நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்

நாஞ்சில் நாடன் பதில்கள்

by வல்லினம
இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன?
மாரி முருகன்
மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், சாதி அரசியல் நடத்தும் அரசியல். கட்சிகளும் இனக்காவலர் என்று தம்மையே கொண்டாடிக்கொள்பவர்களும், வாக்கு வங்கி அரசியலும் காரணமல்லவா? இதில் நாட்டார் கலை இலக்கிய வளர்ச்சி என்பது எந்த வகையில் சாதியத்தை ஊக்குவிக்க இயலும்.
இரண்டாவது, அங்கொன்றும் இங்கொன்றும் என நாட்டார் கலை இலக்கிய ஆர்வலர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் எப்பெரும் மாற்றத்தை நிகழ்த்திட இயலும்? நாட்டார் கலை இலக்கிய வளர்ச்சி என்ற ஒன்று, தற்கால சமூகச்சூழலில் எங்காவது உணரப்பட்டுள்ளதா? ‘மணல் வீடு’ எனும் இலக்கிய சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன், சேலம் மாவட்டம் ஏர்வாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்துகொண்டு செயல் ஊக்கம் தரும் தோல்பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டார் கலை முயற்சிகளைப் பற்றி அறிவீர்களா? பத்தாண்டுகளாக அவர் நாள் முழுக்க நடத்தும் கலை விழாக்களில் கலந்து கொண்டதுண்டா? எங்கிருந்து மேற்சொன்ன கருத்துக்களைப் பெறுகிறார்கள். குடியரசுத் தின அணிவகுப்பில் ஆடிக்கொண்டு போகும் நாட்டார் கலைகளைப் பார்த்தா? இல்லை குளிரூட்டப்பட்ட பல்கலைக்கழக கருத்தரங்கு அமர்வுகளில் இருந்தா?
இவ்விதம் கருத்துகளை சொல்வதே இங்கொரு முற்போக்கு போலி மரபாகிப் போய்விட்டது. நகர்மயப்பட்டு, நாகரீகப்பட்டு, பின்னை பின்நவீனத்துவத்தையும் தாண்டிக்குதித்துக் கொண்டிருக்கின்றன.
நமது நிகழ்த்து கலைகள் யாவும், ஆற்ற மாட்டாமல் சிலர் ‘அம்மாடி தாயே! என அடித்துக் கொண்டிருக்கிறோம். தமிழனால் புறக்கணிக்கப்பட்ட கலை வடிவங்கள் அவை. அவ்விதம் புறக்கணிக்கப்பட்டதின் பின்னணியில் சாதி அரசியல் உண்டு. நகரத்து நவீனக் கலைஞன் பலரும்  பென்ஸ் காரில் போகிறார்கள். நாட்டார் கலைஞர்கள் கூலி வேலைக்கு போகிறார்கள்.
நாட்டார் இலக்கியம் மறைவாக இருந்த சாதிய மேட்டிமை மற்றும் பெருமிதங்களையும் பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்று கருத்துச் சொல்பவர்கள் எங்கு போய் நாட்டார் கலைகளைக் கண்டார்கள்? நாட்டார் கலை இலக்கியம் என்னவென்று தெரியுமா அவர்களுக்கு? ‘தோல்பாவைக் கூத்து’ நிகழ்த்துபவர் யார், கண்டு இன்புற்றவர் யார் என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஐயம் இருப்பவர்கள், நாட்டார் கலைகளில் ஆய்வு செய்து ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதிய முனைவர், பேராசிரியர் அ.கா.பெருமாள் எனும் அறிஞரின் நூல்களை வாசித்திருப்பார்களா? பண்டு வெங்கட் சாமிநாதன் ‘யாத்ரா’ இதழில் எழுதிய கட்டுரைகளை அறித்திருப்பார்களா?
