“சரி! கடவுளே ஒம்ம முன்னால் வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு? ஒரு பாரத ரத்னா கேப்பேரா? அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது…
ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா? மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு?
வேணும்னா கடவுள் கூட ஒரு செல்பி எடுத்துக்கிடலாம்…” படபட என்று வந்தது தவசிப்பிள்ளைக்கு.
கும்பமுனி தனது படைப்பாளுமையின் ஞானக்கண்கொண்டு பார்த்தார். சற்றே சாய்வான கால் நாற்காலியில் கும்பமுனி வீற்றிருக்க, அவர் பின்னால் இடப வாகனத்தின் மேலமர்ந்த பொன்னார் மேனியன். (இந்த இடத்தில், பொன்னார் என்றால் பொன்.இராதாகிருஷ்ணன் எனும் மத்திய அமைச்சர் அல்ல)
புலித்தோலை அரையில் உடுத்து, கழுத்தில் விட நாகம் பூண்டு, கையில் பினாகம் எனும் வில் அல்லது முச்சூலம் தரித்து, சடையில் பிள்ளை மதி சூடி, தலையில் கங்கை அணிந்து, கண்டத்தில் ஆலகால விடத்தின் நீலத் தழும்புடன் மாலையாய்க் குளிர்கொன்றை…
கும்பமுனி மனதில் திரு நேரிசைத் தேவாரம் ஒன்றும் பாய்ந்தது.






பிங்குபாக்: கும்பமுனி யார்?