பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

நாஞ்சில் நாடன்
பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி’ என்ற சொலவம் என்  அம்மை சரசுவதியால் அடிக்கடி சொல்லப்படுவது. பூவிதழ் ஒன்று பட்டால்கூட, பொன் போன்ற திருமேனி நொந்து போகுமாம் சிலருக்கு. மலையாளத்திலும் இந்த சொலவம் உண்டு. அஃதென்ன, பொன்மேனி என்றால் பூவினும் மென்மையான மேனி  என்பது? பொன் மென்மையான உலோகமா? இங்கு பொன் என்றால் நிறத்துக்கும் விலை மதிப்புக்குமான குறிப்பு.
‘பொன்னார் மேனியனே!’ என்பது தேவாரம். தேவாரம் என்று மொட்டையாகச் சொன்னால் போதுமா? தேவாரம் எனும் சைவ பக்தி இலக்கியப் பாடல்களை மூவர் பாடினார்கள். திருஞான சம்பந்தர், பன்னிரு திருமுறைகளின் முதல் மூன்றைப் பாடியவர். காலம் கி.பி. 637-653 என்பர். இரண்டாமவர் அப்பர் எனப்பட்ட திருநாவுக்கரசர். நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளைப் பாடியவர். காலம் கி.பி. 574-655. எனக் கொள்வார். மூன்றாமானவர் சுந்தர மூர்த்தி. ஏழாம் திருமுறை பாடியவர். காலம் கி.பி. 807-825 என்கிறார்கள்.
மூன்று பேர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில், கிடைத்தவற்றைத் தொகுத்துள்ளனர், ஏழு திருமுறைகளாக, தேவாரம் எனப் பெயரிட்டு. அவற்றுள், நாம் மேற்சொன்ன ‘பொன்னார் மேனியனே’ எனும் தேவாரம் இயற்றியவர் சுந்தரமூர்த்தி நாயனார். முழுப்பாடல்:
“பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!”
சற்றே கவனித்துப் படித்தால் பொருள் சொல்ல வேண்டிய அவசியம் வராது. ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ். அதற்காக நம் மாண்புமிகு பேரவை உறுப்பினரிடம் பொருள் கேட்டு விடாதீர்கள். அவர்கள் பாடலில் இருக்கும் பொன்னைக் களவு எடுக்க வழி காண்பார்கள்.
பாடல் பெற்ற தலம், பாடலிலேயே வருகிறது, மழபாடி என்று. மழபாடி எனில் திருமழபாடி. திருவையாற்றின் வடமேற்கே ஆறு கி.மீ. தூரத்தில் இருப்பது இத்தலம். கொள்ளிடத்தின் அக்கரையில் திருச்சியில் இருந்து லால்குடி – லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் எனும் எழுத்தாளுமை பிறந்த ஊர் – வழியாகச் சென்றால், உத்தேசமாக ஐம்பது கி.மீ.
இந்தப் பாடலின் பண், நட்டராகம். நட்டராகப் பண்ணுக்கு, கர்நாடக சங்கீதத்தில் என்ன பெயர் என்று இசை அறிஞர் நா. மம்மது அவர்களிடம் கேளுங்கள். பாடலில் எனக்குப் பிடித்த அடி, ‘மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!’ என்பது. மின்னலை ஒத்த தீப்போன்ற சடையின் மேலே ஒளிரும் மஞ்சள் நிறக் கொன்றை மலர் அணிந்தவனே என்பது பொருள். இந்தப் பாடலை, கவிதையாக அனுபவிக்க, எவரும் சைவசமயத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமில்லை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பதினோராம் திருமுறையின் பாடல்களைப் பாடியவர்கள் பன்னிருவர். பாடப்பட்ட நூல்கள் நாற்பத்து ஒன்று. அவருள் ஐயடிகள் காடவர்கோன் என்று ஒரு நாயனார். மன்னராக இருந்து துறவியானவர். இது கள்ளச்சாராயம் காய்ச்சியவர் அமைச்சராக ஆவதைப் போன்றதல்ல. ஐயடிகள் காடவர்கோன் பாடிய பாடல்களில், கிடைத்தவை வெறும் இருபத்து நான்கு மட்டுமே! அவை சேத்திரத் திருவெண்பா எனும் பெயரால் தொகுக்கப் பெற்றுள்ளன. அவர் பாடியவற்றுள், கிடைத்தவற்றுள், பதினெட்டாவது பாடல் திருமழபாடி ஈசனைப் பற்றியது.