வில்லுப்பாட்டு என்ன விதமான சாதிய உன்னதங்களைப் பேசியது? கணியன் கூத்தும், கரகாட்டமும், பொய்க்கால் குதிரையும், ஆலி ஆட்டமும், காவடி ஆட்டமும் எந்த சாதிய மேட்டிமைகளைத் தாங்கிப் பிடித்தன? இதுபோல் அறிவார்த்தமாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டிருக்கும் சில போலி அறிஞர்களும் கூலிச் சிந்தனையாளர்களும் உண்டு. அவர்கள் அனுபவத்தில் நாட்டாமையையும் அறிய மாட்டார்கள் அவரது கலைகளையும் அறிய மாட்டார்கள்.
பிற நவீன படைப்பாளிகளை விட தமிழ் மரபு இலக்கியத்தில் உங்கள் ஈடுபாடு கூடுதலாக இருப்பதை உங்கள் எழுத்துகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. பல்வேறு கோட்பாடுகளால் வழி நடத்தப்படும் நவீன தமிழ் இலக்கியத்திற்கு மரபு இலக்கியத்தின் தேவை எந்த அளவு இருக்க முடியும்?
மாரி முருகன்
இலக்கியம் என்பது கோட்பாடுகளினால் வழி நடத்தப்படுவது என்பது தீப்பேறு. அது சுயம்பு. சுயம்பு என்றால் பொருளாகவில்லை எனில் தான் தோன்றி. தான் தோன்றி, அல்லது தான் தோன்றித்தனம் என்பது எதிர்மறைப்பொருளில் கையாளப்படுகிறது இன்று. படைக்கப்பபட்டவைக்கே கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. படைப்பு என்பது கோட்பாடுகளின் உத்தரவு வாங்கி செயல்படுவதல்ல. இலக்கணம் என்பது கூட எழுதப்பட்ட இலக்கியங்களுக்காகவே. தொல்காப்பியமும் நன்னூலும் இறையனார் அகப்பொருளும், நம்பி அகப்பொருளும், தண்டியலங்காரமும், யாப்பருங்கலமும் காரிகையும், படைப்பு ஊற்றுக்கான இலக்கணங்கள் அல்ல. பிறகல்லவா காண்ட், தெரிதா, பூக்கோ, ஆல்தூசர்?
கோட்பாடு என்பது சட்டகம், சட்டகம் தகர்ப்பது இலக்கியம். முற்போக்கு கோட்பாடு இலக்கியம் என்று எடுத்துக்கொள்வோம். அந்தக் கோட்பாட்டினால் வழிநடத்தப்பட்ட சிறந்த இலக்கியம் எது தமிழில்? கண்மணி குணசேகரனின் அஞ்சலையும் எம்.கோபால கிருஷ்ணனின் மணல் கடிகையும், ஜோ டி க்ரூசின் ஆழிசூழ் உலகும் குமார் செல்வாவின் குன்னிமுத்தும், யூமா வாசுகியின் ரத்த உறவும் சயந்தனின் ஆதிலையும் தமிழ்நதியின் பார்த்தீனியமும் குணா கவியழகனின் மூன்று நாவல்களும் எவ்வகைக் கோட்பாட்டு இலக்கியங்கள்?
கோட்பாடுகளுக்கு மங்கல நாண் பூட்டிக்கொண்டவர்களால் வழி நூல்களே எழுதவியலும். எழுதப்பட்ட இலக்கியங்களுக்காகத்தான் கோட்பாட்டாளர்கள் வகை பிரிக்கிறார்கள். முன்பு, பண்டைய இலக்கண நூல்களில் உரையாசிரியர்களுக்கு எடுத்துக்காட்டு செய்யுள் கிடைக்காமற் போனால், தாமேயொரு செய்யுள் எழுதிவிடுவார்கள். அதுபோன்றே இங்கு கோட்பாட்டு இலக்கியங்கள் படைக்கப்பட்டு வாசகனால் நூலாக்கவும் படுகின்றன.
