சக்கடா

‘அக்கடா என்றாலும் விடமாட்டேன்,
துக்கடா என்றாலும் விடமாட்டேன்,
தடா! உனக்குத் தடா!’
என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா!
அன்றே மனதில் தோன்றிய சில கேள்விகளே இன்று கட்டுரை வடிவம் பெறுகிறது. அக்கடா, துக்கடா, பக்கடா, கச்சடா, சக்கடா என்று டாவில் முடியும் சொற்கள் பற்றிய சிந்தனை. மொழிக்குள் இது போன்ற பல சொற்கள் வந்து புகுந்து, நெடுங்காலம் புழங்கப் பெற்று, இன்று தமிழே போல ஆகி விட்டன. ‘ஸ்வச் பாரத்’ இன்று தமிழாகி விடவில்லையா? எந்த மொழி உயராய்வு மையத்தின் ஏற்றமிகு பேராசிரியப் பேரறிவும் எதுவும் செய்து விட இயலாது. என்றாலும் மேற்சொன்ன சில சொற்களுக்குள் புகுந்து பார்ப்பது சுவையான அனுபவமாக இருக்கும்.
‘அக்கட’ எனும் சொல் கன்னட மூலம் என்றும், ஆச்சரியக் குறிப்புக்கான சொல் என்றும் பதிவிட்டுள்ளது சென்னை பல்கலைக் கழகத்துப் பேரகராதி. அக்கட என்பது தமிழ்ச் சொல்லே என்றும், அவ்விடம் என்று பொருள் என்று மற்றொரு குறிப்பும் தருகிறது. அங்கிட்டு, அவிட என்பதைப் போல. ‘அக்கடாவென’ இருத்தல் என்பதற்கு, சும்மா இருத்தல் – Non interference- என்றும் பொருள். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று புழக்கத்தில் இருக்கும் சொல் ‘அக்கடா’ என்பது. “எல்லா சோலியும் முடிச்சு, சாப்பாட்டுக் கடையும் ஒதுக்கி, பத்துப் பாத்திரம் ஒழிச்சுப் போட்டு, அக்கடான்னு வந்து சாஞ்சேன். அப்பம் பாத்து விருந்து வந்து நிக்கி” என்றார்கள் தாயார் ஒரு காலில். “சவத்தை எல்லாத்தையும் விட்டு எறிஞ்சுக்கிட்டு அக்கடான்னு இரி” என்று மூத்தார் அறிவுறுத்தினார்கள் தோழருக்கு. எங்கேனும் தமிழிலக்கியப் பரப்பில் அக்கடா என்றொரு சொல் கையாளப்பட்டிருக்குமோ என்று ஐயம் எழுந்தது. ஏன், முதலில் மேற்கோள் காட்டிய பாடல் தமிழ் இலக்கியம் இல்லையா என்று கேட்டால், உமக்கும் எமக்கும் பேச்சு முறிந்து போகும்.
முதலில் கம்பனில் தேடிப் பார்ப்போம் என்று தோன்றியது.
கம்பராமாயணத்தில் ஆறாவது காண்டம் யுத்த காண்டம். அதன் 39 படலங்களில் இரண்டாவது இராவண மந்திரப் படலம். அனுமனால் எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்துக் கொடுக்க, ஆலோசனை மண்டபத்தில் அரசிருந்த இராவணன், படைத்தலைவன், அமைச்சர்கள், கும்பகருணன், இந்திரசித்தன், வீடணன் முதலானோருடன், ஆலோசனை நடத்தும் சந்தர்ப்பம். வச்சிர தந்தன் எனும் படைத்தலைவன் கூற்றை விலக்கி துன்முகன் எனும் படைத்தலைவன் மொழிவது போல் ஒரு பாடல்.
“திக்கயம் வலி இல, தேவர் மெல்லியர்,
முக்கணன் கயிலையும் முரண் இன்றாயது;
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்,
அக்கட, இராவணற்கு அமைந்த ஆற்றலே!”
