ஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”

இராயகிரி சங்கர்
காளியம்மை கணவனால் கைவிடப்பட்டவள். முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் எங்கோ சென்று தொலைந்துபோன அவள் கணவன் அதன்பின் ஊர் திரும்பவில்லை . தன் ஒரே மகனுக்காக உயிர்வாழத் தொடங்குகிறாள். நாநாழி அரிசியை ஆட்டி இட்லி அவித்து அவள் பாடு கழிகிறது. வறுமையோடே தன் மகன் மலையப்பனை படிக்கவைத்து நிலையான உத்தியோகஸ்தன் ஆக்குகிறாள். சென்னையில் வீடெடுத்து தங்கி வேலை பார்க்கும் மகனுக்கு தன் சாதியில் வசதி வாய்ப்போடு டீச்சராக வேலையில் இருக்கும் ஒருத்தியைத் திருமணம் செய்துவைக்கிறாள்.
காலம் செழிக்கிறது. மகனும் மருமகளும் அரும்பாடுபட்டு பொருளீட்டுகின்றனர். செல்வம் சேர சென்னையில் புறநகர்ப் பகுதியில் சொந்தவீடு அமைகிறது. மலையப்பன் அம்மையைத் தன்னுடன் வந்து தங்க நிர்ப்பந்திக்கிறான். அதுவரை அம்மை செய்துவந்த இட்லி வியாபாரம் தரந்தாழ்ந்த ஒன்றாக அவனுக்குத் தோன்றுகிறது. தனிக்கட்டையாக அவள் இருந்து சம்பாதித்து என்ன நடக்க இருக்கிறது இனி என்பதால் காளியம்மையும் தன் மகனுடன் சென்னைக்கு இடம்பெயர்கிறாள்.
வீடே அசோக வனமாகிறது அவளுக்கு. எல்லாம் கடும் கட்டுப் பாடுகளோடு அளந்து வழங்கப்படுகின்றன. சல்லையென்று உணர்ந்து சொந்த ஊருக்கு திரும்பலாம் என்றாலும் வழியில்லை. இருந்த வீட்டையும் மகன் பேச்சைக்கேட்டு விற்றாயிற்று. திருமணமான ஓராண்டில் மருமகள் உண்டாகிறாள். பேறுகாலப் பண்டுவம் பார்க்க, பேரனுக்கு பீத்துணி அலச, பிள்ளை வளர்ப்பிற்கு ஒத்தாசையென அவளை மீண்டும் சிறைக்குள் அடக்கிப் போடுகிறது வாழ்க்கை . அடுத்த ஆண்டு இரண்டாவது பேறுகாலம். பேரன் பேத்திகள் மாநகரத்தின் மான்மியங்களோடு வளர்கிறார்கள்.
மூன்றாவது பத்தியில் இருந்து காளியம்மையின் முப்பதாண்டுக் கால கைம் பெண் வாழ்க்கையை நாஞ்சில் விவரிக்கத் தொடங்குகிறார். காளியம்மை மணமாகி, குழந்தை பெற்று, கணவன் பரதேசம் போய், தினந்தோறும் காலம்பிசகாமல் இட்லி அவித்து பனையோலைப் பெட்டியில் அடுக்கி பூதப்பாண்டிக்கு பஸ் ஏறி செலவாணிசெய்து, பால்மடு வற்றிச் சுருங்கி சுருக்குப்பை போல ஆன போதும் இட்டிலி அவித்துக் கொண்டிருக்கிறாள் என. அவளின் மொத்த வாழ்வும் இரண்டு பக்கங்களில் முடிந்துபோகிறது.
பேரப் பிள்ளைகளுக்கு அவள் ஓர் அசூயை. அருகில் இருக்கும் அசிங்கம். அவளோடு பாசத்தில் பிணைந்து உறவாடும் நன்னெறியை அவர்களுக்கு பள்ளியும் கற்றுத்தரவில்லை. ஊனருந்தி வளர்ந்த மகனும் புகட்டவில்லை. மலையப்பனுக்கு டீச்சரம்மாவின் காலடியே கதி. சொற்களே மந்திரம். “ம்..” என்ற ஒருசொல் அவனை இயக்கும் உந்துவிசை.
