கிழிந்த இலை போதும்

nanjilnadan

நாஞ்சில் நாடன்
ந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் பிடித்து முந்திவந்து நிற்பவனின் யாசிப்பு அது. எந்த நெருக்கடியையும் சின்னச் சலுகையான நிலைப்பாட்டின் மூலம் தப்பித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின்றி வேறல்ல. அதாவது 100 கோடி ரூபாய் வங்கிக்கு வாராக்கடன், தேறாக்கடன் வைத்துவிட்டு `எட்டுக் கோடி ரூபாய் தருகிறோம், கணக்கை சமன் செய்துகொள்ளலாம்’ எனக் கேட்பதைப்போன்று.
நாஞ்சில் நாட்டுக் கல்யாண வீட்டுச் சாப்பாட்டுப் பந்தி நடக்கும் காமண வாசலில், தீவட்டித் தடியர்போல் இருவர் நின்றுகொண்டிருப்பார்கள். நான் சொல்வது 60 ஆண்டுகளுக்கு முந்தைய சமாசாரம். தாலி கட்டி, நாதசுரக்காரர்கள் கெட்டிமேளம் வாசிப்பு நடந்தவுடன், அமர்ந்திருக்கும் ஆடவரில் பெரும் பங்கு எழுந்து, ஆக்குப்புறையை அடுத்து அமைக்கப்பட்டிருக்கும் பந்தி வைக்கப்படும் இடம் நோக்கி நகர்வார்கள், சரசரவென சாரைப்பாம்புபோல. இதைத்தான் `பந்திக்கு முந்துதல்’ என்பார் போலும்.
இலை போட்டு, இலை முழுக்க உப்பு முதல் உப்பேரி ஈறாகப் பரிமாறிவைத்துவிட்டுப் பந்திக்கு ஆள் அனுப்பும் பழக்கம் அன்று நடைமுறையில் இல்லை. இலையில் விளம்பி வைத்த பந்தியில் அமர்வதை, குறைச்சல் என்று நினைத்தார்கள். இன்று அனைத்துக் கல்யாண மண்டபங்களிலும் முதல் பந்தி பரிமாறி வைத்துவிட்டுத்தான் ஆள் அனுமதிக்கிறார்கள். மலையாளிகளின் ‘புடவிட’ அல்லது ‘தாலிகெட்டு’ முடிந்த கல்யாண சத்யாக்களில் அன்றும் இன்றும் அதுவே நடைமுறை.
பந்தியில் உட்கார ஆள் அனுமதிக்கும்போது, நுழைவாசலில் நிற்கும் இரு இடி தடியர்களும் – இன்றைய மொழியில் Punch Men – முகம் பார்த்துத்தான் அனுமதிப்பார்கள். முதல் பந்தியில் சாப்பிடுவது என்பது ஒரு கௌரவம். ஊர்க்கோயிலில் முதல் மரியாதை பெறுவதைப்போல அவசர சோலிக்காரர் சாப்பிட்டுவிட்டு அலுவலகமோ, பள்ளிக்கூடமோ போகிறவர், அடுத்த முகூர்த்தக் கல்யாணத்தில் முகம்காட்ட விரும்புகிறவர், கல்யாணக் கூட்டம் அதிகம் என்பதைப் பார்த்து இரண்டாம் பந்தியில் `பருப்பில் சாம்பாரில் வெள்ளம் சேர்த்துவிடுவார்கள்’ என்ற ‘தள்ளப் பயம்’ கொண்டவர், ‘வந்தசோலி முடியட்டும்’ என்று நினைப்பவர், ‘வயல்ல களை பறிக்க ஆள் விட்டிருக்கேன். போயி என்னான்னு பார்க்கணும்’ என்று கருதுபவர்…
மணமகன் முதல் முடிச்சும் மணமகளின் தாயோ, சகோதரியோ மற்ற இரண்டு முடிச்சுக்களும் இட்டு முடியும் முன்னரே முதல் பந்தியில் ஆள் நிரந்துவிடும் என்றாலும் இடி தடியர்கள் உள் நுழைவோரைக் கண்காணித்து நிற்பார்கள். அழுக்கு வேட்டிக்காரன், அந்தஸ்தில் குறைந்தவன் நுழைய முயன்றால் கை தடுக்கும். வாய், `உனக்கெல்லாம் அடுத்த பந்தியிலே சாப்பிட்டாப் போராதா? அப்பிடி என்ன வெப்ராளம், கிடைக்குமோ கிடைக்காதோனு’ என்று எகத்தாளம் பேசும்.