வச்சிர தந்தனை இளக்காரம் செய்வது போல் துன்முகன் கூற்று. ‘என்னடா? இராவணன் வெற்றி கொண்டவை எல்லாம் அற்பமானவையா? அவன் போரிட்டு வென்ற திக்கயங்கள் வலிமையற்றவையா? அவற்றின் தந்தங்களை மார்பில் தாங்கி ஒடித்து, நிரந்தரமாக அவற்றைப் பூண் போல அழகுபடத் தரித்திருக்கிறானே! அவனிடம் போரிட அஞ்சி ஓடி ஒளிந்த தேவர்கள் மெலிந்தவரா? முக்கணானின் கயிலை மலையை எடுத்தானே அதுவும் எளிதான காரியமா? நீ பேசும் இராம இலக்குவர் எனும் மானுடரும், அனுமன் எனும் குரங்கும் மட்டும் மிகுந்த வலிமை பெற்றவர் என்கிறாய்! அக்கட, இராவணனின் ஆற்றல் ஒரு பொருட்டில்லையா?’ இது பாடலின் பொருள். இங்கு ‘அக்கட’ எனும் சொல் வியப்புக் குறிப்பு. அது திசைச் சொல் என்றும், குறிப்பாகத் தெலுங்குச் சொல் என்றும், பொருள் ஆச்சரியக் குறிப்பு என்றும் உரை எழுதுகிறார்கள். கன்னடமும், களிதெலுங்கும் உருப்பெற்ற நூற்றாண்டு எவை என அறிஞர் பெருமக்களிடம் கேளுங்கள். ஆனால் கம்பன், பத்தாம் நூற்றாண்டில் இருந்து இந்தச் சொல்லைத் தமிழில் காப்பாற்றித் தந்திருக்கிறான். ‘ஆட்சியர்’ என்ற சொல்லைக் காத்துத் தந்ததைப் போல. தமிழின துரோகத் தெய்வங்கள் கம்பனை எரிக்கப் புகுந்தது அசந்தர்ப்பமாக இப்போது நமக்கு ஞாபகம் வருகிறது. கம்பனின் காமச் சாறு பிழிந்து ரசம் எடுத்தவர் கண்களில் இது போன்ற ஆயிரம் சொற்கள் பட்டிருக்காதோ?
“ஓ கச்சடா ஆத்மி ஹை!” என்பார்கள் மும்பையில், அவன் கீழ்த்தரமான மனிதன் என்ற பொருளில். நாம் எழுதும் இந்தச் சொற்றொடருக்கும், சென்ற பாராவின் இறுதிச் சொற்றொடருக்கும் தொடர்பில்லை. கச்சடா என்ற சொல்லும் தமிழில் இன்று தாராளமாக வழங்கப் பெறுகிறது. ‘கச்சரா’ எனும் சொல்லைத்தான் வட நாட்டில் ’கச்சடா’ என்று உச்சரிக்கிறார்கள். வடவருக்கு ‘ரா’ எனும் எழுத்தின் ஒலி, ‘டா’ என ஆகிப் போகும். எடுத்துக் காட்டுக்கு, சாரி – சாடி, பூரி- பூடி, பருவா – படுவா என்பன.
கச்சரா எனும் வட சொல், இந்தி உச்சரிப்பில் கச்சடா ஆயிற்று என்பார் அருளி. கச்சரா எனில் இழிவு என்று பொருள். நாம் குப்பையைக் குறிக்க, கச்சடா என்கிறோம். அதே சமயம் கச்சா என்பது உருதுச் சொல். கச்சா எண்ணெய், கச்சாப் பொருள் என்கிறோம் அல்லவா? கச்சா எனில் விளையாதது, சரியாக வேகாதது என்றும் பொருள் படும். பான் ஷாப்களில் மீட்டா பான், கல்கத்தா பான் என்று கேட்டு நிற்பவர் என்ன வகைப் பாக்கு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்ல கச்சா அல்லது பக்கா என்பார்கள். கச்சா பாக்கு எனில் பழுக்காத காய்ப் பாக்கு. பக்கா பாக்கு எனில் முற்றிலும் நெற்றுப்பட்ட பாக்கு. ஆனால் இரண்டுமே உலர்ந்த பாக்குகளே! மலையாளத்தில் பச்சைப் பாக்கு, பழுக்காப் பாக்கு என்பார்கள். மாங்காயைக் குறிக்க கச்சா ஆம் என்றும், மாம்பழத்தைப் பக்கா ஆம் என்றும் சொல்வார்கள் மராத்தியில்.
கச்சா எனும் சொல்லின் பொருள் மூலப்பொருள் மற்றும் முதிராத பொருள் என்பார் அருளி. மேலும் சொல்கிறார், கசண்டுப் பொருள் என்றும், தூய்மை இல்லாத பொருள் என்றும். அதிலிருந்த கச்சரா- கச்சடா என்று பயன்படுத்தப்பட்டது போலும். போக்கிரித்தனம் என்று பொருள் சொல்கிறது லெக்சிகன், கச்சடா எனும் சொல்லுக்கு. கச்சடா என்று தமிழில் புழங்கும் சொல், கச்சரா எனும் இந்திச் சொல்லின் பிறப்பு என்றும் Baseness, meanness, uselessness என்றும் குறிக்கிறது லெக்சிகன். பொதுவாகக் கச்சடா என்றால் குப்பை என்று கொள்ளலாம்.
கிச்சடி என்றொரு சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாஞ்சில் நாட்டில், கல்யாணப் பந்தியில், தாட்டு இலை விரித்து, 21 வகைக் கூட்டுவான்கள் பரிமாறுவார்கள் பண்டு. அவற்றுள் பச்சடி, கிச்சடிகளும் அடங்கும். கிச்சடி எனில் வெள்ளரிக்காய் தயிர் கிச்சடி, இஞ்சி தயிர்க் கிச்சடி, தயிர் சேர்த்துச் செய்தால் எமக்கு அது கிச்சடி.
