எல்லாம் நேரம்.
பெரும்பாறையின் ஒரு பகுதி அம்மன் சிலையாக வடித்தெடுக்கப்பட்டு அபிடேகம், அர்ச்சனை, தூப தீபம், நானாவித பரிமள புட்ப வாசனை,சகலவிதமான அலங்காரம் ஏற்று வழிபடும் தெய்வமாக, பலர் கை தொழ நிற்கிறது. இன்னொரு துண்டு வாசற்படியாக பலர் மிதித்து ஏறும்படியாகவோ, திண்டின்மேல் பதிக்கப்பெற்று பக்தர்கள் குண்டி தாங்கும் பதிக்கப்பட்ட பாளமாகவோ கிடக்கிறது.
சிலர் புகழ்பெற்ற வித்வான்களாக, சங்கீத சாம்ராட்களாக ஆகிப் பலர் நாவில் புரள்கிறார்கள். செவிகளில் தவழுகிறார்கள். பொன்னாடைகளும் பதக்கங்களும் பெறுகிறார்கள். பலர் கல்யாணத்துக்கும் கோயில் விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் ஊதிக்கொண்டிருக்கிறார்கள். சைலர் நல்லநாள் பொழுதுகளில் வீட்டு வாசலில் வந்து நின்று வாசிக்கிறார்கள். சிலர் பேரூந்து தளங்களில் முதுகில் வெயிலடிக்க, முன்னால் சில்லறை கேட்டுத் துண்டு விரித்திருக்க இசைக்கிறார்கள்.
(…..நாஞ்சில் நாடன்)
நாஞ்சில் அய்யா அவர்களுக்கு வணக்கம்
நலமா?
கல்யாண வீட்டு கட்டுரை எத்தனை எழுதினாலும், ஒவ்வொன்றும் ஒரு புதுமை கொண்டே பொலிகிறது. கல்யாண வீட்டு கதைகள், கட்டுரைகள். வரிசையில். “அறு சுரம் ” ஆகச்சிறந்த கட்டுரை, வழக்கமான கல்யாண கூட்டம், அங்கு நகைக்கடைகளாய் நடமாடும் பதுமையர், தம்மி எடுக்கும் இளையவர், சாப்பாட்டு பந்திக்கு முந்தும் அன்பர்கள் என்றே கவனிக்கும் என் போன்றோரே.. சிந்திக்க வைக்கிறது உங்கள் எழுத்து.
பொதுவாய் கல்யாண வீடு நாகசுரத்தில், மகா கணபதி பாடல் அதனை தொடர்ந்து சில சினிமா பாடல்கள், அதோடு முடிந்து போகும், நாகசுரத்தில் இசைக்கும் “நகுமோ ” பாடல் உங்களை பெரும் தேடல் கொண்டு.. எழுத வைத்தது. தியாக ப்ரம்மத்திற்கு நன்றி..
உடல் நலத்தில் கவனம் கொண்டு, மேன் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.
கண்ணன் ந
கொட்டாரம்.