“இழவாடிச் சுற்றத்தார் எல்லோருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் – மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்று அயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை”
என்பது பாடல். ஆவி விடுமுன்னம் ஆண்டவனை நினை என்பதுவே திரண்ட பொருள்.
நாம் பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி பற்றிப் பேசவந்தோம். திருவள்ளுவர் சொல்கிறார் அல்லவா, “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்று. இளங்கோவடிகள் மொழிந்தாரே கண்ணகியை, “வண்ண ச் சீறடி மண்மகள் அறிந்திலள்” என்று. அதாவது மிக மென்மையான அனிச்சப்பூவும், அன்னத்தின் மெல்லிறகும் மாதர் பாதங்களுக்கு நெருஞ்சி முள். கண்ணகியின் மெல்லிய சிவந்த பொற்பாதங்களை பூமகள் கூடப் பட்டுணர்ந்தது இல்லை .
நோவு, நோதல், நோக்காடு, நோகும் என்று சொல்லும்போதே வலி உணர்கிறோம். நோவு பிறப்பித்த சொல்லே நொம்பலம் என்பதும். நொம்பலம் என்றால் வலி, துன்பம். நோ எனும் சொல்லுக்கே வலி, துன்பம், வியாதி, சிதைவு, பலவீனம் எனப் பொருள் தருகிறது பேரகராதி.
“புகழ் பட வாழாதார் தந்நோவர் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?”
என்பது புகழ் அதிகாரத்துக் குறள்.
புகழ்பட வாழ இயலாதவர், தம்மை இகழ்வாரை நொந்து என்ன பயன் என்பது பொருள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் தம்மை இகழ்கிறார்கள், கேவலமாகப் பேசுகிறார்கள் என்று அடுத்தவரை நொந்து என்ன பயன்?
சர்வ சாதாரணமாக ஊர்ப்பக்கம் கேட்பார்கள், “அவனுக்கு என்ன நோக்காடு?” என்று. சாவு – சாக்காடு, நோவு – நோக்காடு. நோவு என்றால் வலி, துன்பம், வியாதி, பேறுகால வலி. நட்பியல் அதிகாரத்தில், நாலடியாரின் முதற்பாடலின், முதலிரண்டு வரிகள்”:
“வயாவும், வருத்தமும், ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகன்கண்டு தாய் மறந்தா அங்(கு)”
என்று. வயா எனில் கருத்தரித்திருப்பதனால் ஏற்படும் மசக்கை, மயற்கை. வருத்தம் எனில் கருவைச் சுமப்பதனால் ஏற்படும் வருத்தம். ஈன்றக்கால் நோவு என்றால் பேறுகால வலி. இவையாவும் தொடை நடுவே குழந்தையைக் கண்டபோது தாய் மறந்ததைப் போல. இது பாடல் வரிகளின் பொருள். நோவு எனும் சொல் குறித்துப் பேசவே இவ்விரண்டு வரிகளை எடுத்தாண்டேன். எனினும் இப்பாடல் மூலம் கிடைக்கும் இரு புதிய சொற்கள் வயா என்றால் மசக்கை, நல்ல தமிழில் மயற்கை. கவாஅன் எனும் இரண்டாவது சொல்லின் அளபெடை நீக்கிப் பார்த்தால், கவான். அதன் பொருள் தொடை. வயா எனும் சொல் மசக்கை என்பதனால், மசக்கை ஏற்படுத்தும் காரியத்துக்கு உதவுவதனால் ஒரு பாலியல் தூண்டல் மாத்திரைக்கு வயாகரா என்று பெயர் வைத்தனரோ என்னவோ!
ஆமாம்! பேறு காலத்து வலியும் நோவுதான். சிலருக்கு மேனியில் பூவிதழ் விழுந்தால் கூட நோகும்! அந்த நோவு ஒருவகையில் செல்வச் செழிப்பில் வந்தது. அதிலும் அற்பமாகப் பவிசு வந்தவருக்கு ஏற்படுவது.
‘வரப்போ தலகாணி, வாய்க்காலோ பஞ்சு மெத்தை’ என்று உறங்குபவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இது. நம்மை விழாக்களுக்கு அழைப்பவர் செலவில், அஞ்சி, கூசி, குறுகி, பதுங்கித் திருடனைப் போல ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க நேரிடும்போது எனக்குத் தோன்றும், இது பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனியருக்கு உகந்தது என்று. நமக்கோ இரயில் நிலைய நடைமேடையே பாற்கடல், பாம்பணை என்று .
