பாடுக பாட்டே முன்னுரை

மெய் கூறுவேன்!
இந்த நூலின் தலைப்பு ஒரு சங்க இலக்கியச் சொற்றொடர். குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை . பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன் தான் ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கியத்தின் ஆதி நூல்களைப் பாட்டும் தொகையும்’ என்றே குறித்தனர்.
‘பாட்டுக்கு ஒரு புலவன்பாரதி அடா!’ என்று கவிமணி பாடியது நினைவிருக்கலாம். இன்று பாட்டு என்றால் சினிமாப் பாடல், அல்லதுவசவு. இசையுடனோ, ஓசைநயத்துடனோ, இலக்கணத்துடனோ, இலக்கணம் இன்றியோயாக்கப்பட்டது பாட்டு.
கவிஞர், கவிதாயினி எனும் சொற்கள் மிகப் பிற்காலத்தவை. புலவர் என்றே பாடல் இயற்றுபவர் அறியப்பட்டார். புலவர் என்றால் தமிழ்க் கல்லூரிகளில் பயின்று பட்டம் வாங்கியவர் என மட்டுமே பொருள் இல்லை. பாட்டு எழுதும் ஊக்கம் உடையாரெலாம் புலவர்.கபிலர், பரணர், ஔவையார், வெள்ளிவீதி, யாவரும்புலவர்கள். சிற்பி, ஓவியர், தச்சர், கொல்லர் இவர்களின் பெண்பால் என்ன?
வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை அவர்கள் பாட்டாகப் பாடி வைத்தனர். வித்தை விரும்பு, தோற்பன தொடரேல், கற்பெனப் படுவது சொல் திறம்பாமை, கலக்கினும் தண் கடல் சேறாகாது என்பன பாடல் வரிகள்.
பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள், சிறப்புக்களைப் பாட்டாகப் பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புக்களை, ஈண்டு நாம் பாடப் போகிறோம். எனவே இந்த நூலின் தலைப்பு ‘பாடுக பாட்டே!’ என்றாயிற்று.
இந்தக் கட்டுரைகளை எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி நீங்கள் அறியத் தரலாம். 2017-ம் ஆண்டில், டிசம்பர் மாதத் துவக்கத்தில் ‘இந்து தமிழ்த் திசை’ நாளிதழ் ஆசிரியர் குழுவில் இருந்து எனக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது. எழுத வந்த 1975-ல் இருந்து இன்றுவரை, எவரிடமும் சென்று உங்களுக்கு எழுதுகிறேன் என்று கோரி நின்றவனில்லை நாஞ்சில் நாடன். எவர் அலுவலகப் படிக்கட்டிலும் ஏறி இறங்கியதும் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதுவதும், எழுதுபவற்றை விரும்பிய இதழ்களுக்கு அனுப்புவதுமே எனது 44 ஆண்டுகால எழுத்து அனுபவம்.
இருபத்தைந்து அல்லது முப்பது வாரங்கள் வரும்படியாக, ஒரு தொடர் எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
ஆனந்த விகடனில், 2008-2009 காலகட்டத்தில், 42 வாரங்கள் நானெழுதிய ‘தீதும் நன்றும்’ தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புதுவகை வாசகர்கள் அறிமுகமும் கிடைத்தது. பின்னர் விகடன் பிரசுரமாக வெளியாகி எட்டுப் பதிப்புக்கள் கண்டது. இன்று கோவை விஜயா பதிப்பகத்தால் புதிய பதிப்பாகியுள்ளது. ‘சொல் வனம்’ இணைய இதழில் ‘பனுவல் போற்றுதும்’ எனும் தலைப்பில் 2010-2011 ஆண்டுகளில் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதினேன். ‘தமிழினி’ வெளியீடாகப் பின்னர் அது புத்தகமாயிற்று. ‘குங்குமம்’ வார இதழில் 2015-2016-ம் ஆண்டு ‘கைம்மண் அளவு’ எனும் தலைப்பில் 49 வாரங்கள் தொடர் ஒன்று எழுதினேன். வாசக கவனம் பெற்ற தொடர் அது. சூரியன் பதிப்பகம் அதனைப் புத்தகமாக்கியது. இன்றும் விற்பனையில் இருக்கிறது.
