ஒரு வரி… ஒரு நெறி! ‘சிவன் சொத்து குல நாசம்!’

நாஞ்சில் நாடன்
http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/serial/130995-one-line-one-principle-nanjil-nadan.html
சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல நாசம்’.
ஆனால், இந்தப் பழமொழி உலவும் தேசத்தில்தான் கோயில் உண்டியல்கள் உடைக்கப் படுகின்றன; உற்சவ மூர்த்திகள் கொள்ளை போகிறார்கள்; கோயில் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன; பூசைக் கலசங்கள் காணாமல் போகின்றன; பொன் ஆபரணங்கள் களவாடப்படுகின்றன; தங்க, வெள்ளி அங்கிகள் அகற்றப்பட்டு உருக்கப்படுகின்றன; கோயில் வளாகங்களின் உள்ளேயே கொலை, வன்புணர்ச்சி நடக்கின்றன.
‘எந்த சிவன் தன் சொத்துகளைக் களவாடிய கனவான்களின் குலத்தை இதுவரை வேரறுத்தான்?’ என்ற கேள்வியில் நியாயம் உண்டு! இன்னும் வளமாகத்தானே அவர்கள் இருக்கிறார்கள்? எனினும், எளிய மக்களிடம், அறவுணர்வு கொண்டோரிடம், இறைவனுக்கோ அல்லது மனசாட்சிக்கோ அஞ்சி நடப்பவரிடம், இந்தப் பழமொழி செத்துப்போகவில்லை என்றே தோன்றுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். சிவன் என்பது ஓர் அடையாளம்… அவ்வளவே! பள்ளிவாசல்களின் சொத்து என்றால் திருடலாமா? மரியாளின், அவளுடைய திருக்குமரனின் சபைச் சொத்து என்றால் கொள்ளையடிக்கலாமா? ‘சிவன்’ எனும் சொல்லை மாற்றிவிட்டு கடவுள், இறைவன், பிதா எனும் எந்தச் சொல்லையும் பொருத்திப் பார்க்கலாம். ‘சிவன் சொத்து’ என்பதை ‘மக்கள் சொத்து’ என்றும் ‘பொதுச்சொத்து’ என்றும் மாற்றிச் சொல்லலாம். இன்னும் எளிமையாக, ‘அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே’ எனலாம்.
இந்த ஒற்றை வரி, என் அப்பா மூலமாக எனக்கு வந்து சேர்ந்தது. என் தாத்தா அடிக்கடி அதைச் சொல்லுவார் என்பார் என் அப்பா. தாத்தா பெயர்தான் எனக்கும். சுப்பிரமணியப் பிள்ளை. 1900-த்தின் தொடக்கத்தில், சொந்த ஊரில் இருந்து பஞ்சம் பிழைக்க நாஞ்சில் நாட்டு வீரநாராயணமங்களத்துக்கு வந்தார். மாடு மேய்த்து, வடக்கு மலையில் இருந்து விறகு சுமந்து, புல் சுமந்து, சக்கடா வண்டி அடித்து, அறுவடையாகும் காலத்தில் அறுத்தடிப்புக் குழுவின் கூறுவடியாக இருந்து, பெண்ணும் கட்டி, ஊரின் ஈசான மூலையில் இரண்டே முக்கால் சென்டில் ஒரு குடிசை வீடு வாங்கினார். என் அப்பாவும் அந்த வீட்டில்தான் தனது 55-வது வயது வரை வாழ்ந்து மறைந்தார்.
அறுவடைக் காலங்களில் கூறுவடியாக இருந்து, வயல் அறுத்தடித்துக் கொத்து அளக்கும்போது நெல் மிச்சம் வரும். அதைச் சேர்த்து, ஊரின் நடுவே முத்தாரம்மன் கோயில் கட்ட முன்கை எடுத்தார் தாத்தா. ஒருமுறை கோயில் முதலடிகளிடம் கணக்கு கேட்டபோது, அடிவயிற்றில் குத்தி இழுக்கப்பட்டார். இதை எல்லாம் எனது மூன்றாவது நாவல் ‘மாமிசப் படைப்பி’ல் காணலாம். தாத்தா சாகும் காலத்தில், ‘‘கோயிலுக்கு முடிஞ்சதைச் செய்யுங்க… எந்தக் காலத்திலேயும் முதலடிப் பொறுப்பு ஒத்துக்கிடப் பிடாது. சிவன் சொத்து குல நாசம்’’ என்று சொன்னதாக அப்பா சொல்வார்.
அவர் இறக்கும்போது அப்பாவுக்கு கல்யாணம் ஆகி இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் எவரிடமும் அவர் புகைப்படம் இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த வீடு இருக்கிறது ஊரில். அவர் தந்து விட்டுப் போன ஒற்றை வரி இருக்கிறது நெஞ்சில்.
