங்கி நடத்திய ‘சரஸ்வதி’ மற்றும் ‘சமரன்’ இதழ்களுடனான தன் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் துணிவான கட்டுரைகளை தாங்கி வந்த சமரன் இதழின் கட்டுரைகள் தற்காலத்துக்கும் பொருளுள்ளதாக அமைந்திருப்பதை கண்டு ஆச்சர்யப்படுகிறார்.
நல்வரவு என்ற சொல்லை அறிந்த நமக்கு ‘வல்வரவு’ என்ற சொல்லை திருக்குறளிலிருந்து எடுத்து அறிமுகப்படுத்துகிறார்.
ஓரெழுத்து தமிழ் சொல்லான ‘ஐ’ என்ற சொல்லை தமிழிலக்கியங்களில் பயன்படுத்தும் இடங்களை உதாரணங்களுடன் சொல்கிறார்.
‘எட்டுக் கிரிமினல் கேஸ்’ என்ற செய்குதம்பி பாவலரின் உரை நடை நூலைப்பற்றிக் கூறி பாவலரின் மேன்மைகளையும் அவர்தம் இலக்கியப் பணிகளையும் விவரிக்கிறார்.
எழுத்தாளர் கி.ரா அவர்களை தான் இடைசெவல் கிராமத்தில் சந்தித்து உரையாடியபோது தன் அஜீரண பிரச்சினைக்கு கி.ரா சொன்ன காரணத்தின் நிதர்சனத்தைக் கண்டு தான் ஆச்சர்யமடைந்த நிகழ்வை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துகிறார்.
கண்டுக்கொள்ளப்படாத இலக்கிய ஆளுமைகளான சர்வாகன் மற்றும் ஆ.மாதவன் பற்றி பாராட்டிப் பேசும்போது தி.ஜா வுக்கு ‘மோகமுள்’ போல ஆ.மாதவனுக்கு ‘கிருஷ்ணப் பருந்து’ என்று உதாரணம் காட்டுகிறார்.
இத்தொகுப்பில் உள்ள எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் அனைத்து கட்டுரைகளும் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உதாரணங்களைக் கொண்டே அமைந்திருப்பது தமிழ் அபிமானிகளுக்கு வரப்பிரசாதம். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொல்காப்பியம், கம்பராமாயணம், குறுந்தொகை, புறாநானூறு, அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு போன்ற தமிழிலக்கியங்களிலிருந்து உதாரணங்களை மேற்கோள்களுடன் நிறுவியிருப்பது அவரின் தேர்ந்த தமிழ் ஞானத்தையும் அவரின் ஞாபக சக்தியின் வலிமையையும் பறைசாற்றுகிறது. ஏராளமான தகவல்களைக் கொண்ட இத்தொகுப்பு அனைவராலும் அவசியம் வாங்கி வாசிக்கப்பட வேண்டிய சிறப்புமிக்க தொகுப்பு.
~~~~~~
Suresh subramani வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

  1. S.Suresh Kumar சொல்கிறார்:

    மிக்க நன்றி ஐயா
    – Suresh Subramani

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s