நாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி

கார்த்திக் புகழேந்தி
இப்போ சமீபத்தில் தான், அதுவும் திருநெல்வேலியில் வைத்து ஒரு மேடையில் சொன்னார் நாஞ்சில் நாடன், “என் மூதாதையர்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலிதான். எங்களுக்கு சாஸ்தா கோயில் இந்தத் ‘தெய்வம்’ தான் என்று. அதுவரை நாஞ்சில் நாடன் என்றால் நாகர்கோவிலும் மும்பையும் கோவையும் நினைவுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு ‘அட!’ என்று ஆச்சரியமாக இருந்தது. [அப்போ கணக்குப்படி நாகர்கோயிலுக்கு எழுதப்பட்ட சாகித்ய அகதமி திருநெல்வேலியில் மாற்றி எழுத வேண்டும். அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.]
ஆனால், சத்தியமாக அந்த காரணத்துக்காக இதை, இப்படிச் சொல்லுகிறேன் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. “நாஞ்சில் நாடன் மாதிரி ஒரு தைரியமான அல்லது இப்படி வைத்துக் கொள்ளலாம் அபார விஷய ஞானம் கொண்ட யாருக்காகவும் எப்பவுமே அலட்டிக் கொள்ளாத ஒரு நேர்மையான எழுத்தாளனை நான் பார்த்ததில்லை.”
நிற்க, இன்றைக்கு நாஞ்சில்நாடன் பிறந்த நாளெல்லாம் இல்லை. பிறகு, சுப்பிரமணியம் என்பது அவர் இயற்பெயர். இந்தியா சுதந்திரம் வாங்கின ஆண்டில் பிறந்தார். 1977ல் தலைகீ விகிதங்கள் வெளிவந்தது.இது மாதிரியான விக்கிப்பீடியா விஷயங்களையும் இங்கே பேசப்போவதில்லை. எனக்கு நாஞ்சில்நாடனைப் பிடிக்கும். அதை ஏன் என்று என்வழியில் சொல்ல நினைக்கிறேன். அதனால் தைரியமாக நீங்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.
ஒரு பத்து வருஷம் இருக்கும். கோவை விஜயா பதிப்பகத்தில் தான் ‘,’ என்கிற அவர் நாவலை வாங்கினேன். நாவலில் வரும் பி.காம் படித்த பூலிங்கம் ரொம்ப நெருங்கின சேக்காளி போலத் தெரிந்தான். “அடேயப்பா என்ன கதைங்கீங்க…” என்று அறை நண்பரோடு வளப்பமடித்துவிட்டு, தொடர்ந்து நாஞ்சிலாரை வாசிக்க உட்கார்ந்துவிட்டேன்.
அவர் கட்டுவிக்கிற சொற்சித்திரம் அப்படியே செவ்வரளி, மரிக்கொழுந்து என்று பூக்கட்டுகிற பெண்ணின் கை வேகம் போலிருக்கும். கட்டுரைகளில் அவரை மாதிரி மொழியை அடுக்குகிற கொத்தனாரை எந்த எஞ்சினீயரும் கண்டிருக்க மாட்டார் என்றே சவடாலடிப்பேன். பிறகு ஒரு சொல்லை (செங்கல்லை) எடுத்துக் கொண்டு அதைமட்டும் உள்ளங்கையில் வைத்தே மொத்த வீட்டையும் கட்டிவிடுகிற வித்தை அவருக்கேச் சாத்தியம்.
முதல்முறை பத்திரிகை வேலைக்காக அவரை போனிலே தொடர்புகொண்டு, ‘ஓசை’ காட்டுப்பயணம் கருத்து கேட்டிருந்தேன். SPB பாடும்போது பாட்டுக்கு இடையிலே அவரால் சிரிக்க முடியும். கவனித்தவர்களுக்குத் தெரியும். நாஞ்சில் நாடனுக்கு அந்த விஷயம் பேச்சுக்கு ஊடாக லாவகமாக வரும். ’ஹிம்’ என்று ஒரு காற்றழுத்த இடைவெளியில் தன் முந்தைய வாக்கியத்துக்கான சட்டையரை அவரே செய்துவிடுவார்.
