ச. மோகனப்பிரியா
தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார்.
அவரிடம் சில முன்வைத்தோம்.
சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை?
அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா இருக்கு. வீட்டுல தொடங்கி, அலுவலகம், வெளியிடம்-ன்னு தொடர் நெருக்கடி. அதுமட்டும் இல்லாம அடிப்படையான ஒன்று புரிதல் என்பது இப்ப இல்லாமயே போய்டுச்சு. ஒருவர் இன்னொருவரை வெறுக்கும்போது எப்படி புரிஞ்சுக்க முடியும். உங்கள வெறுக்குறதுக்கு ஆயிரத்து எட்டு காரணம் இருக்கலாம், அதுமட்டுமில்லாம இப்ப புத்தகம் படிக்குற பழக்கம் இல்லாமயே போய்டுச்சு. லிசனிங் மியூசிக்ன்றது வெறும் குத்துபாட்டு கேக்குறது இல்ல. நம்மல அமைதி படுத்துறதா இல்லாம, இப்ப இருக்குற சினிமா பாடல்கள் ஏதோ ஒரு விதத்துல காமத்த தூண்டக்கூடியதா இருக்கு. இதேல்லாம் சேர்ந்துதான் இளஞர்களை ஒரு அமைதி இழந்த மனிதனாக்குகிறது.
இப்போது ஏன் இவ்வளோ வெள்ளபெருக்கு. மழை வஞ்சனையில்லாம பெஞ்சுகிட்டுதான் இருக்கு. நீர்போக்கு வழிகளையேல்லம் அடச்சுட்டோம். பிளாட் போட்டுட்டோம்; குளங்கள மூடிட்டோம். அது ஒரு காரணம். இன்னோன்னு, நாம குடிக்குற இளநீர், மக்காசோள கருது, பாலித்தீன் பை போன்றவற்றை போட வேண்டிய இடத்துல போடாம, எங்கேயே வீசுகிறோம். அதனால், தண்ணீர் தேங்கும் போது கொசு உற்பத்தியாகும். அதுனால டெங்கு வரும். இதற்கு நாம் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்லீட்டு இருக்கோம். ஆனா, தனிமனித பொறுப்பை மறந்துட்டோம்.
சமூக அக்கறை குறித்து பள்ளியிலோ, வீட்டிலோ நமக்கு போதிக்கப்படவில்லை. ஒரு தனிமனித சுதந்திரம் என்கிறது அடுத்தவனுடைய நுனி மூக்கிற்கு வரும் வரைதான். நம்முடைய செயலால் சக மனிதனுக்கு பாதிப்பு வரக்கூடாது. இதன் காரணமாகத்தான் சகிப்புத்தன்மை இல்லாம போய்டுச்சு. யாரையும் மரியாத இல்லாம பேசுறது; எடுத்தெறுஞ்சு பேசுறது. இதுவே மனிதனுக்கு சகிப்புத்தன்மை இல்லாது இருப்பதுக்கு பொதுவான காரணம் .
கடந்த ஒன்றரை வருடங்களா சகிப்புத்தன்மை அரசியல்ல இல்லாமை பற்றி?
மன்மோகன் சிங் பதவி ஏற்பு விழாவில் வாஜ்பாயும், மோடி பதவி ஏற்பு விழாவில் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்கள். ஆனால், இது ஏன் தமிழ் நாட்டுல சாத்தியமா இல்லை. எல்லாரும் பொது சேவைல தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது ஏன், இவன் வரும்போது நான் வரமாட்டேன்னு நேரம் பார்த்து வர்ராங்க. தமிழ்நாடு தவர வேற எங்கேயும் இத பார்க்க முடியாது. நான் இந்தியா முழுவதும் பயணம் செய்பவன். மகாராஷ்ராவிலோ, மத்திய பிரதேசத்திலோ இந்த மாதிரி பார்க்க முடியாது. ஏன்னா இந்த சேவைல நாம மறஞ்சுடுவோம். நாளைக்கு நமக்கடுத்து வேற ஒருத்தன். ஆனா இதுல ஏன் பங்கு வச்சுக்குறோம். இதெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டு. பாரம்பரியமா வருகிற நோய்க்கூறுகள்.
