‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் இது பற்றி வாய் திறப்பதில்லை.Magistrate, Judge, Justice என்பன நீதிபதிகளின் பதவி அந்தஸ்து குறித்த சொற்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை Justice என்பார்கள். ‘நியமம்’ எனில் சட்டம் என்றும் பொருள். அது வடசொல்.
‘நித்தம் நியமத் தொழிலராய் உத்தமர் உறங்கினார்கள், யோகியர் துயின்றார்’ என்பார் கம்பர். நியாய சபை, நியாய ஸ்தலம், நியாயவாதி எனும் சொற்களும் வடமொழிதான். நீதி, நீதிகர்த்தா, நீதி நியாயம், நீதிமான், நீதி ஸ்தலம் எனும் சொற்களும் அவ்விதமே! எனில் ‘நீதிபதி’ எனும் சொல் எங்ஙனம் வடசொல் அல்லாது இருக்கக்கூடும்?
‘நீதிபதி’ எனில் நடுவர் என்று பொருள். நீதி எனும் சொல்லைத் திருத்தக்க தேவரின் ‘சீவக சிந்தாமணி’ கையாள்கிறது. நீதிபதி எனும் சொல்லைத் தமிழ்ப்படுத்துவதாகக் கருதி, அதனை ‘நீதி அரசர்’ என மாற்றினார்கள். அதற்குள்ளும் நீதி இல்லாமல் இல்லை. ஆனால் Justice, நீதிபதி என்று அழைப்பதற்கும் ‘நீதி அரசர்’ என்று விளிப்பதற்கும் வேறுபாடு உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்து லெக்சிகனில், பேராசிரியர் அருளியின் அயற்சொல் அகராதியில், ‘நீதியரசர்’ எனும் சொல் பட்டியலிடப்படவில்லை.
எனது அச்சம் எதிர்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் இனத் தலைவர்களும், தம்மை நீதி அரசர் என்று அழைத்துக்கொள்வார்களோ என்பது. அரசர், மன்னர், வேந்தர், ராஜா, மகாராஜா, சக்கரவர்த்தி எனும் ஆண்ட இனத்தைத் துறந்து மக்களாட்சிக்குள் புகுந்த நாம், இன்று நீதிபதி என்பதற்கு ‘நீதியரசர்’ என ஆள்வது விசித்திரமாக இருக்கிறது. நமது மற்றுமோர் கவலை, துறை சார் அமைச்சர்கள் எல்லோரும் இனி தங்களை உள்துறை அரசர், பாதுகாப்புத்துறை அரசர், நிதி அரசர், வெளியுறவுத்துறை அரசர் என்ற ரீதியில் அழைக்கத் தலைப்படுவார்களோ என்பது!
, மான், மதி எனும் சொற்கள் நமக்கு உடம்பு அரிப்பு ஏற்படுத்தின. திரு, திருமதி என மாற்றிக்கொண்டோம். மிகப் பொருத்தமான மொழிமாற்றம். நிவாஸன் என்ற சொல்லையே நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ‘திருவாழி மார்பன்’ எனப் பயன்படுத்தியது. எனது பக்கத்து ஊர், நம்மாழ்வாரின் அம்மை காரிப்பிள்ளை பிறந்த ஊர், நம்மாழ்வார் பாடிய பெருமாளின் ஊர், திருவண்பரிசாரம் என்று வழங்கப் பெற்ற திருப்பதிசாரம். அங்கு, திருமாலின் பெயர் திருவாழி மார்பன்.
மகா சந்நிதானங்களை ல என்றார்கள் முன்னோர்கள். இன்று அது ‘சீர் வளர் சீர்’ அல்லது ‘சீர் மிகு சீர்’ எனவாயிற்று. பொருத்தம் கருதிய மகிழ்ச்சி நமக்கு. ஒரு காலத்தில் ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற பிரயோகம் இருந்தது. ‘கனம் நீதிபதி அவர்களே’ என்றும் சொன்னார்கள். ‘கனவான்களே!’ என்றார்கள். ராகங்களிலும் கன ராகங்கள் உண்டு. வேதம் ஓதுகிறவர்களில் ‘கனபாடிகள்’ இருந்தனர். கனம் எனில் பாரம், பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம், வட்டம், அகலம், மேகம், கோரைக்கிழங்கு, Square, Cube எனப் பல பொருள்கள்.
தமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும். அல்லது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுமக்கிற கழுதைக்கு செங்கல் கட்டி ஆனாலும் தங்கக்கட்டி ஆனாலும் சுமை ஒன்றே என்பது போன்ற பேதமின்மை நன்றன்று.
‘கலைமாமணி’ என்றும் ‘பத்ம’ என்றும் திரைப்படங்களில் டைட்டில் கார்டு போடும் பூரிப்பு இருக்கிறது. மேலும் டாக்டர் என்று பெயருக்கு முன் போடுவதும் மேடைகளில் கூவுவதும் மற்றொரு வியப்பு. எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள். காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்!
நொந்து பாடுகிறான் ஒரு புலவன், ‘போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்’ என்று. எந்தப் போர்க்களத்தையும் அறிந்திராத மன்னனை, தனது தரித்திரம் காரணமாக பொருள் வேண்டிப் ‘புலியே’ எனப் பாடிய அவலம். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் எனும் குறிப்புகள் அந்தப் பகுதியை வெற்றி கொண்டதற்கான வரலாற்றுத் தடயங்கள். ஆனால் பராந்தகன், சோழாந்தகன், மதுராந்தகன் என்பன என்ன? அந்தகன் எனில் யமன் அல்லது கூற்றுவன். பிறர்க்கு எமன், சோழனுக்கு எமன், மதுரைக்கு எமன் என்று தம்மை அழைத்துக்கொண்டார்கள் தமிழ் மன்னர்கள் எனில் அவரை நாம் என்ன சொல்ல?
கவிச் சக்கரவர்த்தி என்ற சொல்லால் தமிழன் இன்று கம்பனை அடையாளப்படுத்து கிறான். கம்பன் அதற்குத் தகுதியானவன். அந்தப் பட்டத்தை எந்த மன்னனோ அல்லது கம்பனின் நற்பணி மன்றத்தார் எவருமோ வழங்கியதற்கான சான்றுகள் இல்லை. மன்னர்களும் ரசிக மன்றங்கள் பணம் வாங்கிக்கொண்டும் தராத பட்டத்தை மக்கள் கம்பனுக்குத் தந்தார்கள். அது அவர் வாழ்ந்த காலத்திலும் தரப்பட்டதல்ல. தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.
சிறுகதை மன்னன், நாவல் சாம்ராட் போன்ற பட்டங்களை மாபெரும் எந்தப் படைப்பாளியும் எங்ஙனம் கூச்சமில்லாமல் அணிந்து திரிய இயலும், நாதசுரக் கலைஞர்களின் வாத்தியங்களில் தொங்கும் பதக்கங்கள் போல? 2009க்கான கலைமாமணி விருது பெற்றவன் இந்தக் கட்டுரையாளன். எனது லெட்டர்ஹெட்டிலோ, நான் பங்கேற்கும் எந்த விழா அழைப்பிதழிலுமோ இதை எவரும் கண்டிருக்க இயலாது. தருவது அவர்கள் சந்தோஷம்.
சுமந்து திரிவது நமது விருப்பம்.சங்கத் தமிழ் இலக்கியப் பரப்பில் பலர் ஊர்ப்பெயரால் மட்டுமே அறியப்பட்டனர்… இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கள்ளிக்குடி பூதம் புல்லனார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் போன்று! சிலர் உடல் உறுப்புக்களால் அறியப்பட்டனர்… கருங்குழல் ஆதனார், நரி வெரூஉத் தலையார், நெடுங்கழுத்துப் பரணர் போல. சிலர் செய்த தொழிலால் பெயர் பெற்றனர்… மதுரைக் கணக்காயனார், மதுரை அறுவை வாணிகர் இளவேட்டனார், செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என. ‘அறுவை’ எனில் ‘ஆடை’ என்று பொருள்.