‘இந்து தமிழ்த் திசை’ ஆசிரியர் குழுவிடம், தனிப்பாடல் திரட்டின் முப்பது புலவர்களின் பாடல்கள் பற்றி எழுத உத்தேசம் என்று தெரிவித்தேன். இசைவு தெரிவித்ததுடன், பரிசீலனைக்காக மூன்று அத்தியாயங்கள் எழுதி அனுப்பச் சொன்னார்கள். மூன்று கிழமைக்கு எழுதி அனுப்பிவிட்டு, பெப்ரவரி 2018 முதற் பகுதியில் பத்து நாட்கள் யப்பானுக்கு இலக்கியப் பயணம் போனேன். திரும்பி வந்ததும், தொடர்பில் இருந்த ‘இந்து தமிழ்த் திசை’ ஆசிரியர் குழு உறுப்பினர் என்னிடம் அறிவித்த சொற்கள் – ரொம்ப நல்லாருக்குண்ணே ! தொடர் தூக்கீரும்ணே ” என்பன.
‘இந்து தமிழ்த் திசை’ யின் வார இதழாக ‘காமதேனு’ எனும் பெயரில் தொடங்க இருப்பதாகவும், அதன் முதல் இதழில் இருந்து எனது தொடர் வெளியாகும் என்றும் சொன்னார்கள். நமக்கென்ன, அப்பம் தின்னவோ? அல்லால் குழி எண்ணவோ?’ என்னும் மனோபாவம்!
அடுத்தது தொடரின் தலைப்பு. நான்கு தலைப்புகள் எழுதி அனுப்பினேன். நாட்படு தேறல், பேழையுள் உயிர்க்கும் பெரு நிதியம், பழகிய தமிழே, பாடுக பாட்டே என்பன அவை. தொடரின் தலைப்பாகப் ‘பாடுக பாட்டே!’ தேர்வாயிற்று.
மார்ச் 2019 முதல் வாரத்தில் ‘காமதேனு’ வெளியானது. என்னைத் தவிரவும் மேலும் மூன்று தொடர்களும் துவங்கப் பெற்றிருந்தன. எனது தொடர்விரும்பி வாசிக்கப்படுகிறது என்றனர். ஐந்தாவது இதழ் வெளிவந்ததும், அலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள் – ”காமதேனு உள்ளடக்கத்தில் சில மாறுதல்கள் செய்ய இருக்கிறோம். எனவேதற்போது வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்துத் தொடர்களும் பத்தாவது இதழுடன் நிறுத்தப் போகிறோம்” என்று.
நான் நினைத்துக் கொண்டேன். செத்துப் போன சினிமா நடிகை எவளேனும் வந்து தனது அந்தரங்கம் அறியத் தரும் தொடர் ஏதும் எழுதப் போகிறாளோ என. நாமென்ன சொல்ல இயலும்? இன்று வெளியாகிற அனைத்து வணிகப் பருவ இதழ்களிலும் சினிமாக்காரர்கள்தானே புகைப்பட வடிவிலும், குறுஞ்செய்திகள், கேள்வி-பதில், நேர்காணல், செய்திகள், விளம்பரங்கள் வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! ஆங்கிலத்தில் சொல்வார்கள், Beggers are not choosers என்று. வீட்டு முன்றிலில் யாசகம் கோரி நிற்பவன், “அம்மா! சூடா நாலு இட்டிலியும், ரெண்டு ரசவடையும் சட்டினி சளம்ப ஊத்தித் தாருங்கோ” என்று கேட்க இயலுமா?
எனக்குத் தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள் இருப்பதால், கடைசி நேர நெருக்கடி வேண்டாம் என்று, அதற்குள் நான் பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதி அனுப்பிவிட்டிருந்தேன். எனினும் முப்பது அத்தியாயங்கள் எழுதக் கோரப்பட்ட எனது தொடர் பத்தாவது வாரத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு விடயம் அதிர்ச்சியும் சங்கடமும் அவமானமும் தருவதாக இருந்தது. நிறுத்தப்பட்டது என் தொடர் மாத்திரமே. ஒன்று, என் எழுத்தின் தரம் பாதாளம் ஏழினும் கீழ் வீழ்ந்து போயிருக்க வேண்டும். அல்லது வேறேனும் காரணங்கள் இருக்க வேண்டும். காரணங்களைத் தேடித் திரிந்து சமயம் களைய வேண்டாம் என்று தோன்றியது.
இது புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை, தீவிர தளத்தில் இயங்கும் தமிழ் எழுத்தாளன் எவரானாலும் எதிர் கொள்ளும் சங்கதிதான். அதனால் நவீனத் தமிழ் எழுத்து, எந்தத் தலைகுனிவையும் அனுபவித்து விடுவதில்லை. நூறாண்டுகள் கடந்தும் நல்ல படைப்பு மொழிக்குள் வாழ்ந்திருக்கும்.
