மற்றை நம் பாவங்கள் பாற்று!

தினமும் காலையில் கண்விழித்ததும் ஐம்பது அறுபது வாட்ஸ் ஆப் செய்திகள் கண்ணுறலாம். எனக்கென்றில்லை, யாவர்க்கும்.
ஈசன் அடி போற்றும், எந்தை அடி போற்றும், நேசன் அடி போற்றும், சிவன் சேவடி போற்றும், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றும், தேவார-திருவாசக மற்றும் சைவத் திருமுறைகளின் பாடல்கள் வரும். விதவிதமான சிவ மூர்த்தங்களும் வரும்.
மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைப் பரவும் திவ்யப் பிரபந்தப் பாடல்கள் வரும். கணக்கற்ற பெருமாள்களின் அலங்காரப் படங்களுடன்.
மற்றொருபுறம் நரேந்திர மோடியைக் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுக்கும் வசனங்களுடன் செய்திகள், கேலிகள், வசவுகள், நக்கல்கள், சாபங்கள், கோஷங்கள், ஒப்பாரிகள், முக்கல் முனகல்கள்.
இன்னொரு பக்கம் திராவிட, தமிழ்த் தேசிய, மார்க்சிய, தலித்திய, பெரியாரிய தலைவர்களின் கோவணங்கள் எத்தனை அழுக்கானவை என்று துவைத்து அலசிக் காயப்போடும் ஆவேசக் கூப்பாடுகள்.
பக்கவாட்டில் கிறித்துவ, இஸ்லாமிய, மதச்சார்பின்மையின் அறநெறிச் சாரங்கள்
வேறொரு பக்கம் சனாதன தர்மத்தின் உயர்வு பற்றியும், நியம நிஷ்டைகளின் மேன்மை பற்றியும், இந்துப் பாரம்பரியம் பற்றியும், போதனைகள். எக்கச்சக்கமான சுலோகங்கள். நாம் இதுவரை கேள்விப்பட்டிராத வடமொழி நூல்கள், ஆகமங்கள், சாத்திரங்களின் பேராறு…
எல்லாமுமாக நமக்கு மலச்சிக்கல் ஏற்படுத்தி, மூலக்கடுப்பையும் முடுக்கி விடும்போது, பீர்க்கு, பரங்கி, பூசணி, வெள்ளரி, பாகல், புடலை சாப்பிட்டால் என்னென்ன நோய் வராது என்ற ரீதியில் செய்திகள்.
பார்த்த உடனேயே குடலைப் புரட்டி வரும் அளவுக்குத் திணிக்கத் திணிக்க சினிமா நடிகர்-நடிகையரை வைத்து மீம்ஸ்…
எத்தனை பெரிய உரலாக இருந்தாலும் சின்னக் குழவியே போதும் என்ற கணக்கில் இரட்டைப் பொருள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள்… தொள்ளாயிரம் கோடி ஆண்டு வருமானம் பார்க்கிறவன் அடித்த சிக்சர் பற்றிப் புல்லரித்துப் புகழ்ந்து பரவசப்படும் செய்திகள்… டயர் நக்கி, சீனி சக்கரை சித்தப்பா, தாமரை மலரும், அம்மாவின் பொன்னான திட்டம் பன்னிரு வழிச் சாலைகள் என்று அரசியல் நகை பலதும் வரும்.
சனிப்பிரதோஷம் மார்கழி மாதம் மகம் நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் வருகிறது. இது 1,32,689 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருவது. அன்று நந்தி காதில் சொன்னால் உம் வீட்டில் ரெய்டு வராது என்று செய்தி வரும். தொழுது தூய்மை அடையுங்கள், துறக்கத்தில் சென்று அலாரம் வைக்காமல் உறங்குங்கள் என்றொரு சேதி வரும்.
ஊழல் பணம், கொள்ளைப் பணம், பாவப்பங்குப் பணம், கூட்டணிப் பேரப் பணம், கள்ள நோட்டுப் பணம், சொத்து அபகரிப்புப் பணம், நீதி விலைக்குக் கொடுத்த பணம், முற்போக்கு – சாதி மறுப்பு – சமூகநீதி என்று கோஷிக்கும் சினிமாவில் கொண்ட பணம், கட்டப் பஞ்சாயத்துப் பணம், கல்வியும் மருத்துவமும் ஏலமிட்ட பணம் யாவற்றையும் பரிசுத்தப் பால் வெள்ளையாக்கும் இந்த அம்மனுக்கு நெருஞ்சிப் பூ, எருக்கம்பூ, குருக்கம்பூ, நாயுருவிப்பூ, கொழிஞ்சிப் பூமாலை சூட்டி வழிபட்டால் போதும் என்கிற ரீதியில் ஆற்றுப்படுத்தும் தகவல் வரும்.
