முனகல் கண்ணி

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் கொண்டிருந்தார் தவசிப் பிள்ளை . கட்டமண் சுவரோரம் தாளாத வளர்ந்திருந்த பச்சையுடன் ஏழெட்டுக் காய்கள் கிடந்தன. பறிக்கும்போது சூதானமாக செடியைப் பிடிக்க வேண்டும். காம்புமுள் சுருக்கென விரலில் ஏறிவிடும்.
‘சவம் கண்டங்கத்திரி ஊருப்பட்ட கசப்புத்தான். என்ன செய்ய? கசப்பைப் பாத்தா முடியுமா? தேகத்துக்கு நல்லதுல்லா!’ என்று மனம் ஆற்றிக் கொண்டது. பரணியில் கொஞ்சம் சுண்டைக்காய் வற்றலும் குட்டித் தக்காளி வற்றலும் கிடந்தன. கிழவன் சாப்பிட இருக்கும்போது இரண்டு பப்படம் சுட்டுப் போட்டால் போதும் என்று நினைத்தார். அவர் கவலை அவருக்கு.
“படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி”
என்ற கம்பரின் சரசுவதி அந்தாதிப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் வாய்விட்டுக் கும்பமுனி. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சித்தூர் தென்காசி மகாராசா சாஸ்தாவின் யோக நிலையில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
குனிந்து மலைப் பூண்டு உரித்துக் கொண்டிருந்த தவசிப்பிள்ளை கேட்டார் –
“பாட்டா நேத்தைக்கு சங்கு முகம் பத்திரிகையிலே வாசிச்சேன்…. நல்ல அழுகின மாம்பழத்தை தோலுரிச்சு, சதைப் பத்தைப் பிசைஞ்சு மேல எல்லாம் தேச்சா தோல் கேன்சர் வராதாம்…”
நகக்கண்ணில் குண்டூசி ஏறியதுபோல, வெடுக்கெனப் பார்த்தார் கும்பமுனி. பொக் கென ஓர் கணத்தே சொன்னார் –
“நானும் வாசிச்சேன் வே! நல்ல கனிஞ்ச தாழம்பழத்தை ரெண்டு விரக்கடை விட்டத் திலே ஆழமாச் சூர்ந்து, அதுக்குள்ள சக்கரையை நாப்பத்தோரு நாளு நுழைச்சு வச்சிருந்தா, அதுக்கு நீளம் மூணு இஞ்சு வரைக் கூட்டுமாம்..”
“அப்பம் மூத்திரம் போறதுக்கு?” என்று குறுக்கு வெட்டினார் தவசிப்பிள்ளை கண்ணு பிள்ளை .
“அதுக்கு அப்பப்பம் வெளீல எடுத்துக் கிடணும்…’
“அப்பம் நாப்பத்தோரு நாளு வெளீல போக முடியாது!”
“போலாமே… சின்ன மண்கலயத்துக்கு கழுத்திலே நாடு சுத்தி, அதுக்குள்ள தாழஞ் சக்கையும் சக்கரையும் போட்டு, இடுப்பைச் சுத்தி கெட்டி, அதுக்கு மேலே வேட்டியைக் கெட்டிக்கிடலாம்…”
“ஓதப்புடுக்கன் மாதிரி இருக்காதா பாட்டா ?”
“இருந்திட்டுப் போட்டுமே! மூணு இஞ்சு | நீளம் சும்மாவா கெடைக்கும்?”
“வேணும்னா செய்து பாக்கேரா பாட்டா?” என்றார் தவசிப்பிள்ளை குறுஞ் சிரிப்புடன்.
தவசிப்பிள்ளை அப்படிச் சொல்வா ரெனத் தெரியும் கும்பமுனிக்கு. அப்படிச் சொல்லாவிட்டால் அவர் பெயரை மாற்றி வைக்க வேண்டும் சிரித்துக் கொண்டே சொன்னார், “சீனி சக்கரை சித்தப்பா, சின்னப் பொண்ணு எனக்குப்பா’ங்கிற கதையாட் டுல்லாவே இருக்கும்?”
