குடி குறித்து மறுபடியும் – கைம்மண் அளவு 37

image1 (2)நாஞ்சில் நாடன்
முந்திய கிழமை மதுவிலக்குக் கொள்கை பற்றி நம் கருத்தைப் பரிமாறினோம். இத்தொடர் எழுதத் துவங்கிய பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தக் கட்டுரைக்கு வாசக நண்பர்கள் எதிர்வினை ஆற்றினார்கள்.
வாழ்நாளில் ஒருமுறை கூட மோரைத் தவிர வேறெதையும் மோந்து பார்த்திராத நண்பர்கள், ‘‘நீங்கள் பகிர்ந்து கொண்டவை நியாயமான நடுநிலையான கருத்துகள்’’ என்றார்கள்.
அவ்வப்போதும் அடிக்கடியும் மது பாவிப்பவர்கள், ‘‘அதெப்படி மதுவை ஆதரிக்கப் போச்சு’’ என்றார்கள். நான் எழுதியதை மறுபடியும் இருமுறை வாசித்துப் பார்த்தேன். என்னிடம் எந்தக் குழப்பமும் இல்லை. என்றாலும், மதுப்பழக்கம் மாபெரும் சமூகத் தீமையாக மாறிப் போனதை நாம் நிச்சயமாகக் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.image2
குடிப்பது பற்றிப் பலருக்கும் குற்ற உணர்வு இருக்கிறது, ‘ஏதோ தப்பு செய்கிறோம்’ என்று. ஒருவேளை பூரண மதுவிலக்கு அமலாக்கப்படுமேயானால், குடிக்க வாய்ப்பிருக்காது, எனவே குடிக்காத குடிமகனாக மாறிவிடலாம் என்று அவர்கள் கருதக்கூடும். மலையடிவாரத்தில் சீனிக்கிழங்கு என்று அழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயிரிடப்படும்.
கிழங்காகும் பருவத்தில், கிழங்கு அகழ்ந்து தின்ன காட்டுப் பன்றிகள் வரும். அவற்றைப் பிடித்து காதுகளை அறுத்து விரட்டி விட்டாலும் அவை மறுபடி வரவே செய்யும். ‘சீனிக் கிழங்கு தின்ன பன்னி செவி அறுத்தாலும் நிக்காது’ என்பது பழமொழி.
அகப்பட்டுக்கொள்ளாதவரை அனைவரும் யோக்கியர்களே! ஒரு சொந்த இழப்பின் காரணமாக, விரதம் ேபால, மூன்றாண்டுகள் முட்டை கூட சாப்பிடாத சைவனாக, பியர் கூட குடிக்காத Teetotaller ஆக வாழ்ந்தேன் நான். மலேஷியா போவதற்காக ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறி, இரவு 00.05க்கு விமானம் புறப்பட்ட பின் மது வழங்கப்பட்டபோது நான் கை நீட்டி வாங்கினேன். எனது பக்கத்து இருக்கைக்காரர் ஜெயமோகன். அவருக்கு முன்கதை தெரியும். புருவம் உயர்த்திப் பார்த்தார். பின்பு லேசாக சிரித்தார்.
வளைகுடா நாடுகளில் நாங்கள் இருவரும் ஒரு வாரம் இலக்கியச் சுற்றுப்பயணம் செய்து விட்டு குவைத்திலிருந்து புறப்பட்டு மஸ்கட்டில் விமானம் மாறி, திருவனந்தபுரம் பயணமானோம். விமானம் முழுக்க மலையாளிகள். ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு மனைவி – மக்கள் – குடும்பம் பார்க்க சொந்த மண்ணுக்குத் திரும்புபவர்கள்.
வேலை பார்த்த நாடுகளில் மதுவுக்குத் தடை. யார் கசையடி வாங்குவது? விமானம் கிளம்பியபோது சன்னலோர இருக்கைக்காரர் ெஜயமோகன் தலை சாய்த்து உறங்க ஆரம்பித்தார். நாலரை மணி நேரப் பயணம். நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் பயணிகளும் மதுவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். நானே ஒரு சீனிக்கிழங்கு தின்ற பன்றிதானே!