நடிகர் பஞ்சலிங்கம், தனது சொந்தத் தம்பி கல்யாணத்துக்கு படப்பிடிப்பை பாதியில் முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது வாட்ஸ்ஆ ப் செய்தி. மற்றை மறி மாயச் சினிமாவின் படப்பிடிப்பில் பெருந்தொடை – பெருமுலை – பெரும்புட்ட நாயகி அபான வாயு பிரித்தாள் என்பதும் செய்தி. இன்னொரு படப்பிடிப்பில் கதாநாயகன் செட்டிநாட்டு கந்தரப்பமும் நாஞ்சில் நாட்டு ரசவடையும் கலைஞர் சமாதியில் படைத்த தயிர் வடையும் கேட்டுக் கிடைக்காததால், படப்பிடிப்பை ரத்து செய்தார் என்பதும் செய்தி. இயக்குனர் பிராயச்சித்தன், 14 வயது குழந்தை நட்சத்திரச் சிறுமியை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அன்பு கசிந்து ஐஸ்கிரீம் ஊட்டும்போது, ஐஸ்கிரீம் அவர் அடிவயிற்றுக்கும் கீழே ஒழுகியது என்பதுவும் மனித உறவு மேம்பாட்டுச் செய்தி.
ஒரு குறுங்கணக்காக ஐந்தொகை போட்டுப் பார்த்தால், பரமண்டலத்தில், வைகுந்தம் கைலாசம் எனும் துறக்கப் பெரு வீடுகளில் நமக்கு ஓய்வெடுக்க ஒரு படுக்கை உறுதி. பக்கத்து படுக்கை எவர்க்கென்று கேட்காதீர்!
4 நல்லவன் வாழமாட்டான், அல்லவன் சாகமாட்டான் என்பதுவே இன்றைய தேசீயநீதி. மக்கள் சேவை செய்பவர், அரசு அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் முதலானோர் நோய் நொடிகள் அற்று, பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள். அவர்கள் சந்ததியர் முப்பது கோடி விலையுள்ள ஊர்தியில் பயணிக்கிறார்கள். முக்கால் மணிநேரத்திற்கு மூவாயிரம் பணம் கொடுத்து மசாஜ் செய்து கொள்கிறார்கள்; வேளைக்கு மூவாயிரம் பணம் கொடுத்து தீனி தின்கிறார்கள்; நல்லோர் ஆசியுடன் ஞானிகள் அனுக்கிரகத்தில் இறையருளும் பெற்று பன்னெடுங்காலம் வாழ்கிறார்கள். அவர்கள் 19 ஆண்டுகள் முன்பு நிர்மாணித்த பேருந்து நிலையத்தில் மழைக்கு ஒதுங்கிய பள்ளிச்சிறுமி, நொறுங்கிச் சாகிறாள். கடவுள் மீதே நமக்குக் கடும் பகை தோன்றுகிறது.
புகழ்பெற்ற தங்கள் பள்ளியில் என் குழந்தைகளைப் படிக்க வைக்கச் சொல்லும் விளம்பரம் 71 வயதான எனக்கு வருகிறது. இரவில் தனித்து உறங்காதீர், துணைவேண்டுமா என்று செய்தி வருகிறது. மாதம் 1418 பணம் ஓய்வூதியம் பெறும் எனக்கு எந்தக் காப்பீடும் இல்லாமல் 15 கோடி கடன் தருவதாய்ச் சொல்கிறார்கள். சென்ற நிதியாண்டில், நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் 36,800 கோடிப் பணம் மோசடி என்கிறார்கள். நாட்டின் கொடிதாங்கி நடக்கும் வங்கியொன்றில், சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் குறைந்த இருப்புத்தொகை 3000 பணம் என்றும், குறைந்தால் அபராதம் 150 பணம் என்றும் சொல்லித் தண்டம் வசூலித்த தொகை ஆண்டுக்கு 5400 கோடி என்கிறார்கள்.
