விருது – கைம்மண் அளவு 36

image1நாஞ்சில் நாடன்
Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது.
‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, ‘பருதி வானவன் நிலம் பசை அறப் பருகுவான் விருது மேற்கொண்டு உலாம்’ என்று நீளும். இதன் பொருள், ‘சூரிய தேவன், நிலத்தின் ஈரப்பசை அற்றுப் போகும்படியாகப் பருகி வெற்றிகொண்டு உலவினான்’ என்பது.
பரிசு என்ற சொல்லும் உண்டு. Prize எனும் ஆங்கிலச் சொல் நேர்ச்சொல். லாட்டரியில் பணம் விழுந்தாலும் அது பரிசுதான். Bumper Prize, Lucky Prize என்றார்கள். பரிசு என்று இன்று நாம் பயன்படுத்தும் சொல், பண்டு ‘பரிசில்’ என்று வழங்கப்பட்டது. பரிசில் என்றால் கொடை என்றும் பொருள். ஆங்கிலத்தில் சொன்னால் Gift, Donation, Present என்பன. பரிசில் வேறு, பரிசல் வேறு. பரிசல் என்பது வல்லம், ஓடம், ேதாணி போன்று நீர் மேல் பயணம் செய்யும் வாகனம்.
பரிசில் எனும் சொல்லைக் குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு முதலாய சங்க இலக்கிய நூல்கள் பயன்படுத்துகின்றன. எனில், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம்மிடையே வாழ்ந்த சொல் என்றுதானே அர்த்தம்?புலவர்களது வாழ்க்கை என்பதே பரிசில் வாழ்க்கையாக இருந்தது. மன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்ைக நடத்துவது.
அவர்களுக்கு வேறு தொழில் ெதரியாது. பாடியதற்குப் பரிசாக ஆழாக்கு உழக்குத் தினை கிடைத்தது என்பது ஒளவையார் வாக்கு. குறுநில மன்னர்களைப் புகழ்ந்து பாடினால் நான்கு மரக்கால் சோளமோ, கம்போ, இரண்டு பக்கா பயிறுகளோ கிடைத்திருக்கும். தலைச் சுமடாக நடந்து வீட்டுக்குக் கொண்டு போயிருப்பார்கள். கொண்டு வந்ததில் ‘அக்காவுக்குக் கொடு’, ‘அடுத்த வீட்டுக்காரிக்குக் கொடு’, ‘வாங்கின கடனைத் திருப்பிக் கொடு’ என்று தாராளமாக இருந்திருக்கிறார்கள். யாவற்றுக்கும் ஆதாரமாக நம்மிடம் பழந்தமிழ்ப் பாடல்கள் உண்டு.
பரிசில் வாங்கி வந்த பொருள் தீர்ந்து போனால் அடுத்த குறுநில மன்னர். இதுதான் புலவர்களின் பரிசில் வாழ்க்கை. இதில் ஐராவதம் என்னும் வெள்ளை யானை கொடுத்தான், காமதேனு என்னும் காராம்பசு கொடுத்தான், ஆயிரம் கழஞ்சு பொன் கொடுத்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் கிடக்கும் வயற்காடு கொடுத்தான் என்பதெல்லாம் வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறதுimage2.
பத்மநாப சாமிக்குப் பால் பாயாசம். பண்டாரம், பரதேசிக்கு மனப் பாயாசம். எனவேதான் புலவர்கள், ‘எத்திசைச் செலினும் அத்திசைக் சோறே!’ என்று பாடினார்கள். ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்’ என்றும்.குறுநில மன்னரை, பாளையக்காரரை, பெருநிலக்கிழாரைப் போய்ப் பார்த்து, ‘சிங்கமே’, ‘கரடியே’, ‘எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்குபவரே’, ‘அலெக்சாண்டரையும் நெப்போலியனையும் தோற்கடித்தவரே’, ‘ரெண்டு டஜன் பெண்களோடு தினமும் சல்லாபிக்க வல்லவரே’ என்று தெண்டித் திரிந்த காலம், போன நூற்றாண்டு வரை புலவர்களுக்கு இருந்தது.
புலவர்கள் போய் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வந்த பிறகு, இப்படிப் போய்ப் பார்த்து, பாடிப் பரிசு வாங்கி வரும் நிலைமை மாறிவிட்டது. போய்ப் பார்த்து இச்சகம் பேசி முகமன் கூறி நின்றால் மதிய உணவுக்கும் வண்டிச் சத்தத்துக்கும் கால் குப்பிக்கும் காசு தருவார்கள் என்ற நிலைமை உருவாயிற்று. மேலும் பாரதியை, புதுமைப்பித்தனைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டார்கள். ஆத்மாவுக்கு என்று எழுத்தும், சோற்றுப் பாட்டுக்கு என்று குமாஸ்தா உத்தியோகம், ஆசிரியப் பணி, கோழிக்கடை, குருணை வியாபாரம் என்றும் ஆயிற்று.image6
கவிஞர் விக்கிரமாதித்யன், `ஓய்ந்த வேளையில் இலக்கியம் செய்கிறார், உருப்படுமா தமிழ் இலக்கியம்’ என்று கேட்பதன் நியாயம் புரிந்தாலும்,
கும்பித் தீ என்பது கொடிய தீ!வசதி உடையவர்கள், தமிழின் மீது ஆர்வம் கொண்டவர்கள், இலக்கிய வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர்கள், அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இலக்கியம் செய்வோருக்குப் பரிசு கொடுக்க ஆரம்பித்தார்கள். பல சந்தர்ப்பங்களில் தகுதியானவருக்குப் பரிசு கொடுப்பது என்பது கட்சி பார்த்து, சாதி பார்த்து, ‘நம்ம ஆளா வேற்று ஆளா’ எனும் விருப்பங்களுக்குள் குறுகிப் போவதும் உண்டு.