மரபு இலக்கியத்தின் தேவை என்ன என்றும், மரபு  இலக்கியம் ஒரு சுமை என்றும் பாரதியைக் கூட வாசித்திராதவர்களே சொன்னார்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால். சிலர் கேட்டார்கள் வாழ்க்கை அனுபவம் தேவையா இலக்கியம் படைக்க என்று. ‘அங்கின்றி வட்டாடல்’ என்பார் திருவள்ளுவர் கல்லாமை அதிகாரத்து முதற் குறளில்,
‘அரங்கின்றி வட்டாடி யற்றே நிசம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்’
என்பது முழுக்குறள். பன்னூல் பயிற்சியின்றி படைப்புலகுக்கு வருபவன் ஆட்டத்துக்குரிய காய்கள் இருந்தும் களம் இல்லாவன் ஆவான். மரபு என்பது நமது அரங்கு. படைப்பு என்பது ஆட்டக்காய்கள். தகுதி இருந்தால், இன்று  நாம்  எழுதுவது நூறு ஆண்டுகள் சென்றபின் வாசிக்கப்பட வேண்டாமா?
நவீன இலக்கியத்துக்கு மரபு இலக்கியம் என்பது சம்பத்து. சினிமாப் பாட்டு பாடுகிறவனுக்கு சுதி சுத்தம் வேண்டாமா? அபசுரம் பாடலாமா? சுதி இல்லாத இசையுண்டா உலகில். சினிமாவில் பின்னணி பாட வருகிறவர் ஏன் கர்நாடக இசையும் இந்துஸ்த்தானி இசையும் மேற்கத்திய இசைகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?. அவர்கள் அபசுரத்தை சுரம் என்று கொள்வார்களா? இசையின் பலம் அதன் மரபு. இலக்கியத்தின் பலமும் அதன் மரபுதான்.
மரபு எனக்கு மூதாதையர் சுமத்திச் சென்ற கடன் இல்லை. நவீன படைப்பாளிக்கு, மரபு கட்டும்  தளை என்பது பிழையான சிந்தனை. மரபு தருவது ஊக்கம். மொழிக்குள் செயல்படுகிறவன் மரபிலிருந்து பெறுவது அநேகம். பாவம், தொனி, ஒத்திசைவு மேலும் சொற்பண்டாரம்.
போருக்குப் போகிறவனுக்கு வாட்பயிற்சி ஒன்று போதாதா? எதற்கு வில் வித்தை, ஈட்டி எறிதல், கத்தி வீச்சு, குதிரை ஏற்றம்? மரபிலக்கியம்  தெரிந்து கொள்வதே ஒரு பயிற்சி. எப்பயிற்சியும் இன்றி எழுத வருகிறவன், தானே எழுதி, செலவு செய்து அச்சிட்டு, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு, இலவசமாக வழங்கிக் கொள்வதுடன் திருப்திப்பட்டுக் கொள்ள இயலுமா? அவன் எதிர்காலத்தின் மரபாக வேண்டாமா? வாசிக்கப்பட வேண்டாமா? அன்று எழுத வருகிறவனும் மரபு எதற்கு என்று யோசித்தால் என்னவாகும்?
