நகை முரணும் பகை முரணும்

 

நகை முரணும் பகை முரணும்

அண்டனூர் சுராவின் “முத்தன் பள்ளம்” அணிந்துரை

சிறுகதைகளாக அண்டனூர் சுரா படைப்புகளை அங்காங்கே வாசிக்க நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ‘உயிர் எழுத்து’ மாத இதழில்.
 பிற்பாடு அறிந்துகொண்டேன், அவர் கந்தர்வகோட்டை அருகாமையிலுள்ள சிறு கிராமத்தவர் என்பதை. கந்தர்வகோட்டை என்ற ஊர்ப்பெயர், 1972 முதல் 1989 வரை, பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் எனது வழிக்காட்டியாக இருந்த கவிஞர் கலைக்கூத்தனை நினைவுபடுத்தியது. கூடவே ‘மனிதரை நான் பாடமாட்டேன்’ முதலாய் அவரது மூன்று மரபுக் கவிதைத் தொகுப்புகளும் தமிழிலக்கிய உலகில் அந்தக் கவிஞரின் பெயர், சில பம்பாய் நண்பர்களின் நினைவில் இருக்கக்கூடும். சுவடற்றுப் போகும் இலக்கிய வாழ்க்கை..
இதுவரை நேரில் நான் சந்தித்திராத அண்டனூர் சுரா, ஆசிரியப் பணி புரிகிறவர். இயற்பெயர் சு.இராஜமாணிக்கம். ஏற்கனவே ‘மழைக்குப் பிறகான பொழுது’, ‘திற’, ‘ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை’ எனும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ‘முட்டாள்களின் கீழ் உலகம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிட்டவர், ‘முத்தன் பள்ளம்’ என்ற இப்புதிய புத்தகம், நாவலாசிரியராகக் காட்டும் அவரது புதிய முகம்.
நாவல் எழுதுவதை நிறுத்தி, ஏறத்தாழ இருபது ஆண்டுகளான எழுத்தாளனிடம் எதற்கு முன்னுரைக்க வேண்டினார் எனக்குப் புலப்படவில்லை. ஒருவேளை போட்டியில் பங்கேற்காதவரே நடுவர் என்பதுபோல ஆகலாம். என்றாலும், வயதான காரணத்தால், எழுத்தை நிறுத்திவிட்டு எம்மால் பழவண்டி தள்ள இயலாது.
பெரிய வெளியீட்டு நிறுவனங்களின் தாங்குதலும், அவர்தம் பருவ இதழ்களில் விளம்பரமும், எழுதி வாங்கிய மதிப்புரைகளும், பென்னம் பெரிய வெளியீட்டு விழாக்களும் வெளிநாட்டு நிதி ஆதரவுக் கரங்களும், சக்தி வாய்ந்த தினசரிகளின் ஆள்க்கட்டும் சீரக நுனி அளவும் இல்லாத தீவிர, தேர்ச்சிப் பெற்ற, தரமான எழுத்தாளர்கள் தமிழில் கனபேருண்டு. அவர்கள் உதிரிகளோ, மற்றும் பலர் எனும் வரிசையில் வருபவர்களோ இல்லை. அவர்களுக்கு வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்கும் வாய்ப்பும் வசதியும் வருவதில்லை. வெளிநாடென்ன, உள்நாட்டு அமைப்புகளே அவர்களைப் பொருட்படுத்துவது இல்லை. மொழிபெயர்ப்பு என்பதோ நிலவில் கால் பதிப்பது. அந்த சாத்தியங்கள் எதுவும் இல்லாது போனாலும் அவர் எவரும் படைப்பூக்கத்தில் பின் தங்கியவர் இல்லை. அதற்கோர் எடுத்துக்காட்டு ‘முத்தன் பள்ளம்’.
இந்த நாவலை வாசித்தபின் எனக்குத் தோன்றியது, அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி எனும் நீளும் தீவிர நாவலாசிரியர் வரிசையில் மற்றுமோர் படைப்பாளி என்று.
