“சரி, போய்ப் படு”, “கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகும் வே!”, “வந்து படுட்டீ மூதி”, “காய்ச்சல் வந்து படுத்துக் கெடக்கான்”, “எப்பவும் படுத்த படுக்கைதானா?”, “படுத்தவன் எந்திரிக்கல்லே, அப்பிடியே போய்ச் சேந்துட்டான் பாவி மட்டை” என்று எத்தனையோ ‘படு’ கேட்கிறோம் தினமும். அந்தப் ‘படு’ என்பது கிடத்தல். படுக்கை என்பதை மலையாளம் கிடக்கை என்கிறது. படுத்தாச்சா என்ற கேள்விதான், ‘கிடந்நோ?’ என்பது. பேருந்தில், இரயிலில் படுக்கை வசதி நாடுகிறோம். இங்கே படு எனும் வினைச் சொல்லின் பயன்பாடு தெளிவாகப் புரிகிறது.
ஆனால் இதே படு என்ற சொல்லை, அன்றாடத்தில் பல்விதமாய்ப் பயன்படுத்துகிறோம். படு சுத்தம், படு கச்சிதம், படுமோசம், படுமலிவு, படு கள்ளம், படு காயம், படுகுழி, படு சுட்டி, படுபாவி என்று கணக்கற்றுப் ‘படு’வின் பயன்பாடுகள். இவ்வகைப் ‘படு’ எனும் சொல்லுக்கு – அது Adjective or Adverb எதுவானாலும் – இடம் சுட்டித்தான் பொருள் கொள்ள வேண்டும். இஃதோர் தனிச்சொல், சிறப்பு அடைமொழிச் சொல் அல்லது மற்று வேறெதுவோ ஒன்று போன்ற இலக்கணங்கள் அறிய மாட்டேன். நீட்டோலை வாசியா நிற்கும் நல்மரம் நாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்து Lexicon புரட்டிப் பார்த்தால், படு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் தரப்பட்டுள்ளன.
படு என்றால் கள் என்றொரு பொருள். அதாவது Toddy. படு என்ற சொல்லுக்குக் கள் என்று பொருள் சொல்கிறது திவாகர நிகண்டு .
படு என்றால் மரத்தின் குலை என்றொரு பொருள். அதாவது Bunch cluster. மரத்தில் குலை என்று பதிவிடுவது பிங்கல நிகண்டு.
படு என்றால் குளம். அதாவது Tank, pond. பேரகராதி தரும் இலக்கியச் சான்று, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படை. பாடல் வரிகள்:
‘மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின்’
என்பன. இந்த வரிகளின் ‘பனி நீர்ப் படு’ எனும் தொடரின் பொருள், குளிர்ந்த நீர் கொண்ட குளம் என்பது. இங்கு படு எனும் சொல், பெயர்ச் சொல்.
படு எனும் சொல்லுக்கு மற்றொரு பொருள் மடு. இங்கு மடு என்றால் பால் மாட்டின் மடி அல்ல. மாறாக Deep pool, ஆழமான குளம் என்பதாகும்.
சூடாமணி நிகண்டின்படி, படு என்றால், மருத யாழ்த் திறத்தில் ஒன்று.
படு என்றால் உப்பு, Salt என்றும் பொருள்.
பெரிய எனும் பொருளில் – Big, Great – அகநானூறு, படு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. படு கள்ளன் என்றால், பெரிய கள்ளன் என்றாகும். படு குழி என்றாலும் அஃதே.
படு என்றால், கொடிய என்றும் பொருள். அதாவது Cruel. படுகொலை, படு போக்கிரி, படுபாவி எனும் சொற்கள் எடுத்துக்காட்டுக்கள்.
படு என்பதற்கு, இழிவான என்றும் பொருள். Base, Mean, Low என்பர் ஆங்கிலத்தில். படு கேவலம், படு மோசடி, படு ஊழல் என்கிறோம் அல்லவா?
படு என்றால் கெட்டிக்காரத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம். Clever என்ற பொருளில். படு சுட்டி என்று அதனால்தான் பாராட்டு கிறோம்.
பேரறிவுக்கும் படு என்ற சொல்லைக் கையாள்கிறது பிங்கல நிகண்டு . Sound intellect என்ற பொருளில்.
சூடாமணி நிகண்டு, படு என்றால் நன்மை என்கிறது. Excellence, Goodness எனலாம் ஆங்கிலத்தில்.
