மும்மை

15240098_1188857901163729_1699772515_n
http://solvanam.com/?p=46097
ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால்,
‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து ‘
என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை என்றால் ஒன்று. நீத்தார் பெருமை அதிகாரத்துக் குறள் சொல்கிறது,
‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு ’
என்று. நன்மையும் தீமையும் போல, எல்லா இடத்தும் நிலவும் இருவகை நிலைகளைத் தெளிவாக உணர்ந்து அறவழி நிற்பவரின் சிறப்பு உலகில் ஒளிவீசும் என்பது பொருள். எனவே இருமை என்றால் இரண்டு என்று பொருள். அந்த வரிசையில் மும்மை என்றால் மூன்று.
கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம், வாலி வதைப் படலம். நல் உற்றாரான வாலியும், சுக்ரீவனும் எதிர் நின்று பொருதும் காலை, வாலிக்கு எவ்விதத்திலும் ஆற்றலில் இணையாக மாட்டாத சுக்ரீவனை, வாலி பற்றி, எடுத்துப் பாரிடை எற்றுவென் என்று தம்பியின் கடித்தலத்திலும், கழுத்திலும் தனது இரு கரங்களையும் மருத்து, தலைக்கு மேல் தூக்கிய போது, சரம் ஒன்று வாங்கி, தொடுத்து, நாணோடு தோள்உறுத்து, இராகவன் துரக்கிறான்.
வாலி வியக்கிறான், இச்சுடு சரம், வெங்கணை, கொலை அம்பு, நேமிதான் கொலோ, நீலகண்டன் நெடுஞ்சூலமோ, கிரவுஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற முருகனது வேலோ, இந்திரன் வச்சிரப் படையோ, என்று. வெம்மையான இப்பகழி வில்லினால் துரக்கப்பட்டது அன்று. எவனோ நீண்ட தவமுடைய முனிவன் தனது சொல்லினால் தூண்டினானோ என்று அதிசயிக்கிறான். நெஞ்சினில் பலம் கொண்டு துரந்து போகும் வாளியைப் பற்றி நிறுத்தி, அந்த அம்பினில் பொறிக்கப்பட்டிருக்கும் இராமன் எனும் நாமத்தை தெளிவாகக் காண்கிறான்.
கடவுள் வாழ்த்துச் செய்யுள் போல ஒரு அறுசீர் ஆசிரிய விருத்தம் அமைக்கிறார் கம்பர்.வாய் விட்டு சொல்லிப் பார்த்தால் செய்யுளின் ஓசை நயம் செழிக்கப் புலப்படும். அந்தச் செய்யுளின் முதற்சொல் மும்மை.
‘மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை, ‘இராமன்’ என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்.’
என் தேடல் இவண் ‘மும்மை’ எனும் சொல் என்றாலும், கம்பனின் ஆளுமை கொண்ட கவிதைகளில் ஒன்று இது.
வானம், பூமி, பாதாளம் எனும் உலகங்கள் மூன்றினுக்கும் மூலமான மந்திரத்தை, தம்மை வழிபடும் அடியார்க்கு முற்றிலும் தம்மையே அளிக்கும் தனிப்பெரும் சொல்லை, தானே தனியாக நின்று இப்பிறப்புக்கும் எழுவகைப் பிறப்புக்குமான நோய்க்கு மருந்து போன்றவனை, இராமன் எனும் செம்மைசேர் நாமம் தன்னைத் தன் கண்களினால் தெளிவாகக் கண்டான், என்பது பாடலின் பொருள். ‘மும்மை சால் உலகு’ என்பதற்கு, இப்பிறவி, முற்பிறவி, எதிர்வரும் பிறவி என்று மூன்று பிறவிகளுக்கும் இடமான உலகு என்றும் பொருள் கொள்ளலாம்.
 கம்பனின் சொல்லாட்சியில் இருந்து ‘மும்மை’ எனும் சொல்லை இந்தக் கட்டுரையின் தலைப்பாக எடுத்துக் கொள்கிறேன். மும்மை எனில் காலை, பகல், மாலை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பன் திரு அவதாரப் படலத்தில் ‘முழங்கு அழல் மும்மையும் முடுகி’ என்கிறான். ‘மும்மையும் முழங்கு அழல் முடுகி’ என்று வாசிக்கலாம். ஓசையுடன் ஒலித்து எழுகின்ற, முழங்குகின்ற வேள்வித் தீ மூன்று காலங்களிலும் விரைந்து எழுந்ததாம்.
மும்மை எனில் மும்மடங்கு என்றும் பொருள். Three Fold எனலாம்.
அயோத்தியா காண்டத்தில் பரதனுக்கு முடிசூட்ட வேண்டி, தயரதனிடம் முன்பு பெற்ற இரண்டு வரங்களைப் பயன்படுத்துகிறாள் கைகேயி. இராமனை அழைத்துச் சொல்கிறாள்.
‘ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி,
தாங்க அரும் தவம் மேற்கொண்டு,
பூழி வெங்காளம் நண்ணி,
புண்ணிய நதிகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று
இயம்பினான் அரசன் என்றாள்’
அதைக் கேட்ட, யாரும் செப்புவதற்கு அரிய அருங்குணத்து இராமன் திருமுக அழகு நோக்கினால், எம்மைப் போன்றவற்கும் அதனை இயம்புதற்கு எளிதல்ல என்கிறான் கம்பன்.   ஏனேனில் கம்பனுக்கு, அந்தக் கணத்து இராமனின் முகம், ‘அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றது அம்மா!’ என்று தோன்றிற்று.
கைகேயிக்கு பதில் சொல்கிறான் இராமன், ‘மன்னவன் பணி அன்றாகில், நும்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனென் பெற்றதன்றோ!’ என்று பூரண மகிழ்ச்சியுடன் பதில் சொல்லிவிட்டு, ஈன்ற தாய் கோசலையை காண புறப்படுகின்றான்’.
கோசலை ‘மழைக்குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும்’ என்று  காத்திருக்கிறாள். ஆனால் இராமன் சொல்கிறான் அவள் முன்,
குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண் குடையும் இன்றி
இழைக்கின்ற் விதி முன் செல்ல,தருமம் பின் இரங்கி ஏக’.
