மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது!’
நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு!
சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
” 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக ராஜ்ஜியங்கள் பிரிக்கப்படாத காலம். என் அம்மா சரஸ்வதிக்கு 18-வயதில் திருமணமாகி 19-வயதில் நான் பிறந்ததாகச் சொல்வார்கள். சொந்த ஊர், ஆர்யநாடுக்கு அருகிலுள்ள குன்றின் மேல் இருக்கும் நெடுங்காடு. எனக்கு ஏழுவயசு இருக்கும்போது அம்மா, தன் ஊருக்கு அழைத்துப் போனார்கள். அழகிய வயல்வெளி, அடர்ந்த மரங்கள், தென்னை, வாழை, மா, பலா தோப்புகள் கொண்ட நிலம், நூறு அடியில் அழகிய சிறு குட்டை என சாலை வசதிகள் இல்லாத கிராமம். வீடுகள் கூட நூறு அடிக்கு ஒன்றாக வெவ்வேறு திசையை பார்த்த வாசல்களை கொண்டதாக இருக்கும்.
அங்கே அம்மாவுக்கு உயிர்த்தோழியான ஒரு முஸ்லிம் பெண்ணை நான் ‘உம்மா ‘ என்றே அழைப்பேன். என் அம்மா வீட்டுக்கும். உம்மா வீட்டுக்கும் தூரம் அதிகம். அதனால் என் அம்மா குயில் போன்று இனிமையாக ‘ கூ…’ என்று வித்தியாசமாக குரல் கொடுக்க, உற்சாகம் பீறிட சிறுசிறு வாய்க்கால்களை கடந்து, பின்னங்கால் தரையில் படாமல் படுவேகமாக ஓடிவருவார் உம்மா. ஏதோ அப்போதுதான் அம்மாவை முதன்முறையாக பார்ப்பதுபோல் வைத்த கண் விலகாமல் உற்றுப்பார்ப்பார். அடுத்து என் பக்கம் திரும்பி என்னை வாரியணைத்துக் கொள்வார். அந்த உடம்பின் வாசம், அரவணைப்பின் நேசம், கதகதப்பு இப்போது நினைத்தாலும் கண்ணீரில் மிதக்கிறது கண்கள்.
பலகாரங்கள், தின்பண்டங்கள் அறிமுகம் ஆகாத காலம் அது. மரங்களில் காய்த்த கனிகள், மாவடு, மாபிஞ்சு எல்லாம் எங்கள் கனவு உணவு. மாமரத்தில் பதவிசாக பார்த்து பார்த்து, எலுமிச்சை அளவுக்கு இருக்கும் கொட்டை முளைக்காத மாங்காயை காம்புடன் பறிப்பார் உம்மா. வீட்டுக்குள் கயிறுகட்டி தொங்கவிட்ட பானைக்குள் இருக்கும் உப்புத்தண்ணீரில் மாங்காயைப் போட்டு இரண்டு மாதங்கள் ஊறவிடுவார். நான், அம்மா ஊருக்கு போகிறபோதெல்லாம் பின்னங்கால் தரையில் படாமல் கால் ஊன்றி எக்கி இரண்டு, மூன்று மாங்காய்களை கண்களின் பாசம் பொங்க, ஆசையாய் என் கைகளில் கொடுப்பார். அந்த உப்புத்தண்ணீரில் ஊறிய மாங்காய் ருசி, உண்ண உண்ண நாவில் எச்சில் நதியாய் ஊற்றெடுக்கும்.
ஒருமுறை தென்னை மரத்தில் கொய்யாப் பழ அளவுக்கு குலைகுலையாய் இருக்கும் குரும்பைகளை பறித்து விளையாடிக் கொண்டு இருந்தேன். தேங்காயாக வேண்டிய குரும்பைகளை நான் அழித்ததால் உம்மாவுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ஓடிவந்து என் பின்பக்கம் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ அன்புடன் என்னை கண்கலங்க அரவணைத்துக் கொண்டார். அதுதான் என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட முதல்பாடம். உம்மா அடித்த அடி அப்போது வலித்தது, இப்போது இனிக்கிறது.
நாஞ்சில் நாட்டில் தினமும் எங்களுக்கு காலையில் பழைய சோறு, மதியம் சுடுசோறு, இரவு தண்ணீர் ஊற்றிய சோறுதான் உணவாக கிடைக்கும். மாதத்திற்கு ஒருமுறை எப்போதாவது அபூர்வமாக இட்லி, தோசை சுடுவார்கள். இப்படியே சாப்பிட்டு பழகிய எனக்கு, அம்மா ஊரில் சாப்பிட்ட மரவள்ளிக் கிழங்கு ருசி மரணம்வரை போகாது. அரிசிக் கஞ்சியை தொன்னையில் ஊற்றிக் கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள குழம்பு மீன் கொடுப்பார்கள். அப்படி ஒரு ருசியை இதுவரை அனுபவித்ததே இல்லை.
அம்மா ஊரில், வீட்டு வாசலிலேயே ஏகப்பட்ட பாம்புகள் நெளிந்து வளைந்து ஓடும். ஒருவர்கூட பயப்பட மாட்டார்கள். ‘அப்படி போப்பா…’ என்று அதனிடம் பேசுவார்கள். ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் ஒரு ஏக்கருக்கு காடு இருக்கும். அதற்கு சர்ப்பக்காடு என்று பெயர். அங்கே பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு படம் வரைந்து, பூஜை செய்து கர்மசிரத்தையோடு வழிபடுவார்கள். மாதவிலக்கு, குழந்தை பெற்ற பெண்கள், இறப்பு வீட்டுக்காரர்கள் துக்கம் களையும்வரை சர்ப்பக்காடு பக்கமே செல்லமாட்டார்கள். சிலர் பாம்பு கடித்து இறந்தாலும் சர்ப்பக்காடு வழிபாடு நின்றதே இல்லை.
அப்போது மின்சாரம் எட்டிப்பார்க்காத காலம். தீப்பந்த வெளிச்சத்தில், பம்பை உடுக்கு அடிக்க, இரவு முழுக்க விடியவிடிய திருவிழா நடக்கும். ஒரு பெண் தலைமுடியை விரித்துப் போட்டு ஆடுவதை ஆச்சர்யமாய் பார்த்து வியந்து இருக்கிறேன்” என்று ரசித்து, லயித்து பேசினார் நாஞ்சில்.
இடையே அவருடைய பேரன் வர, ”என் குழந்தைகளின் பால்ய பிராயத்தை என்னால் கண்டு அனுபவிக்க முடியாத அளவுக்கு ரொட்டி வியாபாரத்துக்காக இரவு பகல் அலைந்து கொண்டிருப்பேன். அந்த ஏக்கத்தை எல்லாம் போக்குவது போல என் பேரனின் குழந்தைத்தனத்தை கண்குளிர ரசிக்கிறேன்” என்று விடைகொடுத்தார்.
– எம்.குணா
http://www.vikatan.com/news/miscellaneous/64977-writer-nanjil-nadan-recall-the-taste-of-maravalli.art
yes..What you have told is the story of our childhood days in Tamil nadu during 1967 on wards..we also had such experiences-
That time huge famine was in Tamil nadu-Rice food is rare- ,Only MARAVALLI KILANGU மரவள்ளிக் கிழங்கு OR ALIAS KUCHIVALLI KILANGU WAS OUR LIFE SAVER-in Namakkal district-
we used to cook in hot water and used to eat it..or some time we used the maravalli kilangu like potato-That old days were brought by you- R.VIMALA VIDYA