படு எனும் பெயர்ச்சொல், வினைச்சொல், அடைமொழிச் சொல்லுக்கு இத்தனையும் இதற்கு மேலும் பொருள்கள் உண்டு என்பதால், சந்தர்ப்ப சூழலுக்குத் தகுந்த பொருள் கொள்ளப்படும். எடுத்துக்காட்டுக்குச் சில சொல்லலாம். கட்டை எனில் பட்டமரம் அல்லது கிழடு. படு தடி என்றால் பட்டுப்போன மரக்கம்பு, அல்லது கிழடு. படு கட்டை என்றாலும் அதுவே! நன்றாக உலர்ந்த மரம், பயனற்ற கிழவன் அல்லது கிழவி. களி எனில் மகிழ்ச்சி, மற்றும் சேறு. படுகளி எனில் மிகுந்த மகிழ்ச்சி அல்லது பெரும் சேறு.
படு கிடங்கு என்றால் பெரும் பள்ளம். முதிர்ந்த கர்ப்பத்தைப் படு சூல் என்பர். படு நச்சு என்றால் கொடிய விடம். படு நிந்தனை என்பதோ, பெரும்பழி. படு நீலி என்பார் பெரிய சாகசக்காரியை. கொடிய பகைவனைக் கூறுவது படு நஞ்சன் என்று. படு நெருப்பு எனில் கொடுந்தீ, அல்லது கொடியவன். படு பாதகன் என்பர் படு பாவி எனும் மிகக் கொடியவனை. படு புரளி, படு பொய் என்றால் பெரும் பொய். சாமர்த்தியக்காரச் சிறுவனைப் படுபயல் என்பார். துட்டனையும் படுபயல் என்பதுண்டு. படுபழம் என்றால் பழுத்த பழம். படுதீனி என்றால் பெருந்தீனி. படுகுழி எனில் கொடிய பள்ளம். பெருமோசத்தைப் படுமோசம் என்றும், பெரு நிந்தனையைப் படு வசைச்சொல் என்றும், பெருந்தீமை புரிபவனைப் படுவினையன் என்றும், கடு முடிச்சைப் படு முடிச்சு என்றும் பகர்வதுண்டு.
படு எனும் சொற்பயன்களைப் பார்த்தோம். படுதல் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். படுதல் எனும் சொல்லும் பல பொருள் சுட்டுவது. ‘மீன் நிறையப் பட்டிருக்கு’ என்பார் முக்குவரும் பரதவரும். மீன்பாடு என்றால் பெரிய அளவில் மீன் படுவது. மலையாளம் சாகரை என்னும். ‘செம்மீன்’ திரைப்படத்தில் ஒரு பாடல் கேட்டது நினைவிருக்கலாம், ‘சாகரா’ என்றொரு கோரஸ் பாட்டு. பெண்களுக்கு வரும் நோய் வெள்ளை படுதல், மேகம் படுதல் என்பர். கடன்படுதலே கடப்பாடு, உடன்படுதல் உடம்பாடு. உட்பகை அதிகாரத்துக் குறள் பேசும்,
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று’
என்று. மனதால் இசைந்து வாழ இல்லாதார் வாழ்க்கை, சிறு குடிசையினுள் பாம்புடன் சேர்ந்து வாழ்வதற்குச் சமமாகும். ஒரே அணியில் நின்று வாக்குச் சேகரிக்கும் பல கட்சிகளை நினைத்தால், குடங்கருள் பாம்போடு உடனுறைவதை ஒத்தே இருக்கிறது. எல்லாம் பணம் படுத்தும் படுகாலித்தனம்.
இடர்ப்படுதலே இடர்ப்பாடு. ஊழ்ப்படுதலே ஊழ்ப்பாடு. எம்மூரில் ‘ஊப்பாடு பற்றிப் போச்சு’ என்பார்கள். மேன்மைப் படுதல், மேம்பாடு. மேற்கொண்டு உங்கள் சொல்வளத்தை நீங்கள் துழாவலாம்.
படுதல் என்ற சொல் தரும் பொருள்களை Lexicon பட்டிய லிடுகிறது. நீண்டதோர் பட்டியல், பொறுமை காக்க:
-
உண்டாதல் – புகழ் அதிகாரத்துக் குறள் பேசுகிறது:
‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு ‘
என்று. இசைபட என்றால், பொருள் உண்டாகும்படியாக என்பது பொருள்.
-
தோன்றுதல் – புறப்பொருள் வெண்பா மாலையில், நூழில் ஆட்டு என்று ஒரு துறை. நூழில் ஆட்டு என்றால், தன் உடலில் புகுந்த வேலைப் பறித்துப் பகைவர் ஓட எறிவது.
நூலாசிரியர் ஐயனார் இதனார் பாடுகிறார்:
‘மொய் அகத்து மன்னர் முரண் இனி என்னாம் கொல்?