கோசலை கேட்கிறாள் ‘புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால் நனைந்திலன்; என் கொல்?’ என்று. மௌலி என்றால் மணிமுடி. குஞ்சி என்றால் தலைமுடி. இராமன் சொல்கிறான், தன்னைப் பெற்ற கோசலையைப் பார்த்து,     ‘நின் காதல் திருமகன், பங்கம் இல் குணத்து எம்பி, பரிதனே     துங்க மாமுடி சூடுகின்றான்’ என்று. காதல் எனில் அன்பு, பங்கம் இல் எனில் குற்றமற்ற, எம்பி எனில் என் தம்பி, துங்க எனில் சிறப்பான, பெருமையான, புனிதமான என்று பொருள்.    அதைக் கேட்ட கோசலை ஆறுதலாக பதில் சொல்கிறாள்:
‘முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்
நிறை குணத்தவன், நின்னினும் நல்லனால்,
குறைவு இலன்’ எனக் கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில்; வேற்றுமை மாற்றினாள்’
இராம இலக்குவ பரத சத்துருகனர்களாகிய நால்வர் மீதும் குற்றமும் வேற்றுமையும் இல்லாத அன்புடையவளாகிய கோசலை சொல்கிறாள்: ‘மூத்தவன் இருக்க, இளையவன் அரசாளுவது என்பது முறைமை அல்ல. என்றாலும் பரதன் உங்கள் யாவரை விடவும் மூன்று மடங்கு மேம்பட்ட நிறை குணத்தவன். உன்னை விடவும் நல்லவன். குறைவு இல்லாதவன்’ என்று. இங்கு மும்மை என்றால் மூன்று மடங்கு என்று பொருள்.
ஒற்றை, இரட்டை, முச்சை என்று ஒரு பிரயோகம் உண்டு நாட்டார் வழக்கில். இந்த மும்மையை முச்சை எனலாம். வேறொர் இடத்தில் கம்பன், ‘தெரி மாண் மும்மைத் தமிழ்’என்கிறான். மாண்புடைய மூன்று தமிழ்களான இயல், இசை, நாடகம் என்ற பொருளில். இங்கு சினிமா கவிஞர்கள், சாதாரண நடிகனை, கூலிக்காக, ‘மூன்று தமிழ் பிறந்தது உன்னிடம்’ என்று புளகம் கொள்கிறார்கள்.
மும்மை எனில் மூன்றாக இருக்கும் தன்மை எனலாம். உம்மை, இம்மை, மறுமை எனும் மூவகை நிலைபேறு அது. இறந்த, நிகழ், எதிர் காலங்கள் என்பர் மும்மையை. சுந்தரர் தேவாரம், திருத்தொண்டர் தொகையின் பாடல்:
‘மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்,
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்,
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்,
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் ‘
என்று பேசும் மும்மை இதுவே.
சுந்தர காண்டத்தில் சீதை காற்றின் மைந்தன் அனுமனை வாழ்த்தும் போது,
‘மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூதால்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மையாய் அப்பனாய் அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை, இசையோடு என்றாள்’
என்று நன்றி கூறி பாராட்டி பேசுகிறாள்.
இனிமேல் மும்மை தொடர்பான சில சொற்களை காணலாம்.
மும்மடங்கு – மூன்று மடங்கு; கம்பனில், யுத்த காண்டத்தில், இராவண வதைப் படலத்தின் உச்சமான பாடல் ஒன்று
‘வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க,
மனம் அடங்க, வினையும் வீய,
தெவ் மடங்க, பொருதடக்கைச் செயல் அடங்க,
மயல் அடங்க, ஆற்றல் தேய,
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா,
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான்
உயிர் துறந்த முகங்கள் அம்மா! ‘
இதை விடச் சிறந்த எடுத்துக் காட்டுக்கு நானெங்கே போவேன்!
மும்மடி: மும்மடங்கு. அழகின் குறியாக மகளிர் வயிற்றில் காணப்படும் மூன்று மடிப்பு.
மும்மண்டலம்: சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள்.
        பூமி, அந்தரம், சுவர்க்கம் என மூன்று பகுதிகள்.
மும்மணி:    புட்ப ராகம், வைடூரியம், கோமேதகம் என்ற மூவகை இரத்தினங்கள்.
மும்மணிக்காசு: ஆபரண வகை
மும்மணி மாலை: 96 பிரபந்தங்களில் ஒன்று. அந்தாதித் தொடையில் அமைந்த 30 பாடல்கள்.
வெண்பா, கலித்துறை, அகவற்பா என மாறி மாறி முறையாகத் தொகுக்கப்படுவது.
மும்மதத்தான்:    விநாயகன். மூன்று மதங்கள் பொழியும் களிற்றின் வடிவம் உடையவன்.
மும்மதம்:    மதயானையின் சன்ன மதம், கை மதம், கோச மதம் எனும் மூன்று மதங்கள்.
        ’மும்மதக் களிற்றின் மருப்பு’ என்பது தேவாரம். மருப்பு எனில் தந்தங்கள்.
’கிரி நிகர் களிற்றின் மும்மத மழை விழும்’ என்பார் கம்பர். மலை போன்ற ஆண் யானையின் மும்மதநீர் மழை போல் பொழியும் என்பது பொருள்.
மும்மதில்:    முப்புரம், திரிபுரம்
மும்மலம்:    ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்கள்.
மும்மறை:    இருக்கு, யசுர், சாமம் எனும் வேதங்கள். நான்மறை என்னும்போது அதர்வணமும் சேரும்.
மும்மாரி:     ஒரு மாதத்தில் பெய்யும் மூன்று மழைகள்.
மும்மீன்:    மீன் எனில் நட்சத்திரம். மும்மீன் என்பது மிருக சீரிடம் எனும் நட்சத்திரம்.
மும்முரசு:    வீரமுரசு, நியாய முரசு, மண முரசு
மும்முறை:    மூன்று முறை
மும் மூடம்:    மூவகை அறிவீனங்கள். உலோக மூடம், தேவதா மூடம், பாஷாண்ட மூடம் என்பன.
மும்மூடர்:    முழு மூடர்.
மும் மூர்த்தி:    திரிமூர்த்தி. சிவன், திருமால், பிரம்மன். மும்மூர்த்திகளே ஆயினும், ‘அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே’ என்பார் கம்பர். ‘மும்மூர்த்திகள் தொழிலைத் தான் ஒருவனே செய்ய வல்லான்’ என்பதும் கம்பரே!
மும்மூர்த்தி வந்தனம்: திரி கடுகம். தோடி ராகத்தில் அமைந்த ராகம், தானம், பல்லவி.
மும்மூன்று:    ஒன்பது
மும்மைத் தீ:    முத்தீ. ‘செந்தீ மூன்றும்’ என்பார் திருமங்கை ஆழ்வார்.
மும்மைத் தூரியம்: மும்முரசு.
மும்மைத் தமிழ்: முத்தமிழ். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம்.
மும்மரம்:    கடுமை, விரைவு, கவனம்.
மும்மா:    ஒரு பின்னம்.
மும்மாங்காய்:    Rare case of Pregnancy, believed to extend to three years.
மும்மா முக்காணி: ஒரு பின்னம்.
மும் முந்திரி:  ஒரு பின்னம்.
மும்முக்காணி: மும்மா முக்காணி, ஒரு பின்னம்.
மும்முட்டி: சிற்றாமுட்டி, பேரா முட்டி, நாகமுட்டி எனும் செடிகள்.
மும்முடிச் சோழன்:    முதலாம் இராசராசன்
மும்முறை:    மூன்று தரம்.
மும்மையணு:    Mole in a sunbeam
மும்மொழி:    பழி கூறல், புகழ் கூறல், மெய் கூறல் எனப்பட்ட மூன்று வகைப்பட்ட மொழி.