ஒரு நவீன படைப்பாளி செவ்வியல் இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
மாரி முருகன்
முதலாவது மொழிப் பயன்பாடு. அடுத்து மொழியின் இசைத்தன்மை. மூன்றாவது, சொற்களின் துல்லியம். பிறகு சொல்லுக்குத் தட்டழியாமல் நினைத்த மாத்திரத்தில் சொல்வந்து சேரும் சாகசம். ‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!‘ என்று பாணன் கேட்கும்போது நம்மை வந்து சேரும் வலி நிராசை, ஏக்கம், ஏமாற்றம் எத்தனை எளிதில் கடத்தப்படுகிறது எனும் கல்வி. கவிதைக்கு மட்டுமல்ல, உரைநடைக்கும் கவித்துவம் தரும் சொற்சிக்கனம் கற்றுக்கொள்கிறோம். எளிதாகக் கூறிவிடலாம் இளங்கோ அடிகளின்  கண்ணகி, ‘சிலம்பு உள்ளது கொள்ளுங்கள்’ என்று, ‘சிலம்பு உளது கொள்ளும்’ எனலாம். ‘சிலம்பு உள கொள்மின்’ எனலாம். ‘சிலம்புள கொண்ம்’ என ஏன் குறுக்குகிறார்? இலக்கணம் கருதி மட்டுமல்ல, ஓசை கருதி மட்டுமல்ல, மொழி கொள்ளும் வேகம் கருதி. இதுபோன்ற ஆயிரம் எழுத்துகள் தரலாம். தேவாரம் வாசிக்காவிடில், ‘நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற அப்பரின் தீர்மானம் எமக்கு எப்படித் தெரியும். ‘கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான்‘ என்று கம்பன் குகனை அறிமுகம் செய்கிற பாங்கு எமக்கு எப்படித் தெரியும்? மரபிலக்கியக் கல்வி என்பது சமயக் கல்வியல்ல, தமிழ்க்கல்வி. வேகம், சுருக்கம், இசைவு என்பனவும் செவ்விலக்கியங்கள் நவீன படைப்பாளிக்கு வழங்கும் கருவிகள்.
பொதுவாக நவீன படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் மத்தியில் தமிழர்களின் தொன்மை, சிறப்புகள் போன்ற பேச்சுகள் நகைப்புக்கு உள்ளாவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாகக் குமரிக் கண்டம், தொல்காப்பியத்தின் காலம் போன்ற கருத்துகள் மறுக்கப் படுகின்றன. மறுபக்கம் குணா போன்றவர்களை முன்வைத்து ஒரு தரப்பினர் தமிழர்களின் தொன்மையை அதீத உணர்வுகளுடன் பரப்புவதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
மாரி முருகன்
இதை இரண்டு வகையாகப் பார்க்கலாம் நாம். காலம், தொன்மை, சிறப்பு பற்றிய எந்த ஆய்வையும் வரலாற்றுச் சான்றையும் பொருட்படுத்தாமல் நமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி எள்ளி நகையாடுபவர் ஒருபுறம். அவர்களுக்கு எதுவும் ஆங்கிலத்தின் மூலம் வந்தால் மட்டுமே நம்புவார்கள். அல்லது கடவுளுக்கும் முந்திய மொழி வடமொழி என்ற மூடம். இரண்டாவது வகை உலகின் முதல் மனிதன் தமிழ் பேசினான் என்பவர்கள். ஆய்வும் உண்மையும் வேறிடத்து நிலை பெற்றிருக்கிறது. இவர்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. அறியாமை காரணமாக நகைப்பவரை நம்மால் என்ன செய்யக் கூடும்?
இன்றைய அகழ்வாராய்ச்சி முடிவுகள் நமக்குத் தெரிவிப்பவை ஆச்சரியப்படுத்துகின்றன. வரலாறும் தொன்மையும் எவரின் அங்கிகாரத்தையும் கோரி நிற்கின்றனவா என்ன? பலரும் குருடன் யானையைப் பார்த்தது போல் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பார்க்கிறார்கள். அறியாமை அல்லது ஆங்கிலம் மூலமாக அல்லது வடமொழி ஆராதனை.