பாம்பே ரவை அல்லது பட்டன் ரவை அல்லது வெள்ளை ரவையைச் சற்று இளகிய வடிவத்தில், காரட்-பீன்ஸ்-தக்காளி- பச்சை மிளகாய் எனக் கலந்து செய்யும் உப்புமா வகையையும் கிச்சடி என்கிறார்கள். தொழில் நிமித்தம் முன்பு நான் நவ்சாரி போவேன். நவ்சாரி எனும் சிறு நகரம், பம்பாய்- ஆமதாபாத் வழித்தடத்தில், பம்பாயில் இருந்து 225 கி.மீ. தூரத்தில், சூரத்துக்கு 24 கி.மீ முன்பாக இருப்பது. சூரத்தில் இருந்தோ, நவ்சாரியில் இருந்தோ 25 கி.மீ. தொலைவில், முக்கோணத்தின் மூன்றாவது புள்ளியாக, அரபிக் கடல் ஓரத்தில் இருப்பது டண்டி. காந்தியடிகள் உப்பு அறப்போர் செய்த கடற்கரை. அதை நாம் தண்டி என உச்சரிக்கிறோம். நவ்சாரி போகும் போதெல்லாம், நவ்சாரி-சூரத் சாலையில் இருக்கும் கத்தியவாட் உணவகம் ஒன்றுக்கு மறக்காமல் போவேன். நாம் கத்தியவார் என்பதையே அவர்கள் கத்தியவாட் என்பார்கள். அந்த உணவகத்தில் காரசாரமாக, கொதிக்கக் கொதிக்க, நிறைய நெய் ஊற்றி, இளக்கமாகப் பொங்கல் போல ஒன்று தருவார்கள். ஆனால் அது பொங்கல் அல்ல, கிச்சடி. கச்சாப் பொருள் பாம்பே ரவை அல்ல, பச்சரிசியும் பாசிப் பருப்பும்.
கிச்சடி எனும் சொல் மராத்தியிலும் உண்டு, தெலுங்கிலும் இருக்கிறது. சில கூழ் வகைகளையும் கிச்சடி என்பார்கள். ஆக, கிச்சடி என்பதோர் தொடுகறி, கூழ் வகை. சித்திரான்ன வகை. சொன்ன வேலையைச் சீராகச் செய்யாமல், கோளாறில்லாமல் தாறுமாறாகச் செய்து வைத்தால், ‘கியா கிச்சடி பனாக்கே ரக்கா ஹை? “ என்று கார்வார் செய்வார் மேலதிகாரி. நாம் சொல்கிறோம் அல்லவா, “என்ன கந்தர் கோலம் செஞ்சு வச்சிருக்கே?” என்று. அதைப் போல.
மாலைச் சிற்றுண்டியாகப் பலர் விரும்பித் தின்னும் பலகாரம் பக்கோடா அல்லது பக்கடா. மலையாளிகள் பக்கவடை என்பார். க.நா.சுவின் மாப்பிள்ளை, புது தில்லியில் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றி வளர்த்தவர், அண்ணா பாரதி மணிக்கு தூள் பக்கோடா என்றால் மிகப் பிரியம். பற்கள் இன்னும் இற்றுப் போகாத எண்பது பிராயத்திலும். எனக்கு அங்கலாய்ப்பாக இருக்கும், அவரை விட ஏழெட்டு வயது சின்னவன், ஆனாலும் பல் பலமில்லையே என்பதால். அதற்காக அவருக்குப் பார்ப்பனத் திமிர் என்று வைய முடியுமா?
தூள் பக்கோடா போல, வெங்காயப் பக்கோடா, முந்திரிப் பக்கோடா, ராஜபாளையம் பக்கோடா, சீவல் பக்கோடா, ராகிப் பக்கோடா எனப் பல வகைகள். வளம் இருந்தால் கற்பனையும் வாய்க்கும். அயற்சொல் அகராதி, பக்ஷ்ணம் எனும் சொல்லே பட்சணம் என்று ஆகியது, பக்ஷ்ணம் வடசொல் என்றும் பட்டியலிடுகிறது. சிற்றுண்டியைப் பட்சணம் என்றோம். மலையாளிகள் “பட்சணம் கழிச்சோ?” என்றார்கள். பட்சணம் என்பது பக்ஷ்ணம் எனும் சொல்லின் பிறப்பு என்றாலும், தொல்காப்பிய இலக்கண விதிகளின் படி, அது பக்கணம் ஆகும். பக்கணம் திரிந்து பக்கோடா ஆயிற்று என்று ஒரு கருது கோளும் உண்டு.