முக்கட் செல்வன்:    முக்கண் பகவன். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடும் காரிக்கிழார், ‘முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே’ என்கிறார்.
                      அக நானூற்றின் பரணர் பாடல், ‘ நான்மறை முது நூல் முக்கண் செல்வன்’என்கிறது. நான்மறைகளாகிய முது நூல்கள் உணர்ந்த மூன்று கண்களை உடைய தெய்வம் என்று பொருள். முக்கண்ணன் என்ற சொல்லைக் கலித்தொகை ஆள்கிறது.
’மூன்றங்கு இலங்கு நயனத்தன மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்’
என்று திருவாசகம் பேசுகிறது. நயனம் எனில் கண். ‘அனுமன் நகர் தேடு படலத்தில், இந்திர சித்தனைப் பார்த்து, ‘முக்கண் நோக்கினன்’ என்கிறான். அக்க குமாரன் அனுமனுடன் போருக்கு எழும்போது, தந்தையாகிய இராவணனிடம் விடைபெறும் காட்சியின் பாடல் ஒன்று.
    ’முக்கணான் ஊர்தி அன்றேல், மூன்று உலகு அடியின் தாயோன்
ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல்
திக்கயம் அல்லதேல், புன் குரங்கின் மேல் சேறி போலாம்!
இக்கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின்; எந்தாய்!’
    அக்க குமாரன் இராவணனிடம் கூறும் பாடலின் பொருள்:
    ’எந்தாய்! நீ போருக்குச் சென்று பொருதும் அளவுக்கு அவன் யார்?
    முக்கண் சிவனின் இடப வாகனம் அல்ல. மூவுலகினையும் தனது ஈரடிகளால் தாவியளந்தவனாகிய திருமாலின் ஊர்தியான கருடப் பறவை அல்ல. அந்தத் திருமால் பள்ளி கொள்ளும் ஆதிசேடன் அல்ல. பூமியின் எட்டுத் திக்குகளிலும் நின்று பூமியைத் தாங்கும் அட்ட திக்கயங்களான ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வ பௌமம், சுப்ரதீபம் ஆக்யவற்றுள் ஒன்றல்ல. அற்பக் குரங்கொன்று நம் எதிரே நிற்கிறது. அதனுடன் நீ போரிடப் புகுவது உனக்கு அழகா? அந்தக் கடமையை எனக்குத் தந்து நீ கவலையின்றி இருப்பாயாக’
    முக்கண்ணன் பற்றி மேலும் சில சொற்கள் பார்க்கலாம்.
முக்கண்ணன்:    சிவன், விநாயகன், வீரபத்திரன்.
முக்கண்ணான்:    ’முக்கண்ணான் மூ எயிலும் உடன்றக்கால்’ என்பது கலித்தொகை. முக்கண்ணனாகிய சிவன் அசுரர்களின் மூன்று மாயக் கோட்டைகளை எரித்தவர் என்பது பொருள். ‘பிறை நுதல் முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்’ என்பதும் கலித்தொகை. பிறைநுதலும் முக்கண்ணும் உடைய சிவனது நிறம் போன்ற குரால் நிறக் கானகன் என்று பொருள். குரால் என்பதற்கு dim, tawny colour என்று பொருள் தருகிறது தமிழ் லெக்ஸிகன். (மங்கிய, பழுப்பு மஞ்சள் நிறம்). புகர் நிறம் என்கிறது திவாகர நிகண்டு.
முக்கணன்:    முக்கண்ணன்
முக்கணி:    முக்கண்ணி, துர்க்கை
முக்கண்ணப்பன்: முக்கண்ணன்
முக்கட்டு:    முச்சந்தி, இக்கட்டான நிலை, விரல்களின் பொருத்து.
முக்கட்டெண்ணெய்: முக்கூட்டு எண்ணெய்
முக்கட்பகவன்:    மூன்று கண்களை உடைய கடவுள். கபிலரின் ‘இன்னா நாற்பது’ என்னும் பதினெண்கீழ்க் கணக்கு நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுள், ‘முக்கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா’ என்கிறது.
முக்கடுகம்:    திரிகடுகம்
முக்கடுகு:    திரிகடுகம்
முக்கண்டகம்:    நெருஞ்சி
முக்கப்பு:    சூலாயுதம்
முக்கரணம்:    திரிகரணம்
முக்கரம்:    மூன்று முனைகளுடைய சூலம்
முக்கருணை:    கருணைக்கிழங்கின் மூன்று வகைகள். காறு கருணை, காறாக் கருணை, புளிக்கருணை
முக்கனி:    மா, பலா, வாழை எனும் மூவகைப் பழங்கள். கம்பராமாயணத்தின் நாட்டுப் படலம், ‘முந்து முக்கனி’ என்று கனிகளில் முதன்மையாக எண்ணப்படுகிற மா, பலா, வாழை பேசுகிறது.
முக்காதலர்:    கணவன், தோழன், மகன் என்று மூன்று நட்பாளர்கள்.
முக்கால்:    மூன்று கால், மும்முறை, மூன்றாவது முறை.
                           ஒருவகைச் சந்தம்
முக்கால் வட்டம்:   கோயில்
முக்காலம்:    இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்
வானரத் தானை காண் படலத்தில், கரடிகளுக்குத் தலைவனாகி நின்ற சாம்பனைப் பற்றிக் கூறும்போது, கம்பன், ‘முக்காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான்’ என்கிறார். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்களையும் நிறைந்த அறிவால் முறையே அறிந்து சொல்ல வல்லவன் சாம்பன் என்று பொருள்.
முக்காலம் அறிந்தவன்:திரிகால ஞானி
முக்காலி:    மூன்று கால்களை உடைய பீடம். இந்தியில் தீன்பாய் என்பர்.பாய் என்றால் கால். தீன்பாய் மருவி தீப்பாய் ஆகி அதுவே டீப்பாய் ஆயிற்று. கால் என்று பொருள் தரும் பாய் என்னும் சொல்லில் பிறந்ததுவே பாயா. அக்கினி என்று பொருள் உண்டு.
முக்காழ்:    மூன்று கொத்து முத்து வடம்.
முக்காழி:    மூன்று கொட்டையுள்ள பனம்பழம்.
முக்குடுமி:    மூன்று முடிச்சுள்ள குடுமி. சூலம்.
முக்குடை:    மூன்று அடுக்குள்ள குடை. அருகக் கடவுளுக்கு உரியது.
முக்குடைச் செல்வன்:    அருகக் கடவுள், முக்குடையான், முக்குடையோன்.
முக்குணம்:    திரி குணம்.
முக்குலம்:    மூன்று அரச குலம்.
முக்குழிச் சட்டி: மூன்று குழிகள் கொண்ட பணியாரச் சட்டி.
முக்குளம்:    மூன்று நதிகள் கூடுமிடம். திரிவேணி சங்கமம். கங்கை, யமுனை, சரசுவதி போல.
