புலரி, மலரி, அலரி

காலையில் கண் விழித்ததும், கைபேசியில் முப்பதுக்கும் குறையாத ‘Good Morning’ செய்திகள் காத்திருக்கின்றன. வெறுமனே சொற்றொடர்களாக, அற்புதமான மலர்ச்சிரிப்புகளுடன், இயற்கைக் காட்சிகளுடன், ஒப்பற்ற கடவுளர் சிலைகளுடன், ஓவியங்களுடன், சான்றோர் வாக்குகளுடன், அறவுரைகளுடன், கவி வரிகளுடன் எனப் பற்பல வகைகளாக. பண்பு கருதி நாமும் மறுமொழி இடுகிறோம். அனுதினமும், பத்துத் திசைகளிலும் இருந்து, உலகம் முழுக்க எத்தனை ஆயிரம் கோடிகள் செய்திகள் குறுக்கும் நெடுக்குமாக, மேலும் கீழுமாகப் பறந்துகொண்டிருக்கும்! ஒருவேளை நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் கடன் தொகையான 40 லட்சம் கோடியை விடவும் அதிகமாக இருக்கலாம்.
Good Morning எனுமிந்த ஆங்கில சொற்றொடருக்கு இணையாகப் பல நண்பர்கள், காலை வணக்கம், இனிய காலை வணக்கம் என மொழியின் உருமாற்றி அனுப்புகிறார்கள். உண்மையில் நமது மரபு, நேரில் சந்திக்கும் போதோ, கடிதங்கள் எழுதும் போதோ, வணக்கம், வந்தனம், நமஸ்காரம் எனும் சொற்களைப் பயன்படுத்துவது. கிறிஸ்துவர் ஸ்தோத்திரம் அல்லது தோத்திரம் என்பார்கள். இசுலாமியர் சலாம் அல்லது அஸ்ஸலாமு அலைக்கும் என்பர். எவ்வாறாயினும் Good Morning எனும் ஆங்கில மரபைத் தமிழில் பெயர்ப்பதே காலை வணக்கம் என்பது.
எனக்குத் தோன்றும், Good Morning என்பதோர் வாழ்த்து, Happy Birthday என்ப து போல. Happy Wedding Aniversary என்ப து போல. இதனுள் வணக்கம் எனும் சொல் எங்ஙனம் வந்து புகுந்தது. அஃதே போன்றதே Good Night அல்லது இரவு வணக்கம் என்பதுவும்.
சில நண்பர்கள், நற்காலை அல்லது நல்லிரவு என்பார். அண்மையில் ஒரு நண்பர் நற்புலரி என்றார். ஆகா என்று அதிசயித்தேன். நல்லிரவு என்பதை நல்லிரா என்றார் அவர். இரா என்றாலும் இரவு தான். காமத்துப்பால் திருக்குறள் பேசுகிறது.
‘மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என்னல்லது இல்லை துணை’
என்று. இந்த இரவு, இப்பூவுலகின் உயிர்களை எல்லாம் துயிற்றுகிறது. நான் மட்டும் உறங்காமல் இந்த இரவுக்குத் துணையாக இருக்கிறேன் என்பது பொருள்.
திருக்குறள் இரவு என்றும், அளபெடை பயன்படுத்தி இராஅ என்றும் சொற்களைப் பெய்கிறது. அல் என்றாலும் இரவுதான். அல்லும் பகலும் என்றால் இரவும் பகலும் என்றே பொருள். நிசி என்றாலும் இரவே. நடுநிசி என்றால் நள்ளிரவு. இராத்திரி என்போம் இரவைக் குறிக்க. சிவன் இரவையே சிவராத்திரி என்போம்.
அஃதே போல், காலை என்பதைக் குறிக்க அற்புதமான பிற சொற்களும் உண்டு தமிழில். வைகறை எனும் சொல்லுண்டு. ‘வைகறைத் துயில் எழு’ என்பது ஒளவையாரின் ஆத்திசூடி. காலையில் துயில் நீத்து எழுவாய் என்பது பொருள். வைகறை எனும் சொல்லைக் காலை எனும் பொருளில் சங்க இலக்கியங்கள் பயன்படுத்தியுள்ளன.
விடியல் எனும் சொல்லும் காலையைக் குறிப்பதுவே. விடியல் எனும் சொல்லையும் சங்க இலக்கியங்கள் ஆள்கின்றன. புறநானூற்றில் கல்லாடனார் பாடல்,
‘வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்பப்
புலரி விடியல்’
என்கிறது.  கீழ்வானத்தில் வெள்ளி முளைக்க, புள்ளினங்கள் இயம்ப, அதிகாலை விடியல் வந்தது என்னும் பொருளில். அகநானூற்றில் ஆவூர் மூலங்கிழார் பாடல், ‘வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை’ என்கிறது. சூரிய ஒளியினை மறைக்கும் மாமழை பெய்யும், வாடைக்காற்று வீசும் விடியல் என்பது பொருள்.