காளியம்மையின் பகல்கள் யாருமற்ற தனிமையில் கூலி வாய்க்காத வேலையாளைப்போல கழிகின்றன. தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஒன்றே அவளுக்கு இருக்கும் போதிமரம். அங்கு சென்று வருவதையும் மருமகள் சுடுசொல் சொல்லி அடைத்துப் போடுகிறாள். ஒரு விபத்தில் படுக்கையில் வீழ்ந்த காளியம்மையை தாதி பேணிப் பாதுகாக்கிறாள். உணவு குறைந்து ஊன் உருகி ஒரு மனுஷி குழந்தையைப் போன்ற தோற்றத்தை வந்தடைகிறாள். சோர்ந்து கிடந்தவளை இறந்து விட்டதாக வேலைக்காரி அறிவிக்க துஷ்டித் தகவல் சொந்த பந்தங்களுக்கு பறக்கிறது. மாநகரத்தில் இழவுவீடுகள் உண்மையில் மாசானத்தைப்போல ஆளரவமற்று இருக்கும் காட்சியை நாஞ்சில் சில சொற்களில் வரைந்தெடுக்கிறார்.
“அம்மாவை அவளுடைய அறையில்சாத்தி, ஊதுபத்தி ஏற்றிப் பூட்டிவைத்து விடியக் காத்திருக்கிறார்கள். தூக்கத்தின் இடையில் மனமுருகி படுக்கையில் இருந்து எழுந்து விளக்கைப்போட்டு அம்மாவின் அறைக் கதவைத் திறந்து பார்க்கப் போகிறான் மலையப்பன். அம்மாவின் உடலில் உயிர் இருப்பதற்கான சமிக்ஞைகள். மூடிய இமைகளுக்குள் உயிரின் உலாவல். மெலிதான மூச்சுப் பாய்ச்சல். மனைவியை தட்டி எழுப்பி வந்து காட்டுகிறான்.
மருமளுக்கோ பெருத்த ஏமாற்றமாகப் போகிறது. பட்டபாடுகள் போதாதா? இன்னும் எத்தனை நாட்களுக்கு பீ மோத்திரம் அள்ளி சாவப் போகும் பிணத்திற்கு பண்டுவம் பார்ப்பது என்று சலித்து இறுதியாக ஓர் ஆலோசனை சொல்கிறாள். அதன்படி பிள்ளைகள் அறியாவண்ணம் அவர்களின் அறைக் கதவுகளை வெளிப்புறம் தாளிட்டு கிழவியைக் குளியலறைக்கு அள்ளிச்சென்று உயிர்பிரியும் வரை குடம் குடமாக தண்ணீர்விட்டு குளிப்பாட்டுகிறார்கள். மாமியாரைச் சுமங்கலியாக அனுப்புவதில் திருப்தி கொள்கிறாள் மருமகள்.
வீடுகள் தோறும் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள கதை இது. கிராமங்களில் இன்றும் சொல்லக் கேட்கலாம். உயிர் பிரிய யோசித்துக் கொண்டிருக்கும் சமயங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டி, இளநீர் கொடுத்து சாந்தப்படுத்தி அனுப்பி வைக்கும் மரபு நம் மண்ணிற்கு உரியது. இம்மண்தான் தாயைத் தெய்வத்திற்கும் மேலாக மாதா பிதா குரு தெய்வம் என்று வைத்து வணங்கவும் செய்கிறது.
நீத்தார் சடங்குகள் அனைத்திலும் பெற்றோர்களைத் தவிக்கவிட்டு சாவக்கொடுத்த பிள்ளைகளின் குற்றவுணர்ச்சியைப் போக்கும் உபாயங்கள் இருப்பதைக் காணலாம். ஆண்டுதோறும் நாம் அளிக்கும் திதிப் படையல் நமக்கு அந்த ஒருநாளாவது நம் முன்னோர்களின் முகங்களை நினைவில் நிறுத்த ஏற்படுத்தப்பட்ட சடங்கு. தை அமாவாசையில் நதிக்கரைகள்தோறும் பல்லாயிரம் பசித்த ஆத்மாக்கள் தங்களின் மகன்கள் அளிக்கும் பிண்ட உணவிற்காக காத்திருந்து உண்டு காலத்திற்குள் உறைந்து போகின்றன என்ற எண்ணம் எத்தனை உக்கிரமானது.