டெங்குக் காய்ச்சலில் செத்தவர் எத்தனை என்று கேட்டால், முந்தைய ஆட்சியில் சாகவில்லையா என்கிறார்கள். உறக்கம் வராமல் நள்ளிரவில் தொலைக்காட்சி பார்த்தால், ஆண்மைக் குறைவுக்கு மாத்திரை விற்கிறார்கள். நாளுக்கு இரண்டு வீதம் ஒரு மண்டலம் சாப்பிடவேண்டும், விலை ஒரு மாத்திரைக்கு 750 பணம் என்கிறார்கள். ‘ஒண்ணுபோதும், நிண்ணுபேசும்’ என்கிறார்கள். இந்த வயதில் எந்த ஆண்மையை எவருக்கு மெய்ப்பிக்க நாம்? வீரியக் குறைவுக்கும் விந்து முந்தாமல் இருக்கவும் மாத்திரை விற்கும் தொலைக்காட்சி சானல் உரிமையாளர் அனைவரும் பொது மேடைகளில் மார்க்சியம், காந்தியம், அம்பேத்காரியம், பெரியாரியம், ஆன்மீகம் பேசும் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். எவரிடம் சென்று முறையிடுவது?
பார்த்தும் பாராமலும், கேட்டும் கேளாமலும், வாசித்தும் வாசிக்காமலும் பல செய்திகளை அழித்துத் தள்ளிச் சுயம் பேண நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
என்றாலும், சில வேளைகளில், நம்மைப் போன்ற ‘ஊரிலேன் காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை’ மனோபாவமுடைய எளிய குடிமக்களைக் கடைத்தேற்ற, சில இசைக்கோர்வைகள் வந்து விழும். அபூர்வ சிற்பங்களின், ஓவியங்களின் கல்-செங்கல்சுண்ணாம்புத் தளிகளின் புகைப்படங்கள் வரும். விலங்குகள், பறவைகள், மீன்கள், பிற ஊர்வன-பறப்பன-உயிர் வாழ்வன எனக் காட்சிகள் வரும். பெரு விருட்சங்கள், கொடிகள், சிறு தாவரங்கள், படவரைகள் வரும். தளிர்களுடன் மொட்டுக்கள், மலர்கள் வரும். உலகத்து அனைத்து வகை-நிற ரோஜாக்கள் வரும். அருவிகள், ஆறுகள், ஓடைகள், தடாகங்கள், வாவிகள், பொழில்கள் வரும். பல்வகைக் கடற்கரைகள், ஆழ்கடல்கள், அலைகள், ஆழிப் பேரலைகள் வரும். பொசுங்கல், தூற்றல், சாரல், மழை, அடைமழைக் காட்சிகள் வரும். விஞ்ஞான மகத்துவங்கள், ஞானிகளின் பொன்னுரைகள், கோள்களின் சஞ்சாரங்கள் எனப் பயனுள்ள பலவும் காட்சிப்படும். பதரின் நடுவே மஞ்சாடிப் பொன் போல, சிலப் பாச்சுடர்களும் வரும்.
அதுபோன்ற தருணங்களில், என்ன தவம் செய்தனை என்ற பாபநாசம் சிவனின் காபி ராகக் கீர்த்தனையை மகாராஜபுரம் சந்தானம் பாடிக் கேட்பது போலிருக்கும்.
நாலாயிரத் திவ்யப் பிரபந்தமோ, பன்னிரு திருமுறைகளோ, கம்பனோ, பட்டினத்துப் பிள்ளையோ, அருமைத் தாயுமானவரோ, அருணகிரி நாதரோ, வள்ளல் பெருமானோ என எவர் வழங்கிய பாடல்கள் ஆயினும் மனம் உடனே சென்று ஒன்றிவிடும். அந்தப் பாடல்கள் வழிபடு தெய்வங்கள் அல்ல எனது ஈர்ப்பு. ஞானிகளாய புலவர்கள் பயன்படுத்திய மொழி, உவமை, சொல்லாட்சி, உட் பொதிந்து கனிந்து கனன்று கொண்டிருக்கும் கவித்துவம், இசை நயம் யாவுமே நம்மையோர் அனுபூதி நிலைக்கு ஆட்படுத்தும்.