ஒரிசா பாலகிருஷ்ணன் என்பவர், பன்னாட்டு ஆய்வு மையங்களின் உதவியுடன், நீர்மூழ்கிக் கப்பல்களின் துணையுடன், இந்துமாக்கடலில் இலெமூரியாக் கண்டத்தின் எச்சங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். கோவிலூர் மடம் நியமித்த அறிஞர் குழு, தொல்காப்பியம் பதிவு செய்யும் கோள்கள் பற்றிய  குறிப்புகளின் அடிப்படையில் அதன் காலம் இன்றைக்கு 7000 ஆண்டுகள் முன்பு என்கிறது. 10,000 ஆண்டுகளாக வெளியுலகத் தொடர்பற்ற அந்தமான் பழங்குடியினர் மொழிக்குள் தமிழ்ச் சொற்கள் கிடக்கின்றன என்கிறார்கள்.
நான் கல்வெட்டு ஆராய்ச்சி, கால ஆராய்ச்சி மாணவன் அல்ல. இலக்கிய மாணவன் மட்டுமே! ஆனால் ஆய்வுகளும் அறிஞர்களும் சொல்வதை நம்புவதா, மொழிமீது மதிப்பற்ற, காழ்ப்பும் கொண்ட அரைவேக்காட்டு மனிதர்கள் சொல்வதை நம்புவதா?
எதையும் ஆதாரங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லை என்றால் நிராகரிக்கலாம். ஐயங்கள் இருந்தால் அறிஞர்களிடம் கேட்கலாம். வெற்றுப் பேச்சுக்கு விலை ஏதும் இல்லை.
படைப்பிலக்கியத்தில் புதிதாய் நுழையும் இளையோருக்கு, வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிட, தாங்கள் எவ்வாறான முயற்சிகளை, அணுகுமுறைகளை அறிவுறுத்துகிறீர்கள்? அப்பழக்கம் எந்த அளவுக்கு அவசியம்?
கலைசேகர், மலேசியா.
வாசிப்பு என்பது அபூர்வமான அனுபவம். முன்மாதிரிகளுக்காக என்று மட்டும் அல்ல. தன்மொழியில் என்ன இதற்குமுன் நடத்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவும்.
புதுமைப்பித்தனின் ‘அன்று இரவு’, தி.ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’, ஆ.மாதவனின் ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, கி.ராஜநாராயணனின் ‘பேட்டி’, வண்ண நிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து’, கோணங்கியின் ‘கழுதையாவாரிகள்’, ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கசாப்பின் இதிகாசம்’ எனும் வாசிப்பு அனுபவங்கள் எத்தனை பெரிய பயிற்சி!. எழுதுவதற்கு அடிப்படையே வாசிப்புதான். எவரும் இங்கு சுயம்பு அல்ல, படைப்புக் கடவுளும் அல்ல. சாப்பிடவே தெரியாதவன் எதை, எப்படிச் சமைப்பான்? கல்வியிற் சிறந்த கம்பன் பேசுகிறான், தன்னுடைய முன்னோடி வால்மீகி பற்றி,
‘ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை,
அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்ககயான் பேசலுற்றான்
என்ன நான் மொழியலானேன் ‘
என்று. வாசிப்பு என்பது எழுத முனைகிற எவருக்கும் மிகமிக அவசியம். அது அவனுக்கு உரம். ஒரு படைப்பு மற்றொரு படைப்பை நிகழ்த்தத் தூண்டும். கற்றுக்கொள்ள எத்தனை இல்லை? இதில்  முன்னேர், பின்னேர், என்பதில்லை. முதியோர் இளையோர் என்பதும் இல்லை. 55 ஆண்டுகளாக வாசிக்கிறேன் நான். எனக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவையும் நேற்று எழுதியவையும்.
எம்மொழியில் எனக்கு முன் என்ன நடந்திருக்கிறது என்றுன் தெரிந்துகொள்ள வேண்டாமா? புதுமைப் பித்தனின் ‘அகிலிகையும் சாப விமோசனமும்’ வாசிக்காமல் மறுபடியும் அகலிகையை அணுகுவது எப்படி? வாசிப்பு என்பது பயிருக்கு காற்று, மழை, வெயில், மண்ணின் உரம் போன்றது. அவரவர் ரசனைக்கு தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும். ERNEST HEMINGWAY பிடிக்கிற எனக்கு WILLIAM FAULKNER பிடிக்காமல் போகலாம். கம்பனில் ஈடுபட முடிகிற என்னால் சேக்கிழாரை அனுபவிக்க இயலாமல் போகலாம். அது முக்கியம் இல்லை. ஆனால் பிடித்தவற்றை வாசிக்க வேண்டும்.