சமகால அரசுத் தரச் சான்றிதழ் பெற்ற ‘மதுப்பிரியர்’ சொல்லுக்கு முன்னாலே மது அருந்துதல் பற்றி நாஞ்சில்நாடன் ஆற்றிய உரை/ எழுதிய கட்டுரை வெகு பிரசித்தம். நான் இணையத்தில் வாசித்த அவரது முதல் கட்டுரையே அதுதான் என்று ஞாபகம். எப்படி ஜெ.மோ-வுக்கு ஒரு “தொப்பியும் திலகமுமோ” அப்படி நாஞ்சில் நாடனுக்கு “நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று  கட்டுரை. அவரது முதல் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பும்கூட அஃதே.
பின், தொடர்ச்சியாக ‘குடி’ குறித்து மூன்று நான்கு கட்டுரைகளை உன்மத்தமாய் அவரை எழுதவும் வைத்துவிட்டார்கள் இருந்தார். இன்றைக்குள்ள அரசு புத்தியோடு பிழைக்கத் தெரிந்ததாய் இக்குமானால், சுப்ரீம் கோர்டில் ‘டாஸ்மாக் திறக்க வேண்டி’ செலவில்லாமல் அக்கட்டுரைகளில் ஓரிரு பத்திகளை மேற்கோள்கூட காட்டியிருக்கலாம். அவ்வளவுக்கு சங்க இலக்கியம் தொட்டு தெளிச்சியோடு எழுதப்பட்டவை அவை.
இப்போது நினைத்துப் பார்த்தால், பல சமயங்களில் நான் நாஞ்சில்நாடனை வாசித்தே விஷய ஞானம் என்ற ஒரு விஷயத்தை வளர்த்துக் கொண்டேன். அது ‘வளர்ந்ததா புரிந்ததா’ என்ற விவாதத்துக்குள் நாம் போக வேண்டாம். ஆனாலும், எந்த இடத்திலும் அவருடைய வாசகன் என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. நான் மட்டுமில்லை. புத்தகக் கண்காட்சியில் ஆனந்தவிகடன் ஸ்டாலில் “நாஞ்சில் நாடனோட  “தீதும் நன்றும்”, இருக்கா?” என்று கேட்கிற எந்த வாசகனும் அப்படிச் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை. வாசக வட்டமே வரையப்படாத எழுத்தாளன்.
தமிழ் வாசகர்கள் ரொம்பக் கருமிகள். அறிவை எடுத்துக் கொண்ட இடத்தினைப் பற்றி வெளியில் பறைசாற்றுவதே இல்லை. பாட்டில் பிழை இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள் என்னும் நேர்மைகூட நமக்கில்லை. சிலசமயம் இது எங்கேயோ வாசித்திருக்கிறோமே என்று எண்ணுகிற பல விஷயங்களை நாஞ்சில் நாடன் எழுதிப் படித்திருப்பேன். அது அப்படித்தான் அமைந்து விடுகிறது என்ன செய்ய…
தமிழ்நாட்டில் இருக்கும் ‘நல்ல’ புத்தகக் கடைகளில் கடைசியாக விற்காமல் மீந்திருக்கிற ‘நல்ல’ சிற்றிதழ்கள் எதையாவது கையிலெடுத்துப் புரட்டிப் பாருங்கள். அதில் நாஞ்சில் நாடனின் கட்டுரை ஒன்று அசராமல் இடம்பெற்றிருக்கும். என்னமாவது புதுவிசயத்தை அடாத வேகத்துக்கு எழுதி வைத்திருப்பார். ஊரறியச் சொல்லலாம் அவரளவு சிற்றிதழ் முதலாளிகளோடு நெருக்கமாக, பிணக்கற்ற நட்பும், மின்னஞ்சல் தொடர்பும் வைத்துக் கொள்ள யாரும் முன்வரமாட்டார்கள்.
