பெண்ணழகை வியப்பது, எம்மொழியிலும், எக்கலையிலும், எப் பண்பாட்டிலும், மரபு, சொற்களால், ஓவியங்களால், சிற்பங்களால், அழகு விதந்தோதப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்ணியப் போக்கின் பார்வையில் அன்றைய கலைமனத்தை புரிந்துகொள்ள முயல்வதில் சிரமங்கள் உண்டு. பெண்ணழகைப் போற்றியதை இன்றைய விடுதலை பெற்ற மனம் விரும்பவில்லை என்பதை நாமறிவோம். என்றாலும் பெண் விடுதலைப் போராளிகளால் இன்றும் திரைப்படங்களிலும், அச்சு ஊடகங்களிலும், விளம்பரங்களிலும், காட்சி ஊடகங்களிலும் பெண்ணுடலை விற்று காசாக்குவதை கையறு நிலையில்தான் காண முடிகிறது. செங்கலுக்கும், சிமெண்ட் சாக்குக்கும் என்ன உறவு என்று நமக்குப் புரிவதில்லை. பெண்ணைப் பயன்படுத்துவது என்பதைக் கடந்து பெண்ணைக் கேவலப்படுத்தும் கட்டத்தில் இருக்கிறோம்.