கை அகத்துக் கொண்டான் கழல் விடலை – வெய்ய
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படு சுடர் எஃகம் பறித்து’
என்று. இது ‘நூழில் ஆட்டு’ துறைக்கான எடுத்துக்காட்டுப் பாடல். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ் இது. உரை அவசியம் என்பதறிவோம். வீரக்கழல் அணிந்தவன் தும்பை மறவன். ஒளிவீசும் அணிகளையும் மணம் கமழும் தும்பை மாலையையும் மார்பில் தரித்தவன். அம்மார்பினில், ஒளிவீசும் வெம்மையான வேலினை எறிந்தான் பகைவன். சுடரொளி தோன்றும்படியான, எஃகாலாகிய வேலைப் பிடுங்கி, அதைக் கையில் தாங்கியிருக்கிறான். இனிப் போர்க்களத்தில் அவனது பகைவனது நிலை என்னாகுமோ?
இந்த இடத்தில் ஒரு திருக்குறளை நினைவுகூரலாம். படைச் செருக்கு அதிகாரத்தின் குறள்
‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்’
என்பதந்தக் குறள். இங்கு நாம் சொல்ல வந்த விடயம்,
‘படுசுடர் எஃகம்’ என்றால், சுடரொளி தோன்றும் எஃகாலாகிய வேல்.
படு சுடர் என்றால் சுடர் தோன்றும்படியான என்பது பொருள்.
-
உதித்தல் – புறநானூற்றில் ஆலத்தூர் கிழார் பாடலின் வரி,
‘படுபறியலனே, பல்கதிர்ச் செல்வன்’ என்று நீளும். பொருள், கதிரவன் உதித்தல் தொழில் செய்யமாட்டான் என்பது.
-
சம்பவித்தல்
-
பூத்தல் (யாழ் அகராதி)
-
மனத்தில் ஏற்றுதல். ‘எனக்குப் பட்டது அது’ என்கிறோமல்லவா!
-
ஒன்றின்மேல் ஒன்று உறுதல் – கம்ப ராமாயணத்தில், இந்திரசித்தன் வதைப்படலத்தின் பாடல் வரி, ‘பாக வான் பிறைபோல் வெவ்வாய்ச் சுடுகணை படுதலோடும்’ என்று பேசும்.
பிளந்த வாய் போன்ற தோற்றமுடைய வான் பிறை போன்ற, வெம்மையான கூரிய, கொடிய கணை ஒன்றன்மேல் ஒன்றாகப் பாய்தலோடும் என்பது உரை.
-
மொய்த்தல் – புறநானூற்றில் மாங்குடிக்கிழார் பாடல் வரி, ‘வண்டுபட மலர்ந்த தண் நறுங் கானல்’ என்கிறது. வண்டுகள் மொய்த்தலால் மலர்ந்த தண்மையான, நறுமணம் கொண்ட முள்ளிப் பூக்கள்’ என்பது பொருள்.
-
அகப்படுதல் – மாணிக்கவாசகர், திருவாசகத்தில், ‘பக்தி வலைப்படுவோன்’ என்கிறார். வலைப்படுதல் என்றால் வலையில் அகப்படுதல்.
-
புகுதல் – மேற்கோள், குட்டுவன் கீரனாரின் புறநானூற்றுப் பாடல் வரி, ‘நாடு படு செலவினர் ஆயினர்’ என்று நாடுகள் பல புகுந்து சென்றனர் எனும் பொருள்படப் பேசுகிறது.
-
பெய்தல் – கலித்தொகையில் முல்லைக்கலி இயற்றியவர், சோழன் நல்லுருத்திரன். முல்லைக்கலிப் பாடல் வரி, ‘படு மழை ஆடும் வரையகம் போலும்’ என்பது. படுமழை எனில் பெய்யும் மழை. வரை என்றால் மலை. பெய்யும் மழையில் நீராடுகின்ற மலையகம்போல என்பது பொருள்.
-
பெரியதாதல் – சான்று அகநானூறு உரை. 13. மேன்மை அடைதல். 14. அழிதல் – மேற்கோள் புறநானூறு, பாடல் 24.
-
சாதல் – கம்பராமாயணத்தில், யுத்த காண்டத்தில், இராவணன் கூற்றாக வரும் பாடலில், ‘பட்டனன் என்ற போதும் எளிதினில் படுகிலேன் யான்’ என்பான். போரிட்டால் செத்துத் தான் போவேன் என்றாலும் அத்தனை எளிதாகச் சாகமாட்டேன் என்பது பொருள். கிட்கிந்தா காண்டத்தில், வாலி வதைப்படலத்தில், வாலி இராமனைக் குற்றம் சாட்டும் முகத்தான் கூறுவது,
‘வாலியைப் படுத்தாய் அலை, மன் அற
வேலியைப் படுத்தாய் – விறல் வீரனே!’
