ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிச்சாச்சு. முற்போக்கு சிந்தனைகள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம்,தமிழ் எல்லாம் படிக்கிறோம். ஆனாலும் கொடையின்போது தலை குனிஞ்சி நிண்ணு பைரவன் சாமி கொண்டாடி என் நெற்றியில் விபூதி பூசும்போது என் கண்ணு கலங்கி கண்ணீர் வரும். இது மனித சம்பவமா, தெய்வ சம்பவமா என்றெல்லாம் பகுத்துப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு உணர்ச்சியைத் தரும் நம்பிக்கைக்குறிய விஷயம் அது. எனக்கு எந்த சாமியிடமும் எந்த வேண்டுதலும் இல்லை. சாமிக்கு தெரியாதையா நாம் வேண்டிவிடப் போகிறோம்?
கஷ்டம் வரும்போது மனிதனுக்கு ஒரு நம்பிக்கை தேவை. அந்த நம்பிக்கையின் இன்னொரு வடிவம் தான் இறைவன். அந்த நம்பிக்கையை எனக்கு வீரநாராயணமங்கலம் முத்தாரம்மன் தருகிறாள் ….(நாஞ்சில் நாடன்)
அன்புள்ள நாஞ்சில்நாடன் ஐயா,
வணக்கம். உங்களைப் பல ஆண்டுகளாக பின்தொடர்கிறேன். உங்களின் எழுத்துடன் ஒன்றியதால்தான் எனக்கு நாஞ்சில்நாட்டை பிடித்தமான மண்ணாக மாறிவிட்டது. இரண்டு முறைகள் நாகர்கோவில் பக்கம் வந்திருக்கிறேன்… ஒவ்வொருமுறையும் உங்களை நினைத்துக்கொண்டே கடந்து செல்வேன்.. நான் கொங்குமண்ணைச் சார்ந்தவன்… உங்களின் கட்டுரையொன்றில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக கேரளமக்களும் நம்மவர்களும் நிற்கும் விதத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் படித்த பின்னர்தான் நான் உங்களின் வாசகனாக மாறிப்போனேன். நீங்கள் இந்தக் கட்டுரையில் “பவ்யமாகத் திருநீறு வாங்கிக்கொள்வதைப் படித்த வினாடி” அழுகை வந்துவிட்டது. என் புலம் வேதியியல்… புற்றுநோயுணர்த்திகள் பற்றிய (இங்கிலாந்து ஹல் பல்கலையில்) ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை வாசிக்க விரும்புவதால் உங்களின் இடுகைகள் இந்தப்பக்கத்தில் வரும்போது தெரிந்துகொள்ள என் மின்னஞ்சலை கடந்த நான்காண்டுகளாக இணைத்திருக்கிறேன். அண்மையில் நான்கைந்து மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது மகிழ்ச்சி… தங்களின் தாயார் காலமாகிய செய்தி என்னை மிகவும் வருத்தியது. உங்களை ஊருக்கு வரும்போது சந்திக்க ஆவலாக இருக்கிறேன். உங்களின் படங்களை, பதிவுகளை, கட்டுரைகளை, கவிதைகளை, சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் சுல்தான் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் அன்பும்.
நன்றியும் பேரன்பும்,
முனைவர் செ. அன்புச்செல்வன்
02/03/2019