அந்தக் கணக்கில், சென்ற கிழமையில் வந்ததொரு பாடல் ஒன்று எம்மைக் கவர்ந்தது. அந்த நண்பர், ஊக்கம் குறையாமல் திவ்யப் பிரபந்தப் பாடல் ஒன்று தினமும் அனுப்புவார். சென்ற கிழமையில் அவர் அனுப்பிய பாடல்:
‘கண்டு கொண்டென்னைக் காரி மாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே!’
என்பது முழுப்பாடல்.
வழக்கமாகப் பாடல் அனுப்புபவர்கள், அப்பர், மாணிக்க வாசகர், ஆண்டாள், பூதத்தாழ்வார் எனக் குறிப்பிட்டு விடுவார்கள். நமக்கும் மயக்கம் இருக்காது. இந்த நண்பர் அதனைச் செய்பவர் இல்லை. ஆர்வம் இருப்பவர் தேடிக் கண்டு கொள்ளலாம். இந்தப் பாடலின் வரிகள் தெளிவாகவே இருந்தன. பாடல் தரும் செய்தியும் தெளிவானதுவே! காரிமாறப் பிரான், ஒண் தமிழ்ச் சடகோபன் இரண்டுமே நம்மாழ்வாரைக் குறிப்பன.
நம்மாழ்வாரை மட்டுமே பாடிய, அரங்கனைக்கூடப் பாடாத ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் உண்டென்றால், அவர் மதுரகவி மட்டுமே..
என்னிடம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பல்வேறு வகைப்பட்ட ஆறு பதிப்புக்கள் உண்டு இன்று. என்றாலும் முதலில் நான் வாங்கியது 1990-ல், சென்னை திருவேங்கடத்தான் திருமன்றம் பதிப்பித்தது, மூலம் மட்டுமே. என்னிடம் இருப்பது 1987-ல் வெளியான மூன்றாம் பதிப்பு. அன்றைய விலை, கலிக்கோ அட்டை, 1050 பக்கங்கள் கொண்ட நூலுக்கு அறுபது ரூபாய். நானொரு எழுத்தாளன் என்ற காரணத்தால், கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்கும் எந்த நூலுக்கும் 15% கழிவு உண்டு, கடனும் உண்டு. அறுபது ரூபாயில் கழிவு போக, கல்லாவில் இருந்த அண்ணாச்சி மு.வேலாயுதம் என்னிடம் ரவுண்டாக ஐம்பது பணம் வாங்கினார்.
எத்தனை பதிப்புக்கள் வாங்கி வைத்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பதிப்பையே திரும்பத் திரும்பப் புரட்டுகிறோம் என்பதென் அனுபவப் பாடம். அது அப்பர் தேவாரமோ, திருவாசகமோ, திருக்குறளோ! அந்தப் பதிப்பே பழுப்பேறி, தாள்கள் மடங்கி, கட்டும் குலையும். யார் பாடல் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, அந்தப் பதிப்பில்தான் தேடினேன். சந்தேகமே இல்லை, பாடல் மதுரகவி ஆழ்வார் பாடியதுதான்.
பாடலின் பொருள் எளிமையானதுதான். கொண்டு கூட்டி எழுதினாலே, பொருள் எளிதில் விளங்கிவிடும். ‘காரி மாறப் பிரான், என்னைக் கண்டுகொண்டு, பண்டை வல்வினை பாற்றி அருளினான். ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன்!’ பாடலில் ஒரு சொல்லும் நான் சேர்க்கவில்லை, நீக்கவும் இல்லை. இன்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் மூத்த தமிழ். காரி மாறப் பிரான், சடகோபன் முதலாய சொற்கள் அர்த்தமாகவில்லை எனில் வருந்த வேண்டாம், நீங்கள் தமிழ்ப் பேராசிரியர் பணி நியமனத்துக்குத் தகுதியானவர்தாம். என்ன, ஒரு அறுபது இலட்சம் பணம் தேவைப்படும்!
மதுரகவி ஆழ்வார், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று ஆகப் பதினோரு பாடல்களே பாடியவர். அரங்கனையோ, திருவேங்கடத்தவனையோ, எந்தத் திருத்தலத்தையோ பாடாமல், தென் குருகூர் நம்பியை மாத்திரம் பாடியவர். பிறப்பால் அந்தணர். அவரால் பாடப்பெற்ற நம்மாழ்வார் வேளாளர். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரகவி, தமிழும் வடமொழியும் தேர்ந்தவர்.