முக்குற்றம்:     காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றங்கள்.
முக்கூட்டரத்தம்: வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மென்ற சாறு.
முக்கூட்டு:    மூன்று சரக்குகளைக் கொண்ட மருந்து.
முக்கூட்டு நெய்: முக்கூட்டு எண்ணெய். முக்கூட்டுத் தைலம்.
முக்கூட்டெண்ணெய்: பசுநெய், ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றும் சேர்ந்த மருந்து எண்ணெய்.
முக்கூடல்:    மூன்று நதிகள் கூடும் புண்ணியத் துறை. திருநெல்வேலி மாவட்டத்தில் சித்திரா நதி, உப்போடை, தாமிரபரணியுடன் கூடும் இடத்திலுள்ள திருமால் தலம்.
முக்கூடற்பள்ளு: 17 ஆம் நூற்றாண்டில், என்னயினாப் புலவரால், முக்கூடல் அழகர் மேல் இயற்றப் பெற்ற பள்ளு இலக்கியம்.
முக்கை:    மூன்று கை.
முக்கைப் புனல்:   உள்ளங்கையில் நீரேந்தி மூன்று முறை பிதிர்களுக்குச் செய்யும் கடன்.
முக்கோட்டை:    வழிபட்டோர்க்குக் கவித்துவம் அருளும் துர்க்கை கோயில்.
முக்கோடி ஏகாதசி: மார்கழி மாதம் சுக்ல பட்சத்து எகாதசி.
முக்கோண்:    முக்கோணம், திரிகோணம். Triangle.
முக்கோணம்: Triangle. நரகங்களில் ஒன்று.
முக்கோல்:    திரிதண்டம். ‘நூலே கரகம் முக்கோல் மணையே’என்பது தொல்காப்பியத்துப் பொருட்பால் கூறும் அந்தணர்க்குரிய அடையாளங்கள். பூணூல், கலயம், முக்கோல், மணை.
    ’எறித் தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்,
    உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்’
    என்பது கலித்தொகை. எரிக்கும் வெய்யில் தாங்கக் குடை பிடித்து, முக்கோலும், கெண்டியும் தோளில் அசைய நடப்பவர்கள் அந்தணர்கள் என்பது பொருள். முத்தண்டம் என்றால் முக்கோல். ஏக தண்டம் என்றால் ஒற்றைக் கோல்.
முக்கோல் பகவன்: முக்கோல் தாங்கிய சந்நியாசிகள்.
முச்சக்கரம்:    முப்புவனம், திரிபுவனம், புவனம் மூன்றும். பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பொருநராற்றுப் படை; சோழன் கரிகாலனை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பாடலான இறுதிப் பாடல்.
    முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
    இச்சக்கரமே அளந்ததால்- செய்ச் செய்
    அரிகால் மேல் தேன் தொடுக்கும் ஆய்புனல் நீர் நாடன்
    கரிகாலன் கால் நெருப்பு உற்று’
    என்று பதிவு செய்கிறது. மூன்று உலகங்களையும் அளப்பதற்கு நீட்டிய கரிகாலனது கால் இந்த நில உலகை மட்டுமே அளந்தது. வயல்கள் தோறும் அறுக்கப்பட்ட அரிகள் மேல் வண்டுகள் தேன் கொணர்ந்து தொடுக்கும் நீர்வளம் உடைய கரிகாலன் கால் சிறுவயதில் நெருப்பு உற்றது என்பது பொருள்.
முச்சகம்:    முப்புவனம். மூன்று உலகம்.
        ’இச்சகத்துளாரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
        அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!’
என்கிறார் பாரதி. இச்சகம் எனில் இங்கு இந்த உலகம். நன்னூல் சொல்லதிகாரம் கடவுள் வணக்கப் பாடலோ,
‘முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல்லே!’
என்கிறது. மூன்று உலகங்களுக்கும் நிழல் தரும் முழு மதி போன்ற மூன்று குடையை உடைய அழிவில்லாத கடவுளின் திருவடி தொழுது சொல்லதிகாரத்தின் இலக்கணம் கூறுவேன் என்கிறார் பவணந்தி முனிவர்.
முச்சங்கம்:    முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள்.
முச்சட்டை:    Elegance, Beauty, Neatness  : பொலிவு, அழகு, சுத்தம்.
முச்சடை:    திரிசடை. வீடணன் மகள். அசோக வனத்து சீதைக்குத் துணை இருந்தவள். கம்பன் திரிசடையை முச்சடை என்பான்.
முச்சத்தி:    அரசர்க்கு உரிய மூன்று ஆற்றல்கள். பிரபு சக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி. இன்றைய ஆள்வோர்க்கு உரிய முச்சந்திகள் கயமை சக்தி, துரோக சக்தி, ஊழல் சக்தி என்பன.
முச்சதுரம் :   முக்கோணம்
முச்சந்தி:    மூன்று சாலைகள் கூடுமிடம்
முச்சந்தி மூப்பன்: முச்சந்தியில் நிற்கும் நாட்டார் தெய்வம். சதுக்க பூதம் நினைவுக்கு வருகிறது.
முச்சலீலிகை  :  உமிழ் நீர், சிறு நீர், நாத நீர் எனும் மூவகை நீர்
முச்சாரிகை:    Parade of horses, chariots and elephants. குதிரை, தேர், யானை இவை சேர்ந்து சாரி போதல்.
முச்சிரம் :   சூலம்.
முச்சுடர்  :  சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று சோதிகள்.
முச்சொல் அலங்காரம்: ஒரு தொடர், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, மூன்று விதமான பொருள் தரும் சொல்லணி
முந்நீர்  :  கடல் நீர். ஆக்கல், அளித்தல், காத்தல் தன்மையுடைய முந்நீர்க் கடல். அனுமனின் கடல் தாவு படலத்தில், கம்பன், ‘முந்நீர் தாவி’ என்கிறான். ‘முதல் அந்தணன், ஆதி நாள், அம் முந்நீரில் மூழ்கி, தவம் முற்றி, முளைத்தவா போல்’ என்கிறான். முதல் அந்தணனாகிய பிரம்மன், முந்தை நாள், தன்னைப் படைத்தவனைத் தேடி, கடலில் மூழ்கித் தவம் செய்து, வெளிப்பட்டதைப் போல என்பது பொருள். ‘முது முந்நீர்’ என்பார் திருமங்கை ஆழ்வார் திருக்கண்ணபுரம் பாடும் போது. முந்நீர் எனில் ஆற்று நீர், ஊற்று நீர், மழைநீர் என்பார்.
முந்நூல்:     பூணூல்
முந்நூறு:    மூன்று நூறு. வேள் பாரியைப் பாடும் கபிலன்,
’முந்நூறு ஊர்த்தே தன் பறம்பு நல் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்!’
 என்கிறார். பாரியின் அழகிய பறம்பு நாடு, முந்நூறு ஊர்களைக் கொண்டது. அந்த முந்நூறு ஊர்களையும் பரிசிலர் வேண்டி வந்து பெற்றனர் என்பது பொருள்.