தற்போது எழுத்தாளர்கள் கருத்துரிமைக்கு எதிராக விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். அது பற்றி?
ஒரு படைப்பிலக்கியவாதி, தான் பாதிக்குற விஷயத்த சமூகத்துக்கு எடுத்து சொல்றார். இது தவிர ஒரு எழுத்தாளருடைய அரசியல் செயல்பாடு, பாலிட்டிக்ஸ் அல்ல. ஒரு ரைட்டரா தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேலாக சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துட்டு வர்றேன். என்னுடைய கருத்து, நான் இந்த நாட்டின் குடிமகன். நான் 40 வருடமா தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன். என்னுடைய எழுத்திற்கும் அரசாங்கம் மக்கள் வரிப்பணத்திலிருந்து தரக்கூடியதுதான் இந்த விருது என்பது. காங்கிரஸ் அரசு இருக்கும்போது எனக்கு விருது கிடைத்தது. ஆனால், அதுக்கும் விருதுக்கும் சம்மந்தம் இல்லை. சரியோ தப்போ நாம ஒரு அரச தேர்ந்தெடுத்துருக்கோம். அது எந்த கட்சியா இருந்தாலும் சரி. அந்த அரசின் கொள்கையும், நடவடிக்கையும் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் நம் குடியுரிமை ஆதாரத்தை திருப்பிதர முடியுமா. அதே போல்தான் விருதும். அதேபோல் விருது கொடுக்கும்போது கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்கமுடியுமா இன்றைய காலத்திற்கு ஏத்தமாதிரி. ஒரு எழுத்தாளருக்கு அரசியல் அறிவு இருந்தாலும் அவர்களுக்கு கருவியா செயல்பட விரும்பவில்லை.
சினிமாவை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கும் எழுத்தாளர்கள், சினிமாவிற்கு வந்த பிறகு மாறுகிறார்களே?
சினிமாவைப் பற்றி கடுமையான விமர்சனம் நான் தான் வைக்கிறேன். எனக்கு சினிமாவுடன் அவ்வளவு தொடர்பு இல்ல. என்னுடைய தலைகீழ் விகிதங்கள் நாவல், ‘சொல்ல மறந்த கதை’ன்னு வெளிவந்தது. அதை ஷூட்டிங் அப்போ வேடிக்கை பார்க்க போவேன். தவிர, வொர்க் பண்ணது இல்ல. ‘பரதேசி’யில் நான் வொர்க் பண்னேன். பரதேசியினுடைய கதாநாயகன் ‘இடலாகுடி ராசா’ன்னு அந்த ரோல்ல தான் அதர்வா பண்ணாரு. ஆனால் பரதேசி ஒரு ஆங்கில நாவல். ‘ரெட் டீ’ தமிழில் ‘எரியும் பனிக்காடு’ஐ அடிப்படையாக கொண்டது. களத்திற்காக அதையும், கதாநாயகனுக்காக என்னையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் வசனம் எழுதினேன். அவை கதைக்காக பயன்படுத்தப்பட்டன.
பாலா மிகவும் அன்பான ஒரு மனிதர். பழகுவதற்கு மிகவும் இயல்பானவர். தமிழனுடைய மனதில் சினிமா ஆக்குபை பண்ற இடம் பயங்கரமான இடம். சினிமா நடிகர்களுக்கும், சினிமா போஸ்டர்களுக்கும் 60 அடில கட்டவுட் வெச்சு, அதற்கு பாலாபிஷேகம் பண்றது நம்ம ஊர்ல மட்டும்தான் நடக்கும். பாம்பேல நடக்காது, பாலிவுட்டில் நடக்காது.