என்பதாகும். வெற்றியை உடைய வீரனே! நீ வாலியைச் சாகடிக்க வில்லை. அரச நெறியின் வேலியைக் கொன்றாய் என்பது பொருள்
-
அஸ்தமித்தல்
-
புண் காய்தல் – ‘புண் பட்டுப் போய்விட்டது’ என்பார்கள் புண் காய்ந்து விட்டது எனும் பொருளில். புண்படப் போய் விட்டது என்றால் வேறு பொருள்.
-
வாடுதல் – ‘மரம் படத் தொடங்கியாச்சு’ என்பார்கள் மரம் வாடத் தொடங்கிவிட்டது எனும் பொருளில்.
-
சாய்தல் – மேற்கோளாகத் திருக்குறள் களவியல் அதிகாரத்துக் குறள் சொல்லலாம்.
‘கடா அக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படா அ முலை மேல் துகில்’
என்பது பாடல். சாயாத இவள் இளங்கொங்கைகளின் மீது தவழும் மேலாடை, மத யானையின் கண்மறைக்க மத்தகங்களின் மீது இடப்பட்ட முகபடாம் போன்றது என்பது பொருள்.
-
துன்பமடைதல் – ‘நான் பட்ட பாடு பெரும்பாடு’ என்கிறோம் அல்லவா? இங்கும் திருவாசகத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டலாம்.
‘கெடுவேன், கெடுமா கெடுகின்றேன்;
கேடு இலாதாய், பழி கொண்டாய்;
படுவேன், படுவது எல்லாம், நான்
பட்டால், பின்னைப் பயன் என்னே?
கொடுமா நரகத்து அழுந்தாமே
காத்து ஆட்கொள்ளும் குருமணியே,
நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால்
நன்றோ , எங்கள் நாயகமே?’
படுவது எல்லாம் நான் படுவேன், பட்டால் பின்னை என்ன பயன் என்கிறார்!
-
தொங்குதல். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுரு காற்றுப்படையில் இருந்து மேற்கோள் காட்டலாம். திருமுருகாற்றுப் படை நக்கீரர் இயற்றியது. பதினோராம் திருமுறையில், நக்கீர தேவ நாயனார் எனும் புலவர் எழுதிய ஒன்பது நூல்கள் உண்டு. இருவரும் வெவ்வேறு. திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூரைப் பாடும்போது, ‘படு மணி இரட்டும் மருங்கின்’ என்கிறார். யானை அசைந்து நடக்கும் போது, அதன் கழுத்தின் இருமருங்கும் தொங்கும் மணிகள் மாறிமாறி ஒலிக்கும் என்கிறார். படு மணி என்றால் தொங்கும்
-
ஒலித்தல். செவிப்படுதல் என்கிறோம் அல்லவா? எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்து, பரணர் பாடியது. பரணர், செங்கை மறவரைப் பாடும்போது
‘படு பிணம் பிறங்கப், பாழ்பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப’
என்கிறார். படு பிணம் என்றால் போரில் பட்ட, கொல்லப்பட்ட, வீரர்களின் பிணங்கள். படுகண் முரசம் எனில் ஒலிக்கும் முரசம்.
-
பாய்தல். படுதல் எனும் சொல்லைப் பாய்தல் எனும் பொருளில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆள்கிறார். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான முல்லைப்பாட்டின் பாடல் வரி அது.
‘உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறுகண் யானை’
என்பது பாடல் வரிகள். தழைகளால் வேயப்பட்ட கூரை வீடுகளின் வரிசை இருந்த தெருவின் நாற்சந்தி முற்றத்தில், சிறிய கண்களை யுடைய யானை காவல் நிற்கும். அதன் கன்னங்களில் மதநீர் பாயும் என்பது பொருள். உவலை எனில் தழை. கவலை எனில் நாற்சந்தி. தேம் எனில் மதநீர். படு எனில் பாயும். கவுள் எனில் கன்னம். நமக்கு செவுள், செவிடு என்றால் கன்னம். மலையாளத்தில் இன்றும் கவுள் என்றால் கன்னம்.
-
உடன்படுதல். சிலப்பதிகாரத்தின், வஞ்சிக்காண்டம், குன்றக்குரவையின் வரிகள் இதோ!