பக்கரா எனும் வட சொல்லே பக்கடா ஆயிற்று என்று கொள்வாரும் உளர். நாம் கூறும் பக்கராவுக்கு p உச்சரிப்பு. B உச்சரிப்பும் நமக்கு பக்கரா தான். ஆனால் B தொனிக்கும் பக்கரா என்றால் ஆடு என்று பொருள். எனினும் பக்கணம் எனும் சொல்லுக்கு சிற்றுண்டி வகைகள், eatables என்று பொருள் தருகிறது பேரகராதி. பக்கணம் என்றால் அயல் நாட்டுப் பண்டங்கள் விற்கும் இடம் என்கிறது யாழ் அகராதி. பக்கணம் என்றால் வேடர் வீதி என்று திவாகர நிகண்டும், ஊர் என்று சூடாமணி நிகண்டும் பொருள் தருகின்ரன. பக்கணம் சிற்றுண்டி வகை என்று கொள்ளப்பட்டதனால், பக்கடா என்பது பக்கணத்தின் பிறப்பாகக் கொள்வதிலும் பிழை இல்லை. பக்கடாவைப் பகோடா என்றாலும்தான் என்ன மூழ்கிப் போய் விடும்!
பக்கடா, பக்கோடா என்பதற்கும் பகோடா என்ற யப்பானிய இறைத் தலங்களுக்கும் தொடர்பில்லை என்பதறிக! பக்கடாவைத் தொடர்ந்து போனால் பக்கிரி எனும் சொல்லில் சென்று தங்கலாம் பக்கிரி என்பது அரபுச் சொல். துறவி, இரவலன், ஏழை என்று பொருள்படும்.
6
பக்கிரி என்பதை அரபி fakir என்று உச்சரிக்கும். முகமதியப் பரதேசியையும், ஃபக்கீர் என்பார்கள். Mohammadan Religious Mendicant என்கிறது லெக்ஸிகன். பரதேசி என்றால் பெரும்பாலும் பஞ்சப் பரதேசி, பரதேசி நாய், பிச்சைக்காரன் என்றெல்லாம் பொருள் கொள்கிறோம். உண்மையில் பரதேசி, ஃபர்தேசி என்றால் வேற்று நாட்டவர் என்பது சரியான பொருள். இந்திச் சொல் ஃபர்தேசி. ஏக் ஃபர்தேசி மேரா தில்லு லே கயா! என்றொரு பழம் இந்திப் பாடல் கேட்டிருக்கலாம். ஒரு வேற்று நாட்டவன் என் இதயம் கவர்ந்து சென்றான் என்று பொருள். அயலூரான் எனும் சொல் இன்று பிச்சைக்காரன் என்று பொருள் பெற்று விட்டது. பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்துக்கு நானே உரையாடல் எழுதினேன். நான் பெற்ற வாழ்த்தை விடவும் வசை அதிகம்.
பக்கி என்றும் ஒரு சொல் உண்டு. பக்கி என்றால் எளிய என்று பொருள். குளிக்காமல், தலை சீவாமல், முகம் கூடத் துடைக்காமல் இருக்கும் பெண் பிள்ளையைப் பார்த்து, “ஏ மூட்டி? பக்கி போல வந்து நிக்கே?” என்பார்கள் எங்கள் பக்கட்டு. பக்கிரி வெறு, போக்கிரி வேறு. போக்கில்லாதவன், போக்கிலி எனும் சொல்லின் திரிபு போக்கிரி. One who has no refuge. மேல் நாட்டவர் homeless என்பார்கள். போக்கிலி எனும் சொல் கன்னடப் பிறப்பு என்பார் அருளி. கதியற்றவன் என்று பொருள் தருகிறது யாழ் அகராதி. சங்க அகராதியோ, blackguard, scoundrel, villain, துஷ்டன் என்று பொருள் தருகிறது. பேசாமல் அரசியல்வாதி எனும் ஒற்றைச் சொல்லால் குறித்து விடலாம்.
துண்டு துக்காணி என்று கேட்டிருக்கிறோம். துக்காணி என்றால் அது உருதுச் சொல். சிறு செப்புக்காசைக் குறித்த சொல். சிறு துண்டு நிலத்தைத் துக்காணி என்பர் எங்களூரில். சிறு துண்டைக் குறிக்க ‘துக்கிணியூண்டு’ என்றும் புழங்குகிறார்கள்.
இந்தி மொழி, துண்டு, சிறு துண்டு இவற்றைக் குறிப்பிட துக்கடா என்கிறது. துக்குடா என்றாலும் அது துக்கடா தான். நாம் ஏற்கனவே சொல்லி வந்தவாறு, துக்கராதான் துக்கடா என ஒலிக்கப் பெறுகிறது. Piece, bit, சிறு துண்டு குறித்த சொல் துக்கடா. துக்கிடி என்றும் சொல்வார்கள் இந்தியர். உணவின் போது, சின்னஞ்சிறு side dish, துக்கடா எனப்பட்டது. அற்பமான என்ற பொருளில்.