மாமூலனார், மூலங்கீரனார், ஐயூர் மூலங்கிழார் என்பார் பிறந்த நாளால் பெயர் பெற்றவர். சிலரோ அவர்கள் பாடிய பாடலால் பெயர் பெற்றவர்கள்… பாரதம் பாடிய பெருந்தேவனார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார் என. சிலர் பெற்றார் பெயர் கொண்ட புலவர்… குன்னூர்க்கிழார் மகனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார், அஞ்சியத்தை மகள் நாகையார் என. மேலும் சிலரோ தமது மரபால் பெயர் பெற்றவர்கள்… குறமகள் இளவெயினி, இடையன் சேந்தன் கொற்றனார், கடுவன் மள்ளனார் என்மனார் புலவ. இவர்களில் எவரும் தமது பட்டங்களால் அறியப்பட்டவரில்லை. எனினும் 2000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.
மலையாள மூத்த நடிகை ஒருவர் தமக்கு ‘பத்ம’ விருது வழங்கப்பட்டபோது, ‘‘அதை வைத்துக்கொண்டு ரயில் பயணச்சீட்டு கூட வாங்க இயலாது’’ என்று மறுத்தார். அதெல்லாம் எப்படி வாங்குகிறார்கள் என்பதே பெரிய மர்மமாக இருக்கிறது! சில பட்டங்கள் சிலருக்கு மிகப் பொருத்தமாகவும் பட்டங்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கிறது. ஒரேயொரு எடுத்துக்காட்டுச் சொன்னால் ‘இசைஞானி’. சொல்வதில் நமக்குக் கர்வமும் உண்டு. மகாத்மா, மகாகவி, மொழிஞாயிறு,
மகா மகோபாத்யாய என்றோ வழங்கப்பட்ட சொல்லுக்கும் பொருள் உண்டு. சொல்லப்பட்டவருக்கும் சிறப்பு உண்டு.
இன்று வழங்கிவரும் சில பட்டங்களைத் தவிர்த்துவிட்டுச் செல்கிறோம், பகை வந்து சேரும் என்பதால்; வீட்டுக்கு ஆட்டோ கூட வரக்கூடும்.
திரும்பத் திரும்ப ஒளவையாரைத்தான் தற்காப்புக்கு என அழைக்க வேண்டியது உள்ளது. ‘விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில் பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்று’ – இது வெண்பா. இரண்டு சொற்களுக்குப் பொருள் சொன்னால் போதும். விரகர் எனில் சாமர்த்தியசாலிகள், வல்லவர்கள், Experts. அரை எனில் இடுப்பு. தெரியாமல் இருந்தால் சொல்கிறேன். பஞ்சேனும் பட்டேனும் என்றால் பஞ்சாடை அல்லது பட்டாடை.
வல்லவர் இருவர் புகழ்ந்து மதிப்புரை, கட்டுரை எழுத வேண்டும். மேடைகளில் பாராட்டி முழங்க வேண்டும். படைப்பாளியின் செல்வ நிலை அல்லது பிரபலம் வேண்டும். விலை உயர்ந்த வாகனங்கள் வேண்டும். டிசைனர் ஆடைகள் வேண்டும். அவரது படைப்பு நஞ்சாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் அது நல்ல படைப்பு என்பார்கள். நான் சொல்வதல்ல இது. ஒளவை சொன்னது. ஒளவை சொல்லும் கவிதை எனும் சொல்லை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அரசியலோ, சினிமாவோ, ஆயகலைகள் அறுபத்தி நாலுமோ… பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.
இன்று பதவி வகிக்கும் பலரையும் ‘மாண்புமிகு’ என்ற சிறப்புச் சேர்த்து விளிக்கிறார்கள். அமெரிக்க அதிபரை எவரும் ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என அழைத்துவிட இயலும். நமது குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், அவைத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள் எவரையும் நாம் ‘மிஸ்டர்’ என்ற முன்னொட்டுடன் அழைத்துவிட இயலாது. மான நஷ்ட வழக்குப் போட்டு நம்மை சிறை புகச் செய்வார்கள். ஆனால், பலரின் மானமோ மைனஸில் இருக்கிறது.