எவரிடம் இருந்தும் முறையற்றும் அநியாய மாகவும் பிடுங்கப்படும் சின்னச் சல்லியும், சிவன் சொத்துதான். சிலசமயம் தோன்றும்… பத்து ரூபாய் தொடங்கி பல்லாயிரம் கோடி வரையிலான இடைத்தரகு, கமிஷன், கையூட்டு, கொள்ளைப் பங்கு என அடித்து மாற்றுகிறவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? இருபது கோடி விலையுள்ள கார், கிலோகணக்கில் நகைகள், பண்ணை வீடுகள், மாளிகைகள், தோட்டங்கள், சுரங்கங்கள், ஆலைகள், இருபது தலைமுறைக்கான செல்வம்! உள்மனது கேட்கும், ‘என்னய்யா… இது சிவன் சொத்து இல்லையா?’ என்று.
உலகப் புகழ்பெற்ற இலக்கிய விமர்சகர் ப்ராட்லி சொல்வார், ‘It is not poisoned, it is poison itself’ என்று. அதேபோல், பொதுச்சொத்து என்பது விஷம் ஏற்றப்பட்டதல்ல. அதுவே விஷம்.
ஓர் அநியாயத்தை, நீதி தட்டிக் கேட்க சராசரியாக 30 ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் வாழ்ந்து முடித்து இறந்தே போகிறார்கள். மக்களாட்சியில் மக்கள் கேட்கலாம். ஆனால் அவர்கள் ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்கிறார்கள்.
சிவன் சொத்தை அபகரிப்பவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏன் இந்த நாட்டில்   மத்திய முதன்மை அமைச்சராக இருப்பவர் துப்பாக்கிக் குண்டு துளைத்து இறக்கிறார்? அவர் பிள்ளைகள் விமான விபத்திலும், குண்டு வெடித்தும் ஏன் இறக்கிறார்கள்? உலகின் அனைத்து வளங்களும் வசதியும் இருந்தும், என்றைக்கு எப்படி இறந்தார் என்பதே மர்மமான முறையில் எப்படி முதலமைச்சர் ஒருவரின் மரணம் இருக்கிறது? தமிழகத்தையே விலைக்கு வாங்கும் செல்வம் இருந்தும் எப்படி ஐம்பது வயதுக்குள் இறக்கிறார்கள்? எல்லை நீத்த செல்வம் சேர்த்தவர் கொலையுண்டு ஐந்து ஆண்டுகள் ஆகியும், கொன்றவர் எவர் என்று புகழ்பெற்ற இந்தியப் புலனாய்வுத்துறைக்கே ஏன் வெளிச்சம் இல்லை? கோடி கோடி கோடி சேர்த்த பலர் ஏன் சேனைக்கிழங்கு போல வாழ்கிறார்கள்?
நான் ஆத்திகன் இல்லை. என்றாலும், நீதிப் பரிபாலனத்திலும் மக்களாட்சியிலும் நம்பிக்கை இழந்த மனநிலையில் பேசுகிறேன்…
ஆம்… சிவன் சொத்து குலநாசம்!
சந்திப்பு: வெ.நீலகண்டன், படம்: தி.விஜய்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஒரு வரி… ஒரு நெறி! ‘சிவன் சொத்து குல நாசம்!’

  1. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    மிக நல்ல பகிர்வு

  2. Meenakshisundar சொல்கிறார்:

    Aram Kaakkum. Aram mattumae Kakkum.

  3. nagarajan சொல்கிறார்:

    ithuthaan iyarkaaiyin kattamaippu allathu ozhungu endru thondrukirathu.

  4. தீபக் சொல்கிறார்:

    ஒரு தனி மனிதனோ , சமுதாயமோ நேர்மையும், உண்மையுமாக இருப்பது அதன் தன்னம்பிக்கைக்கும், உள் குணத்துக்கும் உள்ள வெளி அடையாளமே. ஒரு மனிதன் நேர்மையாக இருப்பது பின் விளைவுகளின் அச்சத்தினால் அல்ல.

    இதில் இந்திரா காந்தி குடும்பத்தில் நடந்த துரதிஷ்டங்களை எடுத்துகாட்டாக எடுப்பது , கடவுளின் பங்கை மனிதன் அபகரிப்பது மட்டுமின்றி நமக்கு தெரியாத விடயங்களை பற்றி அவதூறாக சொல்வதே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s