7
மிகுந்த மனவேதனைக்கு ஆட்படுத்தும் விடயம் ஒன்று உண்டு. கர்நாடக இசைக் கச்சேரிகளின்போது. இறுதிப் பகுதியில், மங்களம் பாடுவதற்கு முன் பாடப்படும் தமிழ் ஐட்டங்களைத் துக்கடா என்றார்கள் மகாபாவிகள். அது தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா, பாரதி பாடல் எதுவானாலும் அது துக்கடா. பத்து ஆண்டுகட்கு முன்பு, இன்றைய சங்கீத கலாநிதி திருமதி. அருணா சாயிராம் அவர்களை, ‘ரசனை’ மாத இதழுக்கு நான் நேர்கண்ட போது இந்த ஆட்சேபணையைச் சொன்னேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்ட எனது நேர்காணல்களின் தொகுப்பின் இறுதியில், நான் கண்ட மேற்சொன்ன நேர்காணலும் உண்டு. அதென்ன, தமிழ்ப்பாட்டு என்றால் துக்கடாவா என்பது நமது விசனம், கோபம், எரிச்சல், மறுப்பு, முறையீடு…
வெகு நாட்களாக எனக்கொரு சந்தேகம். தாடி எம்மொழிச் சொல் என? செல்வாக்கான தாடிகள் பல உண்டு நம்மிடம். வெண் தாடி, தாகூர் தாடி, பகுத்தறிவுத் தாடி, முற்போக்குத் தாடி, தலித் தாடி, புல்கானின் தாடி, மார்க்ஸ் தாடி, குறுந்தாடி, புரட்சித் தாடி, சாமியார் தாடி, சித்தர் தாடி, செல்வந்தர் தாடி, வங்கி மோசடித்தாடி, பேன் பற்றிய தாடி என. எனினும் தாடி தமிழ்ச்சொல்லா? தமிழில் முகமே கிடையாது. பிறகல்லவா தாடி என வடமொழி அறிஞர்கள் கேட்பார்கள்.
வட நாட்டில், முகச் சவரம் செய்யாமல் நாலைந்து நாட்கள் திரிந்தால், “தாடி பனாயா நை?” என்று கேட்பார்கள். அதாவது அவர்களுக்கு தாடி என்றால் முகத்து மயிர் எனப்படும். ‘தாடிவாலா’ என்பர் சிலரை அடையாளப்படுத்த. அரபு நாட்டவர் பலரும் தாடி வைத்திருப்பதால், தாடி உருதுச் சொல்லாக இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாடி எனும் சொல்லை, மோவாய் எனும் பொருளில் சிலப்பதிகாரம் கையாள்கிறது. வஞ்சிக் காண்டம், நீர்ப்படைக் காதையின் பாடல் வரி, ‘சுருளிரு தாடி’ என்கிறது. அதாவது Chin எனும் பொருளில். கலித்தொகை, தாடி எனும் சொல்லை, மோவாய் மயிர், Beard எனும் பொருளில் ஆள்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகையில் ‘மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி’ என்கிறார். முகத்தின் இரு பக்கமும் திரிந்தும், மறிந்தும் விழும் தாடி என்று பொருள். சேவலின் கழுத்தில் தொங்கும் பகுதியைத் தாடி என்றனர். பசு முதலிய மாக்களின் கழுத்தில் தொங்கும் தோல் பகுதியை அலை தாடி என்றனர். Dewlap என்பர் ஆங்கிலத்தில். சீவக சிந்தாமணியின் மண்மகள் இலம்பகத்துப் பாடல், பாடல் எண் 2279, வாளின் கைப்பிடியைக் குறிக்க, தாடி எனும் சொல்லை ஆள்கிறது.
8
எங்களூரில் இரண்டு காளைகள் சேர்ந்து இழுக்கும் பார வண்டியைச் சக்கடா வண்டி என்போம். கூண்டு வண்டியும், வில் வண்டியும் இரண்டு காளைகள் இழுப்பதுதான். ஆனால் சக்கடா வண்டி என்பது வேறு. நாம் வண்டி என்பதை வட நாட்டில் காடி என்பார்கள். மோட்டார் காடி, ரயில் காடி, பைஸ் காடி என்பது வழக்கு. ‘சல்த்தி கா நாம் காடி’ என்றொரு சொலவம் உண்டு. ஓடுவதன் பெயர் வண்டி என்பது பொருள். உடனே எலி ஓடுகிறது, அதன் பெயர் வண்டியா என்று நீங்கள் முற்போக்கு, தலித்திய, பெண்ணிய, பெரியாரிய, மார்க்சிய விமர்சனம் வைக்கக் கூடாது.