முந்தூழ் :   முந்தும் பழைய ஊழ்வினை
முந்நாடி:    மூன்று நாடிகள்
முப்பகை:    ஆன்மாவைக் கெடுக்கும் முப்பகைகள். காமம், வெகுளி, மயக்கம். கம்பனின் பால காண்டத்தில் கார் முகப் படலம். விசுவாமித்திர் முகக்குறிப்பு அறிந்த இராமன், சனகனின் சிவ தனுசு நோக்கி எழுந்த காட்சி. கம்பன் உவமை நயம் தேக்கியது.
    ’பொழிந்த நெய் ஆகுதி வாய் வழி பொங்கி
    எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
    அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்,
     பொழிந்தனர் ஆசிகள், முப்பகை வென்றார்!’
வேள்வியில் ஒரு சேரச் சொரிந்த நெய் வீழ்ந்த இடத்தில் இருந்து பொங்கி மேலெழுந்து நன்றாக எரியும் நெருப்புப் போல இராமன் எழுந்தான். சனகனின் சிவதனுசு வைத்துள்ள இடம் நோக்கிச் செல்லலானான். வில் முறியப் போவது உறுதி என்றெண்ணிய விண்ணவர் ஆர்த்தனர், ஆசிகள் பொழிந்தனர் முப்பகை வென்ற முனிவர்கள் என்பது பொருள்.
ஆன்மாவுக்கான முப்பகைகள் இவை எனில், இன்று மக்களுக்கான புறப்பகைகள் என்று எவற்றைச் சொல்வோம்? அரசியல்வாதிகள், தரகர்கள், அதிகாரிகள்?
முந்நூல்: முப்புரி நூல். பூணூல். அரிச்சந்திரன் தந்தையாகிய திரிசங்கு, வசிட்டனிடம் சாபம் பெற்றபின், அவன் தோற்றத்தைக் கூறும் கம்பன் (மிதிலைக் காட்சிப் படலம்) முந்நூல் பற்றிப் பேசுகிறான்.
முப்பந்தி மண்டபம்: மூன்று பந்திகளாகத் தூணுள்ள மண்டபம்.
முப்பத்திரண்டு அறம்:  32 வகை தான தர்மங்கள். Thirty two kinds of Charity. சற்றுப் பொறுத்துக் கொண்டால் முழுப்பட்டியல்.
 1. ஆதுலர் சாலை (வறியவர்க்கு உண்டியும் உறைவிடமும் வழங்கும் சாலை)
 2. ஓதுவார்க்கு உணவு
 3. அறு சமயத்தார்க்கு உணவு
 4. பசுவுக்கு வாயுறை (’யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை’- திருமந்திரம்)
 5. சிறைச் சோறு
 6. ஐயம் (’ஐயம் இட்டு உண்’ – ஆத்தி சூடி)
 7. நடைத் தின்பண்டம் (வழி நடப்போர்க்கு வழங்கும் சிற்றுண்டி)
 8. மகச் சோறு (கைப்பிள்ளைச் சோறு)
 9. மகப் பெறுவித்தல் (பிள்ளைப் பேறு பார்த்தல்)
 10. மக வளர்த்தல் (பிள்ளை வளர்த்தல்)
 11. மகப்பால் (கைப்பிள்ளைக்குப் பசும்பால்)
 12. அறவை பிணம் சுடுதல் (அறவை- அனாதை)
 13. அழிந்தோரை நிறுத்தல்
 14. வண்ணார்
 15. நாவிதர்
 16. வதுவை
 17. பூணூல்
 18. நோய் மருந்து
 19. கண்ணாடி
 20. நாளோலை
 21. கண் மருந்து
 22. தலைக்கு எண்ணெய்
 23. பெண் போகம்
 24. அட்டூண்
 25. பிறர் அறங்காத்தல்
 26. தண்ணீர் பந்தல்
 27. மடம் (கட்டுவது)
 28. தடம் (வழி அமைத்துத் தருவது)
 29. கா
 30. ஆவுறிஞ்சு நடு தறி
 31. ஏறு விடுத்தல் (பிறர் பசு சினையாகத் தனது காளையைச் சேர விடுவது
 32. விலை உயிர் கொடுத்துக் கொலை உயிர் காத்தல்
முப்பத்து முக்கோடி தேவர்: 33 கோடி தேவர்கள். முப்பத்து மூவர்
முப்பத்து முத்தேவர்: முப்பத்து மூவர்
முப்பத்து மூவர்: The 33 Celestials in four groups.
    அஷ்ட வசுக்கள்-      8
    ஏகாதச  ருத்திரர்-   11
    துவாதச ஆதித்தர்- 12
    அசுவினி தேவர்-       2
    இருவர்
        ஆக          33
    ஆண்டாள் திருப்பாவையின் இருபதாம் பாடல்,
    ’முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே’
என்கிறது.
    ’மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
    தேவரும் காணாச் சிவபெருமான்’
என்கிறது திருவாசகம்
மும்மதம் :    தத்துவ மசி எனும் சொற்றொடர்.
    தத்+துவம்+மசி.
மதம் எனில் ஆணவம் அல்லது திமிர் என்றொரு பொருள் உண்டு எங்களூரில். பணத் திமிர், அதிகாரத் திமிர், சாதித் திமிர் எனலாம் மும்மதத்தை.
முப்பது :   மூன்று பத்து. ‘பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாள், திருப்பாவை முப்பாதாவது பாசுரத்தில்.
    முப்பது என்பதை, ’முப்பஃது’ என்பர். ‘எழுத்து எனப்படுவ அகரம் முதல் ‘ன’ கரம் இறுவாய் முப்பஃது என்ப’ என்பது தொல்காப்பிய நூற்பா.
முப்பது நோன்பு: ரம்சான் நோன்பு
முப்பலம்:    திரிபலம்
முப்பலை :   திரிபலை
முப்பழம் :   முக்கனி, திரிபலை
முப்பால் :    1. அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுப்புகள்.
    ’அறம் பொருள் இன்பம் என்று அம்மூன்றின்’ என்கிறது கலித்தொகை.
    2.திருக்குறள்
    3. ஆண்பால், பெண்பால், அலிப்பால்
    4. காய்ச்சுப்பால், திரட்டுப்பால், குழம்புப் பால்
    5. தாய் பால், பசுவின் பால், ஆட்டுப் பால்
முப்பாலர் :   முப்பாலகர். பால் குடிக்கும், பாலும் அன்னமும் உண்ணும், அன்னம் மாத்திரமே உண்ணும் பாலகர்
முப்பாழ் :   நிலத்திற்கு உண்டாகும் மூன்று வகைக் கேடுகள். வெயில் பாழ், வெள்ளப் பாழ், குடிப் பாழ்
முப்பாற் புள்ளி    : ஆய்த எழுத்து. ‘ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன’ என்பது தொல்காப்பியம்
முப்பரம் பொருள்: அயன், அரி, அரன் ஆகிய மும்மூர்த்திகள். ‘முப்பரம் பொருளுக்கும் முதலை’ என்பார் கம்பர்.