‘மலை மகள் மகனை! நின் மதி நுதல் மடவரல்
குல மலை உறை தரு குறவர் – தம் மகளார்,
நிலை உயர் கடவுள்! நின் இணை அடி தொழுதேம் –
பலர் அறி மணம் அவர் படு குவர் எனவே’
பொருள் சொல்லப் புகுந்தால் – மலையரசன் மகளான உமை மைந்தனே! பிறை நுதலும் மயிலின் சாயலும் வனப்பும் இளமையும் கொண்ட வள்ளியின், குலமலை உறையும் குறமகளின் மனத்தில் உயர்ந்த நிலையில் வைக்கப்பெறும் முருகனே! உனது இணையடி தொழுதோம்! பலரும் அறிந்து கொள்ளும்படி திருமணத்துக்கு உடன்படுவாய் என்று பொருள்படும். இங்கு படுகுவர் என்றால் உடன்படுவார் என்பது பொருள்.
-
புதைக்கப்படுதல். சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதையின் பாடல் வரி, ‘படு பொருள் வௌவிய பார்ப்பான் இவன்’ என்று அமையும். இப்பாடல் வரியின் படு பொருள் வௌவிய’ எனும் தொடருக்கு, புதைக்கப்பட்ட பொருளைக் கைக்கொண்ட என்று உரை எழுதுகிறார்கள்.
-
ஒத்தல். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, திருத்தக்க தேவர் யாத்த, சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகத்துப்பாடல் ஒன்று .
‘வலியுடைக் கைகளான் மலர்ந்த தாமரை
மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம்
பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ
மலைபட வரிந்து கூன்குயம் கைம்மாற்றினார்’
என்பது பாடல். வலிமையுடைய கரங்களால் நெல்வயலில் அறுவடை யாகிறது. அரியப்பட்ட நெற்கதிர்கள் மலையை ஒத்துக் குவிகின்றன. வளைந்த அரிவாளைக் கையிலிருந்து மாற்றினார்கள் அறுவடை செய்பவர். ஆனால் நெற்பயிரின் ஊடே வளர்ந்திருந்த மலர்ந்த தாமரைகள் மெலிவுற்றன. குவளைகள் வாடின. கதிர் அறுக்கும் போது பொலிந்த ஆரவாரத்தினால் அடுத்திருந்த பூம்பொய்கை களில் அடைந்திருந்த பறவைகளும் அவற்றின் பார்ப்புகளும் ஓசையெழும்படிப் பறக்கின்றன. பட எனும் சொல்லுக்கு ஒத்திருந்த என்ற பொருளைத் தேடிப்போனால் அற்புதமான மருத நிலக் காட்சி விரிகிறது.
-
பொறுத்தல் (யாழ் அகராதி)
-
முட்டுதல் – (யாழ் அகராதி)
படுதல் எனும் சொல்லுக்கான 28 பொருள்கள் மேற்கண்டவை. நடுக்காட்டில், எண்ணெய் முழுக்காட்டில் ஏகாந்தமாய் நிற்கும் அம்மன் சிலையைப் பார்க்கின்ற பரவச உணர்வு மேம்படுகிறது! எத்தன்மைகள் கொண்ட மொழி இதுவென வியப்பு மீதுறுகிறது. மேலும் சில பொருள்கள் இருக்கக்கூடும் யாமறியாமல், தேடாமல்.
படுதல் என்பது போன்றே, படுத்தல் என்றும் சொல்லொன்று உண்டு. படுத்தல் என்றால், உறங்குவதற்காகக் கிடத்தல் என்பதே பொதுப் பொருள். ‘கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே’ என்பது திருமந்திரம். படுத்தல் எனும் சொல்லுக்கு மேலும் பல பொருள்கள் உண்டு. கிடைத்தவற்றுள் சில ஈண்டு முயலப்படும்.
-
செய்தல். எடுத்துக்காட்டுக்கு; ‘நகர்வலம் படுத்தான்’ எனும் திருவிளையாடற் புராணத்து வரி. பொருள் நகர்வலம் செய்தான் என்பது.
-
அகப்படுதல். மேற்கொள், சீவக சிந்தாமணி, காந்தருவ தத்தையார் இலம்பகம், பாடல் எண் 713.
-
மட்டமாக்குதல். சமதளப் படுத்துதல்.
-
நிலைபெறச் செய்தல். திருக்குறள், தெரிந்து செயல் வகை அதிகாரக் குறள் கூறுவது:
‘வகையறச் சூழாதெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு’
வ.வே.சு. ஐயர் உரை எழுதுகிறார்; பகைமேற் சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது பகைமேல் செல்லுதல், பகைவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வதொரு நெறியாகும்! வ.வே.சு. ஐயரின் ஆங்கில மொழியாக்கம் – To make war without planning every detail of it before hand is only to transplant the enemy on carefully prepared soil.
எனவே படுத்தல் என்பதற்கு இங்குப் பொருள் நிலைபெறச் செய்தல், Transplant என்பதாகும்.