எழுத்தாளனைக் கொலை செய்வது என்பது கல்புர்கியைப் போல சுட்டுக் கொல்லப்படுவது மட்டுமே அல்ல. புறக்கணிப்பது, இருட்டடிப்பு செய்வது, அவன் புத்தகத்தை அரசு நூலகங்களுக்கு வாங்காதிருப்பது, நியாயமான விருதுகள் மறுக்கப்படுவது, உரிய காப்புரிமைப் பணம் கவரப்படுவது எல்லாமே படைப்புக் கொலைதான். மேனியைக் கொல்வதில் இருந்து அவன் மீள இயலாது. ஆனால் மற்றெந்தச் செயலும் அவனது படைப்புத் தீவிரத்தை மேலும் கூர்பெறச் செய்யும்.
அப்போது எனக்கொரு கேள்வி மட்டுமே மிச்சமிருந்தது. முப்பது வாரங்கள் திட்டமிடப்பட்டு, பதின்மூன்று வாரங்களுக்கு எழுதிய கட்டுரைகளை என்ன செய்வது? அவற்றை மட்டுமே கொண்டு புத்தகம் வெளியிட இயலாது, ஐம்பத்திரண்டு பக்கத்தில் கோவணம் போல! எனவே, தொடரோ – தொடர் இல்லையோ, சற்று விரிவாக மேலும் சில கட்டுரைகள் எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன். காமதேனு வெளியிட்ட பத்து கட்டுரைகளும், மேலும் எழுதி தீராநதி, கணையாழி, ஆனந்த சந்திரிகை, உயிர் எழுத்து, காக்கைச் சிறகினிலே ஆகிய பருவ இதழ்கள் வெளியிட்ட கட்டுரைகளுமாகச் சேர்த்து, பாடுக பாட்டே!’ எனும் தலைப்பிலேயே இந்த நூல் வெளியாகின்றது.
இவை எனது வழக்கமான கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் இல்லை. நல்லமிளகும் இஞ்சியும் பூண்டும் ஓமமும் வெந்தயமும் சீரகமும் உள்ளியும் உடலுக்கு நல்லது என்பதைப்போல, மனதுக்கு செம்மை சேர்க்கும் மொழிக்குள் சேகரிக்கப்பட்டுள்ள செல்வங்கள்.
நூலாக வெளியிடும் கோவை விஜயாபதிப்பகத்து அண்ணாச்சி மு. வேலாயுதம், தம்பி வே. சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி. இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட பருவ இதழ்களுக்கு நன்றி. இந்த நூலின் உருவாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
கைப்பொருள் இழந்து, பத்தாண்டுகளுக்கும் மேலாக, ‘உயிர் எழுத்து மாத இதழ் சிறப்புடன் நடத்தியவர், கவிஞர், கட்டுரையாளர், நண்பர் சுதீர் செந்தில் உயிர் எழுத்து, எண்ணற்ற இளம் படைப் பாளிகளை மதம், இனம், செல்வ நிலை, பணித் தகுதி, கல்வித் தகுதி, மணி அடிக்கும் திறமை, சார்ந்திருக்கும் குழுவின் செல்வாக்கு எதையும் கணக்கில் கொள்ளாமல், படைப்புத்திறன் மட்டுமே கருத்தில் கொண்டு ஆதரித்த மாத இதழ்.
என்னுடைய பல கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என உயிர் எழுத்து வெளியிட்டது. ஓரெழுத்து, ஒரு வரி, ஒரு சொல் நீக்காமல், மாற்றாமல், குறைக்காமல், சேர்க்காமல். தொடர் எழுதப்போன என்துயரத்தையும், உயிர் எழுத்து தந்த சுதந்திரத்தையும் இக்கணம் நினைவில் கொள்கிறேன்.
எனவே சுதீர் செந்திலுக்கு காணிக்கை இந்த நூல்.
ஆமாம்! புறநானூற்றில் மருதன் இளநாகனாரின் பாடல் வரி கூறும், “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்” என்று. பொருளாவது – நன்றாக வாழ்வதை இச்சித்துப் பொய் கூறமாட்டேன்; எப்போதும் உண்மையே பேசுவேன்! ஆம், உண்மையே பேசுவேன்!
யாவர்க்கும் எப்போதும் அன்புடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர் – 641 042 25
நவம்ப ர் 2019

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பாடுக பாட்டே and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பாடுக பாட்டே முன்னுரை

  1. சி வடிவேல் சொல்கிறார்:

    ‘பாடுக பாட்டே’ என்னும் தொடர் காமதேனு வார இதழில் வெளிவந்த போது ஆர்வத்தோடு விரும்பிப் படித்து வந்தேன். ஆனால் பத்தாவது தொடரோடு நிறுத்தப்பட்டது ஏமாற்றத்தைத் தந்தது. தற்போது அக்கட்டுரைகளுடன் பிற கட்டுரைகளும் அடங்கிய நூல் வெளிவந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி. விரைவில் வாங்கி வாசிக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s