முப்பான்:    முப்பது
முப்பிணி :   முத்தோஷம், திரி தோஷம். வாதம், பித்தம், சிலேட்டுமம்
முத்தலை அயில்: மும்முனைகளுடைய சூலம்
முத்தலை எஃகன்: எஃகினால் ஆன முச்சூலம் தரித்த சிவன்
முத்தலை எஃகு: முச்சூலம், திரிசூலம்
முத்தலை எஃகினான்: மூன்று தலைகளை உடைய சூலம் தரித்தவன்
முத்தலைக் கழு:  முச்சூலம்
முத்தலைக் குரிசில்: அரன்
முத்தொழில் :   படைப்பு, காப்பு, அழிப்பு என்று கடவுளின் முவகைத் தொழில்.
முத்தீ  :  முத்தீ பற்றிப் பரிபாடலும் புற நானூறும் பேசுகிறது.  ’காருக பத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி எனும் மூவகை வேதாக்கினி.’ இரு பிறப்பாளர் முத்தீப் புரைய’ என்கிறது புறநானூறு.
    உதரத் தீ, காமத் தீ, சினத்தீ எனும் மூவகை அக்கினி. ‘Fire used in preparing medicines of three kinds or degrees.
முத்தீ மரபினர்:    வேதாக்கினி மூன்றையும் பேணும் குலத்தவர். பார்ப்பார்.
முத்தொழில்:    உழவு, வணிகம், ஆநிரை காத்தல் எனும் மூன்று தொழில்களை உடையவர்.
முத்தொழில் பகவன்: கடவுள்
முத்தொள்ளாயிரம்: சேர, பாண்டிய, சோழ மன்னர்கள் மீது, தலைக்கு 900 பாடல்கள் வீதம் பாடப்பெற்ற 2700 வெண்பாக்கள் கொண்ட சங்க இலக்கிய நூல். தமிழனுக்கு இத்தனை போதும் என்பதால் இன்று 108 பாடல்களே கிடைத்துள்ளன.
முப்பருவத்து மங்கையர்: பருவம் நிரம்பாதவர், பருவ மங்கையர், பருவம் முதிர்ந்தவர்
முப்புடி:    திரிபுடி, முக்குணம்
முப்புடைக் காய்: முப்புடைக் கனி. தேங்காய்.
    பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான, கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றியபெரும்பாணாற்றுப் படை,
    ’பகற் பெயல் மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகின்
    புடை சூழ் தெங்கின் முப்புடைத் திரள் காய்’
என்கிறது. பல்கலைக் கழகங்களின் தமிழ் துறைத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெங்கு என்பது தென்னை. தெங்கின் முப்புடைத் திரள்காய் எனில் தேங்காய்.
முப்புரம் :   திரிபுரம். மண், விண், பாதலம்
    கம்பனின் மிகைப் பாடல் ஒன்று ‘முப்புரம் எரித்தோன்’ என்கிறது சிவனை.  இராவணன் முதல் போர் புரி படலம் முடிந்த பின்னர், கும்பகருணன் வதைப் படலத்தில் அற்புதமான சில பாடல்கள் உண்டு. இராமனின் வில்லாற்றலை வியக்கும் பாடல்கள்.
    ’காகுத்தன் பகழி மேருவைப் பிளக்கும். விண்கடந்து ஏகும். பாரினை உருவும். கடல்களைப் பருகும். இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும் மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் என்கிறான் கும்பன்.
    ’முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ்சிலையும், வீரன்
    அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக்கொன்றும் ஆகா!’
என்கிறான். முப்புரங்களையும் ஒருங்கே அழித்த வலிய வெம்மையான சிவபிரானது வில்லானது, இராமனி அற்புத வில்லுக்கு ஒப்பாகச் சொல்லலாகாது என்பது பொருள்.
முப்புரம் எரித்தான்: சிவ பெருமான், சிவனார் வேம்பு, ஆடு தீண்டாப் பாளை
முப்புரி :   மூன்று நூல் சேர்த்துத் திரித்த நூல், முப்புரி நூல். பூணூல், முந்நூல், முப்புரம்
முப்புரி நூலோர்: பார்ப்பார்
முப்புவனம்:    சுவர்க்கம், பூமி, பாதாளம், ஆகிய மூன்று உலகங்கள்
முப்புள்ளி:     ஆய்த எழுத்து
முப்பூரம்:    பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்
முப்பொருள்:    திரி மூர்த்தி. பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள்
முப்பொழுது:    காலை, உச்சி, மாலை எனும் மூன்று பொழுதுகள். முப்போது
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்: ஆதி சைவர். தருமியின் குலத்தவர்
முப்பொறி:    திரிகரணம்
மூ :   ஓர் எழுத்துச் சொல். மூன்று என்று பொருள்.
மூவர்:    மும்மூர்த்திகள், திரி மூர்த்திகள். திருஞான சம்பந்தர் பாடுகிறார்.
    ’மூவருமாகி, இருவருமாகி, முதல்வனுமாய் நின்ற மூர்த்தி’ என்று.
    ’மூவன் காண் மூவர்க்கும் முதல்வன் காண்
        மூன்றுமாய்ப் பின்னுமாய் முடிவானான் காண்
    காவன் காண்  உலகுக்கோர் கண்ணானான் காண்
         கங்கானன் காண், கயிலை மலையினன் காண்’
என்கிறார் அப்பர். திருத்தண்டகத்தில் அவர் மேலும் பாடுவது,
    ’மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே
        முதல் நடுவு முடிவானானைத்
    தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத்
        திசை முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை’
என்று.
மூவுலகம் :   மூவுலகு, திரிலோகம்
மூவுருவிலி ராமன்: பரசுராமன், தசரதராமன், பலராமன்
மூவரில் முதல்வன்:    சிவன். திருமால், பிரம்மன் ஆகியோரில் ஒருவன், சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல. மூவர்க்கும் தலைவர் என்பதும் அஃதே.
மூன்று :   மூன்றாவதான எண். ‘ஞாலம் மூன்று அடித்தாய் முதல் வீற்கு’ என்பது கலித்தொகை. மூன்று உலகங்களையும் தனது திருவடியால் அளந்த முதல்வனுக்கு என்பது பொருள். திருக்கோடிக் குழகரை, சுந்தர மூர்த்தி நாயனார்,
    ’மூன்றான் கடல் நஞ்சும் உண்ட அதனாலே’ என்கிறார்.
    சிவபெருமான் திருவந்தாதி என்பது பதினோராம் திருமுறையில் 41 நூல்களில் ஒன்று. பரண தேவ நாயனார் இயற்றியது.
    ’மூன்று அரணம் எய்தானே, மூலத் தனிச் சுடரே,
    மூன்று அரணமாய் நின்ற முக்கணனே –
    மூன்றரணமாய் நின்ற சோதி’
என்று பாடுகிறது.