எல்லா விடுதிகளிலும், அலுவலகங்களிலும், வீடுகளிலும், கழிவறையில் இருந்து புறத்து இறங்கும் போது ஈரம் வாங்க என மிதியடி போட்டிருப்பார்கள். பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்க்கு உரையாற்றப் போகும்போது, முதல்வர் அல்லது தாளாளர் அறையில் உட்கார வைப்பார்கள். தனியார் பள்ளிகளில் கல்லூரிகளில் அது ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் இருக்கும். நமக்கொரு கெட்ட பழக்கம், உரையாற்றப் போகுமுன் ஒன்றுக்கு இருக்க வேண்டும். பெரும்பாலும் ரெஸ்ட் ரூம் – டாய்லெட் – கக்கூஸ் – கழிவறை எங்குளது என்று நாம் கேட்பதில்லை. மிதியடிகளின் கிடப்பே அடையாளம்.
தங்கும் விடுதிகளிலும் கழிவறையை அடையாளம் காட்டி, மிதியடி கிடக்கும். ஆனால் ஐந்து நட்சத்திர விடுதிகளில், குளியலறைத் தொட்டியில் இருந்து இறங்கும்போது, தூய வெள்ளைத் துருக்கித் துவாலை கால் வைக்க என்றே பரத்தப் பட்டிருக்கும். குளிக்கத் தனி, துடைக்கத் தனி, கால் மிதிக்கத் தனி. கண்மணி குணசேகரனின், சு. வேணுகோபாலின் ஏழை விவசாயிகள் அந்த வெள்ளை நிறத்தைக் கற்பனை கூட செய்ய இயலாது. எல்லாம் உன்னதத் தரத்து தூய வெள்ளைப் பூத்துவாலைகள். அந்த வெண்மையின் தரத்தில் கால் வைக்க நமக்கு நோகும். பூப்பட்டால் நோகும் எனும் காரணத்தால் அன்று.
முகம், கை, குண்டி துடைக்க மென் வெள்ளைக் காகிதச் சுருள்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தனம் படைத்தவர் எங்கும் எதிலும் நோகக் கூடாது. நாம் கேவலமான கொள்கை பரப்பும் ஏழாந்தர தினசரியின் கிழிந்த தாளைக்கூட மிதித்துவிட்டால் கண்ணில் ஒற்றிக் கொள்வோம்.
குளிக்க எனப் பன்முக, பல் திசை, பல் விசை, பல் கன நீர்ப்பொழிவுகள் இருப்பதைப் போல, குண்டி கழுவ எனத் தனியாக நீர்ப் பொழிவான் இருப்பதைப் போல, அல்குல் அலம்பப் பெண்களுக்குத் தனியாக நீர்ப்பொழிவுகள் இருப்பதைப் போல, சுன்னத் செய்து கொள்ளாத ஆண்கள் மூத்திரம் பெய்யப் போகும் போது, முன் தோலைப் பின் தள்ள கருவியொன்று பொருத்துவது நலம் என ஏழை பங்காளி அரசுகள் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு அறிவுறுத்தலாம். நோகாமல் சிறுநீர் கழிக்கலாம்.
நொந்தேன் என்றால் நோவுக்கு ஆட்பட்டேன், வலி உணர்ந்தேன், துன்புற்றேன் என்று பொருள் தனிப்பாடல் திரட்டில் ஒளவையார் – “கால் நொந்தேன், நொந்தேன் கடுகி வழி நடந்தேன், யான் வந்த தூரம் எளிதன்று” என்கிறார்.
திருமூலர், திருமந்திரத்தின் முதல் தந்திரத்தில், யாக்கை நிலையாமையைப் பாடும்போது –
“அடப் பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,
மடக் கொடியாளொடு மந்தணம் கொண்டார்,
இடப் பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே”
என்பார். ஔவைக்கு நடந்து நடந்து கால் நொந்தது. திருமந்திரத்தில் இதய வலி வந்தபோது ஒருவருக்கு நோவு வந்தது. இங்கே பலருக்கும் பூப்பட்டால் நோவு வருகிறது.