எனது முன்மொழிவு, ‘எந்தச் செயலையும் குற்றவுணர்வுடன் செய்யாதீர்கள். குற்றவுணர்வு ஏற்படுமானால் தவிர்த்துவிடுங் கள்’. இன்று மதுவிலக்குக்கு ஆதரவாக உரத்த குரலில் கோஷம் போடும் அரசியல்வாதிகளில் பலரும் மது பருகாதவர் அல்ல. எவருக்கும் போதி மரத்தடி ஞானம் பிறந்து ஆவேசக் கூத்தாடவில்லை. image3
சில தினங்கள் முன்பு ஒரு அவசரச் சாவுக்காக நாகர்கோவில் போக நேர்ந்தது. எனக்குத் தகவல் கிடைத்த நேரம், கடைசி சொகுசுப் பேருந்தும் சூலூர், பல்லடம் தாண்டியிருக்கும். சிங்காநல்லூர் போய் மதுரைக்குப் பேருந்து பிடித்து அங்கிருந்து நாகர்கோவில் போய்விடலாம் என்று புறப்பட்டேன். வேறு வழியென்ன? பயணச் சீட்டு முன்பதிவு செய்து பயணப்படும் தோதிலா சாவுகள் வருகின்றன? திருமூலர் சொன்னது போல, ‘இடப் பக்கமே இறை நொந்ததே என்றார், கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே!’ என்ற விதத்தில் அல்லவா சமய சந்தர்ப்பம் தெரியாமல் முகம் காட்டுகிறது!
பேருந்து ஏறுமுன் சிறுநீர் கழிப்பது வழக்கம். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில், விலையில்லாமல் சிறுநீர் கழிக்கலாம். சுத்தமாகவும் இருக்கும். வழியில் தேநீருக்காகப் பேருந்து நிற்கும் இடங்களில், தேங்கி நாறும் கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் கேட்கிறார்கள். கூடவே பாஸ்போர்ட் ஒளி நகலும்! விலையில்லாமல் மாதம் குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி, தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர், தாலிக்குத் தங்கம், மகப்பேற்றுத் தாய்க்கு பரிசுப் பை, பொங்கலுக்கு வேட்டி – புடவை, மடிக் கணினி, வெள்ளாடு எனத் தருகிற அரசுகள், பயணத்தின்போது சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாய் வாங்குவதை மௌன சாட்சியாகப் பார்த்து நிற்கின்றன.
காசு வசூலிப்பவரிடம் நள்ளிரவு இரண்டு மணிக்கு வழக்காட இயலுமா? சத்தம் இல்லாமல் வெட்டிப் போட்டு விடுவார்கள். வசூலின் பங்கு எந்தக் குழாய் வழியாக எங்கு போய்ச் சேர்கிறது என்பதை யாரறிவார்? பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழித்து விட்டு, பயணப் பையுடன் வெளியே வர முனைந்தபோது நல்ல போதையில் எதிரே இரண்டு இளைஞர்கள் வழிமறித்தாற் போல வந்தனர். தோற்றப் பொலிவில் படிப்பு, உத்யோகம், செல்வம் தெரிந்தது. நல்ல உயரம் அவர்கள். அண்ணாந்து பார்த்தேன். அதை எனது எதிர்ப்பாகக் கருதி முறைத்துப் பார்த்தனர்.