 1.     கண் மூன்று, உலகம் மூன்று, குணங்கள் மூன்று,
 2.     செய்கை மூன்று, கரணம் மூன்று, நாடு மூன்று,
 3.     புவனம் மூன்று என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
மூன்று உலோகம்: பொன், வெள்ளி, செம்பு
மூன்று ஆசை:    மூவாசை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
மூன்று குணம் :   ’மூன்று அவன் குணங்கள்’ கம்பன்
மூவினம்:    பசு, எருமை, ஆடு எனும் கால்நடைகள்
    வல்லினம், மெல்லினம், இடையினம்,  எனும் மெய் எழுத்துகள்
மூன்று எயில் :   மூன்று கோட்டைகள், முப்புரம்
மூன்று அயில் :   முச்சூலம்
மூவிசை :   மந்தம், மத்திமம், உச்சம் எனும் மூன்றான சுர வகை
மூன்று அனல் :   முத்தீ
மூன்றெழுத்து:    அ, உ, ம எனும் முன்று எழுத்துகளால் ஆன ‘ஓம்’
முந்நீர் ஞாலம் :   கடல் நீரால் சூழப்பட்ட உலகம்
மூன்றாம் கட்டு: வீட்டின் மூன்றாம் கட்டிடப் பகுதி
மூன்றாம் கால் :   மூன்றாம் ஆண் குழந்தை. திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பு நடப்படும் பந்தற்கால்.
மூன்றாம் திருவந்தாதி: பேயாழ்வார் பாடிய அந்தாதி
மூன்று தண்டர்: திரி தண்ட சந்நியாசிகள்
மூன்று நூல்:     முப்புரி நூல்
மூன்று மா:    ஒரு பின்னம், இருபதில் மூன்று பங்கு.
மூன்று வீசம் :   பதினாறில் மூன்று பங்கு
மூவரும் :   மும்மூர்த்திகளும். ‘மூவர்க்கு ஆயினும் காலவரை கடத்தல் அரிது’
மூவர்:    1. கண்ணுதலான், கரியமால், தாமரை மேல் உறைவான்.
    2. எஃகம் கொண்டான், நேமி கொண்டான், வாணி கொண்டான்
    3.உமை நாதன், புள் ஊர்தியான், நாட்டம் எட்டு உடையான்.
மூவிலை ஒரு படை:    முச்சூலம்
மூவிலை வேல்: முச்சூலம்
மூவினை:    படைப்பு, காப்பு, அழிப்பு என்ற கடவுளின் செயல்கள்
திரி கடுகம்:    சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மருந்துப் பொருள்கள்.
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. நல்லாதனார் இயற்றியது, 100 பாடல்கள்.
திரி கண்:    மூங்கில்
திரி கந்தம்:    மூவகை வாசனைப் பண்டங்கள். கிராம்பு, சந்தனம், அகில், நாவற்பூ, சண்பகப் பூ, செஞ்சந்தனம் போன்றவற்றுள் மூன்று.
திரி கரணம்  :  மனம், வாக்கு, காயம் என மூன்று கருவிகள்
திரிகால சந்தி  :  காலை, பகல், மாலைகளாகிய மூன்று சந்தியா காலங்கள்
திரிகால ஞானம்: knowledge of the past, the present, and the future. முக்கால அறிவு
திரிகால வர்த்தமானம்: முக்கால சம்பவங்கள்
திரி குணம்:    முக்குணங்கள். சத்துவம், இராசதம், தாமதம்
திரி கூடம்:    மூன்று சிகரங்கள் கொண்ட மாலை. ‘குற்றாலக் குறவஞ்சி’ நூல் எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். ‘குற்றாலத் தலபுராணம்’ இயற்றியவர் 18 ஆம் நூற்றாண்டு.
திரிகோண சாத்திரம்:    முக்கோணம் பற்றிய கணித நூல்
திரிகோணம்:    முக்கோணம்
திரிசந்தி :   திரிகால சந்தி
திரி சாதம்  :  லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, ஏலம் எனும் மூன்றும் கூட்டிச் செய்த மருந்து
திரி சாரம்:    நவச்சாரம், யவட்சாரம், சத்திச் சாரம் எனும் மூவகை உப்புகள்
திரிசிர சாதி:    தாளத்திற்குரிய சாதி ஐந்திலும், மூன்று அட்சர காலம் கொண்ட பிரிவு. திரிசிரம்.
திரிசிரசு: இராமயணம் கூறும் மூன்று தலையுள்ள அரக்கன். திரிசிரா.
திரிசிரபுரம்:    திருச்சிராப் பள்ளி
திரி சுகந்தம்:    சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கம் எனும் மூவகை வாசனைப் பண்டங்கள்
திரி சூலக் கல்:    சிவன் கோயில் நிலங்களின் எல்லை குறிக்கும் கல். திரி சூலம் குறி கொண்டது.
திரி சூலக் காசு:    பழைய வரி வகை
திரி சூலம்:    முத்தலைச் சூலம்
திரி சூலன்:    யமன்
திரி சூலி :   சிவன், காளி
திரி சொல்:    தமிழ்ச் செய்யுளில் வழங்குவதற்குத் தகுதியான சொல், தொல்காப்பியத்தின்படி.
திரித்துவம்:    கடவுளின் மூன்று தன்மைகள்
திரி தசி:    திரியோ தசி
திரி தண்ட சந்நியாசி:    முக்கோல் தரிக்கும் வைணவத் துறவி. திரி தண்டி.
திரி தண்டம்:    வைணவ சந்நியாசிகள் கையில் தாங்கும் முக்கோல்.
திரி தண்டு:    திரி தண்டம்
திரி திகை:    திரிதியை. கிருஷ்ண சுக்ல பட்சங்களில் வரும் மூன்றாம் திதி.
திரி தோஷம்:    முப்பிணிக் கூறு
திரி நேந்திரன்:    சிவன், முக்கண்ணன்
திரிபுர சுந்தரி:    பார்வதி
திரிபுர தகனன்:    முப்புரம் எரித்தவன்
திரி பலை:    கடுக் காய், தான்றிக் காய், நெல்லிக் காய்
திரிபுரம்:    பொன், வெள்ளி, இரும்பால் செய்யப்பட்ட  விண்ணில் சஞ்சரித்த மூன்று நகரங்கள். சிவனால் எரிக்கப்பட்டவை.
திரிபுர தாபினி:    108 உபநிடதங்களில் ஒன்று.
