http://orukozhiyinkooval.blogspot.in/2016/02/enbiladhanai-veyil-kaayum-naanjil-naadan.html
என்பிலதனை வெயில் காயும்
ஜகன் கிருஷ்ணன்
நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். “என்பிதலனை வெயில் காயும்” என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு விட்டேற்றித்தனம் என்று தெரியவில்லை. பதிப்பகத்தார் கவனிக்க வேண்டும்.
நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க தொகுப்பை தான் முதலில் வாசித்தது. நாஞ்சிலின் படைப்புகளுக்கு ஒரு திறப்பு வெளியாக அமையும் என்பதாலும் அது சாஹித்ய அகாடமி விருது பெற்றதாலும் தேர்ந்தெடுத்து படித்தது. ஆனால் சாஹித்ய அகாடமி விருது படைப்புக்காக அல்லாமல் படைப்பாளிக்காக தரப்படுகிறது என்பதே சமீபத்தில் ஆ.மாதவன் வாங்கியபோதுதான் புரிந்தது. ஏனெனில் சூடிய பூ சூடற்க நாஞ்சிலின் எழுத்துக்களில் அதீத பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே என்று தோன்றுகிறது. அதனைக் காட்டிலும் என்பிலதனை வெயில் காயும் என்னை வெகுவாக ஈர்த்தது.
சுடலையாண்டியின் சுய தேடல் என்பிலதனையின் உயிர் நாடி. நாவலின் பயணம் சுடலையாண்டியின் நிகழ் காலத்தின் நுண்ணிய சித்தரிப்புகளுடனும், கடந்த கால நினைவூட்டல்களுடனும் பொதிந்திருக்கிறது. பதின் வயது முடியும் தருவாயில் இருக்கும் சுடலையாண்டி தன் பாட்டன், பாட்டியுடன் இறந்து போன பெற்றவர்களுக்கு செய்யும் நீத்தார் கடனுடன் நாவல் துவங்குகிறது.
சுடலையாண்டி தமிழ் தந்தைக்கும் ஈழவ மலையாளப் பெண்ணுக்கும் பிறந்தவன். தன் தாயைப் பற்றி அதிகமான நினைவு ஒன்றும் இல்லை அவனுக்கு. காதால் கேட்ட கதை மட்டுமே. தன் தந்தையைப் பற்றி ஒரே ஒரு நிகழ்வைத் தவிர அவனுக்கு வேறெதுவும் ஞாபகத்தில் இல்லை. அதுவும் இன்பமான நினைவு அல்ல. தீட்ட தீட்ட ஒன்றும் கிடைக்காது தனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளத்தை நிறுவிக் கொள்வதே சுடலையாண்டியின் முதல் குறிக்கோளாக உள்ளது.
அந்த குறிக்கோளுக்கு பங்கம் விளைவிக்குமாறு என்ன சம்பவித்தாலும் அது அவனுக்கு மிகப் பெரிய இழுக்காகத் தோன்றுகிறது. இதைத் தான் அவன் தேங்காய்க் கள்ளன் என்று அடையாள படுத்தப் படும்போது உணர்கிறான். அதே போல் சுடலையாண்டி சற்று குட்டை என்று நாவலில் ஒரு இடத்தில் கூறப் படுகிறது. இதனால் அவனுக்குள் அவனையே அறியாமல் ஒரு நெப்போலியன் காம்ப்ளக்ஸ் உருவாகிறது. தன்னை மற்ற மாணக்கர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற ரீதியில் காட்டிக்கொள்வதில் அவன் அவ்வுணர்வுக்கு தீனி போடுகிறான். இந்தி டீச்சரிடம் வீம்பு பிடித்துக் கொண்டு வகுப்பில் திமிராக இருப்பதிலும் இது நமக்குத் தெரிகிறது.