-
சேர்ப்பித்தல். எடுத்துக்காட்டு, புறநானூறு உரை. தமிழ்த் தாத்தா உ.வே.சா. உரையெழுதிப் பதிப்பித்த புறநானூறு, 1894ல் முதற்பதிப்பு கண்டது. என்னிடம் இருப்பது 1935-ம் ஆண்டின் மூன்றாம் பதிப்பு. புறநானூற்றில் 113-வது பாடல், பாரி மகளிர் குறித்தது. அந்தப் பாடலுக்கான உரையில் உ.வே.சா. குறிப்பிடுகிறார், “அவன் மகளிரைப் பார்ப்பார் படுக்கக் கொண்டு போவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது” என்று. சொற்றொடரின் பொருள் பாரி மகளிரை உரியவரிடம் கொண்டு சேர்ப்பிக்க, பறம்பு மலையை நீங்கிய கபிலர் பாடியது, என்று கொள்ளலாம். ஆக, இங்கு படுக்க எனும் சொல்லுக்கு, சேர்ப்பிக்க என்று பொருள்.
-
வளர்த்தல். தெரிந்து வினையாடல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது
‘வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்த வினை’
என்று. வளம் படுத்து என்றால், வளங்களை வளர்த்து என்பது பொருள். வாரி பெருக்கி எனில் அரசுக்கு வருவாய் தரும் வழிகளைப் பெருக்கி என்று பொருள். இங்கு வாரி பெருக்குவதும் வளம் படுத்துவதும் மக்கள் பணி ஆற்றுவதற்காக. மற்றல்லால் வைப்பாட்டி மகளின் கள்ள மாப்பிள்ளைக்குக் கோடிகள் குவித்துக் கொடுக்க அல்ல. இங்கு படுத்து என்ற சொல் வளர்த்து என்ற பொருளில் வருகிறது.
-
உடம்பில் பூசுதல். நல்லத்துவனார் தொகுத்த கலித் தொகையின் பாலைக்கலிப் பாடல் இவண் மேற்கோள். பாடலைப் பாடியவர், பாலை பாடிய பெருங்கடுங்கோ . பாடல் வரிகள்.
‘பல உறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லாத, மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதான் என் செய்யும்?’ பாடல் வரிகளின் பொருள், பல விதங்களிலும் நறுமணம் தருகிற சந்தனம், உடம்பில் பூசிக்கொள்பவர்க்குத்தான் இன்பமும் மணமும் தருமே அல்லாது, மலையில் அது பிறந்தாலும், அது பிறந்த இடமாகிய மலைக்கு என்ன பயன்? இங்கு படுத்தல் என்றால் உடம்பில் பூசுதல்.
இந்தப் பாடலில், இந்தக் கட்டுரைக்கு எடுத்தாள அவசியமற்ற ஆனால் உணர்ச்சிப் பிழம்பாகத் தோன்றும் சில வரிகளைக் காட்டாமல் வழிநடக்க மனம் ஒப்பவில்லை.
‘என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ? – பெரும!’
என்பன பாடல் வரிகள். பொருள், ‘பெருமகனாகிய அந்தணரே! என் மகள் ஒருத்தியும், இன்னொருவன் மகன் ஒருவனும், பிறர் அறியாவண்ணம், தாம் மட்டுமே அறிந்த காதலர். அவர் தம்முளே புணர்ந்தார். அவர்கள் இருவரை வரும் வழியில் எங்கும் கண்டீரோ’ என்பது காதலனுடன் போகிய மகளைத் தேடும் தாயின் பரிதவிப்பு தொனிக்கும் வரிகள். ‘சவம், நீஞ்சத் தெரியாத மாட்டை வெள்ளம் கொண்டு போகட்டும்’ என்ற மனோபாவமல்ல.
-
பரப்புதல். படுத்தல் எனும் சொல்லுக்கு எட்டாவது பொருள் பரப்புதல். கம்பன், ‘கல்லிடைப் படுத்த புல்லின்’ என்பார். கல்லின் இடையே பரவிய புல் என்பது பொருள்.
-
தரவரிசை செய்தல். மேற்கோள், சீவக சிந்தாமணியின் காந்தருவ தத்தையார் இலம்பகத்துப் பாடல் எண். 592.
மேற்படுத்துதல், கீழ்ப்படுத்துதல் என்று சொல்கிறோம் அல்லவா? அவ்விதமான தரவரிசை செய்தல். முதல் தரம், மூன்றாம் தரம் என்பது போல.