ஒருவர் கதையை இன்னொருவர் எழுத முடியாது. கண்மணி குணசேகரனின் கதையை, அழகிய பெரியவன் கதையை, சு.வேணுகோபால் கதையை. ஜே.பி.சாணக்யா கதையை, சந்திரா கதையை, என்.ஸ்ரீராம் கதையை, டி.ஜே.தமிழன் எனும் இளங்கோ கதையை, அகர முதல்வன் கதையை, எஸ்.செந்தில்குமார் கதையை, கே.என்.செந்தில் கதையை, திருச்செந்தாழை கதையை நான் எழுத முடியாது  ஆனால் வாசித்திருப்பேன்.
புதியதாய் எழுத வருகிறவருக்கு வாசிப்புச் சோம்பல் கூடவே கூடாது.
இலக்கிய சோதனை முறை சிறுகதை என எதை எல்லாம் சொல்லலாம்? இன்றளவும் அதே யதார்த்தவாத சிறுகதைகள்தான். எழுத வேறு எதுவுமே இல்லையா?
வே.நி. சூர்யா
சிறுகதை இலக்கியம் தமிழில் தோன்றி சற்றொப்ப 140 ஆண்டுகள் இருக்கலாம். முதல் தமிழ்ச்சிறுகதையை எழுதியது பவுல் அய்யரா, மக்தூன் சாகிபா, சுப்ரமணிய பாரதியா, வ.வே.சு ஐயரா என்ற கேள்வி இன்றும் இருக்கிறது.
எந்தச் சிறுகதை ஆசிரியனும் அவனது மனோபாவத்துக்குத் தகுந்தபடி, அவன் பார்வையில், அவன் கோணத்தில், அவன் உணர்ச்சித்தளத்தில், அவன் சொற்களில் தை எழுத ஆரம்பிக்கிறான். யதார்த்தவாதம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், மாய எதார்த்தவாதம், பின்னைப் பின் நவீனத்துவம் என்ற பெயர்களைக் கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் சூட்டுகிறார்கள். படைப்பு வரலாற்றை நிழத்துகிறது. அவற்றுள் காலம் பிரிப்பது திறனாய்வு.
எனக்குத் தெரிந்து எந்த படைப்பாளியும் தான் இந்தப் பகுப்பில் கதையை எழுதப் போகிறேன் என்று proclaim செய்வதில்லை. படைப்புதான் அதன் செயல்முறையை முன்தீர்மானம் செய்கிறது.  பிட்டுக்கு மண் சுமந்த கதைதான் ‘அன்று இரவு!’ புதுமைப்பித்தன் அதன் குறுக்காக உரையாசிரியர்களின் உரையாடல் என்று சால் ஓட்டுவான். அது அவன் படைப்பின் கோரிக்கை.
யதார்த்தவாதக் கதைகளை மட்டுமே எழுது என்று எவரும் எவருக்கும் தாக்கீது அனுப்ப இயலாது. எழுத்தாளன் எழுதுகிறான், திறனாய்வாளன் வரையறை செய்கிறான். அவனது புத்திக்கு எட்டியபடி மனச் சாய்வுக்குக் கட்டுப்பட்டு இனம், தளம், இசம், பிரிக்கிறார்கள். படைப்பாளி இவற்றையெல்லாம் முன் தீர்மானம் செய்து கொண்டு, எழுத அமர்வதில்லை. எழுத்தை மார்கெட் செய்ய நினைக்கும் சிலருக்கு இது சாத்தியமாகலாம்.
