இன்றோ பார்த்தீனியம் படர்ந்த குரம்பு,
சீமை உடைமரங்கள் செறிந்த கரம்பு
காய்ந்து வெடிப்புற்ற நிலம்.
தண்ணீரும் மணலும் இலாத ஆறு.
சகதியும் இல்லை, மேய எருமையும் இல்லை.
குடிக்க சிந்தெடிக் பால் வந்துகொண்டிருக்கிறது.
வாவியோ, தடாகமோ, பொய்கையோ, நீராழியோ இன்றி செங்கழுநீர் மலர்கள் எங்கே?
சாலிப் பரம்புகளில் காத்தாடி மரங்கள் பயிராகின்றன.
கொக்கு கூட காண அரிதாகி வருகிறது.
தேன் என்பது பாட்டிலில் அடைக்கப்பட்ட கோபர், மகாலயா, பதஞ்சலி பிராண்ட் வண்ணமும் வாசமும் ஏற்றப் பெற்ற சர்க்கரைப் பாகு,
காணும் காணாததற்கு மருத நிலங்களை நச்சுப்படுத்தும் வட இந்திய மத்திய அரசின் எரிவாயுத் திட்டங்கள்.
மனைவியின் தங்கை பெயரில், கணவனின் சித்தி பெயரில், மருமகளின் அண்ணன் பெயரில், பிற வாடகை உரிமையாளர் பெயரில் பல்லாயிரம் கோடி நஞ்சை புஞ்சைகள். காடுகள், வனங்கள், மலைச்சாரங்கள், கடலோர நிலப்பரப்புகள்
எவர் என்ன செய்ய இயலும் எனும் இறுமாப்பு,
அரசனே கூட்டுக் களவாணி,
ஆண்டவனும் ஆடம்பரமான பக்தனின் நெய்ப்பண்ணியங்களுக்கு ஆலாய்ப் பறக்கிறான்?
எவர் கேட்க இயலும்?