வாசிக்கத் துவங்கும் முன், ‘முத்தன் பள்ளம்’ என்பதோர் கற்பனைச் சிற்றூர் என்றே எண்ணினேன். ஆனால் சமர்ப்பணம் பக்கத்தை வாசிக்கும் போது எனது ஐயம் தெளிந்தது. இந்த முன்னுரை, பிறகு எப்போதாவது எனது அடுத்த கட்டுரைத் தொகுப்பிலும் இடம்பெறும் என்பதால், அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்கிறேன். கூறியது கூறல் குற்றமெனத் தெரிந்தாலும், அந்தக் குற்றம் செய்யவே விழைகிறேன். நாவலாசிரியர் பேசுகிறார், “முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கும் வெயிலுக்கும் ஒழுகாத கூரை, பருவப் பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்குப் பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்து போக ஒரு பொது வழிப்பாதை, ஓர் அச்சமும் இல்லாமல் பெண் எடுத்தல் கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத் தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண் நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்குப் பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தப்பட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு…
அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாகவே இருப்போம். உண்மையில் இந்த சமர்ப்பண வரிகள் நாவலின் பண்பை பயனை, போக்கை முன்மொழிகிறது. நாவலாசிரியரின் சமூகக் கண்ணோட்டத்தை அடிக்கோடு இடுகிறது.
இருப்பையே எவரும் அறிந்திராத எளியதோர் கிராமத்தின் நிர்க்கதியைச் சொல்வதே இந்த நாவலின் நோக்கம். பெரிய காதல் போராட்டங்கள், ஆன்மீகத் தேடல், தத்துவச் சரடு, உள்ளொளி என்று ஏதுமற்ற இந்த நாவல், வாசகனிடம் ஒரு வகைப் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனுள் புதுக்கோட்டையின் வரலாற்று பின்புலம் உண்டு, வாழ்க்கை உண்டு. சமகால அரசியல், சமூகம் வணிகம், சாதியம் இவற்றின் பின்புலங்களை ஊடும் பாவுமாகக் கொண்டே இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.
நவீனக் கருவியின் துணைக்கொண்டு, முத்தன் பள்ளத்தைக் கண்டடைவதும், கண்டடையும் தேடல் மூலம் அதன் இருப்பை உலகு அறியச் செய்தலுமே இந்த நாவலின் கனம், பாடுபொருள்.
நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் கடந்தபின், ஒரு கிராமத்தின் அவலம் நாவலாசிரியரால் மொழியப் பெறுகிறது. ஸ்வச்சத் பாரத் என்கிறோம், Cashless economy என்கிறோம், வல்லரசுக் கனவு என்கிறோம், வேதப்பண்பாடு என்கிறோம். தாய் தகப்பன் உற்றார் உறவினர் அற்ற, நோய் பற்றிய, வறுமை பீடித்த மானுட உயிர் நலிந்து துடிப்பதைப் போன்று ஈங்கோர் எளிய சிற்றூர். அகண்ட பாரதத்தில் ஏக இந்தியாவில், இதுபோல எத்தனை ஆயிரம் சிற்றூர்களோ?
இந்தப் பரிதாபத்தை நோக்கி வாசகனின் பார்வையைத் திருப்பவதே நாவலாசிரியரின் நோக்கம். எடுத்த பணியைச் செவ்வன செய்திருக்கிறார். தலைக்கு மூன்று ஸ்மார்ட் ஃபோன் சுமந்து அலையும் நகர வாசகனுக்கு இவ்விதமான இந்தியக் கிராமங்களின் இருப்பு உறைக்காமல் போகாது சற்றே சுரணை இருக்குமானால்!
