பால் கூடாரம்

முன்னுரை
முப்பது ஆண்டுகளாகக் கோவைவாசியாகிய நான் இருபது ஆண்டுகளாகவே ஆட்டனத்தியை அறிவேன். வான சாத்திரத்தில் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவர். தமிழ் நாட்டின் குறிப்பிடத்தகுந்த ஐம்பது பேர்களின் பிறந்த நட்சத்திரம் கேட்டறிந்து, அவர்களின் வாழ்நாள் பலன்கள் குறித்து நூலொன்றும் எழுதினார். அது குறித்த ஆய்வுரை ஒன்றினை சோதிடர் மாநாட்டில் வாசித்தளித்தார்.
என் அப்பா, அவர் கையால், பனையோலையில், எழுத்தாணி கொண்டு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சாதகம் இன்று என் கையில் பாதுகாப்பாக இருக்கிறது. அவர் பயன்படுத்திய எழுத்தாணி எமக்குப் பூசைப் பொருள். அவர் குறித்திருந்த பிறந்த நேரப் பலன்களை ஆட்டனத்தி எழுதிய ஆய்வுக் குறிப்புடன் ஒப்பிட்டு வாசித்தபோது வியப்பாக இருந்தது.
இரண்டாவதாக, 1990இல் கொங்கு நாட்டின் பசுமை இயக்கம், சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அழைத்துச் சென்ற மலைப் பயணத்தில் நானும் கலந்து கொண்டேன். பின்னர் அது குறித்த கட்டுரை ஒன்றும் எழுதினேன். அந்தச் சந்தர்ப்பத்தில், தாவரங்கள் குறித்த என் பதிவுகளில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தினார். மேலதிகமாக சில தகவல்களும் தந்தார்.
பின்னர், வனத்துறை வெளியிட்ட, மேற்குத் தொடர்ச்சி மலையின் தாவரங்கள் குறித்த, கனமான நூலொன்றையும் கையளித்தார். இன்று எனக்கு அதுவோர் கையேடு.
அவரது சிறுகதைகள் வாசித்திருக்கிறேன். அவ்வப்போது எழுதிய கட்டுரைகளும், ‘பால் கூடாரம்’ எனும் இந்த நாவல், ‘பேசும் புதிய சக்தி’ இலக்கிய மாத இதழில் தொடராக வந்த காலை வாசித்திருக்கிறேன். இந்த முன்னுரைக் குறிப்புக்காக, தற்போது மறுபடியும் ஊன்றிப் படித்தேன்.
ஆட்டனத்தி, தமிழ்நாடு வனத்துறையில், வனச் சரக அலுவலராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். காடு, மலை, விலங்குகள், தாவரங்கள், பறவைகள், ஆதி குடிகள், அவர்தம் பயிர்கள், உணவு, சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவம் என்று பன்முக அறிவும் அனுபவங்களும் அவர் எழுத்தில் காணக்கிடைக்கும்.
‘பால் கூடாரம்’ அவரது வனப் பணி அனுபவங்கள் தந்த செய்திகளின், வாழ்க்கையின் நாவல் வடிவம். இது இன்பியலா, துன்பியலா, யதார்த்த வாதமா, பின் நவீனத்துவமா என்று எவராலும் வரையறை செய்ய இயலாது. நீலமலையின் ஆதிகுடி சமூகத்தில் இருந்து, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுப் படிப்பு, முதுமுனைவர் பட்டப் படிப்பு என்று புறப்பட்டுப் போன யுவன், யுவதி இருவரின் சொந்த வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு இந்த நூல்.
சமவெளி மாந்தர், குலம், கோயில், கூட்டம், பறவை என்று பிரிவுகளும் உட்பிரிவுகளும் வகுத்துக் காத்து வாழ்வதைப் போல, மலைவாழ் குடிகளுக்கு உள்ளும் பிரிவினைகள் இருக்கிறது. கதாநாயகி மாண்பி பெட்டக் குறும்பர் இனம் என்றால், கதாநாயகன் விஜயன் ஆலுக்குறும்பர் இனம். இனத்துக்குள் குலம் எனப் பிரிவினைகள். எடுத்துக்காட்டுக்கு, பெட்டக் குறும்பர் இனத்தில் ஆறு பிரிவுகள். இனம் தாண்டிய மண உறவு அனுமதிக்கப்படவில்லை. இனம் ஒன்றே ஆனாலும், ஒரே குலத்தைச் சார்ந்தவர் மண உறவு கொளல் ஆகா.