நான் எழுத வந்த காலத்திலிருந்தே, சக்கடா எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். வட்டார வழக்கு எழுத்தாளன் என்று நமக்கு அவப்பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது இது போன்ற தற்குத்தறம் காரணமாகத்தான். நெல்பாரம் ஏற்றிப் போக, உரமடிக்க, விறகு கொண்டு வர, புழுங்கல் நெல் குத்த, ரைஸ் மில்லுக்குப்போக, வயலுக்குச் செம்மண் அடிக்க, வீடு கட்ட கருங்கல், செங்கல், மணல் அடிக்க என யாவற்றுக்கும் சக்கடா வண்டிதான். அடுத்துள்ள கோவில்களுக்குப் பொங்கல் விட குடும்பத்துடன் போவதற்கும் சக்கடா வண்டிதான். முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சந்தைவிளை ஔவையாரம்மன் கோயில், மண்டைக்காட்டுப் பகவதி அம்மன் கோயில் என சக்கடா வண்டிதான். பூதப்பாண்டி தேரோட்டத்துக்கும், சுசீந்திரம் தேரோட்டத்துக்கும் அஃதே. பள்ளிப் பருவத்தில், அரை நிக்கர் போட்ட காலத்தில் உச்சி மீது வெயிலடிக்காதா என்பீர்கள்! முப்பது வெளிநாட்டுச் சொகுசு ஆடம்பர மகிழ்வுந்துகள் வைத்துக் கொள்ள நாமென்ன தமிழினத் தலைவர் பெயரனா?
9
தமிழ்த் துறைப் பேராசிரியருக்கும், முற்போக்குத் திறனாய்வாளருக்கும் அஞ்சி, சக்கடா வண்டியைப் பாரவண்டி என்று எழுத நம்மால் ஆகாது. ஆனால் அவர்களுக்கெல்லாம் சொல் சார்ந்து வராத கேள்வி, எழுத ஆரம்பித்து 45 ஆண்டுகள் கடந்த பின்பு நமக்கு வருகிறது. அதென்ன சக்கடா வண்டி என்று! உள்ளதை உள்ளபடி பயன்படுத்திப் போவதல்லால் எதற்கிந்தப் பாழ்வேலை என்று தோன்றலாம். என்றாலும் நாம் சீனிக் கிழங்கு தின்ற பன்றி, செவியறுத்தாலும் நிற்காது.
தமிழில் புழங்கும் எச்சொல் எம்மொழிச் சொல் என்றறிய எனக்கேதும் அரிப்பு ஏற்பட்டால், ‘அயற்சொல் அகராதி’ எப்போதும் கையேடு. அருளி ஐயா பதிவு செய்கிறார், சக்கரம் எனும் சொல்லின் மூலம் சக்ரா எனும் வடசொல். சக்கரா எனும் சொல்லே சக்கடா என வழங்குகிறது என்று. கச்சரா- கச்சடா ஆனது போல், துக்கரா- துக்கடா ஆனது போல், சக்கரா- சக்கடா ஆகியிருக்கலாம் என்பதவர் அனுமானம். Logic சரியாக இருக்கிறது. ஆனால் இந்தி பேசும் பிரதேசங்களில் சக்கரா என்ற சொல்லைச் சக்கடா என்று பயன்படுத்துவதாக என் அலுவலக அறிவில் பதிவில்லை. சுழல்வதைச் சக்கர் என்பார்கள். ‘கியா சக்கர் ஹை’ என்பார்கள் எத்தனை சுழல் என்று சுட்ட.
புத்திக்குள் ஏதோவொரு புகார் எழுந்தது. சக்கடா வண்டி என்றால் கட்டை வண்டி. Springless bullock cart என்று பொருள் தருகிறது பேரகராதி. சக்கடா வண்டி எனும் சொல்லைத் தமிழ்ச்சொல் என்கிறது சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேரகராதி. பதிப்பானது 1922 இல். அயற்சொல் அகராதி முதற்பதிப்பு 2007 இல். அருளி ஐயா இதனை அறியாது இருக்க இயலாது.
நாலடியார் எனும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதல் நூல், தனது இரண்டாவது பாடலில் சகடக்கால் எனும் சொல் பயன்படுத்துகிறது.