எழுத்தாளர்களிடமும் கூட அவருக்கு எந்தப் முரசலும் இருந்ததில்லை என்றே கேள்வி. ‘எல்லார்க்கும் நல்லார் அடியவர் கோன்’ என்றே பல கூட்டங்களிலும் இஸ்திரி போட்ட சட்டையை இன்-சர்ட் செய்து ஜெண்டில் லுக்கில் சாந்தமாகக் கலந்துகொள்வார். ஆனால் பேச வந்துவிட்டார் என்றால் போதும். எள் எது நெய் எது என்று பிரித்துவிடுவார்.
சமீபத்தில் மலேசியாவுக்குப் போன எழுத்தாளர் ஒருத்தர் அங்கே பேசின கூட்டத்தில் புகழ் ஓலை வாசித்துவிட்டு வர, அன்னார் நாடு திரும்பும் முன்னமே என்ன இப்படி பேசிருக்கீங்க என்று பிராது வைக்கப் பட்டிருக்கிறது. இப்பல்லாம் சாயங்காலம் டிஸ்கவரியில் பேசிவிட்டு ஆள் வீடு வந்துசேரும் முன்னேதான் ஸ்ருதி டிவியில் வீடியோ வந்துவிடுகிறதே!. அங்குள்ள ஸ்ருதி டிவி ஒன்று எழுத்தாளரின் பேச்சை ஒளிபரப்பிவிட்டது.
”என்ன செய்ய டிக்கெட் போட்டு கூப்பிட்டனுப்பினான். குப்பையா இருக்குன்னு முகத்துக்கு நேரே எப்படிச் சொல்ல’ என்றார் என்னிடம். ஒருபக்கம் பார்த்தால் அவர் சொல்லிலும் சின்ன நியாயம் உண்டுதான். கல்யாண மேடையில் ஏறி, “பொண்ணு நல்லாவே இல்லை” என்று எப்படி மண்டபத்திற்கு வந்திருப்பவர்களிடம் சொல்வது?
ஆனால், இந்தக் கரிசனம் பார்க்கும் வேலை எல்லாம் நாஞ்சில் நாடனிடம் கிடையாது. அவரைப் பொறுத்தவரை ஸ்ட்ரிக்ட் ஆபீசர் தான். ஆயிரம் வாசகர்கள் கூடியிருக்கும் கூட்டத்துக்கு மத்தியில் நின்று, ‘டாஸ்மாக் புள்ளிவிபரங்களைக் காட்டி,ஏன்யா அதுக்கு பாதி காசுக்குக்கூட புத்தகம் விக்கல தமிழ்நாட்ல’ என்று மண்டையில் கொட்டிவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார். (ஆயிரம் பேரில் குடிப்பழக்கம் இல்லாப் பெண்கள் பகுதி பேராக இருந்தாலும் இரக்கம் காட்டமாட்டார்.!!!)
நாஞ்சில் நாடன் 90கள் வரை புனைவிலக்கியத்தில் தான் இருந்தார். 2000 முதலே கட்டுரைகளுக்கு வந்ததாகச் சொல்லியிருக்கிறார். இந்த இருபதாம் ஆண்டிலும் அவர் பழைய பழத்தின் வாசனை அவரை ஒன்றும் செய்யாதது எனக்குப் பேராச்சர்யம். ஆனாலும் அதனால் தான் என்னவோ நாஞ்சில் நாடனின் அபாரமான புனைவுகள் தமிழ் இலக்கியத்தின் எந்தச் சிறந்த பட்டியலிலும் மறதியாகவே இணைக்கப்படுவதில்லை.
என்னைக்கேட்டால் வருங்காலங்களில் நாம் தேடிப் பொறுக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து புனைவாகவும் அபுனைவாகவும் நுணுக்கமாகப் எழுதிப் போட்டிருப்பவர் நாஞ்சில் நாடன் என்பேன். ஜெ.மோவுக்குச் சொந்த இணையதளம் போல நாஞ்சில்நாடனுக்கு தமிழ்ச் சஞ்சிகைகளும்/ சிற்றிதழ்களும் என்பது என் அனுமானம்.