மதுரகவி ஆழ்வார் பற்றிய தனியன் ஒன்று, நாதமுனிகள் யாத்த வெண்பா –
‘வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார், எம்மை
ஆள்வார் அவரே அரண்’
என்பதந்தத் தனியன்.
மதுரகவி ஆழ்வார் திருக்கோளூர் எனும் தலத்தில் தோன்றியவர். ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்றொரு வைணவ நூலுண்டு. வாசிக்க சுவாரசியமானது. நம்மாழ்வார் பாடிய 1296 பாசுரங்களையும் பட்டோலைப் படுத்தியவர் மதுரகவி ஆழ்வார்.
இதை இத்தனை தூரம் எழுதக் காரணம், மதுரகவி ஆழ்வார் பாடலில் வரும் ஒரு சொல். நானும் முதலில் அதைக் கவனிக்க வில்லை. பாண்டிச்சேரி தம்பி ஐயம் கேட்டபோதுதான் உணர்ந்தேன். இந்தக் கட்டுரை வாசித்து வரும் உங்களில் சிலருக்கும் அது தோன்றி இருக்கலாம். ‘காரிமாறப் பிரான், பண்டை வல்வினை பாற்றி அருளினான்’ என்ற வரியிலுள்ள ‘பாற்றி’ என்ற சொல் அது.
பாற்றி எனும் சொல் தமிழ்ச்சொல்லா, திசைச் சொல்லா, திரிசொல்லா, வட சொல்லா? அதன் பொருள் என்ன? இந்தக் கேள்விகள் வந்தன. நல்ல நேரம், பாண்டிச்சேரி தம்பி கேட்டார். நான் செய்யும் தமிழ்த் தொண்டாக, சில நல்ல பாடல்கள், புகைப்படங்கள், குறும்படங்கள், இசைத்தொகுப்புக்கள், என நண்பர் சிலருக்கு Forward செய்வதுண்டு. அரசியல் கேலிகள், புரளிகள், கொள்கை விளக்கங்கள், தலைவரான கயவரின் முழக்கங்கள், கட்சித்துதிகள், ஆடம்பரமான, அலங்காரமான பொழிவுகள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.
தம்பி கேட்ட ஐயம், ‘பண்டை வல்வினை மாற்றி அருளினான்’ என்றல்லவா இருக்க வேண்டும் என்பது. தம்பி வைணவர், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் தேர்ச்சி உடையவர். பல பாடல்கள் பாடம். பிரான்சு போய் வரும்போதெல்லாம் எனக்கு போர்டாக்ஸ் வைன் கொண்டுவருவார் என்பதற்காக இதை எழுதவில்லை. இரண்டாண்டுகள் முன்பு பிறந்த அவர் இரண்டாவது குழந்தைக்கு ஆண்டாள் என்று பெயர் வைத்திருக்கிறவர். காலத்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
தம்பி சங்கர் கேட்டபோது எனக்கும் தோன்றியது, அச்சுப் பிழையாக இருக்குமோ, பாற்றி எனும் சொல் மாற்றி என இருந்திருக்க வேண்டுமோ என்று. நம்மை ஆண்டு கொண்டிருப்பவரில் பலரும் அச்சுப் பிழைகளே! பாற்றி எனும் சொல், மாற்றி என இருந்தால் ஓசை குறைவுபடாது, இலக்கணமும் வழுப்படாது. பொருளும் இயல்பாகவே அர்த்தமாகிறது – ‘பண்டை வல்வினை மாற்றி அருளினான்’ என்று.
என்றாலும் ஐயம் திரிபு அறப் பார்த்துவிடலாம் என்று தோன்றியது. உடன் தானே என்னிடம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பதிப்புகள் யாவற்றிலும் பாடலைத் தேடினேன். யாவற்றிலும் ‘பாற்றி அருளினான்’ என்றே இருந்தது. பாற்றி எனும் இடத்தில் மாற்றி என்று இருந்தாலும் தற்போது எதுவும் கெட்டுப்போய் விடாது என்றாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சொல் அல்லவா? Lexicon-ல் போய், பொருள் தேடினேன். 1982-ம் ஆண்டின் இரண்டாம் பதிப்பு என்னிடம் இருப்பது. 2641-ம் பக்கத்தில், பாற்றுதல் எனும் சொல் பதிவில் இருக்கிறது.
