நாஞ்சில் நாடன்
சென்ற கிழமை, புலர் காலைப்பொழுதில் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதனிடம் இருந்து அழைப்பு வந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் அழைப்பவர் வேலூர் லிங்கம். இலக்கியம், அரசியல், சமூக நிகழ்வுகள் பேசுவார். ஆனால், முன்னவர் காரியம் இருந்தால் மட்டுமே அழைப்பார். அவர் புதுச்சேரியில் எமக்கொரு வேடந்தாங்கல். நீங்கள் அனுமானிக்கிற காரணமும் அடங்கலாகத்தான். அவர் அதிகாலை எழுந்து நடக்கப்போகிறவர். நமக்கந்த விதிப்பயன் தற்போது இல்லை.
“சார்! தூக்கத்தியே எழுப்பீட்டேனா?’
“இல்ல! உறங்கி முழிச்சாச்சு! சொல்லுங்க…”
“தொல்காப்பியர் மன்றத்திலே இருந்து ஒரு அழைப்பிதழ் வந்தது. ஞாயிற்றுக்கிழமை கூட்டம். நேரம் அந்தி மாலை ஆறு மணி என்று போட்டிருக்கிறாங்க… அந்திண்ணாலும் மாலைண்ணாலும் ஒண்ணுதானே!”
“பேராசிரியர்கள் தெரியாமப் போடமாட்டாங்க… என்றாலும் சந்தேகம்னு வந்தா பாத்திர வேண்டியதுதான்” என்றேன். அவர் ஐயத்துக்கான தெளிவுதான் இந்தக் கட்டுரை. இப்படித்தான் கட்டுரைக்கான விடயங்கள் நமக்கு உதிக்கின்றன. அண்மைக்காலமாக நமக்கொரு அவப்பெயர் உண்டு. கம்பனில் ஆழங்கால் பட்டவன் என்றும், தொல்லிலக்கியங்கள் எழுத்தெண்ணிப் படித்தவன் என்றும். ஈதெல்லாம் சமகால அரசியல்காரர்களுக்கே பொருந்தும். தரகு செய்தவரும், கட்டப்பஞ்சாயத்தில் பொருள் குவித்தவரும் இங்கு வாழும் தொல்காப்பியம், திருவள்ளுவம், நன்னூல்.
மாலையில் மலரும் எளியதோர் குத்துச்செடியை அந்திமந்தாரை என்போம். இரண்டடி உயரம் வளரும். வெள்ளை , மஞ்சள், சிவப்பு நிறத்தில் பூக்கள். விதை பார்க்கக் குருமிளகு போலவே இருக்கும். வணிகரீதியில் பயிர்செய்து குருமிளகில் கலப்படம் செய்ய அறம் வளர்க்கும் வணிகருக்குச் சிபாரிசு செய்யலாம். ஏற்கனவே உண்ணிப்பழம் காயவைத்துக் கலக்கிறார்களோ, பப்பாளி விதை சேர்மானம் செய்கிறார்களோ என்றொரு ஐயம் உண்டு எமக்கு. என்ன செய்ய, வாசல்களில் நிற்கும் தாவரம் அது. கேட்டுவாங்கிவந்து, விதை ஊன்றித் தண்ணீர் தெளிப்போம். அந்திமந்தாரை அந்திப்பூ எனப்பட்டது. அந்திமந்தாரம் என்றும், அந்திமல்லி என்றும், அந்திமல்லிகை என்றும் அழைத்தனர்.
எவரும் இறந்துபோன வீடுகளில், கல்லடுப்பு அடியந்திரம் வலை, காலையும் மாலையும், ஒரு சடங்காக, ‘அம்மாடி தாயரே’ அடித்து அழுவார்கள். அதற்கு அந்தியழுகை சந்தியழுகை என்று பெயர். மாலை வேளைகளில், குழந்தைகள் அடம்பிடித்து அழுதால், “என்னத்துக்குக் கெடந்து இப்பம் அந்தியழுகை அழுகே?” என்பர்.
ஊர்ப்புறங்களில் மாலையில்மட்டும் கூடும் சந்தைக்கு அந்திக்கடை என்று பெயர். “சமைஞ்ச பிள்ளை அந்திசந்திகளில் வாசல்ல வந்து நிக்காதே!” என்றனர்.
