என் அம்மை நெடுமங்காட்டுகாரி, என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி, என் மருமகள் ஸ்ரீகாகுளம், எனக்கு பலமுறை தோன்றுவதுண்டு, என் மகன் என்ன ஜாதி, அவன் முனைஞ்சிப்பட்டியா, வீரநாராயணமங்கலமா, பறக்கையா, நெடுமங்காடா, திருவனந்தபுரமா என்று, எனக்கு நல்ல போத்தியம் உண்டு. எழுத்தாளன் திமிர், உண்மைத்திமிர், நேர்மைத்திமிர் அன்றி, சாதித்திமிர் அல்ல.
அன்புள்ள நாஞ்சிலாரே,
கருப்பட்டி தோசையை கண்டு வருடம் பல ஆச்சு, அம்மையே இப்போதெல்லாம் கடையில் தோசை மாவு வாங்கி கொள்கிறாள், உண்மைதான் தோசைக்கு மிளகாய்ப்பொடி தான் உற்ற தோழன், உயிருக்கு உயிராய் இருவரையும் இணைத்து வாயில் ஒருசேர போடலாம். உப்புமிளகு என்ற பழையநண்பனும் தோசைக்கு உண்டு, காய்ந்த வத்தலும், கல் உப்பு சேர்த்து அம்மியில் நுணுக்கி சுட சுட தோசையுடன், உப்புமிளகை தேங்காய் எண்ணையை சேர்த்து உண்டால் உண்ட நா தோசை பிய்த்த கையை பாராட்டி செய்யுள் பாடும்.
ருசி தெய்வீகமானது.