பாற்றுதல் என்றால், To remove, நீக்குதல் என்பது பொருள். பெருங்கதையின் பாடல் வரியொன்று மேற்கோள். பாற்றுதலுக்கு இன்னொரு பொருள், To ruin, அழித்தல் என்பது. ‘பணிந்தார் தம் பாவங்கள் பாற்ற வல்லீர்’ என்ற தேவார வரி மேற்கோள்.
பாறுதல் என்றால் அழிதல். ‘பழம் வினைகள் பாறும் வண்ண ம்’ என்கிறது திருவாசகம். ‘பாறிய’ என்று புறநானூறும், பாறு என்று நற்றிணையும் பயன்படுத்தியுள்ளன. நாஞ்சில் நாட்டில், பச்சை வெளிறி, சரியாகத் தூர் வைக்காமல், திரட்சியாக வளராமல் கிடக்கும் நெற்பயிரைப் பார்த்து, ‘பயிரு என்ன பாறிப்போய் கெடக்கு?’ என்று வேளாண்மை செய்வோர் பேசுவது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.
எனவே பாறுதல் என்றால் நீங்குதல், அழிதல் என்றும் பாற்றுதல் என்றால் நீக்குதல், அழித்தல் என்றும் அறிகிறோம். ஒப்புமையாக தேறுதல் – தேற்றுதல், நீறுதல் – நீற்றுதல், மாறுதல் – மாற்றுதல் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆக, மதுரகவியும் தேவாரமும் பயன்படுத்திய பாற்றி எனும் சொல்லின் பொருள் நீக்கி, அழித்து எனக் கொள்ளலாம். எனவே மதுரகவி ‘பண்டை வல்வினை பாற்றி அருளினான்’ என்பது அச்சுப் பிழை அன்று என்பது தெளிவாயிற்று.
சமீபகாலமாகப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பாவிகளில் சிலர், ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாவிட்டால், சொல்லைத் திருத்தி விடுகிறார்கள். உ.வே.சாமிநாதைய்யரின் ஆவி, சி.வை.தாமோதரம் பிள்ளையின் ஆவி எங்ஙனம் மன்னித்து அருளும்? அச்சுப் பிழைகளால் நேர்வது என்பது மற்றொரு வகையிலான பாவம்.
முன்பொரு கட்டுரையில், திருவாசகத்தின் அச்சப்பத்து பகுதியின் பாடல் ஒன்றில், ‘புற்றில் வாள் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்’ எனும் வரியின் வாள் எனும் சொல் வாழ் என்று திருத்தப்பட்டிருப்பதாகச் சொல்லி யிருந்தேன். புற்றில் வாள் அரவு என்றால் புற்றில் விடம் கொண்ட பாம்பு என்று பொருள். புற்றில் வாழ் அரவு என்றால் புற்றில் வாழுகின்ற பாம்பு என்று பொருளாகிவிடும்.
பாடல் வரிகளை மேற்கோள் காட்டும்போது, ஆதாரப் பத்திரம் எழுதும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதற்காக இத்தனையும் சொன்னேன்.
மேலும் எதன் பொருட்டு பாற்று எனும் மூவாயிரம் ஆண்டுத் தமிழ்ச்சொல்லை நாம் தொலைக்க வேண்டும்? பிறமொழித் திணிப்பு ஒரு அபாயம் என்றால், சொந்த மொழிப் புறக்கணிப்பும் ஒரு பாவம்தானே! இருபத்தொன்பதாவது திருப்பாவையில், ஆண்டாள், ‘மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!’
என்பாள். நாம், மற்றை நம் பாவங்கள் பாற்று என்கிறோம்.
(நாஞ்சில் நாடன்)
பேசும் புதிய சக்தி, தீபாவளி மலர், 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மற்றை நம் பாவங்கள் பாற்று!

 1. ANANTHaramakrishnan சொல்கிறார்:

  nanjilnadan – நஞ்சில் -நடன் எனக் கொள்ளக் கூடும்
  ஆங்கிலத்தில் குழப்பமின்றி எழுதும் வழிமுறைகள் சிலர் பின்பற்றுகிறார்கள்
  இது போல் nAnjil nAdan – என எழுதலாமே

 2. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  அருமை அய்யா, தொடர்ந்து இம்மாதிரியே எழுதி எங்களை போன்ற தற்குறிகளின் தாகத்தை கொஞ்சமாவது தணியுங்கள்

 3. Amma En Theivam Vallam Thamil சொல்கிறார்:

  அருமை அய்யா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s