சுடலையாண்டியின் கட்டுப்பாடற்ற மன ஓட்டங்களின் வீச்சினையும், வீரியத்தையும் தன் மொழி ஆளுமையினாலும், சொல் வளமையினாலும் பிரமிப்பூட்டும் வகையில் கையாள்கிறார் நாஞ்சில் நாடன். தொடர்பற்ற பல சம்பவங்களை நேர்த்தியாகக் கோர்த்து சென்ற காலமும் நிகழ் காலமும் மாறி மாறி அவனுள் ஏற்படுத்தும் உணர்வுகளை விரிவாக எடுத்துக் கூறுகிறார். இத்தகைய “எல்லாம் தெரியும் படர்க்கை கூற்று முறை” கொண்ட மொழிபின் மூலம் நம்மால் அவனைப் பற்றியும், அவன் எண்ணங்களைப் பற்றியும், அவன் செயல்களைப் பற்றியும் அவதானிக்க முடிகிறது.
நாவலின் ஒரு பகுதியில் வகுப்பு விட்டும் வரும் சுடலையாண்டி பெரும் மழைக்கு நடுவில் சிக்கிக் கொள்கிறான். அப்போது எதிரே மாட்டு வண்டியில் செல்லும் ஆவுடையம்மாளையும் காண்கிறான். அவளுக்கு வலிந்து கட்டிக் கொண்டு உதவி புரிபவர்கள் இருப்பதை நினைத்து எரிச்சலடைகிறான். அந்நேரத்தில் காலின் கீழ் ஓடும் நீரில் இருக்கும் மிதவைகள் அவன் கவனத்தை திசை திருப்புகிறது.
மங்கிய வெளிச்சத்தில் ஆற்றில் நாலைந்து கலப்பைகளும், நுகமும் மிதந்து வருவது தெரிந்தது. எந்தக் குடிசையிலிருந்து அடித்துக் கொண்டு வருகிறதோ? பூவரச மரமொன்று புரண்டு புரண்டு உடைப்பு வழியாக வயற்காட்டில் பிரயாணம் துவங்கியது. தென்னங்கன்றுகள் சில போயின … பயிரெல்லாம் என்னத்துக்கு ஆகும்? தலை பழுத்துச் சாய்ந்து கிடக்கும் வயல்கள். அறுவடைக்கு முன் சில நாட்கள் காய்ச்சலுக்காகக் கிடப்பவை. கர்ப்பிணி வயிற்றில் எருமை மிதித்ததுபோல் இந்த வெள்ளம் … உடைப்பு விழுந்த இடத்தில் பதினைந்து ஏக்கருக்காவது மணல் பாயும். வெள்ளம் கட்டி நின்றால் பயிர்கள் அழுகத் துவங்கும். நெல் மணிகள் முளைக்கும். உதிரும்.
எதிர்பாராத சேதம்
இதனால் எனக்கு என்ன ஆயிற்று?
இள வயதில் பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் ஒரு கவனக் கூர்மையின்மை போலவே சுடலையாண்டியின் கவனமும் விஷயத்திற்கு விஷயம் தாவிக் கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் ஆவுடையம்மாளைப் பற்றியும் அவளுக்கு உதவு செய்ய வந்த பெரியவரைப் பற்றியும் நினைத்தவன் திடீரென்று மழையால் சேதமடையும் குடும்பங்களைப் பற்றி எண்ணுகிறான். இதே கட்டத்தில் சுடலையான்டிக்குள் ஓடும் இருத்தலியல் எண்ணங்களைப் பற்றிய தெளிவும் நமக்கு கிடைக்கிறது. “இதனால் எனக்கு என்ன ஆயிற்று?” என்று அவனுள் தோன்றும் எண்ணம்தான் அதற்கு சான்று.
சுடலையாண்டியின் பாலுணர்வு அனுபவங்களும் அவனுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை இருவேறு சம்பவங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகிறது. மழையிலிருந்து தன்னை காப்பாத்திக் கொள்ள அவன் ஒதுங்கிய இடத்தில் வரும் ஒரு ஜோடியின் காம நெடி நிறைந்த பேச்சு அவனுக்குள் இருக்கும் பாலுணர்வைத் தூண்டுகிறது. இதை விவரிக்கும் இடம் மிக அற்புதம்.
பக் பக்கென்று பீடி நுனியில் நெருப்பு சிவந்தது .