-
துன்புறுத்துதல். அன்றாடம் நாம் பயன்படுத்தும் வழக்கு தான். ‘என்னைப் போட்டுப் படுத்தாதே!’, ‘பாடாப் படுத்தீட்டான்’ என்போம் அல்லவா, அந்தப் பொருள். திருநெல்வேலிப் பக்கம் இன்னும் பழக்கத்தில் உண்டு, ‘படுத்தாதே’ என்பார்கள், துன்புறுத்தாதே என்ற பொருளில்.
-
அழித்தல். கம்பராமாயணத்தில், யுத்த காண்டத்தில், மூலபல வதைப்படலம். பாடல் வரிகள்
‘எடுத்தலும், சாய்தல் தானும், எதிர்த்தலும்
எதிர்த்தோர் நம்மைப்
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினார்க்கு உற்ற’
என்பன. வீரவாழ்க்கை பற்றினார்க்கு உற்றவை எடுத்தல், சாய்தல், எதிர்த்தல், எதிர்த்தோர் தம்மைப் படுத்தல் என்பன என்றால் உத்தேசமாக அர்த்தமாகும். இங்கு படுத்தல் என்றால் அழித்தல் என்று பொருள்.
-
ஒழித்தல். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று சிறுபஞ்சமூலம். ஆசிரியர் காரியாசான். அதன் நாற்பதாவது பாடலில்,
‘காக்கைக்கு காப்படுத்த சோறு’
என்றொரு பிரயோகம். அதாவது காக்கையின் காவலில் வைத்த சோறுபோல காணாது ஒழியும் என்று பொருள்.
-
விழச் செய்தல். புறநானூற்றின் குடபுலவியனார் பாடல் வரி,
‘எறிந்து களம் படுத்த ஏந்துவாள் வலத்தர்’
என்கிறது. ‘வெட்டிப் போர்க்களத்தில் வீழ்த்த ஏந்திய வாளை உடையவராய்’ என்பது பொருள்.
-
போரடித்தல். அறுவடை செய்த தானியக் கதிர்களைப் போரடித்தலுக்கும் படுத்தல் என்ற சொல் ஆளப்பெறும்.
-
எழுத்துகளின் சுவரத்தைத் தாழ்த்திக் கூறுதல்.
-
பறையறிதல். புறப்பொருள் வெண்பா மாலையின், வெட்சிப் படலத்தின் முதற்பாடலின் வரி, ‘துடி படுத்து’ என்கிறது. துடி எனும் பறை அறைதல் என்று பொருள் சொல்கிறார்கள்.
-
கிடத்தல். படுத்தல் எனும் சொல்லைக் கிடத்தல் எனும் பொருளில் சாதாரணமாக நாம் அன்றாடம் புழங்குகிறோம். கொஞ்சம் படுக்கிறேன்’, ‘படுத்து எந்திக்கட்டுமா?’, ‘படுத்ததுதான் தெரியும் பொழுது விடிஞ்சு போச்சு’, ‘எப்பப் பாத்தாலும் படுத்தே கெடக்காதே’ என்ற சொற்றொடர்கள் கவனத்துக்கு வரலாம்.
படு, படுதல், படுத்தல் எனும் சொற்களைச் சற்று விரிவாகவே பார்த்தோம். இனிமேல் படு தொடர்பான, அகராதிகளில் பதிவாகி யுள்ள, தேர்ந்தெடுத்த சொற்கள் சில காண்போம். இது ஒரு அறிதலுக்கான பயிற்சி எனக்கு.
படுக்க வைத்தல் – கிடக்கும்படிச் செய்தல், தோற்கடித்தல்,
அழித்தல்.
படுக்களம் – படுக்கும் இடம்
படுக்காங் கொள்ளி- படுக்காளி மாடு (அபிதான சிந்தாமணி)
படுக்காளி – படுக்காளிப் பயல்
படுக்காளிப் பயல் – போக்கிரி, பொய்யன்
படுக்காளி மாடு – வேலை செய்யாத மாடு
படுக்காளி விசேடம்- கட்டுக்கதை
படுக்கெனல் – பொடுக்கெனல்
படுக்கை – கிடக்கை , பாயல்
படுக்கைப் பற்று – சீதனம், பெண்ணுடன் படுப்பதற்காகப் பற்றும் தனம் எனக் கொள்ளலாமா?
படுக்கைப் புண் – பெருங்கிடையாகக் கிடக்கும்போது உடம்பில் ஏற்படும் புண். Bed sore
படுக்கை மரம் – தோணி அல்லது வள்ளத்தில் பண்டங்களை வைக்கும் விதத்தில் அமைக்கப் பட்ட பலகை.