மலையின மக்கள் சார்ந்த பல தகவல்கள், நாவல் வடிவத்தைக் கையாண்டு தொகுக்கப் பெற்றுள்ளன. நாம் சமவெளியில் மாட்டுச் சாணம், குறிப்பாகப் பசுஞ்சாணம் கொண்டு வீடு மெழுகியதைப் போன்று, மலைவாசிகள் மான்களின் புழுக்கைகளைச் சேகரித்து, அதனைக் குண்டானில் ஊறவைத்துக் கரைத்துத் தரைமெழுகினார்கள் என்பதோர் தகவல்.
வேக வைத்த நூரக்கிழங்கு உண்டனர் என்றொரு தகவல். நூரக்கிழங்கு நான் கண்டதும் இல்லை, உண்டதும் இல்லை. நம்மில் பலருக்கும் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பிடி கிழங்கு, சிறுகிழங்கு, கூவக்கிழங்கு, காய்ச்சில் கிழங்கு, மரக்சீனிக்கிழங்கு தெரியாது. அகில உலகமும் அறிந்த கிழங்கு இன்று உருளைக் கிழங்கு மட்டுமே!
திருமணக் காட்சி ஒன்றை விவரிக்கும்போது, மணப்பெண் சுங்குடிச் சேலை மட்டுமே முண்டு கட்டியிருந்தாள், இடது தோளில் வெள்ளைத் துண்டு போட்டிருந்தாள், உள்ளாடை எதுவுமே இல்லை என்று எழுதுகிறார். அன்மைக் காலத்துக் கதை நிகழ்வு என்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழ்நாடு – கேரள எல்லையில் தேவாலா என்றொரு பகுதி, அங்கு சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக அதிக மழை பொழியும் என்றொரு தகவல். முதுமலைக் காடுகளில் வளரும் மரங்கள் பற்றிய செய்திகள். ஆலுக்குறும்பர் இனத்தின் குலப்பிரிவுகள் என, நாகரெ வெள்ளகா என இரண்டு. இவற்றுள்ளும் உட்பிரிவுகள் என்று ஒரு தகவல். பாம்புக்கடி, தேள்கடி, பூரான்கடி தெரியும் நமக்கு. பன்றிக்கடி அறியமாட்டோம். பன்றிக்கடி எத்தனை ஆபத்தானது என்றொரு சம்பவம் விரிவாகப் பேசப்படுகிறது. யானைப்பாகனாகத் தொழில் புரிவோரின் ஆபத்துக்கள் உரைக்கப் படுகின்றன. மலைவாசிகளுக்கான தெய்வங்கள், கொண்டாட்டங்கள், மணச் சடங்குகள் என மேலும் தகவல்கள்.
அண்மையில் கானகம் சார்ந்த சில நாவல்கள் நான் வாசித்திருக்கிறேன். லக்ஷ்மி சரவணக்குமார், நக்கீரன், கலைச்செல்வி ஆகியோர் படைத்தவை. அந்த வரிசையில் ஆட்டனத்தியின் நாவல், ‘பால் கூடாரம்.’ அவரது வனம் சார்ந்த அனுபவக் கிடங்கில் இருந்து சில கரண்டிகள் எடுத்து நமக்கு விளம்பியிருக்கிறார், நாவல் வடிவத்தின் மூலம்.
அவரது சேகரத்தின் மேலும் பல அனுபவங்கள், செய்திகள் பதிவாக வேண்டும். நிலப்பரப்பின் வாழ்க்கையை மட்டுமே அறிந்த நமக்கு அவை பயனுள்ளதாக அமையும்.
உள்ளன்புடன்,
நாஞ்சில்நாடன்.
14, டிசம்பர் 2019
கோயம்புத்தூர் – 641 042,

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பால் கூடாரம்

  1. maanu சொல்கிறார்:

    kaattin pinpulathil eluthapatta innaavalil nichayam yeraalamaana thahavalkal kidaikkum. avasiyam vaangi padikirom. munnarikku mikka nandri.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s