ஒற்றையாக
மன்மதனை எரித்த மூன்றாம் கண்ணாக
அந்த நினைப்பிநூடே அவன் தனக்கு ஏற்பட்ட முதல் பாலுணர்வு அனுபவத்தை நினைவில் அசை போடுகிறான். சுவாமி ஐயப்பன் படத்தை சினிமாக் கோட்டையில் கண்டபோது தனக்கு அருகில் உட்கார்ந்திருந்த 30 வயது பெண் அவன் கையை எதேச்செயாக எடுத்து அவள் தொடை மேல் போட்டது, அவன் வெடுக்கென்று கையெடுத்த பின் மீண்டும் அதை அவள் வைத்தது என்று அவன் ஞாபகத்தில் மங்காது ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அச்சம்பவம். அப்பெண்ணின் செயலை விவரிக்கும் சொல்லாட்சியும் அற்புதம்.
யானை பொரி தின்று பசியாற நினைத்ததுபோல்.
அது முதல் சுடலையாண்டி பெண்களைப் பார்க்கும் தோரணையே மாறுகிறது.
சுடலையாண்டி ஆவுடையம்மாள் உறவுமுறை பள்ளிக் கூடத்திற்கே பிரத்தியேகமாக இருக்கக் கூடிய ஒரு காதல் கதை. பல சினிமா படங்களில் கண்டு சலித்தது போனதுதான். உள்ளூர காதல் போன்ற உணர்விருந்தாலும் சுடலையாண்டிக்கு ஆவுடையம்மாள் ஒரு எதிரி ரூபம். வசதியில் விஞ்ச முடியாது என்பதால் தேர்வுகளில் அவளைத் தாண்டி வெல்வதென்பது முக்கியமாகப் படுகிறது. ஆவுடையம்மாளை தனிப்பட்ட பெண்ணாகக் கருதாமல் அவளை அவன் சமூகத்தின் வசதியானவர்களின் பிரதிநிதியாகவும், அவளை வீழ்த்தி முன்னேறுவதின் மூலம் அந்த சமூகத்தையே வீழ்த்துவதாகவும் நினைக்கிறான். இதன் மூலம் தனக்கு ஏற்பட்ட அந்த அடையாள போராட்டத்தை அவளுக்கு அளிக்கிறான்.
இருந்தாலும் ஆழ்மனதில் தனக்கு இருக்கும் பிரியத்தை மறைத்து கொள்கிறான். எல்லா வகையிலும் அவள் தனக்கு பொருத்தமானவள் எனினும் தன் குடும்பப் பின்புலத்தாலும், வளர்ந்த சூழலாலும், முக்கியமாக அவள் தந்தையும் தம்பியும் தன்னை தேங்காய்க் கள்ளன் ஆக்கியதாலும் அவளுடன் எவ்வித உறவும் சாத்தியப் படாது என்பதை உணர்கிறான். நாஞ்சிலின் வரிகளில் சொல்ல வேண்டுமேயானால்
வானரக் குட்டி நிலாப் பழம் பறிக்க எண்ணியதுபோல்
நாவலின் தலைப்பு அன்புடைமை குறளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்
எலும்பில்லாத புழுவினை வெயில் வதைத்தேடுப்பது போல அன்பில்லாத உயிரை அறம் வதைத்து துன்புறுத்தும். என்பிலதனை வெயில் காயும் என்ற தலைப்பின் மூலம் சுடலையாண்டியின் வாழ்க்கை புழு வதைபடுவதுபோல் வதைக்கப் படுகிறது என்பது தெளிவாகிறது. தன் பின்புலத்தில் இருக்கும் இழுக்கை பலவீனமாக எண்ணும் சமூகம் வெய்யில் போல் அவனை வாட்டி வதைக்கிறது. அந்த கொடூர சூழலில் அவன் ஏங்குவது அன்பிற்காக மட்டும்தான். எல்லாம் விடுபட்ட சூழலில் அவன் தன் அம்மாவின் சகோதரன் என்பவரைப் பார்க்க செல்கிறான். அவருக்கு அவன் யாரென்றே தெரியாததால் பண உதவி கேட்டு வந்திருக்கிறான் என எண்ணி பத்து ருபாய் தர சொல்கிறார். ஆனால் அவன் அவர் ரூபத்திலாவது தன் தாயை காண முடிகிறாதா என்று ஏங்கி நிற்கையில் நாவல் நிறைவுறுகிறது.