இக்கதை இரத்த உறவுகளுக்கு இடையேயும் அன்பற்ற பாழ்வெளி இருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. காளியம்மையின் மொத்த வாழ்நாள் சேமிப்பும் மலையப்பன்தான். ஆனால் அவனும் கடைசிக் காலத்தில் அவளிடம் இருந்து அவள் மருமகளால் கொள்ளையடிக்கப் படுகிறான். அம்மாவின் ஆசைகளை, சின்னசின்ன விருப்பங்களை அறிந்து நிறைவேற்றும் எளிய பொறுப்புக்களைக் கூடத் தட்டிக்கழிக்கிறான். எப்போதும் நதி முன்னோக்கித்தான் பாயும் என்பதைப்போல அவன் அன்பும் கருணையும் அக்கறையும் அவனின் பிள்ளைகளை நோக்கிச் செல்கிறது.
மாநகரங்கள் மனிதனுக்கு ஏற்பட்ட சாபக்கேடுகளே. வீதிகள் தோறும் மனிதம் கைவிடப்பட்டு சாக்கடையில் புழுத்து நாறுகிறது. அறைகளுக்குள் அவிந்து மெல்லுணர்வுகள் செத்துப்போகின்றன. வாழ்நாட்கள் என்பவையே உண்டு உறைந்து புணர்ந்து இனவிருத்தி செய்து மாண்டுபோகும் மாறா செக்குமாட்டுத்தனம் என்றாகின்றன. அன்பு, பாசம் என்பவை பிற்போக்குத்தனங்கள் என்பதாகவும், கிராமங்களின் பாமரத்தனம் என்பதாகவும் மாநகரவாசிகளால் ஏளனம் செய்யப்படுகின்றன.
மாநகரங்களில் வாழ்ந்து பொருளீட்டும் பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை அவர்கள் அதுவரை வேர்ப்பிடித்து நிலைத்து வளர்ந்த மண்ணில் இருந்து பிடுங்கி புலம்பெயரச்செய்து சொந்த மண்ணில் சொந்த உறவுகளின் மத்தியில் அகதிகளைப்போல வாழச் செய்கிறார்கள். உணவும் உடையும் மட்டுமே அவர்களின் வயோதிகத்தை ஆற்றுப்படுத்தும் என்று விட்டுவிடுகிறார்கள்.
நாஞ்சிலின் இக்கதை நமக்கு ஒரு பாடம். நம் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அறச்சீற்றம் கொண்ட கலைஞனாக நாஞ்சில் கொள்ளும் ஆவேசம் கதைகளின் சொற்களெங்கும் வெக்கையேறித் தகிக்கின்றன. நாஞ்சிலின் சிறந்த சிறுகதை என்பதோடு தமிழ்ச்சிறுகதையின் சிறந்த படைப்பென்பது இக்கதையின் கூடுதல் சிறப்பு.
https://nanjilnadan.com/2011/07/15/சாலப்பரிந்து/
புகைப்பட உதவி: http://chinnakizhavi.blogspot.com/2014/04/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”

  1. nellaiyappan as சொல்கிறார்:

    கண்களில் கண்ணீர் திரையிடுகிறது . தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா என்ற கவிஞரின் வரிகளே நினைவுக்கு மீண்டும் மீண்டும் வருகிறது .

  2. maanu சொல்கிறார்:

    arumaiyana kathai. unmaiyil nadandirukkalaam. aanal nandri ketta thanathukku muthal pali thaayum thanthaiume. oru kalam varum appothu manithan thanneerukkum paasathukkum alaivaan. kaasirunthaal konjam thanneerum kidaikkalaam. anaal paasam…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s