இரண்டொரு வருசத்துக்கு முந்தி எதற்காகவோ கேரள ‘நம்பியார் சாதியர்’ குறித்து இணையத்தில் தேடினேன். சில மேம்போக்கான தகவல்கள், அவர்கள் ஈடுபடும் விழாக்கள் பற்றியெல்லாம் கொஞ்சம்போல தமிழில் தென்பட்டன. ஊடாக, புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ போலான நடையில் ஒரு தமிழ்க் கதை நம்பியார்கள் பற்றி. தமிழ்நாட்டில் அவரின் வாழ்வு வழக்கம் பற்றியெல்லாம் கோர்த்து எழுதப்பட்டிருந்தது. எழுதியிருந்தவர் நாஞ்சில் நாடன்.
பிறகு, அவருடைய , நாவல்களைப் படிக்கும்போதே நாயகமாக நடமாடும் மனிதர்களை எங்கோ பார்த்து, கேள்விப்பட்டதுபோல, நேரே சொன்னால் என்னுடையச் சொந்தக்கார தாய்மாமன்கள் போல உணர்ந்திருக்கிறேன். பிறகு அவரே காக்கையில் (காக்கைச் சிறகினிலே-சிற்றிதழ்) எழுதியிருந்தார். ”ஒருவர் தன் பெரியப்பன்மார். மற்றவர் தன் தாய்மாமன்” என்று. தெற்கத்தியில் வாழ்ந்து மறைந்த மனிதர்களுக்கு இப்படி பலநேரங்களில் ஒரே வாசனை இருப்பதில், சூட்சமங்கள் ஏதும் இருக்காதுதான் என்று என்போல் நீங்களும் நம்பினால் சரி.
இந்த விசயம் சொல்ல வேண்டும். இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’. திரைப்படமான பிறகு அந்தப் படத்திற்கு வசனம் பண்ணிய நாஞ்சில் நாடனுக்கான, பாராட்டு மாலை அவர் கழுத்தில் விழவே இல்லை. மாறாக, ‘எரியும் பனிக்காடு’ சம்பந்தமான விவாதத்தில், அவரது வேலை சத்தமே இல்லாமல் அமுங்கிப்போனது. ‘இடலாக்குடி ராசாவுக்கு’ ஒரு கனத்த குரல் இருந்ததை யாரும் மறுக்கவா முடியும்.
ஒருவிதத்தில், எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்து, அதனாலே ஒரு தனிப்புகழ் ‘வாங்காதது’ ஒன்றும் பெரிய விசயமல்லை என்று நாஞ்சில்நாடனே கூட நினைத்திருக்கலாம். உதாரணத்திற்கு எங்கேயாவது புரட்டிப் பார்த்தால், ’என்னது இந்தப் படத்துக்கு இவரா கதை-வசனம்?” என்றெல்லாம் வியக்கும்படி எழுத்தாளர்கள் பேர் மினுக்கென வந்து போயிருக்கலாம். கொஞ்சம் சினிமாவோடு தொடர்புள்ள சென்னை வட்டார ‘வாசி’களுக்கு வேணுமானால் நினைவிருக்கலாம் மற்றபடி ம்ஹூம்.
ஆனால் தமிழ் சினிமாவுக்குள் ஒரு மனம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளன் என்றால் இங்க்லீஷ் தெரியாத, தமிழ் டைப்பிஸ்ட் என்கிற ரேஞ்சுக்கு ஓர் கசடான எண்ணம். ’பரதேசி’யின்போது, பாலாவின் உதவி இயக்குநர் நாஞ்சில் நாடனிடம் ‘ஸார் ஸ்க்ரிப்ட் இங்லீஷ்ல இருக்கும் பரவால்லையா’ என்றிருக்கிறார். தலைவன் அப்பவே கோல்ட் மெடல் வாங்கின கான்வெண்ட் எழுத்தாளர். தமிழில் கம்பனுக்கும் அத்துபடி.
சிரித்துவிட்டே ‘கொடுய்யா’ என்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி இன்னும் பல கூத்துக்கள் பரதேயியில் உண்டு. உதாரணத்துக்கு, படத்தில் கோழிகள் மேயும் ஒரு காட்சியில், பிராய்லர் கோழியை யூனிட் ஆள் கொண்டுவந்து ஃபீல்டில் விட்டிருக்கிறார். ’கதை நடக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் பிராய்லர் கோழியெல்லாம் கிடையாது’ என்று நாஞ்சில்நாடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.புரொடக்‌ஷன் ஆட்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அத்துவானக் காட்டில் ஷூட்டிங் வைத்துவிட்டு நாட்டுக் கோழிக்கு எங்கே போக.. வேறு வழியின்றி பிராய்லர் கோழிக்கு மை தெளித்து காட்சியை எடுத்த்ருக்கிறார்கள். மறுநாள் ஷூட்டிங்கில் ஒரு காட்சியில் செம்பருத்திப்பூ இடம்பெற்றபோது, “சார் 1950-ல செம்பருத்தி தமிழ்நாட்டில் இருந்தது தானே?” என்று கேட்டிருக்கிறார் ஏடி ஒருத்தர். சினிமாத்துறை எழுத்தாளனுக்குக் கொடுக்கும் ‘கௌரவம்’ பலநேரங்களில் இப்படியு(ம்)மானதே.
எல்லாவற்றுக்கும் மேலாக நாஞ்சில்நாடனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. வயதிலும் மிக மூத்த எழுத்தாளர்களில் ஆரம்பித்து, நேற்றைக்கு எழுத வந்துவிட்டவர்கள் வரைக்கும் அவர்கள் எழுதுவதை வாசித்துவிடுகிறவர். ஆள் கிடைக்காவிட்டாலும் அவர் காதுக்கு விஷயம் போகிறமாதிரி, “அந்தப் பையன் நல்லா எழுதியிருக்கார்” என்று ஒரு வார்த்தையை தந்திபோலவேணும் அடித்துச் சொல்லி விடுவார். போன் போட்டே பேசிவிட்டாரென்றால் சில கட்டன்ரைட் சுட்டுதலும் கட்டாயம் அதில் இருக்கும்.
இந்த ஏப்ரலில் வந்த அந்திமழையில், அவர் பம்பாயில் இருந்த நாட்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரையைக் கேட்டபோது, மரணம் குறித்து அவர் சொன்ன ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டிருந்தார் நாஞ்சில் நாடன். ”உலகின் கடைசி மனிதன் எண்ணத்தில் ஒருவனைப் பற்றிய நினைவு இருக்கும்வரை அவனுக்கு மரணமில்லை என்று.”
அடுத்த பத்தியிலே, “ஓர் இலக்கியவாதி எனும் ரீதியில் இன்னுமோர் நூறாண்டு காலம் நான் எண்ணப்படலாம். சரி, உங்களுக்கு அதில் உவப்பில்லை என்றால், இன்னுமோர் ஐம்பதாண்டு காலம், இலக்கியவாதி எனும் அடையாளத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால்கூட… என்று ஒரு கழித்தல் கணக்கை எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழ் வாசகன் மீதான ‘நம்பகம்’ எவ்வளவு கேள்விக்குள்ளாகி விடுகிறது இப்பல்லாம்..
-கார்த்திக் புகழேந்தி
16-05-2020

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to நாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி

  1. து.பிரபாகரன் சொல்கிறார்:

    கார்த்திக் புகழேந்தியின் கட்டுரை… நாஞ்சில் நாடன் குறித்த அழகான பதிவு.
    இக்கட்டுரை நாஞ்சில் நாடனின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கான நல்வழி.

  2. rajendranunnikrishnan சொல்கிறார்:

    ஆம், சிறப்பான கட்டுரை. தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் 🙏

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s