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாள நண்பர் எம்.கோபாலகிருஷ்ணன் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த அவர் மகன் ரிஷியும் இளைய மகள் நிதியும் உடன் இருந்தனர். ரிஷி எங்களுக்கெல்லாம் ஜப்பானியப் பாணியில் இடுப்பை வளைத்துக் குனிந்து வலது கையை வயிற்றில் மடக்கி வைத்து வணக்கம் சொன்னான், கிமோேனா அணிந்து ஜப்பானியப் பெண்கள் வணங்குவதைப் போன்று. அந்தப் பாணியில், மிதமிஞ்சிய போதையில் இருந்த அந்த இளைஞர்களுக்கு நானும் ஒரு வணக்கம் சொன்ேனன். என் கேலியைப் புரிந்து கொண்டார்களோ என்னவோ, வழிவிட்டுச் சிரித்தவாறு, ‘‘போங்க சார்’’ என்றார்கள்.
மதுவிலக்குக்கு எனது ஆதரவு இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் இளைஞர்கள் மீது பரிவும் அனுதாபமும் ஏற்படுகிறது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு நேரெதிரே மதுக்கடை உண்டு. நான் குடியிருக்கும் பகுதியில், என் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் மேல்நிலைப் பள்ளியொன்று இருக்கிறது. பாடசாலையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் மதுக்கடை. அரசியல்வாதிகள் கிடக்கட்டும், அதிகாரிகள் தினமும் எத்தனை கோழிமுட்டைக்கு மயிர் பிடுங்குவார்கள்?
தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, நீண்ட வரிசையில் நின்று லாட்டரி டிக்கெட் வாங்கியதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ரூபாய்ச் சீட்டை இரண்டு ரூபாய் கொடுத்து கறுப்புச் சந்தையில் வாங்கியதும் நமக்குத் தெரியும். என் வாழ்க்கையில் எந்த மாநிலத்து லாட்டரிச் சீட்டையும் கையால் கூட நான் தொட்டதில்லை.
வயோதிகத் தம்பதியரில் மனைவி வாங்கிய லாட்டரிச் சீட்டுக்குப் பரிசு விழுந்து, கணவர் அந்தப் பணத்தை கையாலும் தொட மாட்டேன் என்று வாதிக்கும் கதை ஒன்று உண்டு, ஜெயகாந்தன் எழுதியது. கதைத் தலைப்பு, ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ என்பது என் நினைவு. ஒவ்வொரு லாட்டரிச் சீட்டு குலுக்கல் முடிந்த பின்பும், ‘சே! ஒரு நம்பர்ல போச்சு’ என்று இந்த நாட்டில் லட்சக்கணக்கானோர் புலம்பினார்கள்! ஓசிப் பேப்பரில் எண்களைச் சரி பார்த்து, கத்தையாகச் சீட்டுக்களை குப்பையில் வீசிப் போனவர் லட்சக்கணக்கானோர்!
இந்தியாவின் அனைத்து மாநில லாட்டரிச் சீட்டுகளும் தமிழ்நாட்டில்தான் அமோகமாக விற்பனையாயின. மகாராஷ்டிராவில் இல்லை, வங்காளத்தில் இல்லை, பஞ்சாபில் இல்லை, கர்நாடகத்தில் இல்லை. அனைத்து மாநில லாட்டரிச் சீட்டுகளும் சிவகாசியிலேயே அச்சிடப்பட்டு நமது ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகிலே’யே விற்கப்பட்டது என்றார்கள். இன்று எல்லோருக்கும் அது மறந்தும் போய்விட்டது.