சினிமாப் பாடல்களில் எக்கச்சக்கமான அந்திப்பொழுதுகள் உண்டு. தமிழ்கூறு நல்லுலகிற்கு, மொழிமூலம் குண்டி ஆட்டும், முலை குலுக்கும் சினிமாப்பாடல்களே நவீன செல்விலக்கியங்கள். அவர்களுக்கே பத்மஸ்ரீ பட்டங்கள், பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்டங்கள். பொன்னந்தி மாலைப்பொழுது, அந்திமாலை வந்தபோது, அந்தி மயங்கும் நேரம், செவ்வந்தி வானம் என்று பல சிங்காரிப்புகள் உண்டு.
மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில், பூவந்தி, சக்கந்தி எனுமிரு ஊர்களைக் கடந்திருக்கிறேன். முதன்முறை சென்றது 1979 செப்டம்பரில். அன்னம் பதிப்பக நிறுவனர் கவிஞர் மீராவைக் காண. பின்னர், 1989க்குப் பிறகு, தொழில் நிமித்தம் பலமுறை. பூவந்தி, சக்கந்தி ஊர்களின் காரணப் பெயர் அறிய எனக்கு வாய்ப்பில்லை.
ஆக, இயல்பாக நாம் வந்துசேரும் இடம், அந்தி என்றாலும் மாலை என்றாலும் ஒன்றுதானே என்பது. ஆனால், நமக்கு அகராதி எனும் வியாதிபிடித்துச் சிலகாலம் ஆயிற்று. விடுபடும் ஆர்வமும் இல்லை . ஒருவேளை இந்த வயதிலும் எழுத்தாளராகத் தொடர்வதற்கு அகராதியும் காரணமாக இருக்கலாம்.
பொருள் ஊழி முடிவு மேற்கோள், கலித்தொகையின் முல்லைக்கலிப் பாடல் வரி. பாடியவர் சோழன் நல்லுருத்திரன்.
தோழி, தலைவிக்கு, ஏறு தழுவும் காட்சியைச் சுட்டிப் பேசுவது. ஏறு தழுவுதல் என்றால், இன்றைய சல்லிக்கட்டு. அதன் தடைக்கு எதிராகத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர், மாணவர் களம் இறங்கிப் போராடித் தமிழகம் அதிர்ந்த து.
தோழி சொல்கிறாள்:
“குடர் சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய ஏற்றெருமை நெஞ்சு இடந்திட்டுக்
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்!”
பொருள் பின்வருமாறு சொல்லாம். (நெற்றியில் சந்திரனைப் போன்ற சுழியை உடைய கருநிறக் காளையொன்று) ஒருவனின் குடல் வெளிவருமாறு குத்திக் குலைக்கும் காட்சியைப் பார். அக்காட்சியானது ஊழி முடிவில் உருத்திரன் எருமைக் கடா ஊர்தியை உடைய யமனை நெஞ்சு பிளந்து அவன் குடுலைக் கூளிப் பேய்க்கு இட்ட காட்சியைப் போலுள்ளது.
ஊழி முடிவு என்றால், யுகத்தின் இறுதி; யுகத்தின் அந்தம், யுகத்தின் அந்தி, யுகாந்தி. யுகாந்தா எனும் தலைப்பில், மராத்திய மொழியில் புகழ்பெற்ற நாவல் உண்டு. ஆசிரியர் ஜராவதி கார்வே. தமிழ் மொழிபெயர்ப்பு சாகித்ய அகாதமியில் வாங்கக் கிடைக்கும். கடை விரித்தும் கொள்வாரில்லை என்றால் எவர் என்ன செய்ய இயலும்?
ஒருவனது ஊழ் முடியும் காலத்தையும் அந்திமகாலம் என்கிறோம். அந்திமதசை என்பார்கள், மரணவேளை என்ற பொருளில்.
அந்தி எனும் சொல்லுக்கு மேலும் பொருள்கள் உண்டு. சந்தியாகாலம் என்பது ஒரு பொருள். Twilight, as joining day with night என்றனர் ஆங்கிலத்தில். புறநானூற்றில் முரிஞ் சியூர் முடி நாகனார் பாடல், ‘அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்’ என்கிறது.
அறிஞர் குழு தொகுத்த Tamil Lexicon, அருமையானதோர் புறநானூற்று வரியை மேற்கோளாகத் தருகிறது ‘காலை அந்தியும் மாலை அந்தியும்’ என்று. முழுப்பாடலையும் தேடிப்போனால், அஃதோர் அற்புதமான ஆலத்தூர் கிழார் பாடல். சோழன் குளமுற்றத்துத் துஞ் சிய கிள்ளிவளவனைப் பாடியது. இருபத்து மூன்று அடிகள் கொண்ட பாடலில் முதன் மூன்றடிகள் மாத்திரம் தருவேன்.