இந்த முடிவைப் பற்றி சிலிகான் ஷெல்ப்பில் ஆர்.வி அவர்கள் தனக்கு நிறைவு தரவில்லை என்று எழுதியதும் அதற்கு முக்கியக் காரணம் நகுலன் நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதியிலிருந்து கடைசி பக்கங்களை கிழித்து எரிந்ததாகவும் அதன் பின்னர் இப்போதிருக்கும் முடிவு வந்ததாகவும் ஜெயமோகன் கூறுகிறார். இதில் நகுலனின் முக்கிய எண்ணம் இருத்தலியல் சிந்தனையை மையப் படுத்திக் கூறுவது என்பதனால் அவர் அதைச் செய்தார் என்றும் கூறுகிறார். அனால் என்னால் இந்நாவலை வேறெந்த முடிவோடும் கற்பனை செய்ய முடியவில்லை. சுடலையாண்டியின் இருத்தலியல் எண்ணங்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படையாகவே பேசப்படுகிறது. நான் ஏற்கனவே கூறியதைத் தாண்டி பல இடங்களில் அரசியலையும், அரசியலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களையும் சுடலையாண்டி இகழ்ந்து நோக்கி பார்ப்பதைப் போலவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி
எந்த ரீதியிலும் இருத்தலியல் சிந்தனைகளை பருவமெய்தலிலிருந்து பிரிக்க முடியாது என்பது என் துணிபாகும். அவ்வகையில் என்பிலதனை வெய்யில் காயும் நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவலாக தோன்றுகிறது. குறிப்பாக நாஞ்சிலின் மொழி நடையில் இருக்கும் ஒரு ஓட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது. அவரது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் சொற்களுக்கு அவர் தரும் முக்கியத்தை நான் கவனித்திருக்கிறேன். லா.ச.ரா விற்கு பிறகு மிகச் சிறப்பான மொழி நடையும் சொல்லாட்ச்சியும் கொண்டவராக நான் நாஞ்சில் நாடனை கருதுகிறேன். குறைத்துச் சொல்லலில் இருக்கும் அழகியலைக் கைவிடாது, அதே நேரத்தில் வெகு சில வார்த்தைகளைக் கொண்டே மொழியின் உச்சத்தை தொடுகிறார் நாஞ்சில் நாடன்.
பருவமெய்தல் என்பதை மையப் புள்ளியாய் கொண்டு இயங்கும் நாவலின் வெற்றி அது வாசகனின் வாழ்க்கையை எந்த அளவிற்கு எதிரொலிக்கிறது என்பதில் உள்ளது. இந்நாவலில் வரும் சம்பவங்களை போல நான் பலவற்றை கண்கூடாக கண்டதாலும், சிலவற்றை அனுபவித்ததாலும் என்னால் இந்த நாவலின் போக்குடன் ஒத்திசைக்க முடிகிறது. மட்டுமல்லாது நாஞ்சில் நாட்டு வாழ்க்கையை நுண்ணிய விவரிப்புகளுடன், துல்லியமான காட்சி வர்ணனைகளுடன், ஒப்பற்ற படிமங்களுடன் நம் கண் முன்னே நிறுத்துகிறார் எழுத்தாளர். அநாவசிய உணர்ச்சிகளைத் தவிர்த்து இயல்பான வாழ்கையையும், மனிதர்களையும், சூழலையும் நமக்கு காட்டும் என்பிலதனை வெயில் காயும் அற வழியில் அன்பைத் தேடும் ஒரு புழுவின் வாழ்க்கை.
//விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள்.//
சென்னை சந்தியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை’ என்னும் என் நூலில் திரு. நாஞ்சில் நாடன் . பற்றிய கட்டுரையில் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி திரு. நாஞ்சில் நாடனுக்கும் அனுப்பப் பட்டிருப்பதாக அறிகிறேன்.