எனது 129-வது சிறுகதை, அண்மையில் ஆனந்த விகடன் வெளியிட்ட ‘கறங்கி’ எந்த வகைக் கதை என்று அறிவதில் எனக்கு ஆர்வம் இல்லை. பிள்ளை நல்லபடியாகப் பிறக்கட்டும் பிறந்தபின் அது ஆணா பெண்ணா என்று அறிந்தலின் பெயெரொன்று சூட்டலாம். !
உங்களை யார் கட்டாயப்படுத்த முடியும். நீங்கள் யதார்த்த சிறுகதைகளையே எழுத வேண்டும் என்று. வானமே உங்கள் எல்லை. வானம் என்பது நம் வீட்டின் மேல் விதானம் அல்ல என்பதை அறிந்திருந்தால் போதும். இலக்கிய திறனாய்வு தத்துவ விலங்கு பூட்டிக் கொள்ள கைகளை நீட்டிக்கொண்டு நிற்கிறது படைப்பு. ‘அகிலமெலாம் கட்டி ஆளினும், கடல் மீது ஆட்சி செலவே நினைவர்‘ என்று தாயுமானவர் சொல்வது நமக்கும் சேர்த்துதான்.
 
இராமாயணத்தில் தங்களுக்கான ஈடுபாடு, உங்கள் நவீன புனைவெழுத்துக்கு எவ்வாறு துணை செய்கிறது?
விஸ்வநாதன், பினாங்கு
கம்பனுக்குள் நான் வந்த கதையை விரிவாக, எனது கட்டுரை  நூல் ‘கம்பனின் அம்பறாத் தூணி’ முன்னுரையில் விரிவாகப் பேசி இருக்கிறேன். மூன்றரை ஆண்டுகள் கம்பனை முழுமையாக, குரு முகமாகக் கற்றேன். கிழமைக்கு 3 வகுப்புகள், ஒவ்வொரு வகுப்பும் இரண்டு மணி நேரம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 118 படலங்கள், 6 காண்டங்கள். எனது கம்பன் ஆசிரியர் அமரர் ரா.பத்மநாபன், நாராயண பட்டத்திரியின் நாராயணீயம், ‘பகவத்கீதை’ ஆகிய நூல்களைக் கவிதை நடையில் தமிழாக்கம் செய்தவர். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கத்தின் மாணவர். அவருக்கு உதவியாக இருந்து, கம்பனும் சிவனும், வில்லியும்  சிவனும், ஆழ்வார் அமுது, திருவாசகத்தேன், தேவார மணிகள், இராகவன் இசைமாலை ஆகிய நூல்கள் எழுதப்படத் துணைபுரிந்தவர்.
கம்பன் கற்றது என் தமிழ்க்கல்வியின் சிறப்பான அங்கம். ஏழாண்டுகளுக்கு மேலாக, விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட காப்பிய முகாம்களில் கம்பன் சொல்கிறேன். இதுவரை கிட்கிந்தா காண்டம் முடியப் பார்த்தாயிற்று. கம்பனில் நான் பெற்ற பெரிய ஆதாயம் சொற்சேகரம். என் நவீன புனைவெழுத்துக்கும் கட்டுரை எழுத்துக்கும் பெரிய பலம் என் கல்வி மூலமே பெற்ற சொற்கள்.
