பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

 12511309_914126148636907_1857383901_o
நாஞ்சில் நாடன்
சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..?’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்கிய வசவு அவை.
சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து எமது பக்கத்தில் ‘குறும வயிற்றுவலிக்காரன்’ என்பார்கள். அதாவது ‘அவன் வயிற்றில் சீரணத் தொடர்பான நோய் உள்ளது, எனவே சரியாகச் சாப்பிட மாட்டான்’ என்ற பொருளில். ‘‘கோழி மாதிரி கொறிக்காத லே!’’ என்பார்கள்.
உணவு என்பது உயிர்க்கு அமுது. ‘பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து’ என்பது மணிமேகலை. பசி என்பதோர் பிணி. முதலில் பிணி அகற்ற வேண்டும். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று இன்று மேடைகளில் முழங்கினாலும் ஆயிரம் கோடி வைத்திருக்கிறான். பாரதியும் ஆங்காரமும், ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ எனும் வள்ளுவரின் ஆவலாதியும் எடுத்துப் பேச எளிதாக இருக்கிறது. ‘உலகத்தை உண்டாக்கியவன் நாசமாகப் போகட்டும்’ என்ற அவர் சாபம் பலிக்குமானால் நன்றாக இருக்கும். வள்ளலாரோ, ‘வீடு தோறும் இரந்து பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்’ என்கிறார்.
வெறுமனே உடலை வளர்க்கிறானே என்பதற்கு வள்ளலார் சொல்லும் பதில், ‘உடல் வளர்த்தார், உயிர் வளர்த்தாரே!’ என்பது. ஒளவையோ, ‘ஈயென பல்லைக் காட்டி இரந்து தின்பது இழிவானது, ஆனால் அவர்க்கு இல்லை என்று சொல்வது அதனைவிட இழிவானது’ என்கிறார்.
உணவை அலட்சியம் செய்கிறவர்கள், புறக்கணிக்கிறவர்கள், பாழ் செய்கிறவர்கள் பெரும் பாவிகள் என்பது நமது கணக்கு. ஆனால் இன்று திருமண விருந்துகளில் பரிமாறப்படுவனவற்றில் முக்கால்வாசி பாழானால் கூடப் பாதகமில்லை, தம் செல்வச் செழிப்பு உணரப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்.
நம்மீது உணவு மூலம் செலுத்தப்படும் அராஜகம் இது. செல்வந்தரைப் பார்த்து நடுத்தர வர்க்கமும் கெட்டுப் போனார்கள். ஏற்கனவே அது பற்றி எல்லாம் நிறைய நான்
எழுதியாயிற்று.உணவை அனுபவிப்பதற்கு பசியே முக்கியமான தேவை. அது செட்டிநாட்டுச் சமையலா, நாஞ்சில் நாட்டுச் சமையலா, கொங்கணமா, கத்தியவாரியா என்பதல்ல.
நியூஜெர்ஸியில் போய் நின்றுகொண்டு தயிர் சாதமும் மோர் மிளகாயும் தேடுகிறவரை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. பசி, வயிற்றில் இருக்க வேண்டும். அது மூளையிலோ, கால் முட்டியிலோ இருந்தால் உணவை அனுபவிக்க இயலாது. எத்தனை ஐட்டம் என்பதல்ல காரியம். அதை எவ்விதம் சுவைபடச் செய்தார்கள் என்பது முக்கியம். சமைப்பவர்களின் அன்பு மனத்தில் இருந்து விரல் வழியாகப் பதார்த்தத்தில் இறங்கும்போது, அதற்குப் பசும் நெய்யும் வேண்டாம்; பஞ்சாபின் பன்னீரும் வேண்டாம்.
12506749_911225135593675_1075622686_nஇருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். சேலத்துக்கு தம்பி வீட்டுக்குப் போயிருந்த என்னை நண்பர் சிபிச்செல்வன் இரவு விருந்துக்கு அழைத்தார். அவர் ஊரான பெரிய கொல்லப்பட்டி சேலத்தில் இருந்து 25 கி.மீ. ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் பக்கம். டி.வி.எஸ் 50 வண்டியின் பின் சீட்டில் உட்கார்ந்து எனக்கு முதுகுவலி வந்துவிட்டது. சிபிச்செல்வனின் அம்மா, வீட்டுக்கு வெளியே, மிகப்பெரிய ஆலமரம் அருகே கூட்டப்பட்டிருந்த அடுப்புகளில் சமைத்துக் கொண்டிருந்தார். கொதிக்கக் கொதிக்க புழுங்கலரிசிச் சோறு. பச்சை மொச்சையும் பிஞ்சுக் கத்தரிக்காயும் போட்ட கூட்டு போன்ற குழம்பு. இன்று அதை நினைவு வைத்துப் பேசுகிறேன் என்றால், சுவை எப்படி இருந்திருக்கும்?
நான்கு வேளை செல்வ உணவை உண்பவருக்கும், பசியற்றவருக்கும், உண்டபின் சீரண மாத்திரை சாப்பிடுகிறவருக்கும், இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் எனச் செல்லம் கொஞ்சுகிறவருக்கும், சமூகம் விருந்துகள் மூலம் பல வண்ணங்களில் – வடிவங்களில் – வாசனைகளில் உணவை வாரிக் கோரித் திணிக்க முயல்கிறது. ஏழைகளை, இரப்பாளிகளைக் கடைசி வரை காக்க வைத்து, மிச்சம் மீதியைக் கலந்து போடுகிறது. அதை தர்மம் எனப் பீற்றி கர்வமும் கொள்கிறது. இலைகளில் வீண் செய்யப்பட்டு, பேரல்களில் சேமிக்கப்பட்டு, பன்றிகளுக்குப் போகும் செல்வச் சிறப்புடைய உணவு, பாவி வயிறுகளுக்குப் பசியாறப் பாய்வதில்லை. இதனைச் செய்பவர்கள் பலர் வள்ளல்கள், சமூகக் காவலர்கள், தந்தைகள், அருளாளர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டவர்கள். அதனை எண்ணும்போது நமக்கு வயிறு காந்துகிறது, பத்து பச்சை மிளகாய் கடித்துத் தின்றவன் போன்று!
ஆடம்பர உணவு விடுதிகளில் தாறுமாறாக ஆர்டர் செய்து, தின்ன முடியாமல் பாதிக்கு மேல் மிச்சம் விட்டுச் செல்கிறவர்கள் உண்டு. மீந்ததைக் கட்டித் தரச் சொல்லி எடுத்துப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதை அவர்கள் அடுக்ககத்தின் காவலாளிக்கு, வளர்க்கும் நாய்க்கு, தெரு நாய்க்குத் தரலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சூடு செய்தும் சாப்பிடலாம். எப்படியும் பாழாய்ப் போவது பசுவின் வயிற்றில்.
பெரிய செலவில், அரிய உணவு வகைகளை ஆடம்பரமாகப் பரப்பி விருந்து நடத்துவதைக் கொடை என்றும் கருதுகிறார்கள். ‘வறியோர்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்கிறார் வள்ளுவர். இல்லாப்பட்டவனுக்குக் கொடுப்பதே ஈகை. நண்பருக்கும், சுற்றத்தார்க்கும், அரசியல் – சினிமா பிரபலங்களுக்கும், சமூக அந்தஸ்து மிக்காருக்கும், தொழிலதி பருக்கும் கொடுப்பது ஈகை அல்ல. அவர்களிடம் இருந்து வேறெதுவோ எதிர்காலத்தில் எதிர்பார்த்துக் கொடுப்பதைப் போன்றது. எடுத்துக்காட்டுச் சொன்னால், மாதச்சீட்டு நடத்துகிறவன், சீட்டு வட்ட இறுதி ஆன உடன், சீட்டில் புள்ளிகளாக இருந்தவருக்கும் இருப்பவர்க்கும், இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பவருக்கும், மட்டன் பிரியாணி போடுவதைப் போன்றது ஈகை ஆகாது. அஃதோர் வணிக உத்தி. வியாபாரிகள் தம் வீட்டுக் கல்யாணங்களுக்கு துழாய்ந்து துழாய்ந்து அழைப்பிதழ் கொடுப்பது ேபால.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் பற்றிச் சொல்லக் கேட்டதுண்டு. அவர் கையூட்டுப் பெறாத நல்ல ஆட்சியாளர். ஆனால் தமது மக்களின் பிறந்த நாள் விழா விருந்துக்கு தொழிலதிபர்கள், சினிமா கொட்டகை உரிமையாளர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என்று அழைப்புக் கொடுப்பாராம். எப்படியும் இருநூறு பவுன் முத்திரைப் பொன் பரிசாக வந்து விடுமாம். இந்த விருந்து, மொய் விருந்து போன்றதன்றி வேறென்ன?
நல்ல மனசுக்காரர் சிலர், தம் வீட்டுத் திருமணங்கள், மண நாள், பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் வாழும் இல்லங்களில் ஒரு பொழுது உணவு தர ஏற்பாடு செய்கிறார்கள். கோயிலில் வழங்கப் பெறும் பிரசாதங்கள் கூட அத்தகையதுதான். சிலர், தாம் நேர்ந்த வழிபாடுகளில் வடை, சுண்டல், பஞ்சாமிர்தம், பாயசம் என்று இறைவனுக்குப் படைத்து வணங்கிவிட்டு, எவருக்கும் எள்ளளவும் ஈயாமல் வாளி வாளியாகக் கார் டிக்கியில் ஏற்றி விடுவார்கள். சொந்த பந்தங்களுக்குக் கொண்டு போய் விளம்புவார்கள் போலும். மீந்து ஊசிப் போனால் சாக்கடையில் சரிப்பார்கள் போலும். கோவையில் புகழ்பெற்ற பிள்ளையார் கோயில் ஒன்றில் நானே இதைக் கண்டதுண்டு.
கிராமப்புறங்களில், சிறு தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கும்போது சாமிகளுக்கு படப்பு போடுவார்கள். நள்ளிரவில் போடப்பட்ட படப்பை, உதயத்தில் பிரித்து வரிகாரர்களுக்கு, வரி எண்ணிப் பங்கு கொடுத்து அனுப்புவார்கள். பங்கு வைத்து விளம்புவோரில் தமது அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், தாயாதிகள், சொக்காரர்கள், மைத்துனர்கள், மாமன்மார் வீடுகளுக்கு நிறைய கறித் துண்டுகளும், அயலவர்க்கு பேருக்கு ஒன்றிரண்டு துண்டுகளும் போட்டுக் கொடுக்கும் சின்னப்புத்தி உடையவர்கள் உண்டு. அதன் காரணமாகச் சண்டை வருவதுண்டு. வாங்கிப் போன படப்புச் சோற்றை திரும்பக் கொடுப்பார் உண்டு. ஏக்நாத் எழுதிய சமீபத்திய, ‘ஆங்காரம்’ நாவலில் இன்று அதை வாசிக்க இயலும்.
பந்தியில் சமமாக உட்கார்ந்து உண்ணும்போது, சில பெண்கள் ஆள் பார்த்துப் பரிமாறுவார்கள். குறிப்பாக அசைவப் பந்திகளில். ‘கல்யாண வீட்டில் பிள்ளை வளர்க்கா பாரு!’ என்பார்கள் நக்கலாய். நான் பம்பாயில் வசித்தபோது, ஆண்டுதோறும் ஊருக்கு வருவேன். உள்ளூர் வெளியூர் என்று அலைந்தபோது, சொந்தக்காரர் ஒருவர் மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார். அசைவ உணவென்றால் மாய்ந்து மாய்ந்து, பாய்ந்து விழுந்து தின்று கொண்டிருந்த காலம். தரையில் அமர்ந்து, தலை வாழை இலை பரத்தி, சாப்பிட உட்கார்ந்தேன். அருகில் உறவினர்.
இளங்கோவடிகள் சிலப்பதிகார மதுரைக் காண்டத்தின் கொலைக்களக் காதையில், கண்ணகி உணவு சமைத்துக் கோவலனுக்குப் பரிமாறியதைப் பேசுவார். இடைக்குல மடந்தை ஐயை சமையலுக்கு வேண்டிய பொருட்கள் கொடுத்தாள். கோளிப் பாகல், வெள்ளரி, மாதுளங்காய், மாங்கனி, வாழைப்பழம், சாலி அரிசி, பால், தயிர், நெய் எல்லாம். சமைத்த கண்ணகிக்கு மெல் விரல் சிவந்தது. திருமுகம் வியர்த்தது. செங்கண் சேந்தது. தனக்குத் தெரிந்த வகையில் சமைத்து, கோவலனை உணவு கொள்ள அழைத்தாள். ஏசு கிறிஸ்துவின் Last Supper போல, விடுதலைப் புலிகளின் தலைவன் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வீரனுக்கு அளித்த விருந்து போல, கோவலனுக்கும் அது கடைசி உணவு.
இளங்கோவடிகளின் செய்யுளைக் கவனியுங்கள்: ‘மண்ணக மடந்தையை மயக்கு ஒளிப்பனள் போல் தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்து’ என்று. பூமித்தாயின் மயக்கம் தெளிவிப்பதைப் போன்று, கண்ணகி தரையில் தண்ணீர் தெளித்து, தன் கையால் தரையைத் தடவிச் சீர் செய்து, கன்னி வாழையின் குருத்தோலை விரித்து, கோவலனை உணவு கொள்ள அழைத்தாள்.
என் முன்னால் விரிக்கப்பட்டிருந்த தும்பு இலையில், உறவினர் மனைவி பரிமாறினாள். முதலில் ேசாறு போட்டாள். ‘சோறு’ என்ற சொல் இன்று நகரத் தமிழனுக்குக் கெட்டவார்த்ைத ஆகிவிட்டது. சொல்ல அவமானமாக, கூச்சமாக இருக்கிறது. சோறு, சங்க காலம் பயன்படுத்திய சொல். இன்று ‘சாதம்’ என்ற சொல் உயர்வு. ‘ரைஸ்’ அதை விட உயர்வு. சோறு போட்டுக் கறிக்குழம்பு ஊற்றினாள். எங்கள் பக்கம் சில வீடுகளில் கறிக்குழம்பில் உருளைக்கிழங்கு சேர்ப்பார்கள். எனது சோற்றுக் குவியலின் மீது எக்கச்சக்கமாக உருளைக்கிழங்குத் துண்டுகள். இல்லத் தலைவர் இலையில் ஏகப்பட்ட கறித்துண்டுகள். வேண்டுமென்றே செய்தாளோ, அகப்பையில் அவ்விதம்தான் வந்ததோ! ‘பாவி போன இடம் பாதாளம்’ என்று தோன்றியது.
எங்களூரில், செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும்போது பெண்கள் பாடுவார்கள். ‘ஏ! என்னைப் பெத்த ராசா… காசு பணம் எங்களுக்கு, கைலாசம் உங்களுக்கு… ஏ! என்னைப் பெத்த அய்யா… தோப்பு வயல் எங்களுக்கு, வைகுந்தம் உங்களுக்கு…’ என்று. அதுபோல சோற்றைப் பிசையும்போது என் காதில் ஒலித்தது, ‘ஏ! அருமாந்த மச்சான்… உருளைக்கிழங்கு உங்களுக்கு, கோழிக்கறி அவ்வோளுக்கு…’ என்று.
எனது சொந்த ராகம் பாடுவதற்காகச் சொல்லவில்லை. விருந்து என்ற சொல்லுக்குப் ‘புதிது’ என்று பொருள். விருந்தினர், அதிதிகள், தினமும் வருகிறவர்கள் அல்ல. ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ என்கிறார் வள்ளுவர். அனிச்ச மலரை மோந்து பார்த்தாலே வாடிவிடும். அத்தனை மென்மை. முகர்ந்து பார்ப்பது அல்ல, மோந்து பார்ப்பது. முகர்தல் எனில் கோருதல். முகம் திரிந்து பார்த்தாலேயே விருந்தினர் முகம் வாடிவிடும்.
விழாக்களில் பேச்சாளர்களுக்கு சால்வை போர்த்தும்போது கவனித்திருக்கிறேன். நிறைய நன்கொடை கொடுக்கும் செல்வந்தருக்கு அவரது செல்வாக்குக்கு ஏற்றாற்போல விலையுயர்ந்த சால்வையும், அன்றாடங் காய்ச்சி சிறப்புச் சொற்பொழிவாளனுக்கு மலிவுப் பதிப்பும். இது இன்றைய தமிழ் மரபு. அது கூடப் போகட்டும். உணவில் பாரபட்சம் என்ன பண்பு?
சினிமாக்காரர்களின் மதிய உணவு இடைவேளையில் இதனைக் கவனிக்கலாம். இயக்குநர், நாயகன், நாயகி, பிரதான நடிக – நடிகையர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என்பவர் முதல் தரம். உதவி இயக்குநர்கள், சகல துறைகளிலும் உதவியாளர்கள் இரண்டாம் தரம். டெக்னீஷியன்கள் மூன்றாம் தரம். துணை நடிகர்கள் நான்காம் தரம். உடலுழைப்புச் செய்பவர் ஐந்தாம் தரம்.
சம்பளத்தில், வாகன வசதிகளில், தங்குமிடங்களில் பேதங்களைப் புரிந்துகொள்ளலாம். உண்ணும் உணவிலும் எத்தனை பேதங்கள்! கலைகளின் அரசி எங்ஙனம் அருள் பாலிப்பாள்? டாக்டர் பட்டங்களும் கலைமாமணிகளும் பத்ம விருதுகளும் வாங்கி விடலாம். கலைமகள் கசப்புடன் பார்த்திருப்பாள்.சினிமாக்கள் மூலம், காசு கொடுத்து டிக்கெட் வாங்குபவருக்கு நாம் போதிக்க விழைவது, அறம், சமதர்மம், சகோதரத்துவம், சமூக நீதி! பழைய சந்திரபாபு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘சிரிப்பு வருது, சிரிப்பு வருது! சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!’
– கற்போம்…
ஓவியம்: மருது
 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

  1. Moorthy சொல்கிறார்:

    excellent..

  2. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    நல்ல பகிர்வு, நன்றி

  3. maanu சொல்கிறார்:

    இன்றைய விருந்துகளில் ஆடம்பரமே நிறைத்து நிற்கிறது. ஏழைகளுக்கு ஆங்கே இடமில்லை-அவர் உறவே ஆனாலும் சரி. வேதனை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s