நகரத்துத் தெருக்களில், பழவண்டி தள்ளி, கூவிக்கூவி விற்கும் தள்ளுவண்டிச் சாமான்யன், வயிற்றுப் பிழைப்புக்கு, குடும்பம் போற்ற, நாளுக்கு எத்தனை கிலோமீட்டர் நடப்பான்? நோகாதா அவனுக்கு? இரவு வீட்டுக்குப் போனதும் நொந்த கால்களுக்கு எண்ணெய் தடவுவானோ, வெந்நீர் வைத்து ஊற்றுவானோ, மக்களோ மனையாட்டிகளோ கால் அமுக்கிக் கொடுப்பார்களோ?
ஆனால் முந்நூறு அடி தூரத்தில் இருக்கும் ஆவின், மில்மா அல்லது நந்தினி பால் பூத்துக்குச் சென்று ஒரு பால் பாக்கெட் வாங்க, வண்டியை ஸ்டார்ட் செய்பவனின் நோவைப் பாருங்கள்!
வீட்டு வாசலில் இருந்து ஷாப்பிங் மால் வரை கார். மால் வாசலில் வாலட் பார்க்கிங் வசதி. வீட்டுவாசலில் இருந்து அலுவலக வாசல் வரை, மருத்துவமனை வரை, கல்லூரி வரை, ரயில் நிலையம் வரை, விமான தளம் வரை, சொகுசுப் பேருந்து நிறுத்தம் வரை… அவரெலாம் பூப்பட்டால் நோவும் பொன்னும் திருமேனியர்.
இந்நாட்டில் பெரும்பான்மையினர், நோவை உரத்துச் சொல்லும் உரிமையற்றவர். நீதியை உரத்துக் கேட்க இயலாது. உரிமையை உரத்துக் கேட்டு விட இயலாது. ஆனால் அதிகாரமும் ஆட்சியும் ஆஸ்தியும் உடையவர்க்கு எல்லாம் எளிதாக நடக்கும். வீட்டுமனைக்குப் பட்டா, மின் தொடர்பு, தண்ணீர் இணைப்பு யாவும் இரு நாட்களில் வீடு தேடிவரும். அரசின் எந்த அனுமதியும், அப்ரூவலும், ஆவணமும் அவர்க்கு எல்லாம் ஒரு பெரிய காரியம் இல்லை . உரியவை, உரிய காலத்தில் நடக்காவிட்டால் உரியவருக்கு நோகும். அவர்களிடம் நேரம் இருப்பதில்லை . காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எல்லாமே, பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனியர். நோவு அறிந்தவர், உணர்ந்தவர்.
வெகுசனம் என்பவர் புறம்போக்கு. வாளால் அறுத்தாலும் அவர்க்கு வலிக்காது. வலிக்கலாகாது. நடிகனின் மகன் வாகனம் ஓட்டிச் சென்று எவர்மீது ஏற்றிக் கொன்றாலும், அவனுக்கு அரைமணி நேரத்தில் பிணை விடுப்பு. மூன்று நாட்களில் முந்நூறு பணம் தண்டம் செலுத்தினால் போதும் எனும் நீதி வரும். அதே செயலை நீங்களோ அல்லது நானோ செய்தால் முப்பதாண்டுகள் நடக்க வேண்டும் நீதிப்புலம்களில்.
அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர், செல்வத்தைத் தேய்க்கும் படை என்றார் திருவள்ளுவர். அது அவர் காலம். இன்று கண்ணீ ர் வற்றிப் போவதுதான் எஞ்சும். அதிகமாகச் சத்தமிட்டு அழுதால், கண்களை நோண்டி எடுத்து வறுத்துத் தின்று விடுவார்கள்.
வெயில் 33 டிகிரி செல்சியஸ் போய்விட்டால், “ஓ! காட்! வாட் எ ஹீட்… ஷிட்…” என்பார் அவர். 40 டிகிரி செல்சியஸ் வெயிலிலும் ஒருத்தன் பாரமேற்றிய கைவண்டி இழுத்து நடப்பான், நெஞ்சுக் கூடு விம்மிப் புடைக்க, வியர்வை ஊற்றெடுத்துப் பாய, மூச்சிரைக்க…..
எங்கே ஐயா யாவரும் சமம்? மக்களாட்சியாவது, குடியரசாவது, சமத்துவமாவது? கொடுங்குளிரில் சாலையோரக்குடிசையில் ஒருவன் சாக்குப்பைக்குள் கால் திணித்து உறங்கப் பிரயத்தனப்படுவான்! இன்னொருத்தன் விலையுயர்ந்த மெத்தையில், சூடேற்றிய படுக்கையறையில், விலைப் பெண்டிரின் நிர்வாண மேனிக் கதகதப்பில், உல்லன் போர்வை போர்த்திக் கொண்டு, கண்ணயர்வான். கம்பன் சொல்வார், “நித்தம் நியமத் தொழிலராய் உத்தமர் உறங்கினார்கள்; யோகியர் துயின்றார்” என்று. யோகியர் எனும் சொல் பெயர்த்து, போகியர் எனும் சொல் பெய்யலாம்.