“ஆன் மூலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்”
பொருள் கேட்டால், பசுவின் பால் தரும் மடியை அறுத்த அறம் இல்லாதவர்க்கும், மாண்புடைய அணிகலன் அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும், பெற்றவரைக் கொடுமை செய்தவர்க்கும் என்று நீளும்.
அந்தப் பாடலின் எட்டாவது வரியில்தான், மேற்சொன்ன ‘காலை அந்தியும் மாலை அந்தியும்’ என்ற பதிவு. காலை அந்தி என்றால் இரவு முடிந்து பகல் துவங்கும் நேரம் என்றும், மாலை அந்தி என்றால் பகலின் இறுதியும் இரவின் துவக்கமும் ஆன வேளை என்பது பொருள். அதாவது, நாளின் இரண்டு சந்திப்புக்களுமே அந்தி எனப்பட்டன.
எனினும், சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் அந்தி எனும் சொல் விளம்பும்போது மாலையையே குறித்துள்ளன. அகநானூறு நூலின் தங்கால் முடக்கொற்றனார் பாடல், ‘பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து’ என்கிறது. பகல் மறைந்து அந்தியாகி, சூரியன் மறையும் நேரத்தில் என்று பொருள் கொள்ளலாம். அதே நூலில், மதுலை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடலில், ‘மாலை அந்திக் கோவலர் அம்பனை இமிழ் இசை’ எனும் ஒரு வரியுண்டு. அந்தி மாலையில், இடையர், அழகிய மூங்கிலில் ஒலிக்கும் இசை என்று பொருள்.
எனவே, அந்தி எனும் சொல்லுக்கு, இரண்டாவது குறிப்பான பொருளாக, பேராகராதி தரும் Evening Twilight எனும் பொருள் இரண்டாம் பத்தில், எட்டாவது பகுதியில், முதற்பாடலில்,
“இந்திரனோடு சந்திரன் மாளிகை சேரும்
அந்தியம் போது இதுவாகும்”
என்கிறார். இங்கு அந்தியம் பொழுது என்றால் மாலைப் பொழுது என்று பொருள். அகநானூறு, மாமூலனார் பாடல் ஒன்று, ‘பகயோன் மறைந்த அந்தி ஆர் இடை’ என்று பேசும்போது அதன் பொருள் பகலவன் மறையும் அந்திப் பொழுதினில் என்றாகும்.
பதிற்றுப்பத்து, நான்காம் பத்து, காப்பியாற்றுக் காப்பியளார் பாடல் வரி, ‘அந்தி மாலை விசும்பு கண்டன்ன’ என்கிறது. நண்பர் அமரநாதனின் ஐயம் தெளிந்திருக்கும். பாடலின் பொருள் அந்தி மாலையின் வானம் போல என்று ஆகும்போது, குறிப்பாகச் சூரியன் மறையும்பொழுது என்பதைக் குறிக்கவே, அந்தி மாலை என்றனர். பட்டினப்பாலை ‘அந்தி அமாட்டிய நந்தா விளக்கின்’ எனும்போது, புலவர் மாலை என்று குறிக்காமல்விட்டதன் காரணம், ஏற்றிய நந்தா விளக்கு என்ற சூழல், அந்தியை, அந்தி மாலை என்றே அர்த்தப் படுத்தும் என்பதனால். மாட்டிய என்றால் கொளுத்திய, நந்தா என்றால் அவியாத என்று பொருள்.
அதே குறிப்பினால்தான், முல்லைக்கவி பாடல் வரி ‘மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு’ என்கிறது. அவிர் எனில் ஒளி என்று பொருள். மீள் எனில் விண்மீன்.
அந்தி எனும் சொல்லின் இன்னொரு பொருள் செவ்வானம். பெரும்பாணாற்றுப் பாடல் வரி, செவ்வாய் அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப’ என்றும், சிவந்த அந்தி வானத்தில் அசைகின்ற மழை மேகம் போன்று என்பது பொருள். புறநானூற்றில் நன்னாகனார் பாடல் வரி,
‘விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங்கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி’
என வளரும். வானம் எனும் வெள்ளத்தைக் கடந்த ஞாயிற்றின் ஒளி, குறைந்து சிவந்து மறைந்த மாலைப்பொழுது என்று உரை சொல்கிறார்கள்.