“பாட்டா! சொல்லுகனே ண்ணு வெசண்டையா நெனக்கப்பிடாது. நீரு என்ன எழுதினாலும், பேசினாலும், நேர்காணல் குடுத்தாலும் ஓட்டுப்போட்டாலும் போடாட் டாலும் ஒம்மால ஒரு புல்லும் புடுங்கீர முடியாது… பின்ன என்னத்துக்குக் கெடந்த பெடங்கி அடிச்சுக்கிட்டு வரணும்? இல்லே, தெரியாமத்தான் கேக்கேன்! இளைய தளபதியா உம்மை அறிவிச்சா, உம்மைக் கொண்டு ஏலுமா? ஒரு வீல் செயர் வாங்கப்பட்ட காசு உண்டா உம்ம கோமணத்துக்கு உள்ளே? என்னத்துக்குப் போட்டு வெப்ராளப் படுகேரு?’
“அதுக்கு நான் இப்பம் ஒண்ணும் சொல்லல்லியே வே! தமிழ் எழுத்தாளன்னா உங்களுக்கெல்லாம் என்ன நெனப்புண்ணு எனக்கு மனசிலாகாதா? குளி முறியிலே சறுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிஞ்சாக் கூட, சவத்துக்குப் பொறந்த பய சாவட்டும்ணு ஸ்டேட்டஸ் போடக்கூடிய ஆளுததானவே நீங்க?”
தான் செத்துப்போனால் தவசிப்பிள்ளை என்ன செய்வார் என்று யோசித்தார் கும்பமுனி. புற நானூற்றில் வன்பரணர் பாடிய பாடல் மனத் தடாகத்தில் நெளிந்தது கும்பமுனிக்கு. காட்டில் இறந்துபோன கணவனுக்கு ஈகத்தாழி செய்யச் சொல்லும் மனைவி, ‘கலம் செய் கோவே! கலம் செய் கோவே!’ என்று குயவ னிடம் வேண்டும் பாடல். முதுமக்களைப் புதைக்கும் தாழியைச் சற்றுப் பெரியதாக, வாயகன்றதாக, தனக்கும் சேர்த்து வனையச் சொன்னதைப் போல. அல்லது தமிழ்நாட்டு முற்போக்கு, மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரியக் கவிஞன் போல ‘எழுந்து வா! எழுந்து வா! என்று அம்மாடி – தாயரே அடித்துக் கூவலாம். அல்லது தனது எரியும் சிதையின் கொடுந்துயில் பாய்ந்து உயிர் விட்டு, தீப்பாய்ந்த ஐயனும் ஆகலாம்.
சற்றே மென் முறுவல், புன்முறுவல், பொன் முறுவல், நன்முறுவல், இன்முறுவல், நெய்ரோஸ்ட் முறுவல் பூத்தார் கும்பமுனி.
“அப்படி எல்லாம் சொப்பனம் காணாண்டாம், கேட்டே ரா? கெட்டின பொஞ்சாதியே ஒருவேளை பட்டினி கெடக்க மாட்டா….” என்றார் தவசிப்பிள்ளை .
ஒருவேளை தான் செத்துப் போனால், தவசிப்பிள்ளை, கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுவாரோ என்ற அச்சம் எழுந்தது கும்ப முனிக்கு. அங்ஙனமே ஆகி, கும்பமுனி II, தனது எழுத்துப் பணியையும் தொடர்ந்தால், இன்றைய சில மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் போல ஆகிவிடுவாரே என்ற சந்தேகமும். சிரிப்பாகவும் வந்தது, தன்னுடலில் புகும் தவசிப்பிள்ளையின் ஆவி ஆற்றப் போகும் தமிழ்த் தொண்டினை ஓர்த்து. என்ன சங்கடம் என்றால் கும்பமுனி II இறந்த பிறகேதான் தனக்கான இரங்கல் கட்டுரை எழுதப்படும், அப்போது தனது இரண்டாம் இன்னிங்சும் கணக்கில் கொள்ளப் படும்.
“அப்பம் எனக்கு நானே கட்டஞ் சாயா போட்டு, கஞ்சி வச்சு, காணத் தொவையலும் அரச்சுக்கிட வேண்டியதுதான் போல… கெதிகேடு” என்று சலித்துக்கொண்டார் தவசிப் பிள்ளை .
கும்பமும் நானே தவசியும் நானே
காவலும் நானே ஏவலும் நானே
இழவும் நானே இருப்பும் நானே
கலையும் நானே கொலையும் நானே
குற்றமும் நானே நீதியும் நானே
நோயும் நானே மருந்தும் நானே
மன்னனும் நானே கள்ளனும் நானே
என்று தளை தட்டி ஓடியது கும்பமுனியின் பாவினம். அவரது சிந்தனை பழையாற்றுக் கயத்தின் சுழிபோன்றதென தவசிப்பிள்ளை அறிவார். உள்ளே இழுத்துக்கொண்டு விட்டது என்றால், ஊதிப் பெருத்துத்தான் இரண்டாம் நாள் சவம் எங்கோ கரையொதுங்கும்.
உடனே ஓராயிரம் பேர் முகநூலில் பதிவிடுவார்கள். இந்துத்துவ, முதலாளித்துவ, பிற்போக்கு அராஜகவாதியான கும்பமுனிக்கு இந்தச் சாவு தக்கதே என்று.
“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்”
என்றார் கும்பமுனி. தலையை இடவல மாக உதறியவாறு, சாமி வந்தாற் போன்று.
“அது எப்படிப் பாட்டா சரியாகும்? ஆளு நல்லவனா இல்லையாங்கதை அவன் வாரிசை வச்சுத் தீர்மானிக்க முடியுமா?”
“வள்ளுவரு கெடக்கட்டும், நீரு சொல்லும்! காந்திக்கு, மார்க்சுக்கு, பெரியாருக்கு இண்ணைக்கு அவருக்குள்ள சீடர்களை வச்சு அவர்களைத் தக்கார் என் பேரா, தகவிலர் என்பேரா?”
“வே! நீரு பீடம் தெரியாம ஆடப் பிடாது… ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு, மார்க்சிங்கு, அம்பேத்காரிங்கு, பெரியாரிங் குண்ணு கடிக்கப்பிடாது கேட்டேரா?”
“ஏன்? உமக்குத் தந்த பைந்தமிழ்ச் செம்மல் விருதையும் லெச்ச ரூவா காசையும் திரும்பக் கேப்பாம்னு பயமா இருக்கா? அது கெடக்கட்டும்…. இருவதாவது உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டுக்கு பிரேசில் போறேரா?”
“ஓமக்கு குண்டீல கொழுப்பு ஏறி அடிக்குவே! ஏதோ இதுவரை பத்தொன்பது மாநாட்டுக்கும் போயிட்டு வந்த மாதிரி கேக்கேரு? நம்மள உள்ளூர் கலை மருத்துவ இலக்கிய எழுத்தாளர் மாநாட்டுக்கே எவனும் கூப்பிட மாட்டாம்கான்…”
“அதுக்கு நீரு இந்துத்துவால்லா?”
“அப்பம் ஒரு பத்ம விபூஷண் தந்திருக் காண்டாமா? ஏதாம் யூனியன் பிரதேசத்துக் காவது வெப்டினன்ட் கவர்னர் ஆக்கீருக் காண்டாமா?”
“சரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலை இன்னும்…”
“என்ன கேட்டேரு? மட்டன் சாப்பிட்டா மலத்திலே தெரியும்ணா ?”
இந்தத் தற்குத்தறம் தாலா வேண்டாம்ங் கறது!”
“நீரு என்ன கேட்டேரு?”
“இருவதாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு நீரு ஏம் போகல்லே?”
“வே! இது நல்ல சீராட்டுல்லா இருக்கு! நான் ஏன் எட்டாயிரம் கோடீல சினிமா எடுக்கல்லேண்ணு கேப்பேரு போலிருக்கே!”
“அது உம்மால ஆகப்பட்ட காரியம் இல்லேண்ணு தெரியும். ஆனா உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அப்பிடியா பாட்டா?’
“பின்னே ! கண்ணுவிள்ளே … நீரு ஒரு காரியம் மனசிலாக்கணும்…”
“என்னா ?” “நான் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வா?”
“இல்ல “
“முன்னாள் அமைச்சரா?”
“நல்ல கூத்து…”
“கவர்ச்சி நடிகையா?”
