நாஞ்சில்நாடன் கதைகள்

Image4

மனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும் வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக வாழ்க்கையையும்  ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த மனிதர்கள், தன்  வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த சிறுகதை தொகுப்பை எழுதி இருப்பார். தன் கதைகளுக்கு நாஞ்சில் நாட்டை தன்னுடைய களமாக தெரிவு செய்து இருக்கிறார். ஆர்.கே நாராயண் மால்குடி என்று ஒரு கற்பனை உலகை  உருவாக்கி அதில் கதைமாந்தரை உலவ விட்டார், அந்த ஊர் நிஜம் மாதிரி இருந்தது. நாஞ்சில் நாடு கற்பனையல்ல, அந்த நிலமும் மக்களும், இரத்தமும் சதையுமாக விவரிக்கப்படுகிறார்கள். இந்த கதைகளை நாஞ்சில் நாட்டையும் அதன் மக்களையும் விட்டுப் பிரித்துப் பார்க்க முடியாது.
நிறைய கதைகள் ஒ.ஹென்றிதனமானவை – கடைசி பத்தி வரை, யோசிக்க விடாத வேகத்துடன் நம்மைப் படிக்க வைத்து முடிவில் உண்மை முகத்தில் அறைந்தார் போல் நமக்கு உணர்த்தப்படுகிறது. யாரோடும் எதனோடும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்து. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து கதைகள் சொல்லப்பட்ட நியாயத் தராசு போன்ற நேர்மையான கதைகள். 80 கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். இதைப் படித்து முடித்தவுடன் ஏற்பட்ட நிறைவு வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது.
இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் நிறைய கதைகள், பசியை மையமாக வைத்து பேசுகின்றன. “விரதம்” கதையில் தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுக்க முடியாமல், மிகுந்த பசி இருந்தாலும்கூட தன்னுடைய இரு பெண்கள் வீட்டிலும் சாப்பிட முடியாமல் தவித்து, கடைசியில் தன் வீட்டில் பழையது சாப்பிடும் சின்னத்தம்பி பிள்ளையாகட்டும், “உபாதை” கதையில் பசிக்காக தன்னை இழப்பது போல் காட்டிக் கொண்டு, காசைப் பறித்துக் கொண்டு ஓடும் பூமணியாகட்டும். “இருள்கள் நிழல்களல்ல” கதையில் ஒரு வேளை கல்யாண சாப்பாட்டுக்காக, நெடு நேரம் காத்திருந்து, அதுவும் கிடைக்காமல், அவர்கள் வீட்டுக்க்கே போய் காத்திருக்கும் பண்டாரமாகட்டும், “விலக்கும் விதியும்”  கதையில் ஒற்றையாளாக இருந்துக் கொண்டு சாப்பாடுக்கு கஷ்டப்படும் பரமக்கண்ணு நெடுநாளைக்கு பிறகு, வைக்கும் நல்ல சமையலில், நாய் வாய் வைத்துவிட்டாலும், அதையே உண்ண முடிவெடுப்பதாகட்டும் எல்லாவற்றிலும் பசிதான். “இடலாக்குடிராசா”, “ஆங்காரம்” சிறுகதைகள் இரு வேறு துருவங்களைக் காட்டினாலும் அந்த இரு கதைமாந்தரையும் பசியை மையமாக வைத்தே அணுகிவிட முடியும். ஒருவர் தன்மானத்திற்காக சாப்பாட்டிலிருந்து எழுந்து போவதிலும், இன்னொருவர் முதலாளி வீடு சாப்பாட்டை ருசி பார்ப்பதைப் பார்த்து விட்ட முதலாளியை கொல்வதிலும் பசிதான் கதையின் மையத்தில் இருக்கிறது. “ஒரு காலை காட்சி” கதையில் வண்டியில் இருந்து கொட்டும் பால், சாலையில் இருக்கும் ஒரு குழியில் தேங்குகிறது, அதை ஒரு குழந்தை பசி தாளாமல் சாப்பிடுகிறது. இந்த கதைகள் எல்லாம் பசியை மையமாக கொண்டிருந்தாலும், இவை எல்லாம் ஒரே மாதிரி கதைகள் அல்ல, பசியின் ஒவ்வொரு பரிமாணத்தையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறார் நாஞ்சில் நாடன்.
nn kathaiசமுதாயச் சாடல் இவருடைய சிறுகதைகளில் இருந்தாலும் அதில் முரட்டுத்தனம் இல்லை, ஒரு மென்மை இருக்கிறது. அதற்காக, சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை, காட்டமாக விமரசிக்கவில்லை என்று யாரும் பொருள் கொள்ளக்கூடாது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற சமூக விமரிசனம்.
