அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க

sudiya-puu
நானும்(ஜெயமோகன்), நாஞ்சில் நாடனும், வசந்தகுமாரும், நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் கர்நாடகா, மகாராஷ்டிரா பக்கமாக சென்றோம்.
சிவாஜி வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம்.
பிஜப்பூர் கோட்டையை பார்த்தோம்.
“கோல் கும்பாஸ்” என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்க்குள் மையத்தில்  இருந்து சாதாரணமாக பேசினாலும்  அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாக கேட்க்கும்படி ஒலியமைப்பு இருப்பதை கண்டு வியந்தோம்.
பிஜப்பூர் மாபெரும் பீரங்கிகளின் ஊர். ஒவ்வொன்றும் ஒரு திமிங்கிலம் என்று தோன்றியது.
ஒருகாலத்தில் அனலுமிழ்ந்த அவை, குளிர்ந்து செயலற்றுக் கிடந்தன.
அங்கிருந்து பூனே நோக்கி செல்லும்போது சாலையோரத்தில் மரத்தடியில் வயலை நோக்கியபடி ஒரு பெரியவர் அமர்ந்திருப்பதை கண்டு வசந்தகுமார், ஓட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் தோளில் மெல்லத் தொட்டார்.
வண்டி நின்றது. நாஞ்சி நாடன் இறங்கி வயல் நோக்கி சென்றார். பெரியவரிடம் மராட்டியிலேயே பேச ஆரம்பித்தார்.
கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது.
அறுவடை இயந்திரம் மாபெரும் வண்டுபோல உறுமியது.
நாஞ்சில் நாடன் வயலின் புது தானிய மணம் பெற்று உணர்ச்சிவசப்பட்டார். கோதுமையை உருவி, ஊதி, வாயிலிட்டு மென்றார்.
புதிய வைக்கோலை எடுத்து முகர்ந்தார்.
அவர், நான் அறிந்த எழுத்தாளர் அல்ல.
அந்த சட்டையை உருவிப் போட்டுவிட்டு வீராணமங்கலத்து விவசாயியாக ஆகிவிட்டார்.
நாஞ்சி நாடன் வேளாண்மையைப் பற்றி சில கேள்விகள் கேட்ப்பதற்குள்ளாகவே பெரியவர் பொறிந்து கொட்டித் தள்ளினார். வழக்கம்போல கோதுமையும் நஷ்டம்தான்.
ஆனல் வேறு வழியே இல்லை.
விவசாயம் செய்தாக வேண்டும்.
மகன்கள் “ஏன் விவசாயம் செய்யவேண்டும்?” என்றுதான் கேட்கிறார்கள்.
ஏன் செய்யவேண்டும் என்று அவரும் யோசிக்காமல் இல்லை.
ஆனால் தந்தையும் பாட்டன்களும் செய்த தொழில். மண்ணை சும்மா விட்டுவிடுவது பாவம்.
“இங்கே விளையும் கோதுமையை எங்கோ ஏதோ வயிறு சாப்பிடவேண்டும் என தெய்வம் எழுதியிருக்கிறது.
எறும்புகளோ, எலிகளோ, பறவைகள்கூட சாப்பிடலாம்.
விவசாயம் செய்யாமல் விடுவது அவற்றையெல்லாம் பட்டினி போடுவது அல்லவா?” என்றார் பெரியவர்.
நாஞ்சில் நாடன் கண்கலங்கிவிட்டார்.
அவர் அருகே அமர்ந்து முகம் கனத்து பழுத்திருக்க, கேட்டுக்கொண்டே இருந்தார்.
பெரியவர் நல்ல மங்கலமான தோற்றம் கொண்டிருந்தார்.
பெரிய வண்ணத் தலைப்பாகை. ஏராளமான பாசிமணி மாலைகளை அணிந்திருந்தார்.
வாயில் வெற்றிலை. சிவப்பு நிறம். முதுமையில் சுருங்கிய முகமானாலும், சிரிப்பும் கண்களில் குறும்பும் இருந்தன.
ஆரோக்கியமானவர் என்பதை குரலே காட்டியது.
நாஞ்சில் பேசிக்கொண்டிருக்கும்போது வசந்தகுமார் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.
நாஞ்சில் நாடனின் “சூடிய பூ சூடற்க” நூலின் அட்டையாக அமைந்தவர் அந்த பெரியவர்தான்.
( ஜெயமோகன்… குங்குமம் இதழில் முகங்களின் தேசம் தொடரில் எழுதியது)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க

  1. பெரியசாமி சொல்கிறார்:

    மதிப்புக்குரிய நாஞ்சில் நாடன் அவர்களின் கவனத்திற்கு.
    சில மாதங்களுக்கு முன், சென்னைப் புத்தகக் கண்காட்சியில், ‘நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்று தலைப்பிட்ட புத்தகம் வாங்கினேன். டிஸ்கவரி பேலஸ் ஜனவரி 2019 வெளியீடு. 14 சிறுகதைகளின் தொகுப்பு. ந.முருகேசபாண்டியனின் தேர்வும் தொகுப்பும. அத்தனை கதைகளிலும் அச்சுப்பிழைகள். பிழைகள் சுட்டிய புத்தகத்தை உங்கள் கவனத்திற்கு அனுப்ப எண்ணம். உங்கள் முகவரி தேவை.
    நட்புடன்,
    பெரியசாமி
    பெங்களூரு
    91-9741912592

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s