நல்ல நாவலொன்று எழுதுவதற்கு மொழியை உடைத்து நொறுக்கி டப்பாவில் போட்டுக் குலுக்கிக் கவிழ்க்க வேண்டியதில்லை என்று இந்த நாவலின் மொழி அகவுகிறது. நவீன மேனாட்டு இலக்கிய தத்துவ பானங்களின் காக்டெய்லாகவும் அது இருக்க வேண்டியது இல்லை.
அண்டனூர் சுராவின் படைப்பு மொழி, எந்த இளைய வாசகனையும் விரட்டிக் கலங்க அடிக்காத, எந்த தேர்ந்த வாசகனையும் அலட்சியப் படுத்தாத ஈர்க்கும் இயல்பு மொழி. நாடன் படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கும் அனுபவச் செழுமை அவர்க்குத் துணை செய்கிறது. மஞ்சாடி மரத்தின் நெற்றுக் காய்கள் வெடித்து சிவந்த மணிகள் தெறிப்பதைப் போன்று, தன்னியல்பாக உதிரும் அங்கதம் நாவலின் கூறு மொழிக்கு வளம் சேர்க்கிறது.
 கந்தர்வகோட்டை காந்தி சிலை முக்கத்தில் இருந்து புறப்பட்டு வழி நடத்தும் ஆண்ட்ராய்டு மொபைலின் போக்கிமான் பூச்சி, முத்தன் பள்ளத்தின் குடிசைக்குள் கட்டிலில் படுத்திருந்த நோயாளியின் போர்வைக்குள் சென்று நிற்பது வரைக்கும் அலுப்பூட்டாத சுவைப்படச் சொல்லப்பட்ட பயணம். அதிர்வு ஏற்படுத்தும் பயணம். நாவலின் இரண்டாம் பகுதியில் புதுக்கோட்டை பற்றிய வரலாற்றுச் செய்திகளும் ஆவணப் படுத்தப்படுகின்றன. போக்கிமான் பூச்சியின் பயணத்தில் எதிர்ப்படும் பதாகைகள் அவற்றின் வாசகங்கள், எந்த வியாக்யானமும் தரப்படாமலேயே, தற்கால பண்பாட்டு விமர்சனமாக அமைகிறது. அங்கதச் சுவை பெருக்குகிறது.
ஒட்டகத்தின் மீது அமர்ந்து முரசறைந்து நாவலின் வடிவச் சோதனைகள் பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் கூவுகிறவர்கள் கவனிக்க வேண்டும். எந்த ஆடம்பரமும் படோடோபமும் இன்றியும் அழகாய் ஒரு நாவலைச் சொல்லிச் செல்ல இயலும் என்பதை. தனது அனுபவங்கள் மூலம் கிராமத்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொள்கிறான் தன்னியல்புடன். நகரத்தான் வெளிநாட்டுப் புத்தகங்களை மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறான். இஃதோர் நகை முரண்; பகை முரண். இந்த நாவல் அதனையும் தெரியக் காட்டுகிறது.
அண்டனூர் சுரா, தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதையில் தொடர்ந்து பயணப்பட்டு மேலும் படைப்பு வெற்றிகளை ஈட்ட வாழ்த்துவோம்.
மிக்க அன்புடன்
 நாஞ்சில் நாடன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to நகை முரணும் பகை முரணும்

  1. nilaamaghal சொல்கிறார்:

    //நல்ல நாவலொன்று எழுதுவதற்கு மொழியை உடைத்து நொறுக்கி டப்பாவில் போட்டுக் குலுக்கிக் கவிழ்க்க வேண்டியதில்லை என்று இந்த நாவலின் மொழி அகவுகிறது. நவீன மேனாட்டு இலக்கிய தத்துவ பானங்களின் காக்டெய்லாகவும் அது இருக்க வேண்டியது இல்லை.//

    // தனது அனுபவங்கள் மூலம் கிராமத்தான் வாழ்க்கையைக் கற்றுக்கொள்கிறான் தன்னியல்புடன். நகரத்தான் வெளிநாட்டுப் புத்தகங்களை மனப்பாடம் செய்து பாடம் நடத்துகிறான்//

    கருத்தின் கம்பீரம் மனசைத் தைக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s