அந்தி எனும் சொல்லின் மற்றுமொரு பொருள், சந்தியா வந்தனம் செய்யும் காலையின் மற்றும் மாலையின் அந்தி அல்லது இன்னொரு பொருள், அந்தி எனும் சொல் குறிப்பது, இரவு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் பெரிய திருமொழி, சந்திரனை அந்தியோன் என்கிறது. அதாவது, இரவின் காவலன் எனும் பொருளில். சந்திரனை அந்திக்கோன் என்கிறது தேவாரம்.
அந்தி என்றால் மூச்சந்தி என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. Intersecting of three streets. சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், ஊர் காண் காதையின் வரி, ‘அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்’ என்கிறது. இங்கு அந்தி எனும் சொல்லுக்கு மூச்சந்தி என்று பொருள் தருகிறார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
பாலை யாழின் திறவகை ஒன்று அந்தி எனப்பட்டது. குழந்தைகளுக்கு மாலைவேளையில் செய்யும் காப்பு, அந்திக்காப்பு எனப்பட்டது. நாட்டார் வழக்கில் அந்தியையும் சந்தியையும் இணைத்து அந்தி சந்தி என்பதும் உண்டு. மாலை வெள்ளி எனப்பட்ட Evening star, அந்தி நட்சத்திரம் எனப்பட்டதுகிறிஸ்துவின் விரோதி என்ற பொருளில் அந்தி கிறிஸ்து என்றொரு சொல் வழங்கி இருக்கிறது. மூலம், Anti Christ எனும் ஆங்கிலச் சொல். Thoughts of God in the last moments என்பதை அந்திம ஸ்மிருதி என்று வழங்கி இருக்கிறார்கள். அதாவது, சாகும் காலத்தில் சங்கரா சங்கரா என்பது.
எனவே சந்தேகத்து இடம் இன்றிக் கூற முயன்றபோது அந்தி மாலை அல்லது மாலை அந்தி என்றனர் மாலைப்பொழுது குறிக்க. சிலப்பதிகாரத்தின் பதிகம் பேசுகிறது:
“மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்றுக் காதையும்,
அந்தி மாலை சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்
மடல் அவிழ் கானல் வரியும்”
என்று. இதை விட வேறு தெளிவென்ன தேவை?
அந்திம தசை, அந்திம காலம் எனும் சொற்களைப் போல. அந்தி என்றால் ஊழி முடிவு என்று தொடங்கினோம். அந்தம் என்றாலும் முடிவே!
“ஆதீயும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கள்
மாதே! வளருதியோ? வன் செவிதான் நின் செவிதான்!”
என்பது மானிக்கவாசகரின் திரு எம்பாவாய்.
ஆதியும் அந்தமும் இல்லாதவனை அந்திரன் என்கிறது தேவாரம். ‘அந்திரனை ஆரூரில் அம்மான் தன்னை ‘ என்பது பாடல் வரி. பிங்கல நிகண்டு, அந்தி வண்ணன் எனும் சொல்லுக்குச் சிவன் என்று பொருள் தருகிறது.
என்ன தெரிய வருகிறது என்றால் இரவு முடிந்து பகல் தொடங்கும் நேரம் அந்தி. பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமும் அந்தி. ஆனால், நடைமுறையில் அந்தி என்றால் மாலை என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. எனவே, தெளிவுக்காகவே மாலை அந்தி அல்லது அந்தி மாலை எனக் குறிக்கின்றனர்.
எமது தமிழ்ச்சொல் ஆசான் கம்பனையும் கேட்டபின் கட்டுரையை நிறைவு செய்யலாம்.
அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலத்தில் சொல்கிறார்,
‘அந்தியில் வெயில் ஒளி அழிய’
என்று.
அந்திப்பொழுதில் வெயில் ஒளி குறைந்து பட என்ற பொருளில் கிட்கிந்தா காண்டத்தில், அனுமப் படலத்தில் சொல்கிறார்,
‘அந்தியாள் வந்துதான் அணுகவே’
என்று. அந்தி எனும் பெண்மகள் அணுகினாள் வந்து எனும் பொருளில்.
யுத்த காண்டத்தில் முதற்போர்புரி படலம். குருதி புரண்டு கிடந்த போர்க்களம் அந்தி வானம் ஒத்து செக்கச் சிவந்து தோன்றியது எனும் பொருளில்,
‘அந்தி வானகம் ஒத்தது அவ் அமர்க்களம்’
என்பார்.
எனவே, அந்தி எனும் சொல் பெரும்பாலும் மாலையைக் குறித்தது எனக்கொளலும் பிழையில்லை!
************
காலை அந்தி, மாலை அந்தி குறித்த விரிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா.