எழுத்தாளன் என்பவன்


12736985_930671806982341_896448591_oநாஞ்சில் நாடன்
வீட்டு வாசலில் வரும் குறு வியாபாரிகளிடம் சில பொருட்கள் வாங்குவோம். பெரும்பாலும் குடியிருக்கும் பகுதிக்கு பக்கத்துத் தோட்டங்களில் விளையும் காய்கறிகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, காட்டுக்கீரை, பண்ணைக்கீரை, பீர்க்கன் காய், அரசாணிக்காய் என்கிற பரங்கிக்காய் எனப்படுகிற பூசணிக்காய் என ஆங்கு. சில சமயம் கூம்பு போல் உருண்டு திரண்ட மரவள்ளி எனப்படும் மரச்சீனி. பொருள் நல்ல தரத்துடன் புதியதாக இருக்கும். விலை சற்று முன்னே பின்னே இருக்கும். நாள் பூரா நடந்து கூவித் திரிபவரும் சாப்பிட வேண்டாமா?
சில நாட்களாக வயோதிகர் ஒருவர், சற்று தலையாட்டத்துடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வருகிறார். சைக்கிள் அவருக்கு சுமை தூக்கவும், நடக்க ஆதரவுக்கும்! திருவண்ணாமலைப் பக்கத்து வன்னிய வட்டார வழக்கில் பேசுவார்.வியாபாரம், பச்சை நிலக்கடலை. சற்றும் பழுதில்லாத, திரட்சியான, நீளமான கடலைக் காய். ஏமாற்றாத பக்காப்படி. வஞ்சகம் இல்லாத அளவு. நூறு ரூபாய்க்கு மூன்று பக்கா. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் வேக வைத்த நிலக்கடலை பிடிக்கும். நிலக்கடலைக்கு மணிலாப் பயறு, கடலைக்காய், மல்லாட்ட, கப்பலண்டி என்ற மாற்றுப் பெயர்கள் உண்டு. கண்மணி குணசேகரன், ‘கொல்லாங்கொட்ைட’ என்று நாங்கள் சொல்கிற முந்திரிக்கொட்டையை, ‘முந்திரிப் பயிறு’ என்றுதான் சொல்கிறார்.
இரண்டு நாட்கள் முன்னால் பெரியவரிடம் கடலை வாங்கினேன். கோவையில் மழைக்காலம் முடிந்த கையோடு குளிர்காலம் தொடங்கி விட்டது. அதுவும் நான் வசிக்கும் தூரத்தில் மலைகள் உள்ள மேட்டுப்பகுதியில் கூதல் சற்றுக் குளிர்ந்தே வீசும். கடலைக்காய் வாங்கிக் காசும் கொடுத்தபின், ‘‘கொஞ்சம் பொறுங்க’’ என்று சொல்லி, வீட்டுக்குள் வந்து, எனக்கு விழாக்களில் போர்த்திய சால்வை ஒன்றை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.
‘‘தலைவருங்களா?’’ என்றார். அவரது ஐயம் சரிதான். தலைவர்களுக்கு நிறைய சால்வை கிடைக்கும். ‘‘இல்லை ஐயா! எழுத்தாளன்’’ என்றேன். அதற்குள் வாசலில் மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை வாசித்து விட்டிருந்தார். கண் பார்வை சற்று மங்கல் போலும், ‘என்ஜினியர் நடராஜன்’  என்று வாசித்தார். ‘‘இல்லீங்க! நாஞ்சில் நாடன்… எழுத்தாளன்.’’ ‘‘அஹாங்…’’ என்றவர், ‘‘பத்திரம் எழுதுவீங்களா?’’ என்றார். எனக்கு அவர் மீது ஒரு வகையான பாசம் தோன்றியது. இப்படித்தான் இருக்கிறார்கள் எம் கிராமத்து மக்கள்.
கிராமத்து அறியா மக்களை விடுங்கள். நகரத்துக் கனவான்கள் சிலர் நம்மை ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘ரைட்டர்’ எனப் பதில் சொன்னால், ‘எந்த ஸ்டேஷன்?’ என்கிறார்கள். நமக்கு கிறிஸ்தவக் கம்பர் என்று அழைக்கப்பட்ட ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ண பிள்ளையின் ‘இரட்சணிய யாத்திரீக’த்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய் இன்னதென அறிகிலார் இவர்செய்ததாம் பிழையை மன்னியும் என்று எழிற்கனிவாய் திறந்தார் நம் அருள் வள்ளல்.’
தம்மைக் காட்டிக் கொடுத்தவரையும் வதைத்தவர்களையுமே மன்னிக்கச் சொன்னார் கிறிஸ்து.எழுத்தாளன் என்பவன் தலையில் இரு கொம்பு முளைத்தவன் இல்லை. தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழலுபவன் இல்லை. கருத்தரங்க மேடைக்கு இருபது அடியாட்கள் சூழ வந்து ஏறுகிறவன் இல்லை. ஆனால், எழுத்துக்கள் மூலம் தனக்குள்ளே மனிதனை மீட்டெடுக்க முயல்பவன். எனினும் ஆசாபாசங்கள் உள்ள எளிய மனிதன்.
தமிழ்ச் சமூகத்தின் கடைசிப் படியில் நிற்பவன் எழுத்தாளன். அவர்களில் பலருக்கும் எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ, சொந்த சமூகத்தின் சீராட்டோ, சீமான்களின் அரவணைப்போ கிடையாது. ஆனால், எழுத்தாளனை மதிக்காத எந்தச் சமூகமும் கீழ் முண்டித்தான் போய்க் கொண்டிருக்கும் போலும். தேசத்தில் தொழிற்துறையில் இரண்டாம் இடத்தில் இருந்த நாம், இருபதுக்கும் கீழே போய்க் கொண்டிருக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும்.
‘‘ஏன், கலைஞர்களை நாம் மதிக்கிறோமே’’ என்று எந்த சராசரித் தமிழனும் பேசக்கூடும். அவர்கள் கலைஞர்கள் என்று மதிப்பது சினிமாக்காரர்களை மட்டும்தான். சுமார் 4000 உறுப்பினர்களைக் கொண்ட நடிகர் சங்கத் தேர்தலின்போது காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் தமிழ்நாட்டைப் படுத்திய பாட்டை நாம் அறிவோம். எழுத்தாளனைப் போற்றுவதால் அவர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் உயருமா அல்லது சர்க்குலேஷன் அதிகரிக்குமா?
கலை என்று சொல்லிக்கொண்டு வணிகம் செய்வதும் பொருள் ஈட்டுதலும் கலைச் செயல்பாடுகள் அல்ல. சொல்லப் போனால், கலைக்கு எதிரான செயல்பாடுகள். இன்று பெரும்பான்மையான கல்வி நிறுவன அதிபர்கள் தம்மை ‘கல்வித் தந்தையர்’ என்று கூறிக் கொள்வதைப் போல ஆபாசமானது.
உடனே கேட்பார்கள், ‘‘எழுத்தாளன் பணம் பெறுவதில்லையா’’ என்று. அவன் வாங்குவது உப்பு, புளி, மிளகாய்க்கும் ஆகாது. யோக்கியமாகப் பிழைக்க வேண்டுமானால் வேறு தொழில் செய்ய வேண்டும். புலியை முறத்தால் விரட்டிய புறநானூற்றுத் தமிழினம், ஒன்றில் டாஸ்மாக் கடையோரங்களில் வீழ்ந்து கிடக்கிறது; அன்றேல் சினிமாவின் பின்னால் அலைகிறது. ‘‘இரண்டும் ஒன்றா’’ என்பீர்கள்! ‘‘ஆம்” என்பேன் நான்.
எழுத்தாளனுக்கு மரியாதை தராத சமூகம் நுண்கலைகளை எங்ஙனம் போற்றும்? கலைப் போலிகளைத்தான் கொண்டாடும். அறிவுத்தளத்தில் வெட்டாந்தரையாக, கூழாங்கற்கள் சிதறிக் கிடக்கும் சமூகமாக மாறிப் போகும். ‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள், செல்லாது அவன் வாய்ச் சொல்’ என்பது போல, காசு, பணம் ஈட்டத் தெரியாத எழுத்தாளனை எவர் மதிப்பார்கள்?
அண்மையில் அறிந்தேன், தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று ஒரே மாதத்தில் பத்துப் பதிப்புகள் கண்டது என்றும், ஐம்பதினாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்தன என்றும். தமிழன் என்ற வகையில் எனக்கு மிகுந்த கர்வமாக இருந்தது. அதே சமயத்தில் இணையாகக் கேள்வி ஒன்றும் எழுந்தது. ‘திறமைசாலியான பல சிறுகதை எழுத்தாளர்களின் தொகுப்பு ஏன் 250 படிகள்கூட விற்பதில்லை’ என! நேர்த்தியாகச் சிறுகதைகள் எழுதுகிற பல முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு, 500 படிகள் கொண்ட ஒரு பதிப்பு விற்க ஏன் ஈராண்டுகள் ஆகின்றன என்று. இது எவர் மீதும் நாம் வைக்கும் விமர்சனம் அல்ல; என் மீது நான் வைக்கும் விமர்சனம். அப்துல் கலாம் புத்தகங்கள் மட்டுமே விற்கும் என்பது ஆரோக்கியமான எழுத்துச் சூழலா?
இந்தத் தொடரில் சில வாரங்கள் முன்பு நான் எழுதினேன்… ‘எழுத்தாளன் என்பவன் பட்டப் பகலில் டார்ச் லைட் அடித்து மனிதத்தைத் தேடுகிறான்’ என்று. அறிவுஜீவி என்று அறியப்பட்ட பேராசிரியர் ஒருவர் சொன்னார், அப்பிடியாப்பட்ட எழுத்தாளரை தான் தேடுவதாக! அறிஞர்கள் நிலை இப்படி என்றால் சாமான்யன் நிலை என்ன? நான் நினைத்துக் கொண்டேன்…
‘மனிதம் தேடும் எழுத்தாளனைக் காண வேண்டுமானால், அவர் அணிந்திருக்கும் வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட ஐந்து கண்ணாடிகளைக் கழற்ற வேண்டும்’ என. மார்க்சியக் கண்ணாடி, சிறுபான்மைக் கண்ணாடி, பெண்ணியக் கண்ணாடி, தலித்தியக் கண்ணாடி, முற்போக்குக் கண்ணாடி… கழற்றிப் பார்த்தால் மனிதம் தேடும், சத்தியம் தேடும், தமிழைப் பாடும் பலர் கிடைப்பார்கள். நேற்று சாகித்ய அகாதமி விருதைத் தனது 82வது வயதில் பெற்ற – அறுபதாண்டு காலமாக உன்னதக் கதைகள் எழுதிய ஆ.மாதவனின் ஒரு கதை கூட வாசித்திராதவர்கள்… இன்று இறந்து போன சார்வாகனின் பெயர் கூடக் கேட்டிராதவர்கள்… மனிதம் தேடும் எழுத்தாளனைத் தேடுகிறார்களாம்.
லட்சக்கணக்கில் ஊதியம் பெறுகிறவர்களுக்கு, தமிழ் எழுத்தாளனின் மாத வருமானத்தைப் போல மூன்று மடங்கு ஓய்வூதியம் வாங்குகிறவர்களுக்கு பஞ்சப்படியும் பயணப்படியும் வவுச்சர்களும் மட்டுமே கண்ணில் படுமேயன்றி, படைப்பு படாது. கீரனூர் ஜாகிர் ராஜா, அழகிய பெரியவன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், குமார செல்வா, மகுடேசுவரன், வெண்ணிலா, என்.ராம், என்.டி.ராஜ்குமார், மு.ஹரிகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார், தமிழ்நதி, ஜே.பி.சாணக்கியா, வா.மு.கோமு, கே.என்.செந்தில், விநாயக முருகன், சந்திரா, லக்ஷ்மி சரவணக்குமார், போகன் சங்கர், அபிலாஷ்… உடனடியாக, எந்தத் திட்டமும் இன்றி நினைவுக்கு வரும் பெயர்கள் இவை.
பீடமேறி உட்கார்ந்து கொண்டிருப்பவர்களின் அறியாமை நம்மை ஆயாசம் கொள்ளச் செய்கிறது. எழுத்தாளனின் வாசிப்பு என்பது அறிவுத்
தேடல், கலைத்தேடல், ஞானத்தேடல். கட்டுரை எழுத அல்ல. பிழைப்புக்கு ஒரு ெதாழில் செய்துகொண்டு, இம்மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தும் ெதாண்டு செய்கிறவன் எழுத்தாளன். முடியுமானால் அவர்கள் படைப்புகளை ஊன்றி வாசிக்கலாம். குறைந்தபட்சம் குற்றப் பத்திரிகை வாசிக்காதிருக்கலாம்.
எம்மொழியிலும் இலக்கணப் போலிகள் போல, கலைப் போலிகள் போல, எழுத்துப் போலிகளும் இருப்பார்கள். முற்போக்குப் போலிகளும்தான். அவர்களைத் தீவிர எழுத்தாளன் பொருட்படுத்திக் கொண்டிருக்க மாட்டான்.
மலையாளத்தில், கன்னடத்தில், மராத்தியத்தில், வங்காளத்தில் எழுத்தாளன் பேச்சுக்கு ஒரு விலை உண்டு. ‘‘பிறகேன் கன்னடத்து கல்புர்கியை, இந்தியின் சப்தர் ஹஸ்மியைக் கொலை செய்தார்கள்?’’ என்பீர்கள்! அவர்களது குரல்களின் வெம்மையை அரசாங்கங்களால் சகித்துக் கொள்ள முடியாததன் வெளிப்பாடு அது. அரசாங்கங்களே அஞ்சும் குரலாக எழுத்தாளன் குரல் இருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.
12755386_930671800315675_1622878258_oஉலகத்தில் எம்மொழியிலும் எழுத்தாளனின் குரல் கவனிக்கப்படும், கருத்தில் கொள்ளப்படும், கடைப்பிடிக்கப்படும். எதிர்க்குரல் எனில் அழித்து ஒழிக்கப்படும் அதிகாரத்தால். காலம் கழுத்தை நெரித்தது போக, கண்ணியமில்லாத அரசுகள் நெரித்த குரல்கள் அதிகம். ஆனால், இங்கோ எழுத்தாளன் குரல் கவனிக்கப்படுவதே இல்லை. ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்கிறார் வள்ளுவர்.
பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரம். இங்கு பெரியார் என்பது வள்ளுவர் காலத்துச் சான்றோர். ‘இடித்துரைத்து, ெநறிப்படுத்தும் நால்வர் ஆதரவு இல்லாத மன்னரை அழிக்கப் பகைவர் தேவையில்லை. தானே அழிந்து போவார்’ என்பது பொருள். அமைச்சர்களே ஆறலைக் கள்வர் போல் அலைந்து திரியும் காலத்து, இடித்துரைக்கும் எழுத்தாளன் குரல் எங்கே எடுபடும்?
சங்க இலக்கியப் பரப்பில் கோவூர் கிழார் எனும் புலவர் ஒருவர். புலவர் மட்டுமல்ல, சான்றோர். கோவூர், செங்கல்பட்டு சார்ந்த ஊர். சங்க இலக்கியத்தினுள் இவர் குறுந்தொகையில் ஒன்று, நற்றிணையில் ஒன்று, புறநானூற்றில் பதினைந்து எனப் பதினேழு பாடல்கள் பாடியவர். அவற்றுள் புறநானூற்றின் 46வது பாடலை எடுத்தாள்கிறேன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. அவன் வெற்றி கொண்ட மலையமானின் சிறு மக்களை, யானைக் காலால் இடற உத்தேசித்தபோது, அவர்களைக் காப்பாற்றப் பாடியது.
‘நீயே, புறவின் அல்லல்
அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும்
விடுத்தோன் மருகனை;
இவரே, புலன் உழுது
உண்மார் புன்கண் அஞ்சி
தமது பகுத்து உண்ணும்
தண்ணிழல் வாழ்நர்
களிறு கண்டு அழூஉம்
அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர்
மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்
கேட்டனை ஆயின் நீ
வேட்டது செய்ம்மே’
என்பது பாடல். பொருள் எழுதாமல் தீராதுதானே! ‘கிள்ளிவளவனே! நீயோ புறாவின் துன்பம் மட்டுமன்றி, பிற துயரங்களையும் போக்கிய மரபில் வந்தவன். நீ, போரில் வென்று கொன்ற மலையமானோ, சொல்லேர் உழவர்களாகிய புலவரின் வறுமைத் துன்பம் போக்க, தனது பொருளைப் பகுத்து வழங்கி உண்ணும் இரக்க சிந்தனை கொண்ட மரபில் வந்தவன். நீ சிறைப்படுத்தி வந்து, யானைக் காலால் இடறுபடக் காத்திருக்கும் மலையமான் மக்களாகிய இந்தச் சிறுவர்களோ, யானையைக் கண்டு, அழுகையைக் கூட மறந்து வியப்பால் பார்த்திருக்கும் இளைய தலையை உடையவர்கள். யானைக் காலால் அவர்கள் இடறுபடப் போவதைக் காண வந்திருக்கும் கூட்டத்தாரைப் பார்த்து புதிய துன்பம் கொண்டவர்கள். யான் கூறுவதை நீ பரிவுடன் கேட்டனை என்றால், நீ விருப்பம் போலச் செய்வாயாக!’ அதன்பின் சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பு.
பாடிப் பரிசில் பெற்று வாழும் எளிய மனிதன் ஒருவன், புலவனாக இருந்த காரணத்தால் மன்னனுக்கே அறிவுறுத்த முடிந்திருக்கிறது என்பதன் வரலாறு இந்தப் பாடல். இன்றைய எழுத்தாளனின் இடம், நகை முரணும் பகை முரணும் ஆகும்.போர்க்களத்தில் திப்பு சுல்தான் போர் புரிந்து மாண்ட பின், ஒன்றுமறியா அவனது இளைய மக்களைச் சுட்டுக் கொன்ற, சூரியன் அஸ்தமிக்காத தேசத்து நீதியின் வரலாறும் நாமறிவோம். அந்த அரசாட்சியை இன்றும் ஆராதிக்கிறவர்களின் சமூக நீதியையும் அறிவோம்!
அத்தனை தூரம் பயணப்படுவானேன்? ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மேற்சட்டை இன்றி, வெகுளிப் பார்வையுடன் பிஸ்கெட் தின்று கொண்டிருந்தான் ஒரு சிறுவன். விடுதலைப் புலிகளின் தலைவன், தமிழின மாவீரன் பிரபாகரனின் மகன். அது முதல் காட்சி எனில், நெஞ்சில் குண்டடிபட்டு, கருஞ்சிவப்பு ரத்தம் படர்ந்து கொலையுண்டு கிடந்தது அடுத்த காட்சி. அறம் பேசிய நமது அரசும் இத்தகு பாதகங்களுக்குக் கூட்டாகவும் சாட்சியாகவும் நின்றது.
மராத்திய, வங்காள, கன்னட, மலையாள தேசத்தினருக்கு இது நடந்திருந்தால் அவர்களின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும்? இங்கேன் சில காகங்கள்கூடக் கரையவில்லை? எழுத்தாளனைப் பொருட்படுத்தாத சமூகம் இது. ஒரு மொழியை, மொழி பேசும் சமூகத்தின் பண்பாட்டை, வரலாற்றை, கலையை, மரபுகளை அடுத்த நூற்றாண்டுக்கு எனத் தொடர்ந்து கடத்துபவன் எழுத்தாளன்.
அவன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால் அது அந்தச் சமூகத்தின் இழிவு. அறிவுஜீவிகள் என்று கொண்டாடப்படுவோரே இதனை அறிந்திருக்கவில்லை என்பது எத்தனை அவலம்?
– கற்போம்…
ஓவியம்: மருது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எழுத்தாளன் என்பவன்

  1. harikarthikeyanramasamyh சொல்கிறார்:

    எழுத்தாளன் குரல் நசுக்கப்படுமானால், அலட்சியப்படுத்தப்படுமானால், இளக்காரம் செய்யப்படுமானால் அது அந்தச் சமூகத்தின் இழிவு.நல்ல பகிர்வு நன்றி.

  2. நாவினி சொல்கிறார்:

    கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சாப்பாடு அள்ளித் திணிக்கிற, ஆறு மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிற இந்த பிழைப்பில் இருந்து விடுதலை கிடைக்கும் நாளிலாவது, எழுத்துக்கு நியாயம் செய்யணும்.

  3. பிங்குபாக்: எழுத்தாளன் என்பவன் - வெளிச்சவீடு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s