இங்கே மேன்மக்கள் என்போர் — சினிமாக்காரன், அரசியல்காரன், அரசு ஊழியன், தரகன், ஒப்பந்தக்காரன், கடத்தல்காரன், கள்ளச் சந்தைக்காரன், கல்வித் தந்தை, மருத்துவத் தந்தை. அவர்களுக்கு மயிலிறகால் தடவினாலும் நோகும்! பரத்தைப் பெண்டிர் மென்விரலால் தைவரல் செய்தாலும் வலிக்கும். நாமோ எருமை மாட்டுக்கும் கீழ்க்குடி.
‘நடை பாவாடை விரித்தல்’ என்றொரு சொற்றொடர் உண்டு. முன்பெல்லாம் மன்னர், குறு நில மன்னர், பெரு நிலக்கிழார் நடக்கும் போது , அவர் தாமரைப் பொற்பாதம் மண்ணில் பட்டுப் புண்ணாகிப் போகாமல் இருக்க, து ணியால் ஆன விரிப்பு விரித்துப் போவார்களாம். இன்றானால் அது அமைச்சர், மாமன்ற உறுப்பினர், முதலானோருக்கு நடை பாவாடை விரிப்பார்கள். தலைக்கு மேலே வெயிலடிக்குமே என்று, அன்று அவர்கள் நடக்கும்போது, புடவையை நான்காக மடித்து, முன்னிருவர் பின்னிருவர் பட்டம் பிடிப்பார்கள். இறந்துபோன தாய்க்கோ தகப்பனுக்கோ கொள்ளி வைக்க நடக்கும் மகன்களுக்கு, தலைக்கு மேல் பட்டம், சமீப காலம் வரை, பிடித்தனர். மூத்தமகன் நீர்மாலைக்குப் போய் வரும்போதும் அவ்விதமே!
தற்போது தலைவர் எனப்படுபவர்கள், உயிரினும் மேலாகத் தாம் நேசிக்கும் குடிமக்களுக்குத் தாமே கொள்ளி வைக்கிறார்கள்! அவர்களுக்கு நடை பாவாடையும் பட்டம் அல்லது கொற்றக் குடையும் தேவைதானே! தலைவர் எனத் தற்குறிகளால் குறிக்கப்பெறும் சிலர், கனத்த சுமை எனும் காரணத்தால் பேனா வைத்துக் கொள்வதில்லை. செல்ஃபோன் வைத்துக் கொள்வதில்லை. கைக்குட்டை வைத்துக் கொள்வதில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே, தம் குறியைத் தாமே சுமப்பார். மேடையில் அமர்ந்திருந்தால், பேனா தேவை என்றால், மூக்குச் சிந்த வேண்டுமானால், தண்ணீர் குடிக்க வேண்டுமானால், கண்பார்வையில் கைகட்டி, பவ்யமாக நிற்கும் உதவியாளரைப் பார்த்தால் போதும். அவர் துண்டெடுத்துக் கொடுக்க, மூக்குச் சிந்திவிட்டுத் துண்டை அவர் கையிலேயே திரும்பக் கொடுத்து விடலாம். அதிகார, செல்வாக்கு, பணத்திமிரில் திளைக்கும் எவரும் மூன்று மொபைல் போன்களையும் எந்நேரமும் சுமக்க என்றே அந்தரங்க நம்பிக்கை உடைய உதவியாளர் வைத்துள்ளனர். எனக்குத் தெரிந்த கல்லூரித் தாளாளரின் மொபைல் போனை, கல்லூரி முதல்வரே சுமப்பார். மடப் பிடியாள் அல்லது அரசாங்க செல்வாக்குடைய முலை விலையாட்டியுடன் தனித்திருக்கும் வேளையிலும் , படுக்கை அறையின் மூலையில் கட்டிலுக்கு முதுகு காட்டி , மூன்று மொபைல் ஃபோன்களையும் சுமந்து உதவியாளர் அமர்ந்திருப்பாராம்.