எனினும் அவர்கள் எல்லோரும் மாண்புமிகு, மாண்புடை, மாண்பமை மனிதர்கள். மனிதருள் மாணிக்கங்கள். இருந்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன வழக்கு? ஆனால், இந்த மாண்பு என்பது என்ன? மாண்பு எனும் சொல்லுக்கு மாட்சிமை, அழகு, பெருமை, நன்மை என்பன பொருள். முன்பு ‘மாட்சிமை தங்கிய’ என்று பயன்படுத்தியதைத்தான் இன்று ‘மாண்புமிகு’ என்கிறோம். ஆனால், அந்த அடைமொழியால் விளிக்கப்படுகிறவர்கள் பலருக்கும் நாம் மேற்சொன்ன பொருள் ஏதும் பொருந்துமா என்பதே நமது ஐயம்.
மாண்பு என்பது பதவி அல்ல, தகுதி. முன்னாள் மாண்பு, இந்நாள் மாண்பு என்று இல்லை. ‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை’ என்பது வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்துக் குறள். ‘இல்லத்தலைவி மாண்பு உடையவளாக இருந்தால், அந்த இல்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை. அவள் பண்பில் குறைவுபட்டவளாக இருந்தால் அவ்வில்லத்தில் எதுவுமே சிறப்பாக இருக்காது’ என்று பொருள் கொள்ளலாம்.
திரு எனும் சொல் ‘சகல செல்வங்களும் பொருந்திய’ என்று பொருள் தரும். அது பொருட்செல்வம் மட்டுமே அல்ல. ‘திருமிகு’ என்றும் சொல்கிறோம். திருமிகு என்பதையும் தாண்டிய சொல் ‘மாண்புமிகு’. அது வெறும் புகழ்ச்சிச் சொல் அல்ல. சமகால இந்திய அரசியலில், இவ்விதம் மாண்புமிகு என அழைக்கப்படும் மனிதர்கள் பலரின் பின்னணியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
குற்றப்பின்னணி உடையவர்கள், இரு கை நீட்டியும் தரகர் மூலமும் புன் செல்வம் கூட்டிக் குவிப்பவர்கள், மக்கள் விரோதச் செயல்கள் செய்பவர்கள், வன்முறை தூண்டுபவர்கள், பிறன்மனை வேட்பவர்கள், தம் குடும்பத்துப் பணியே மக்கட்பணி என்று கருதுகிறவர்கள், பிறர் துன்பங்களுக்கு மூல வேராக இருப்பவர்கள்…‘மாண்புமிகு’க்களில் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். அந்தச் சிலர் பலராகும்போதுதான், அந்தச் சொல்லுக்குப் பொருள் உண்டாகும்.
தமிழர்களுக்கு பட்டம் வழங்கியும் பெற்றும் கொண்டாடும் மிகுமகிழ்ச்சி சொல்லத் தரமன்று. ஆனால், ஒரு சிறப்புப் பட்டத்தைத் தாங்கி நிற்கும் மனிதர் அதற்கான தகுதி உடையவராக இருக்க வேண்டும்.எவர் மீதும் காழ்ப்பின்றி சொல்கிறேன், நமது சினிமாப் பிரபலங்களிடம்தான் எத்தனை வகையான திலகங்கள், எத்தனை தினுசு புரட்சிகள், காரல் மார்க்ஸுக்கே சலித்துப் போயிருக்கும்!தொண்டர்களுக்கும் ரசிக மன்றத்தார்க்கும் சொல்லி ஏற்பாடு செய்து பெற்ற பட்டங்களைச் சுமந்து திரிபவர் காண நமக்கு இரக்கம் ஏற்படுகிறது.
– கற்போம்…
நாஞ்சில் நாடன்
ஓவியம்: மருது
ஐயா சல்லிகட்டு பிரச்சனை பற்றி தயவு செய்து விளக்குங்கள்
நல்ல பகிர்வு