திரிபுராந்தகன்:    திரிபுர அந்தகன். திரிபுர தகனன், திரிபுராரி
திரிபுரை:    பார்வதி
திரிபுருஷம்:    3 தலைமுறை
திரிபுவனம் : திரிலோகம், மூவுலகு
திரிமஞ்சள்  : மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள் என மூவகை
திரிமணி:    பௌத்தர் வணங்கும் புத்தன், புத்த தருமம், புத்த சங்கம்
திரி மலம்:    மும்மலம்
திரிமாத்திரை:    உப தாளம் ஐந்தினுள் ஒன்று
திரிமார்க்கம்:    முச்சந்தி
திரிமூர்த்தி:    மும்மூர்த்தி. பிரம்மன், விஷ்ணு, உருத்திரன்
திரிமூலம்:    திப்பிலி, சித்திரம், கண்டு மூலம் எனும் மூவகை வேர்கள்
திரியட்சி:    திரி யக்கி, முக்கண்ணனுடைய தேவி.
    தேங்காய்.
திரியம்பகம் :   சிவன் வில்
திரியம்பகன் :   சிவன்
திரியம்பகி :   சக்தி
திரியாவாரம்:    வஞ்சனை
திரிசமன் :   விஷமம், திரிசமம்
திரியேகக் கடவுள்: Father, son and the Holy Spirit
திரியேகம் :   கடவுளின் முத்திறத் தன்மை
திரியேகன்  :   முத்திறக் கடவுள்
திரிலவங்கம்:    சிறு நாகப் பூ, செண்பகப் பூ, கிராம்பு என்ற மூன்றுவகை வாசனைப் பண்டம்
திரிலோக சிந்தூரம்: காந்தம், இரும்பு, செம்பு அல்லது பொன், வெள்ளி,செம்பு இவற்றால் செய்த சிந்தூரம்
திரிலோகம் :   மூவுலகு. பூமி, அந்தரம், சுவர்க்கம்
திரிலோகம்:    மூன்று உலோகங்கள். பொன், வெள்ளி, செம்பு
திரிலோகாதிபதி: மூன்று உலகங்களின் அதிபதி, இந்திரன்
திரிலோகேசன்: சூரியன்
திரிலோசனன் :   திரிநேந்திரன், முக்கண்ணன்
திரிலோசனி :   துர்க்கை
திரி வர்க்கம்  :  அறம், பொருள், இன்பம்
திரிவாசம் :   கக்கரி என்னும் வெள்ளரி வகை
திரிவிக்கிரமன் :   மூன்றடியால் உலகளந்தவன், திருமால்.
    ’திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான்’ என்னும் திவ்யப் பிரபந்தம்.
    சூரியன்
திரிவேணி :   திரிவேணி சங்கமம்
திரீலிங்கம் :   Feminine Gender
மூன்றுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்று தெரியவில்லை. எண்களில் என்ன மேலும் கீழும் மனிதரைப் போல என்று யோசிப்பேன் பல சமயங்களிலும், கணிதம் பயின்ற மாணவன் எனும் காரணத்தால்.
ஏலம் கூவும்போதும் கூட ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்கிறார்கள். ஓட்டப் பந்தயத்துக்குத் தயார் எடுத்து நிற்கையில் ஒன், டூ, த்ரீ சொல்கிறார்கள். பூமா தேவி, கீழே விழுபவரை மூன்று முறை பிழை பொறுத்துத் தாங்குவாள் என்றும், மூழ்கித் தத்தளித்துக் கொக்குப் பிடிப்பவரைத் தண்ணீரும் மூன்று முறை தாங்கிக் காப்பாற்றப் பார்க்கும் என்று சொல்வார்கள். வேண்டாம் என்கிற பொருளையும், ‘சவத்தை மூன்று முறை தலையைச் சுத்தித்தூரப் போடு’ என்பார்கள்.
கொள்ளி வைப்பவனுக்கும் மூன்று சுற்று. கொள்ளிக் குடத்தில் மூன்று ஓட்டைகள். ஆராதனைத் தீபத்தை மூன்று முறை கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள். ‘ஒண்ணுக்கு மூணு முறை சொல்லியாச்சு’ அல்லது, ‘ஒண்ணுக்கு மூணு தரம் கேட்டாச்சு’ என்கிறார்கள். மூன்று முடிச்சுப் போடுகிறார்கள் கல்யாணத் தாலி கட்டின்போது. மூன்றாம் பிறை காண்பது நல்லது என்கிறார்கள். கோயில் பிராகாரம் மூன்று முறை சுற்றுகிறார்கள். மூன்று முறை விழுந்து கும்பிடுகிறார்கள்.
தேங்காய்க்கு மூன்று கண், நுங்குவுக்கும் மூன்று கண். விசேட நாட்களில் பொங்கிப் பொரித்து விளக்கு முன் படைக்கும்போது மூன்று இலை போட்டுப் பரிமாறுகிறார்கள். கர்ம காரியம் செய்து விட்டுப் புண்ணியத்துறைகளில் மூன்று முங்கு போடச் சொல்கிறார்கள்.
அடுப்புக் கட்டி மூன்று. நெற்றியில் சைவத் திருநீறு மூன்று பட்டை, வைணவ நாமம் மூன்று கோடு. பக்கம் பக்கமாக எழுதிச் செல்லலாம். பெரியாழ்வாரின் பாடல் ஒன்று.
மூன்றெழுத்து அதனை மூன்றெழுத்து அதனால்
    மூன்றெழுத்து ஆக்கி மூன்றெழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்குடைய
    எம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
    மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
    கண்டம் என்னும் கடிநகரே!
பாடலின் பொருளை வைணவப் பெரியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எமக்கு தத்துவ அறிவு அத்தனை போதாது!

http://solvanam.com/?p=46097

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மும்மை

 1. Logamadevi Annadurai சொல்கிறார்:

  ஆச்சர்யம் அற்புதம் மூன்றுக்கு இத்தனை தகவல்களா? மிக அரிய பதிவு இது. நன்றிகள் பல

 2. kannan na சொல்கிறார்:

  அய்யா அவர்களுக்கு வணக்கம் …
  மும்மை என்ற எண்ணுக்குள் இத்தனை பெரும் ஆற்றல், இத்துணை அரும் ரகசியங்கள் உள்ளன என்பதை, உங்களால் மட்டுமே அய்யா எடுத்துரைக்க இயலும், கட்டுரையை ஒன்றுக்கு மூன்று படித்தாலும் சலிக்காது, இதனை தகவல் களஞ்சியங்களை எப்படி தொகுத்தீர்கள், படித்தீர்கள் என்று எண்ணுகையில், வியப்பு தான் மேலிடுகிறது, தமிழ் உம்மை வணங்குகிறது அய்யா..

  கட்டுரையின் கடைசி பாடல் ஆகச்சிறந்த தேடல்…

  வாழ்க நும் தமிழ்ப்பணி…

  அன்புடன்
  கண்ணன்..
  கொட்டாரம்,
  கன்னியாகுமரி மாவட்டம்..

 3. Ponmana Valsakumar சொல்கிறார்:

  அன்புள்ள நாஞ்சில் நாடனுக்கு,
  தங்களது ” நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ” தொகுப்பில் உள்ள சுவடு என்ற கட்டுரையை மலையாளத்தில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். அதற்காக தங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.

  – பொன்மனை வல்சகுமார்.
  cell : 9443596057

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s