“கெக்கக்கெக்கே… என்ன பாட்டா?”
“பட்டி மன்றப் பேச்சாளரா?”
“உம்ம பேச்சை எவனாம் கிறுக்கன் கேப்பானா?”
“பல்கலைக் கழகப் பேராசிரியனா?”
“ஒம்மாண இல்ல”
“ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவனுக்கு மாமன் மச்சானா? எடுபிடியா? தரகனா? வைப்பாட்டி மகனா?”
“இல்ல பாட்டா… அதுக்கும் இதுக்கும் என்னா ?”
“விபச்சாரம் எனக்கு உபதொழிலா வே?”
“ஓய் கெழட்டு மனுசா! உமக்கே இது நல்லாருக்கா?”
“பின்ன எப்பிடிவே நம்மக் கொண்டு தமிழாராய்ச்சி செய்ய ஒக்கும்?”
“இல்ல பாட்டா … நீரு மூத்த எழுத்தாளர்லா?”
“மூத்த எழுத்தாளன், மூதேவி எழுத்தாள னெல்லாம் மாத்தி வையும்… குசு மூத்தா மணக்குமா வே? மொழியையும் இலக்கியத்தை யும் பண்பாட்டையும் முன்னெடுத்து, உயிரைக் குடுத்து எறுதப்பட்டவனுக நூறு பேரு சொல்லவா வே? ஓய்வு பெற்றவன், சாவக் கெடக்கிறவன், படிக்கதை நிறுத்தி முப்பது வருசம் ஆனவன் எல்லாவனையும் விட்டுத் தள்ளும் வே! வவுச்சர் போடப்பட்ட கூட்டத்திலே ஆராய்ச்சியாவது புண்ணாக்காவது? பட்டி மண்டபத்திலே என்ன ஆராய்ச்சி செய்வானுவ வே? சினிமா நடிகை கிட்ட எங்கிண வே தமிழ் தேடுவான்?”
“பாட்டா… சும்மா எல்லாத்தையும் திட்டிக் குட்டையிலே அள்ளாதேயும்… உமக்கும் இரங்கல் கட்டுரை எழுதப்பட்ட காலம் வந்தாச்சு பாத்துக்கிடும்…”
“இப்பமே எழுதித்தான் வச்சிருக்கான் வே… செத்து சேதி வந்த உடன் ஒரு காப்பி எடுத்து ஊடகத்துக்குக் கொடுக்க வேண்டியது தான் பாக்கி. எங்கிட்ட வந்து கேக்கேரு பாரும், மாநாட்டுக்கு ஏம் போகல்லேண்ணு? மீன் கடையிலே ஆட்டுக்கு என்ன வே வேலை? இதுவரைக்கும் ஜானகிராமன், எம்.வி.வெங்கட் ராம், கி.ரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், க.நா.சு, வெங்கட் சாமி நாதன்னு எந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கும் போயிருக்காளா? நாய்க்குப் பூழல்லே தேன் வடியுதுண்ணா எழுத்தாளன் போய் நக்குவானா வே? அவன் போனான், இவன் போனான்னு உசிரை எடுக்கப்பிடாது, கேட்டேரா? அதெல்லாம் ஒரு தனி இனம் வே! மாடு செத்தா கழுகுக்கு யாராம் சொல்லியா விடுகா? ஆடி பவுண்டேஷன் எந்த ஊர்ல இருக்குண்ணு ஒமக்குத் தெரியுமாவே? அததுக்கு அவனவன்ணு உண்டும் கேட்டேரா? கெடந்து வெப்ராளப் படாம, மொளவச்சத்துக்கு வறுத்து அரைக்கப் பாரும்….”
தயங்கித் தயங்கி தவசிப்பிள்ளை கேட்டார், “பாட்டா!”
“என்னவே செல்லம் கொஞ்சுதேரு?”
“ஒண்ணு சொன்னா சாடி விழுந்து கடிக்கப்பிடாது!”
“சொல்லும் வே! ஒண்ணுமே சொல்லாதது மாதிரி, பெரிசாப் படம் போடாதேயும்…”
“நாமே ஒரு உலகத் தமிழ் மாநாடு நடத்தீற்றா என்னா ?”