இந்திய மொழிகளில் இந்தி பேசக்கூடிய மக்கள் கிட்டதட்ட 40%. தமிழ் பேசுகிற மக்கள் 9%. இதுல 40%க்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களும், 9% மக்களுக்கு எடுக்கப்படுகிற சினிமா படங்களின் எண்ணிக்கையும் கிட்டதட்ட சமம். சென்ற ஆண்டு 246 படங்கள் இந்தில வெளியானது. தமிழில் 216 படங்கள் வெளிவந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழுக்கு இணையான மக்கள் சதவீதம் கொண்ட மகாராஷ்டிராவில் வெறும் 59 படங்களே வெளியாகியுள்ளன. ஆக தமிழனுடைய வாழ்க்கையில் சினிமா ஒரு பயங்கரமான இடத்தை பிடித்திருக்கிறது. இதை வைத்து 4 படத்தில் நடித்தவுடன் அரசியலுக்கு வரலான்னு ஒரு நினைப்புல இருக்காங்க.
நான் 40 வருடமாக 40க்கும் மேற்பட்ட கதை எழுதியிருக்கேன். 10 நாவல் எழுதியிருக்கேன், பல விருதுகள் வாங்கிருக்கேன். ஆனாலும் என்னை தமிழகத்தில் 95% மக்களுக்கு தெரியாது. ஆனால், சினிமாவில் ஒரு சீனில் வந்து சிரிச்சுட்டு போறவங்கள உலகம் முழுக்க தெரியும். இந்த இன்ஃபுளுவன்சை பயன்படுத்திக்க நினைக்குறாங்க.
பாடகர் கோவன் கைது பற்றி?
அரசாங்கத்திற்கு சகிப்புதன்மை இல்லை. மதுவை பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கு. 128 கோடி இந்தியர்களும் ஒரே கலாச்சாரத்திலா இருக்கிறோம். மனித வாழ்வின் அடிப்படை விசயமே சகஜீவிய சகித்து போவதுதான். பல இடங்களில் சைவம் சாப்பிடுறவங்க, அசைவம் சாப்பிடுறவங்களுக்கு வீடு கொடுக்குறது இல்ல. இஸ்லாமியர்களுக்கு குடியிருக்க வீடு கொடுப்பதில்லை. ஆனால், இதெல்லாம் இல்லன்னு சொல்றவங்க பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள் தான்.
ஆனால், சகிப்புத்தன்மை பதவி ஒன்றும் இல்லாதபோது வெளிப்படுகிறது. அதுவே, ஒரு பதவியில் இருக்கும்போது சகிப்புதன்மை அற்றவனாகிறான். இதில் ஒருவித உளவில் சிக்கல் இருக்கு. இந்த வகையான சிக்கல் தமிழனின் மனதில் அதிகமாகவே இருக்கும்.
எந்த ஊர்லயும் இரவு 3 மணிக்கு மது வாங்கமுடியாது ஆனால் , தமிழகத்தில் இது முடியும். என்னால் படிப்படியாக மதுவை குறைக்க முடியும் என உம்மன்சாண்டி கூறுகிறார். அன்புமணி ராமதாஸ், ‘நான் முதலமைச்சர் ஆனால், ஒரு மணி நேரத்தில் மதுவை ஒழிப்பேன்’ என்கிறார். குடி என்பது நோயல்ல, ஆனால் குடிநோயால் பாதிக்கப்பட்ட சமூகம் இது. குடியை நிறுத்தினால் பாதி பேருக்கு பைத்தியம் பிடிச்சுடும். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட அடுத்தநாளே, நம்ம அதிகாரிகளும், அரசாங்கமும் டேங்கரில் கொண்டு வந்து, எல்லா பேருந்து நிலையத்திற்கும் பக்கத்து சந்தில் விற்பனை செய்வாங்க.
இதற்கு காரணம், தமிழனோட வளர்ப்பு, படிப்பு, பத்ரிகைகள், சினிமா மற்றும் போதனைகள் போன்றவைகளில் ஏதோ ஒன்றில் நமக்கு பிரச்னை இருக்கு. நாங்க ஒருசில எழுத்தாளர்கள் குழுவாக மற்ற மாநில நதிகளின் கரையோரங்கள பார்வையிட்டோம். அந்த இடங்களில் ஒரு பாலித்தின் கவரை கூட பார்க்க முடியல. ஆனா, இங்க நாம அப்டி இல்ல.
படங்கள்: வீ. சக்தி அருணகிரி
http://www.vikatan.com/news/tamilnadu/55763-writer-nanjil-nadan-interview.art
பிங்குபாக்: சகிப்புதன்மை –