‘அகடுற யார் மட்டும் நில்லாது செல்வம்
சகடக் கால் போல வரும்’
என்பன ஈற்றடிகள். யார் பக்கமும் சாய்ந்து நிரந்தரமாகத் தங்காமல், செல்வமானது வண்டிச் சக்கரம்
10
போலக் கீழது மேலாய், மேலது கீழாய் வரும் சுழன்று என்பது பொருள். சகடக் கால் என்பதற்கு தேர்க்கால் என்றும் வண்டிச் சக்கரம் என்றும் உரை எழுதுகிறார்கள். ஒன்றேகால் லட்சம் கோடி, இரண்டே முக்கால் லட்சம் கோடி, ஏழரை லட்சம் கோடி என அரசியல் குடும்பங்கள் தேற்றி வைத்திருக்கிற புன்செல்வம் நாளை வேறோர் இடம் போய்ச் சேரும் என்பதும் நல்ல நம்பிக்கை அல்லவா? ஆக தருமர் உரையோ, பதுமனார் உரையோ, நாலடியார் கூறும் சகடக்கால் என்றால், சகடம்- வண்டி, கால்-சக்கரம்
சகடப் பொறி என்றொரு சொல்லும் பேரகராதியில் உண்டு. சக்கர வடிவிலான இயந்திரம் என்று பொருள் தந்திருக்கிறார்கள். நமது தீப்பேற்றைக் கண்ணுறுங்கள், பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம் என்று பொருள் எழுத வேண்டியிருக்கிறது.
சகடம் எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் தரப்படுகின்றன. வண்டி, தேர், தே வடிவத்திலான போர் அணிவகுப்பு, ரோகிணி எனும் விண்மீன், சக்கரம், ஊர்க்குருவி, வட்டில், தமரத்தை எனும் தாவரம், துந்துபி என. ‘நூறு நூறு சகடத்து அடிசிலும்’ என்பான் கம்பன் நூற்றுக்கணக்கான வண்டி உணவு என்ற பொருளில். சகடயோகம் என்றொரு யோகம் பற்றி சோதிடர்கள் பேசுகிறார்கள். குருவும் ஆறு, எட்டு அல்லது பன்னிரண்டாம் இடத்தில் சந்திரனும் இருந்தால் உண்டாகும் பயன் என்கிறார்கள்.
சகடி என்றாலும் வண்டி என்கிறது பிங்கல நிகண்டு. சகடிகை எனில் கை வண்டி என்கிறது யாழ் அகராதி. சகடு என்றாலும் வண்டி என்கிறார்கள். சகடை என்றாலும் வண்டிதான். சாகாடு என்றாலும் வண்டியேதான். இதென்ன ஐயா, சகடம், சகடி, சகடிகை, சகடு, சகடை, சாகாடு எல்லாம் வண்டி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கலாம். நாமென்ன செய்ய இயலும்?
வலியறிதல் அதிகாரத்துக் குறள் கூறுகிறது-
‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’
என்று. இந்தத் திருக்குறளில் வரும் சாகாடு என்ற சொல்லுக்கு, பரிமேலழகர்- சகடம், மணக்குடவர் – சகடம், பரிப்பெருமாள் – சகடம், பரிதியார்- வண்டி, காலிங்கர்- சகடம் என்று உரை எழுதினார்கள்.
11
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கோ.வன்மீக நாதன் – cart என்கிறார். சரி, திருக்குறள் மட்டும்தான் சாகாடு என்ற சொல் பயன்படுத்தியதா?
புற நானூற்றில், பெயரறியாப் புலவன் எழுதிய அற்புதமான பாடல் ஒன்று, ‘கலம் செய் கோவே! கலம் செய் கோவே!’ என்று தொடங்கும் அப்பாடலில்,
‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போல’
என்றொரு சிறப்பான உவமை ஒன்றுண்டு. முதுபாலையில், கணவனை இழந்த பெண்ணொருத்தி கூறுகிறாள், முதுமக்கள் தாழி வனையும் குயவனைப் பார்த்து, வனையும் தாழியைச் சற்றுப் பெரியதாகவும், வாயகன்றதாகவும் செய்யும்படி. கணவனுடன் அவளுக்கும் சேர்த்து வனையும்படி. ஏனெனில் வண்டிச் சக்கரத்தின் ஆரக்காலில் ஒட்டிக் கொண்டு சுழலும் பல்லி போல கணவனுடன் ஒட்டிக் கொண்டே இத்தனை காலமும் இருந்து விட்ட பெண் அவள். இந்தப் பாடலைச் சொல்லும் பெண்ணின் சோகம் துலக்கத் தனிக் கட்டுரை எழுதலாம். என்ன உவமை பாருங்கள், கொல்லும் உவமை! ‘அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போல!’ என்பது. நாம் சொல்ல வருவது, ஐயம் திரிபு அற, சாகாடு எனில் சகடம் என்று.
அக நானூற்றில், அதியன் விண்ணத்தனார் பாடல், ‘ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து’ என்கிறது. மேலே ஓலைப் பாய் வேய்ந்த, சக்கரங்கள் ஒலி எழுப்புகின்ற வண்டி என்று பொருள். ஆரை எனில் வண்டியின் கூண்டாக நிரையப்பட்ட பாய் என்பது. புறநானூற்றின் சாகாடு போல. சகடம் சொல்லும் ஆளப் பெற்றுள்ளது. தகடூர் அதியனை, ஔவை பாடும் பாடல்.
