‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பாகத்தான் விடம்பனம் குறுக்கிட்டது. சற்று நேரம் யோசித்துப் பார்த்தும் திக்கும் தெரியவில்லை லெக்கும் புலப்படவில்லை. தமிழ்ச் சொல்லா, வட சொல்லா என்று பிரித்தறிய இயலா எழுத்தமைப்பு. எவரிடம் சென்று கேட்பது? தமிழாசிரியர்களிடம் கேட்கலாம். அவர்கள் அகராதி பாருங்கள் என்பார்கள். அது நமக்குத் தெரியாதா என்ன? ஒரு பிரதேசத்து அல்லது இனக்குழுச் சொல்லாக இருக்க வேண்டும் என்றெண்ணித் தேடலானேன்…