படுக்கையறை – பள்ளியறை, கிடை முறி (மலையாளம்)
படுக்கை வீடு – பள்ளியறை
படு கண்ணி – ஆபரணத்தில் கொக்கி மாட்ட அமைக்கும் வட்டக் கண்ணி . Eye for a hook in an ornament
படுகர் – 1. ஏறும், இறங்கும் வழி 2. பள்ளம் 3. நீர்நிலை 4. வயல் 5. மருத நிலம் 6. ஒரு சாதி
படுகலம் – அடமானப் பாத்திரம், பணயப் பத்திரம்
படுகளம்- 1. போர்க்களம் 2. தொந்தரவு
படு காடு – 1. மரங்கள் ஒரு சேர விழுந்த காடு 2. சுடுகாடு
படுகால் – ஏணி
படுகாரம் -1. படிகாரம் (சங்க அகராதி) 2. மிகுதியான காரம், எரிப்பு
படுகிடை – 1. நோய்ப்பட்டுக் கிடப்பில் ஆதல், Bed ridden. 2. அடம். முரண்டு பிடித்துப் படுத்துக் கிடத்தல்
படு குடி – கெடு குடி (யாழ் அகராதி)
படு சூரணம் – 1. மருந்துப் பொடி 2. முழு நாசம்
படு சூளை – வட்டமாக அமைக்கப்பட்ட சூளை. Circular kiln.
படு தண்டம் – 1. மிகு வணக்கம் 2. மிக மோசம்
படுதம் – கூத்து வகை
படுதா – 1. திரைச்சீலை, மூடு சீலை 2. ஒதுக்கிடம்
படு தாமரை – படர் தாமரை
படு தாறல் – நின்ற நிலையில் பட்டுப்போன பயிர்
படு துருமம் – வெள்வேல்
படு நாயிறு – படு ஞாயிறு, மேற்கில் சாயும் சூரியன். படி ஞாயிறு (மலையாளம்)
படு நிலம் – நீரில்லா நிலம், மயானம், போர்க்களம்.
படு நீலம் பற்ற
வைத்தல் – இட்டுக்கட்டிக் குற்றம் சுமத்துதல்
படு நுகம் – அரச பாரம்
படு நறி – மேடு பள்ளமான வழி
படுபனை – காய்க்கும் பனை. ‘பழம்படு பனை’ என்பது சத்தி முத்தப் புலவரின் சொல்லாட்சி.
படு பாடர்- விடாப்பிடியானவர், விடாக்கண்டன். படுபொருள் -1. புதையல் 2. மிகுதியாகத் தேடிய செல்வம் 3. நிகழ்வது
படு பொழுது – நல்ல நேரம்
படுபோர் – 1. அறுவடையாகிப் போரடிக்குமுன் குவிக்கப்பெற்ற கதிர்க்கட்டுக்கள்; சூடு என்பார் நாஞ்சில் நாட்டார். 2. கொடும் போர்
படு மரம் – பட்ட மரம்
படு முதலாக – தானாகவே
படுமுறை – அபராதம், தெண்ட ம், Fine
படுவக்கால் – படுவம், படுவப் பத்து, சேற்று நிலம்
படுவஞ்சனை – 1. பெரு மோசம் 2. முழுதும் அழிதல்
படுவன் – கள் விற்பவன்
படுவான் – அழிந்து போனவன்
படுவா – படவா
படுவி – 1. கள் விற்பவள், 2. கற்பில்லாதவள் (சூடாமணி நிகண்டு) படுவுப்பு – தானே விளையும் உப்பு
படுவை – தெப்பம், மிதவை.
உண்மையில், வழக்கமான சொல் தேடல் கட்டுரை போலன்றி, ஏதோவோர் பேராசிரியர் கட்டுரைபோல் அமைந்துவிட்டது இது. தமிழ் தேடி இறந்துபோன எவரின் ஆவியோ வந்து நம்மை அலைக்கழிக்கவும் மார்க்கம் இல்லை. எந்த ஆவியும் நம்மைப் படு கேவலமானவனாகச் செய்ய இயலாது. நாம் படு சமர்த்தும் அல்ல .
“ஏதேது செய்திடுமோ! பாவி விதி ஏதேது செய்திடுமோ?” என்று குணங்குடியாரே அலறும்போது, நாம் எம்மாத்திரம்?
(நாஞ்சில் நாடன்)
கணையாழி, ஆகஸ்ட் 2019
ஒரு சிறுகதை: படுவப் பத்து (1)
AMAZING!
படு என்பதற்கு இத்தனை பொருள்களா? குறள், பரிபாடல், பதிற்றுப்பத்து, குறுந்தொகை, சிறுபஞ்சமூலம், கம்பராமாயணம் போன்ற பல நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகள் தரும் நாஞ்சிலின் படு உழைப்பு கட்டுரையில் தெரிகிறது.