வேட்டி கட்டும் பலருக்கும் காசுப்பை இடுப்பிலோ, சட்டைப் பையிலோ இருக்கும். கால்சட்டை அணிபவர், கோட் அணிபவருக்குப் பிரச்னை இல்லை. தமிழ்நாட்டுத் தலைவர் என்பவர் வேட்டி மட்டுமே அணிய வேண்டும் என்று அரசியல் சட்டம் அறிவுறுத்துகிறது. ஆனால் தலைவர் பணப்பை சுமப்பது நோகும். மேலும், இன்று இந்தியாவில் எந்தத் தலைவனுக்கும் கைக்காசு செலவு செய்யும் மதிகேடு, கெதிகேடு ‘ உண்டா ?
பகையரசர், சதிகாரர் மூலம், கொல்விடம் வைத்துக் கொல்வார் என்ற அச்சம் மன்னர்க்கு எப்போதும் உண்டு. எனவே மன்னர் எதையும் உண்ணுமுன், பருகுமுன், விடம் உண்டா எனப் பரிசோதிக்க, அவற்றை முன் கூறாகப் பருகி, உண்டு, விடம் இல்லை என்று பரிசோதித்து உறுதி செய்யப் பணியாட்கள் இருந்தனர். செத்தால் ஊழியன்தானே சாவான்! மன்னர் பத்திரமாக இருப்பார் அல்லவா?
மதுரை ராணி மங்கம்மாள் தாம்பூலப் பிரியை. அவர் வெற்றிலையில் விடம் வைக்க முயற்சி நடந்ததால், அரண்மனை வளாகத்திலேயே வெற்றிலை பயிர் செய்யப்பட்டது என்றோர் செய்தியுண்டு.
நாஞ்சில் நாட்டான் நஞ்சிலும் கொடியோன் என்பார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பாம்பு தானே அறியும் பாம்பின் கால்! நானும் நாஞ்சில் நாட்டான் என்பதால் குதர்க்கமாக ஒன்று தோன்றுகிறது. வேலை கேட்டு விண்ணப்பம் கொடுக்க வந்த இளம் பெண்களுக்கு, வேலைக்குப் பதில் பிள்ளை கொடுக்கும் பாரம்பரியம் உண்டு நமக்கு. ஏனெனில் நாம் பெரியார் வழி, அண்ணா வழி, கலைஞர் வழி, புரட்சித் தலைவர் வழி, அம்மா வழி நடப்பவர் என்றும்.
புணரப் போகும் செல்வாக்குடைய பரத்தையர் வாயில், முலைக்காம்புகளில், அக்குளில், யோனி லிங்கத்தில், யோனியில் விடம் ஒளித்தோ, தடவியோ வைத்திருக்கும் வாய்ப்பு இல்லை என்பதற்கில்லை. எனவே நம் எளிய எழுத்தாளர் புத்தியில் ஒரு யோசனை தோன்றுகிறது. திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன் என்றது போல, நம் தலைவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர். மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டவர்கள். எனவே அவரது உயிர் பாதுகாப்பு மிகமிகமிக அத்தியாவசியம்.
எனவே, காப்புரிமை எதுவும் கோராமல், நமது எளிய யோசனையை முன்மொழிகிறோம்!
தலைவர் எனப்படுவோர் விலையுயர்ந்த பரத்தையரை, கனிகையரை, களவுக் கிழத்தியாரைப் புணரப் புகுமுன், பரிசோதனைக் கலவிக்கு என்று உதவியாளர் வைத்துக் கொள்ளலாம்.
உதவியாளர் நக்கி, உறிஞ்சி, சுவைத்து, விட மொன்றும் இல்லை என்று உறுதி செய்தபின், தலைவர் புணரப் புகலாம். எச்சில் அல்லவா எனச் சொல்வீர்கள் என்பதறிவான் இந்தக் கட்டுரையாசிரியன். செங்கோட்டை ஆவுடையக்காள் சொல்கிறாள், தேன் வண்டின் எச்சில், நீர் மீனின் எச்சில், பட்டுப்புடவை பூச்சியின் எச்சில் என்று!
எதுவும் நடக்கும் இந்த நாட்டில்! ஒருகாலத்தில் கால் நொந்து, கை நொந்து, உடல் நொந்து, வாரச் சந்தையில் காரப்பொரி விற்றவராக இருந்தால் என்ன? இன்று மக்கள் தலைவன் அல்லவா? அவருக்குப் பூப்பட்டால் நோகாதா?
(நிலவெளி-பிப்ரவரி 2020)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி – நாஞ்சில் நாடன் – மிக விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி ஐயா திரு நாஞ்சில் நாடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s