புலரி என்பதுவும் காலையைக் குறிக்கும் அற்புதமான சொல். புலரா, புலர்வது, புலராமை, புலரியின், புலர்வு, புலர்பு, புலர்ந்து, புலர், புலர்தலின் போன்றவை புலரியுடன் தொடர்புடைய அற்புதமான சொற்கள். அவற்றை இன்றளவும் சங்க இலக்கியங்கள் நமக்காகத் தந்து வைத்துள்ளன.
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் எனும் நூலில், இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் எனும் புலவர், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவோன் நன்னன் சேய் நன்னனைப் பாடுகிறார்.
‘பனி சேண் நீங்க இனிதுடன் துஞ்சிப்
புலரி விடியல் புள்ளோர்த்துக் கழிமின்’
என்பது பாடல் வரி.
‘பனி விரைவில் அகன்று, இனிதாக உறங்கி, அதிகாலை விடியலில் புள்ளினம் ஒலிக்கக்கேட்டு’ என்று பொருள் சொல்லலாம். எனவே தோன்றுகிறது நமக்கு, ‘நற்புலரி’ என்று வாழ்த்துவது அற்புதமான தமிழ் மாற்றாக இருக்கிறது என்று.
புலரி போன்றே இனிமையான சொற்கள் உண்டு நம்மிடம். மலரி என்றொரு சொல்லைப் பெய்கிறார் கம்பன் தனது இராம காதையில், மலரி என்றால் மலர்வனம் என்று பொருள். அலர் என்றொரு சொல் கேட்டிருக்கலாம். மலர் என்பதே பொருள். தமிழ்ப் பேரகராதி, அலர் என்ற சொல்லுக்குத் தரும் பொருள்கள் – மலர், அம்பல் (பலரும் அறியப் புறம்பேசுதல்), மகிழ்ச்சி , நீர், மஞ்சள், மிளகு என. அலர்தல் என்றால் மலர்தல், பரத்தல், பெருத்தல், விளங்குதல், சுரத்தல் என்ற பல பொருள்களும் உண்டு.
அலர்த்தி என்றால் மலர்ச்சி, அலர்த்துதல் எனில் மலரச் செய்தல். அலர்ந்த பூ என்றால் விரிந்த பூ. விடு பூ என்பார்கள் எங்கள் பக்கம். அலர்மகள் எனில் இலக்குமி. அலர்மேல் மங்கை என்றாலும் அவளே. அலர்மேல் மங்கையைத்தான் வழக்கில் அலமேலு என்கிறோம். அலரவன் எனில் நான்முகன் அலரி எனும் சொல்லுக்கு, பூ, ஒருவகைப் பூச்செடி, சூரியன், கண்வரி, அழகு, தேனி, நீர்வாவி, கோதுமை என எட்டுப் பொருள்கள் இருக்கின்றன.
எனவே Good Morning எனும் பதத்திற்கு மாற்றாக, காலை வணக்கம் என்று சொல்வதை விடவும் ‘நற்புலரி’ எனும் ஆட்சி திறனுடையது.
ஆனால் ஈங்கோர் அபாயமும் உண்டு. தற்காலத் தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், ஊடக செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், அரசியல் தலைவர், நடிக நடிகையர் என்பாரில் பெரும்பான்மையோர்க்கு ல,ள,ழ வேறுபாடு தெரியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாகப் புளரி, அளரி, மளரி என சொல்லக்கேட்பதை எண்ணி, கொடுங்கூற்றுக்கு அஞ்சுவதைப்போல மனம் துளக்கம் கொள்கிறது.
(நாஞ்சில் நாடன்)
திருக்குறள் கூடம், USA, மார்ச் 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, இலக்கியம் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to புலரி, மலரி, அலரி

  1. PRATHEEBAN சொல்கிறார்:

    The word MALARI seems to have been coined even before KAMBAN. POET OTTAKOOTHAN belonged to the village called MALARIOOR.——————-PRATHEEBAN

  2. rajendranunnikrishnan சொல்கிறார்:

    நல்ல பதிவு. பொருளடக்கம் நிறைந்த கட்டுரை 👌😊

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s