மாற்றுச் சாதியினர் என்றாலும், அவர்கள் தராதரம் பார்த்து அனுமதி உண்டு. தென்னந்தோப்பு வைத்திருக்கும் புகையிலைக் கடைக்காரர், வயற்காடு பயிர் வைத்திருக்கும் பாத்திரக் கடைக்காரர், கருப்பட்டிக் கடை வைத்து, சிப்பம் சிப்பமாய் மொத்த வியாபாரம் செய்வோரைத் தடுப்பதில்லை. ஆனால், சொந்தச் சமூகத்தினராயினும் இல்லாப்பட்டவர், ஏழை பாழைகள், இராப்பட்டினிக்காரருக்கு இடம் இருக்காது. இதில் தலித்துகள் நிலைமை எண்ணிப் பார்க்கத் தாங்காது.
வில் வண்டி பூட்டி, கல்யாணத்துக்கு வந்த பண்ணையார் முதல் பந்தியில் உண்ணப் போவார். கை கழுவி, வெற்றிலை போட்டதும் வண்டியைப் பூட்டச் சொல்வார். `நாமும் சாப்பிட்டுவிடலாம்’ என்று வண்டியடிப்பவன் பந்தியில் போய் அமர்ந்துவிட முடியாது. அடுத்த பந்திக்குக் காத்திருக்க இயலுமா? ‘எண்ணேன் இழிஞ்ச எல போதும்’ என்றால் விடுவார்களா?
நெருக்கடி ஏற்படும் தருணங்களில் பலபோதும், கந்தக் கிழிந்த இலை போதும் என்பதுதான் நமது மனோபாவமும். பள்ளிகள், கல்லூரிகள், தேவ தூதர்கள் வேலைபார்க்கும் அரசு அலுவலகங்களின் விடுமுறை நாட்களாக இல்லாமல், வாரக் கடைசிகளாகவும் இல்லாத சராசரி நாட்களில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணம் போக வேண்டுமானால் எனது பேருந்து, இருக்கைத் தேர்வு நூதனமாக இருக்கும்.
புதிய, பாட்டுப் போடாத பேருந்தாக, சன்னல் ஓர இருக்கையாக, பேருந்தின் ஓட்டுநரின் பக்கம் இல்லாததாக, பத்துப் பரோட்டாவும் பாதிக்குப்பி மதுவும் அருந்திய பக்கத்து இருக்கைக்காரன் வராதபடி கவனத்துடன்… சொகுசுப் பேருந்து ஒன்றின் கடைசி வரிசையானால் ஏறவே மாட்டேன். காற்றும் வராது, தூக்கித் தூக்கிப் போடும் என்ற அனுபவ அறிவு உண்டு.
பண்டிகை நாட்களில் மக்கள் திரள் அலைமோதும்; விடுமுறை தினம் என்றால், கடைசியிலும் கடைசியான இருக்கையானாலும் போதும்; ஓட்டை, உடைசல் வண்டியானாலும் குற்றம் இல்லை. காதுகிழியும் பாட்டுச் சத்தம் என்றாலும் பாதகமில்லை. பத்து பரோட்டா தின்றவர் பக்கத்தில் அமர்ந்து, தோளில் சாய்ந்து உறங்கிவிழுந்தாலும் மோசமில்லை. `ஊர் போய்ச் சேர்ந்தால் போதும்’ என்று ஏறிவிடுவோம். இதைத்தான் `கிழிந்த இலையே போதும்’ என்று பந்தியில் உட்காரும் மனோபாவம் என்கிறேன்.
(தொடர்ச்சியை விகடன் தீபாவளி மலர் 2016ல் காணவும்)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், விகடன் கதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s