“ஏம் வே? அஞ்சாறு சினிமாக்காரிகளைக் கூப்பிட்டு, மொலயும் குண்டியும் ஆட்டி குத்தாட்டம் போட்டு தொல்காப்பயிர் காலம் என்னாண்ணு கணக்குப் போடலாம்ணா? போவும் வே… போயி சூடா கடுப்பம் கூட்டி ஒரு கட்டன் சாயா எடும்.”
முற்றத்தின் கருங்காகம் ஒன்று, செத்த எலியொன்றைத் தூக்கி வந்து கொத்திக் கொண்டிருந்தது. சீதாப் பிராட்டியின் முலைகளைக் குறிபார்த்துக் கொத்த வந்த காகாசுரனின் வாரிசு ஏன் செத்த எலியைக் கொத்த வேண்டும்? குடுமி அறுத்த, பூணூல் அறுத்த, நாமத்தை நக்கி அழித்தவர்களின் வாரிசுகள் ஏன் அத்தி வரதர் காண வரிசையில் நிற்க வேண்டும்? எல்லாம் காலப்பிழை. இது எதன் குறியீடு என்று பின்னவீனத்துவ மண்டையைச் சொறிந்தார் கும்பமுனி.
தபால் சேவகர், வாசல் படலையைத் தள்ளித் திறந்து, உள்ளே நடந்து வந்து தபால் உறையொன்றைக் கொடுத்தார். கும்பமுனியின் புத்தக வெளியீட்டகம் அனுப்பிய கடித உறை. 2018-2019 ஆண்டுக்கான உரிமைத் தொகைக்காக மூன்று நினைவூட்டுக் கடிதங்களின் பலன் என எண்ணி, கர்வத்துடன் உரையின் ஓரம் கிழித்து, உள்ளிருப்பை உருவினார்.
துண்டுக் கடிதத்துடன் காசோலை ஒன்றும் வந்தது. பார்த்ததுமே காசோலை என்று தெரிந்ததும், தொகுதித் திட்டப் பணிக்கான நிதி ஒதுக்கீட்டைப் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர்போல, தவசிப்பிள்ளை எட்டிப் பார்த்தார். காகம் உகக்கும் பிணம் என்றும் உவமை சொல்லலாம். காசோலையில் எழுதப்பட்டிருந்த தொகை காண கும்பமுனிக் கும் தவசிப் பிள்ளைக்கும் கனத்த மௌனம் உருத்திரண்டது.
இணைக்கப்பட்டிருந்த துண்டுச் சீட்டில், உரிமைத் தொகையின் கணக்கு இருந்தது.
ஆசிரியர் : கும்பமுனி உரிமைத்தொகை : 2018 – 2019
நூலின் பெயர் : வாலென்பது ஐந்தாம் கால்
7 படிகள் x Rs. 90.00 = Rs. 630.00
முலைக்கோட்டு விலங்கு
9 படிகள் x Rs. 105.00 = 945.00
மொத்தம் Rs. 1.575.00
உரிமம் @ 10% = Rs. 157.50
(காசோலை இணைக்கப்பட்டுள்ளது)
தவசிப்பிள்ளை, கும்பமுனியைப் பார்த்தார். கும்பமுனி, தவசிப்பிள்ளையைப் பார்த்தார். படைப்புக் கடவுள், சகலகலாவல்லி, இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
(காக்கைச் சிறகினிலே – 2020 ஜனவரி)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to முனகல் கண்ணி

  1. Amma En Theivam Vallam Thamil சொல்கிறார்:

    கோபத்துடன் சிரிக்க வைக்க உங்களால் தான் மட்டும் முடியும் அய்யா, நன்றி

  2. து.பிரபாகரன் சொல்கிறார்:

    எள்ளல் மிக இயல்பாய்… வட்டார வழக்கும் மிகப் பொருத்தமாய… வெட்கித் தலைகுனியும்படி சமூகச் சூழலைத் தோலுரிக்கும் (சமூகத்தில் எழுத்தாளர் நிலை ) மிக அழகான சிறுகதை.

    உங்கள் நக்கல் மகிழும் வகையில் உள்ளது.

    கும்பமுனியும் தவசிப் பிள்ளையும் வாழ்க!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s