யானை என்ற சொல்லொன்று அறிவோம். அனைவரும் வாரணம், பூட்கை, கயம், கரி, களிறு, குஞ்சரம், போதகம், கைம்மா, நால்வாய், நாகம் போன்ற சொற்களை அறிய மாட்டோம். வேழம், கரி, கயிறு, கைம்மா, குஞ்சரம் போன்ற சொற்கள் சங்க இலக்கியப் பரிச்சயம் கொண்டவை!. ‘நாகமும் நாகமும் நாண நடந்தான்’ என்று இராமனைக் கம்பன் பாடினால், ஒரு நாகம் யானை இரண்டாவது நாகம் மலை. பாம்பு என்ற சொல்லுக்கு கம்பனின் மாற்றுச் சொற்கள் மாசுணம், உரகம், நாகம், பாந்தள், அரவம் முதலானவை. தாமரைக்கோ முளரி, அரவிந்தம், கமலம், வனசம், கஞ்சம், நளினம், பங்கயம், புண்டரீகம், பதுமம் எனப்பல, மற்ற படைப்பாளிகளின் எழுத்துக்கு என்னை வேறுபடுத்திக்காட்ட, கம்பனில் நான் கற்ற சொற்கள் உதவுகின்றன. கம்பன் ஒரு சொல் கிடங்கு, பண்டாரம், கருவூலம். சொற்கள்  இசையும் விதம், அதில் பிறக்கும் நயம் என்பன எனக்கு உதவின. ‘நின்னிலும் நல்லனால்’, ‘தேனும் மீனும் திருத்தினென் கொணர்ந்தேன்’ ‘எலியெலாம் இப்படை, அரவம் யான், ‘எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பகோ பிழைப்பு’ என ஆயிரக்கணக்கான தமிழ் நயம் கனிந்த செற்றொடர்கள் எனது பெரிய பலமாக அமைந்தன.
 
இலக்கியத்தை தவிர உங்கள் பிறகலை ஈடுபாடுகள் என்ன?
விமல், சிங்கப்பூர்
பத்து வயதில் இருந்தே பாட்டுக்கேட்கிறேன்.  சிலமாதங்கள் முன்பு ‘உயிர் எழுத்து’ இதழில், ‘எத்திசைச் செலினும் அத்திசை இசையே’ என்றொரு கட்டுரை எழுதினேன். அது நான் 27 வயதுவரை நாஞ்சில் நாட்டில் வாழ்ந்தபோது கேட்ட இசை அனுபவங்கள். மேலும் நாற்பதாண்டு கால அனுபவம் உண்டு. கர்னாடிக் இசை, இந்துஸ்தானி இசை என்பது இன்னும் தொடர்ந்து கேட்கிறேன்.
எனக்கு முறையான இசைப்பயிற்சி கிடையாது. அதற்கான வாழ்க்கைச் சூழலும் இருந்திருக்கவில்லை. எல்லாம் செவி வழிச் சிந்தையில் புகுந்த ஞானமே. எல்லோரும் சுரம் தெரிந்து ராகம் சொல்வார்கள். நான் கேட்டுப் படிந்த அனுபவத்தால் சொல்வேன்.
எனக்கு பெர்பியூம், விற்க முயன்ற இசுலாமிய கடைக்காரரிடம் ஒருமுறை கேட்டேன். ஏன் இஸ்லாமியர்கள் அதிகம் வாசனை தெளித்துக் கொள்கிறீர்கள் என்று. அவர் என்னிடம் கேட்டார். வாசனை இறை வடிவம் அல்லவா என்று. ஆம், அதுபோல இசையும் இறைவடிவம். நாத உபாசனை என்பார்கள். கவிதையும் இறைவடிவம். தேவாரம், திருவாசகம், பிரபந்தம் அனைத்தும் பண்கள் வடிவிலானவை. உலகத்தின் அனைத்து ஞானிகளின் கூற்றும் கவிதை வடிவமாகவே இருக்கிறது.
இசை கொந்தளிக்கும் மனதை சமனப்படுத்தும். சிந்தை தெளிவாகும். வாசிப்பின் கவனத்தைக் கூர்மையாக்கும். பள்ளி கல்லூரி மாணவருக்கு உரையாற்றும் போதெல்லாம். அவர்களுக்கு அறிவுரையாக நான் சொல்வது ‘படிக்கும்போது புல்லாங்குழல், வீணை, வயலின், ஷெனாய், சிகோட், சிதார், நாதசுரம் கேளுங்கள்’ என்று.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s