இந்தியா பூராவிலும் உள்ள அனைத்து மாநிலத் தலைநகரிலும் அலைந்து வாருங்கள்! சினிமா நடிகருக்கு நூறடி உயர கட் அவுட்டும் ஃபிளக்ஸ் போர்டும் வைப்பது நமது மாநிலத்தில் மட்டும்தான். நடிகனுக்கு பாலாபிஷேகம், பியராபிஷேகம் செய்வது நாம் மட்டும்தான். ஆயிரக்கணக்கான கோடிகள் அடித்து மாற்றிய அரசியல் தலைவர்கள் கைதானால், தண்டனை பெற்றுச் சிறைக்குப் போனால், மொட்டை அடிப்பது, மண் சோறு தின்பது, அலகு குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, தீ மிதிப்பது, பால் குடம் சுமப்பது, தீக்குளித்துச் சாவது வேறு எந்த மாநிலத்தும் காண முடியாதவை. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன்தோன்றிய மூத்த குடி’யின் பகுத்தறிவுச் செயல்பாடுகள் இவை.
image4
நீங்கள் கேட்கலாம், ‘சினிமா பார்ப்பதற்கும், லாட்டரிச்சீட்டு வாங்கியதற்கும், தீக்குளித்துச் சாவதற்கும், மிதமிஞ்சிக் குடித்துச் சாலையில் விழுந்து கிடப்பதற்கும் என்ன தொடர்பு’ என்று! எனக்கென்னவோ சராசரித் தமிழ் மனதின் இவ்வகைச் செயல்பாடுகளின் ஊடே தொடர்பு இருக்கிறது என்றேதோன்றுகிறது. நான் பகடியாகச் சொல்லவில்லை, தீவிரமாகவே சொன்னேன், ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’. இது என் கவலை, ஆற்றாமை, அல்லல்…
எனது இந்தக் கருத்தை ஆங்கில நாளிதழ் ஒன்றில் பதிவு செய்த பின்னர், தமிழ் நாளிதழில் மதுப்பழக்கம் பற்றித் ெதாடர் கட்டுரை எழுதியவர், ‘அறிவுஜீவிக் குடி நோயாளிகள்’ என்றோர் பதம் பிரயோகித்தார். சத்தியமாய் நான் அறிவுஜீவியும் இல்லை, குடி நோயாளியும் இல்லை.
தமிழன் தனது நோய்க்கு மருந்து கண்டாக வேண்டும். நமது பிரச்னை, ஆயுதப் பயிற்சி இல்லாதவன் துப்பாக்கி ஏந்தி நடப்பதைப் போன்றது. ‘Trigger Happy’ என்பார்கள் ஆங்கிலத்தில். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகிறது. குறிப்பாக இளைய தலைமுறை, சாலையோரம் குடித்து விட்டு ஆடை குலைந்து மண்ணில் விழுந்து கிடப்பவனைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எனது கல்லூரி நாட்களில், ‘திரைப்படங்களில் முத்தக் காட்சியை அனுமதிக்கலாமா’ என்றோர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. எப்படித் தீப்பிடித்து பிரச்னை எரிந்தாலும், இந்திய அரசாங்கம் ஒரு கமிஷன் அமைப்பார்கள். அவர்கள் பெரும்பொருள் செலவு செய்து ஆராய்ந்து அறிக்கை கொடுக்க ஆறேழு ஆண்டுகள் ஆகும். கமிஷன் அமைத்ததை அரசாங்கமும் மறந்து போகும், மக்களும் மறந்து போவார்கள்.
முத்தப் பிரச்னைக்கு ‘கோஸ்லா கமிஷன்’ என்ற ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்ப் பிரபலங்களிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்டன. அக்காலத்தில் ஏ.கருணாநிதி என்ற சிரிப்பு நடிகர் இருந்தார். அவர் சொன்னார், ‘‘நம்ம ஆள் முத்தம் கொடுத்தா அது விஷக்கடியாக அல்லவா இருக்கும்!’’ என்று.

இது சிரித்துவிட்டுப் போவதற்கான சமாசாரம் அல்ல. Oral Hygeine பற்றிப் பேசுகிறார் அவர். ‘முத்தத்தின் பண்புகள் நம் ஆட்களுக்குத் தெரியுமா’ என்று கேட்கிறார். முத்தம் கொடுப்பது என்பது, ஒரு தமிழ் சினிமாவில் வடிவேலுவுக்கு பெண் புரவியொன்று முத்தம் கொடுத்ததைப் போல அல்ல. முத்தத்திற்கு அன்பின் வெளிப்பாடு, காமத்தின் சாரம் என எண்ணற்ற கூறுகள் உண்டு.
ஏ.கருணாநிதி சொன்ன கருத்தை அப்படியே குடிக்கு மாற்றிப் போட்டுப் பார்க்கலாம். எல்லோருக்கும் தெரியும், இருமல் சிரப்களில் 15 சதவீதம் வரை ஆல்கஹால் உண்டு என்று. 10 மி.லி குடித்தால் அது மருந்து. குழந்தைகளின் வயிற்றுப் பொருமலுக்குக் கொடுக்கப்படும் கிரைப் மிக்சரில் கூட ஆல்கஹால் உண்டு. மதுவிலக்கு அமலில் இருந்த காலை, இருமல் மருந்து வாங்கி மொத்தக் குப்பியையும் போதைக்காக வாயில் கவிழ்த்தோர் உண்டு. கோககோலாவில் ஆஸ்ப்ரோ மாத்திரை போட்டுக் குடித்தவர் உண்டு.
ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பெருங்கூட்டம் தமிழ்நாட்டிலிருந்து வெள்ளம் போல் சபரிமலைக்குச் சாயும். வழக்கமாக, கார்த்திகை மாதம் ஒன்றாம் நாள் கோயிலில் வைத்து குருசாமி, துளசி மணி மாலை போட்டு விடுவார். மலையேறித் திரும்பிய பின்னர், பெரும்பாலும் அதே கோயிலில் வைத்து, அதே குருசாமி மாலையைக் கழற்றுவார். அந்த துளசி மணி மாலையைத் தமது வீட்டிலுள்ள ஐயப்பன் படத்தில் போடுவார்கள். கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்றும் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.
தமிழர்களில் பெரும்பாலானோர், மலை இறங்கியவுடன், கண்ணில்பட்ட சாலையோரக் கோயிலில் மாலையைக் கழற்றி, பக்கத்தில் நிற்கும் மரத்தில் அவசர அவசரமாக அதைத் தொங்க விடுவார்கள். அவர்கள் வேன் அல்லது பேருந்து அடுத்து நிற்கும் இடம் மதுக்கடை.‘நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் உயிர்க்கு இறுதி ஆகி விடும்’ என்பது ‘வலியறிதல்’ அதிகாரத்துக் குறள். எதுவரை சாத்தியமோ அதுவரை மரத்தின் நுனிக்கொம்பு ஏறலாம். அதைத் தாண்டியும் ஊக்கம் கொண்டு ஏறிப் போனால், அது உயிருக்கே கூட இறுதி ஆகிவிடும்.
நோய்க்கு மருந்து தரும்போது, உடல் எடையைக் கணக்கில் கொள்வார் மருத்துவர். ஒரே வயதுள்ள இரு மனிதர்களுக்கு ஒரே டோஸ் மருந்தை அவர்கள் தருவதில்லை. உடல் எடை சார்ந்து மருந்தின் டோஸ் மாறும். குமாரசாமி கால் குப்பி குடிக்கிறார் என்று வீராச்சாமி கால் குப்பி குடித்தால் கணக்கு பிசகிப் போகும். அவரவருக்கு என்று உடல்கூறு பொறுத்து தாங்கு திறன் அமையும். ஒரு கட்டிங் குடித்துவிட்டுத் தள்ளாடுபவன் உண்டு. மூன்று கட்டிங் குடித்துவிட்டு விளக்குக் கம்பம் போல் நிற்பவனும் உண்டு. அவனவன் வயிறு அவனவனுக்குத்தானே தெரியும்? அது போல் அவனவன் போதையின் அளவும் அவனவனுக்குத்தான் தெரியும்! இந்த இடத்தில் ஒரு உவமை ெசால்லலாம், நாகரிகம் கருதித் தவிர்க்கிறேன்.image5
குடிப்பவர் பலருக்கும், அடுத்தவனை விடத் தனக்கு குடி தாங்கும் வலு அதிகம் என நிரூபிக்கும் அவஸ்தை இருக்கிறது. அது மோசமான விளைவுகளை ஏற்
படுத்தும் என்ற போதம் இருப்பதில்லை. இதை அறிந்துகொள்வது அவசியம்.மறுபடியும் திருவள்ளுவரை மேற்கோள் காட்டலாம். ‘மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப் படுவார்.’ காமம் என்பதே மலரை விட மென்மையானது.
image6
சிலர் மட்டுமே அதன் நுட்பம் அறிந்து இன்பம் துய்க்க வல்லவர்கள். கட்டிலில் மல்லாந்து படுத்துக் கிடக்கும் காதலி மீது ஓடி வந்து மேலே விழுவதல்ல காமம். அது சினிமாக் காமம். அப்படித்தான் தமிழர்களில் பலரும் மது என்றால் சாடி விழுகிறார்கள். காமம் ஆனாலும், மதுவானாலும், மருந்து போல் விருந்து போல் அனுபவிக்க வேண்டும்.
தெரிசனங்கோப்பு சாரதா வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் எல்.மகாதேவன் எழுதிய பல நூல்களில், இரு நூல்களின் தலைப்பு, ‘மருந்தே உணவு’ மற்றும் ‘உணவே மருந்து!’ மதுவை, காமத்தை, உணவை, மருந்து போலும் விருந்து போலும் பாவிக்க வேண்டும். துய்க்க வேண்டும். ‘‘கல்வியறிவு இல்லாத உழைப்பாளிகளிடம் கூட, எந்த ஊர் கள்ளு உயர்வானது என்ற அறிவு இருந்தது’’ என்கிறார் மிக மூத்த இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன்.
ெதன்னை மரத்தில் கண்டாங்கி சுற்றி இருந்தாலும் பெண் என்று ஏறி விழுபவனை என்ன செய்ய இயலும்? தமிழன் அப்படித்தான் மது மீது சாடி ஏறுகிறான்.
மராத்தியில் சொல்வார்கள், ‘நாச் ந ஆலா, ஆங்கணு தேடா’ என்று. ‘ஆடத் தெரியவில்லை, முற்றம் கோணலாக இருக்கிறது என்று சொல்கிறாள்’ என்பது பொருள். மது எனும் சொல் மீது உணர்ச்சி ஏற்றி வைத்திருக்கிற தமிழ்ச் சமூகத்திடம் இதற்கு மேல் என்ன சொல்வது?
கற்போம்….
ஓவியம்: மருது
குடி குறித்த நாஞ்சிநாடன் பிற கட்டுரைகள்:

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to குடி குறித்து மறுபடியும் – கைம்மண் அளவு 37

 1. Ravi Ponnusamy,USA சொல்கிறார்:

  Dear Ayya, Very thoughtful article. Your point is this : Don’t attach emotional value to the drinking” . Agreed that this mind set is needed. While we need to look at the liquor with different mind set, we also need to address existing problem “addiction”. Banning the liquor shop will at least reduce this addiction, associated deaths and family issues. Like how we forgot the lottery tickets, we may forget this liquor shops eventually.

 2. சகபயணி சொல்கிறார்:

  சொல்ல வந்த கருத்தைத் தூக்கி தூர வையுங்கள். உங்கள் எழுத்து நடை அடடா அட்டகாசம் போங்கள்!

 3. valava. duraiyan சொல்கிறார்:

  உண்மையிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் நீங்கள் சொல்வதுபோல் குடித்துவிட்டு சாலையில் கிடப்பவரைப் பார்க்க முடிகிறது. தமிழன் செய்தால் மிக மிகையாகச் செய்வான்; இல்லையேல் செய்ய மாட்டான். மதுவிலும் மட்டுமன்று; மாது விஷயத்திலும் அப்படியே; எள்ளலுக்காகவே இதைப் படிக்கலாம்

 4. maanu சொல்கிறார்:

  thamilanukku ethilum nithanam illai. kurippaka, cinema, politics, saarayam. pattaal mattume puthi varum.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s