‘எடுதே இளைய, துகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே’
என்பன பாடல் வரிகள். ‘எருதுகள் இளமையானவை. இதுகாறும் நுகத்தடியில் பூட்டப்பெறாதவை. வண்டியில் பாரமும் பெரிய அளவில் ஏற்றப்பட்டுள்ளது.’ என்பது பொருள். குறுந்தொகையில் பரணர் பாடல், ‘இருங்கரை நின்ற உப்பு ஒய் சகடம்’ என்கிறது. பெரிய நீர்க்கரை ஓரமாக நின்ற உப்புப் பாரம் ஏற்றிய வண்டி என்பது பொருள். நற்றிணையில் அம்மூவனார் பாடல்-
12
“ உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்”
என்கிறது. உப்பு விற்கும் உமணர், வெண்கல் உப்பின் விலை கூவிச் செல்லும் வண்டிகளின் ஓசை கேட்டு, வயலில் அமர்ந்திருக்கும் நாரைகள் அஞ்சும் என்று பொருள் தரப்பட்டுள்ளது.
பரிபாடல், ‘ஆய் மாச் சகடம்’ என்கிறது. காளை மாடுகள் பூட்டப் பெற்ற வண்டி என்பது பொருள். பெரும்பாணாற்றுப் படை,
‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’
என்கிறது. ’ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’ எனும் அகநானூற்று வரிக்கான பொருள்தான் இங்கும். ‘மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன’ என்றால் குன்றின் மேல் மழை மேகம் கவிழ்ந்து கிடந்ததைப் போன்று என்பது உவமை.
ஆண்டாள் திருப்பாவையின் 24 ஆவது பாடல்,
‘அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய், புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய், கழல் போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய், குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’
என்று திருமால் பொன்றச் சகடம் உதைத்ததைப் போற்றுகிறது.
இம்மேற்கோள்கள் மூலம் நாம் பெறுவது என்ன? சிகாகோ மாநகரில் நடக்க இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கு என நாமிதை எழுதப் புகவில்லை. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
சகடம், சாகாடு, சகடு, சகடை, சகடி, சகடிகை என்று எத்தனை சொற்கள் வண்டியைக் குறிக்க? இன்றும் நாஞ்சில் நாட்டில், திருவிழாக்களின் போது, உற்சவர்களை வைத்து இழுத்து வரும் நான்கு அல்லது இரண்டு சக்கரங்கள் கொண்ட, தட்டுத் தேர் போன்ற வாகனத்தை சகடை என்கிறார்கள்.
எனது முறையீடு, சக்கடா எனும் சொல் ஏன் அவற்றுள் ஒன்றாக இருக்கலாகாது? ஏன் வட்டார வழக்கு என்று ஒதுக்குகிறார்கள்? சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பன தமிழ்ச் சொற்கள், ஆனால் சக்கடா தமிழ்ச் சொல் ஆகாதா? சக்ர, சக்ரா, சக்கரா என்பதுதான் தமிழ் ஆகியிருக்க வேண்டுமா? சகடம், சகடை, சகடு, சகடி, சகடிகை, சாகாடு என்பனவற்றில் ஏதோ ஒரு சொல் திரிந்து சக்கடா ஆகியிருக்க வாய்ப்பே இல்லையா? மற்றதுமொன்று. கச்சடா, துக்கடா, அக்கடா போன்ற சொற்கள் அவை எம்மொழிச் சொல்லின் திரிபே ஆனாலும், தமிழ்நாடு முழுக்க வழக்கில் உள்ளவை. சில பிரதேசங்கள் மட்டும் சார்ந்தவை அல்ல. சக்கடாவும் அவ்விதமே ஆம் எனில், அது வெங்ஙனம் ஒரு வட்டாரத்துள் மட்டுமே அடைபட்ட சொல்லாக இருத்தல் சாத்தியம்?
மேலும் சக்ரா, சக்கரா என்றால் சக்கரம்தானே, வண்டி அல்லவே! நான் மொழி அறிஞன் அல்லன். வேர்ச்சொல் ஆய்வாளன் அல்லன். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றாருக்குக் கால் தூசு பெறுபவனும் அல்லன். என்றாலும் கற்றுக் கொள்ள விழையும் ஓர் எளிய மாணவன்.
வெகு விரைவில் சக்கடா வண்டியின் பயன்பாடு சென்று தேய்ந்து இற்றுப் போகும். அத்துடன் வழக்கு மொழியில் சக்கடா எனும் சொல்லும். வடமொழி ஆனாலும், தென் மொழி ஆனாலும், ஒரு சொல் செத்துப் போவது என்பது வருத்தம் தருவதல்லவா?
28 மார்ச் 2019
நன்றி: சொல்வனம்

சக்கடா

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s