முன் சொன் மாதிரி இவரது கதைகளில் எந்த விதமான பாசாங்கோ, சுற்றி வளைத்து எழுதுவதோ இல்லை.(முதலில் படித்த நாற்பது சிறுகதைகள் அனைத்தும் நேரிடையாக கதையைச் சொல்பவை. (90களில் எழுதப்பட்ட கதைகளில், இரண்டு மூன்று கதைகள் கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதப்பட்டுள்ளன).
இவரது சிறுகதைகளில் நகர வாழக்கையின் வலியும் வேதனையும் பதிவு செய்ப்பபட்டிருப்பதைக் காண முடிகிறது. மனித உழைப்பை உறிஞ்சும் அட்டைகளை, மிகத் தெளிவாக இவரது சிறுகதைகள் அடையாளப்படுத்துகின்றன. “வைக்கோல்” கதையில் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கும், அது கிடைக்காது என்று தெரிந்தபோதும், அதற்காக பாடுபடும் கதைமாந்தர், “வாய் கசந்தது” சிறுகதையில் இரவு இரண்டு மணிக்கும் எழுந்து களத்தில் நெல் அடித்து, இரண்டு நாட்கள் தூங்காமல் கடைசியில் இரண்டு ரூபாய் லாபம் பெறும் ஐயப்பன் –  இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை இந்தக் கதைகளில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. சாதிய கட்டுப்பாடுகளும் அதன் மூலம் மக்களை ஏய்க்கப்படுவதும், “விலாங்கு”  சிறுகதையில் பேசப்படுகிறது.
“உப்பு” கதையில் வரும் சொக்கனின் பாட்டி இறப்பைச் சொல்லும் சோகம், “முரண்டு” சிறுகதையில் தனக்கு பிள்ளை பிறக்காமல் இருப்பதால், இரண்டாம் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டு வரும் “டப்பு சுந்தரம்”, “சுரப்பு” சிறுகதையின் தாய்மையின் அன்பு – இது போன்ற பல கதைகளின் மையத்திலும் அன்பு வெளிப்படுகிறது.
நாம் பேசத் தயங்கும் விஷயங்களை, அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட இவர் தவறுவதில்லை. “வாலி சுக்ரீவன்-அங்கதன் வதைப்படலம்” மூலம் சுயமைதுனம் செய்து மாட்டிக்கொள்ளும் சிறுவர்கள், அவர்கள் மனநிலை, அதை சமுதாயம் பார்க்கும் விதம் குறித்து நுணுக்கமாக பதிவு செய்கிறார். “மொகித்தே” கதை மூலம் இரு வேறு மாநிலத்தவரிடையே ஏற்படும் நட்பை பிரமாதமாக வெளிக்கொணர்கிறார்.
இந்தத் தொகுப்பை படித்து முடித்தவுடன், இத்தனை நாட்கள் இடஹி வாசிக்காமல் இருந்தது குறித்த வருத்தம் மேலோங்கி இருந்தது. நாஞ்சில் நாட்டு வாழ்க்கை முறை, மிக முக்கியமாக அதன் சமையல் முறை, நிறைய சிறுகதைகளில் நீரோட்டம் போல் ஓடி கொண்டு இருக்கிறது. நிறைய இடங்களில் பண்டங்கள் செய்யும் விதம் குறித்து எழுதும்போது நாவில் நீர்  ஊறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் சில ஆண்டுகள் கழித்து வாசிக்க வேண்டிய புத்தகங்களுக்குள் இதுவும் ஒன்று.
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுப்பில்,நாஞ்சில் நாடன் எழுதிய ‘பாலம்’, என்னை கவர்ந்த சிறுகதைகளில் ஒன்று.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s