பரிசு வாங்க ஆள் பிடிப்போரும் உண்டு. ஏதோவோர் விருது வாங்கப் போனவர், அந்தத் தலைவரின் காலடியிலேயே நெடுநேரம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்தார் என்றும், ‘விருது கிடைத்த அதிர்ச்சியில் செத்துப் போனாரோ’ என்று பதைத்து இரண்டு பேராய்த் தூக்கி நிறுத்தினார்கள் என்றும் கிசுகிசுப்புகள் உண்டு.
பெரும்பாலும் அரசு வழங்கும் விருது என்பது ஆளுங்கட்சி அடிமைகளுக்கே போயிற்று. பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தலைவர்களுக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கும். எந்தப் பல்கலைக்கழகமும் மூத்த தமிழ் எழுத்தாளர் எவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியதாக நமக்குச் செய்திகள் இல்லை.
சினிமாவுக்குப் பாட்டெழுதப் போனால் ஏழெட்டுப் பொறுக்கி வரலாம். மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்கள் மீது நமக்கு என்ன கரிசனம்?
முன்பெல்லாம் டாக்டர் பட்டம் என்ற விருது வழங்குவதற்கென்றே சில லெட்டர் ஹெட் அமைப்புகள் இருந்தன. அச்சடித்த வழவழ தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.
அதற்காக ஏன் வீணான பணச்செலவு என்று இப்போதெல்லாம் தேவைப்படுகிறவர்கள் பட்டங்கள் அச்சடித்து கையெழுத்தைப் போலி செய்து முத்திரையும் குத்திக்கொள்கிறார்கள். முத்திரைத்தாள் மோசடி போல என்று வைத்துக் கொள்ளலாம். அரித்து எடுத்தால் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் ஆயிரக்கணக்கில் போலி டாக்டர்கள் கிடைப்பார்கள். போலி மருத்துவர் இனம் போல இது. பணம் கொடுத்து முனைவர் பட்ட ஆய்வுகளை எழுதி வாங்குபவர்களை இங்கு கணக்கில் சேர்க்கவில்லை.
இத்தகையவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆகிவிடும் ஆபத்தும் உண்டு. பாரதியின் புலம்பல், ‘பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!’ புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றின் வாசல் பக்கம், சாலையோரத்தில், மரத்தடியில் ஒருவர் இளநீர் விற்றுப் பிழைப்பு நடத்தினாராம். பல்கலைக்கழக வளாகத்தினுள் அல்ல, வளாகத்தின் வெளியே! அந்த இளநீர்க் கடைக்காரரிடம் பத்தாயிரம் ரூபாய் கையூட்டு வாங்கினாராம் துணைவேந்தர் ஒருவர். இத்தகு பல்
கலைக்கழகங்கள் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் எத்தரத்தில் இருக்கும்? எனவே எழுத்தாளர்கள் மனம் நொந்துகொள்ள ஏதும் இல்லை.image5
பலவற்றைத் தாண்டியும் தரமான தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவமான விருதும் ஐம்பதினாயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் பொற்கிழியும் வழங்கும் பெருந்தன்மையான அமைப்புகள் இங்கு உண்டு. வழங்கும் அமைப்புகளின் தரம், விருது பெறும் எழுத்தாளரின் தகுதி என்பன ஏறக்குறைய இருந்தாலும் விருதென்பது மகிழ்ச்சியானதொன்று.image4 (1)
நோபல் பரிசு, புலிட்சர் பரிசு, புக்கர் பரிசு எனப் பெருங்கொண்ட தொகைகள் சுமந்த பரிசுகள் உண்டு உலகில். அது இந்தியனுக்கு – குறிப்பாகத் தமிழனுக்குக் கிடைப்பது என்பது, எட்டி இனிக்கும் நாளில் நடப்பது.
எழுதிப் பிழைப்பது என்பதே இயலாதவனுக்கு ஆள் பிடிக்க அலையும் வாய்ப்பு ஏது? எனவே எப்போதாவது கிடைக்கும் ஏதாவது ஒரு விருது என்பது தமிழ் எழுத்தாளனுக்கு, கோடையிலே இளைப்பாற்றிக்கொள்ளும் வகை கிடைத்த குளிர் தரு. வாயுவை உண்டு சீவிக்கத் தெரியாத அவனுக்கு, எழுத்தின் மூலம் வருமானம் என்பது சட்டமன்ற உறுப்பினர் ஆவது போன்ற கனவு.
பெரும்பாலும் பல தமிழ்ப் பதிப்பகங்கள் உரிமைத் தொகை ஒழுங்காகத் தருவதில்லை, அல்லது தருவதே இல்லை. வணிக இதழ்களில் எழுதினால் கிடைக்கும் காசுக்கு பற்பசையும் குளிக்கும் சோப்பும் துவைக்கும் சோப்பும் வாங்கலாம். வயிற்றுக்குக் கூழ் வார்க்க ஏலாது.
இந்தச் சூழலில்தான் விருதுத் தொகைகள் பயனளிக்கின்றன. மருத்துவத்துக்கோ, மக்களின் கல்விக்கோ வாங்கிய கடன்கள் அடைக்க ஆகும். ஆனால், விருது வழங்கும் எல்லா அமைப்புகளும் பெருந்தன்மையுடன் இருப்பதில்லை. ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை தமிழில் பற்பல விருதுகள் உண்டு. விழா எடுப்பதற்கான செலவின் அற்பமான கூறே விருதுப் பணம் என்பது.
2007 வரை நான் பெற்ற விருதுகள் பதினொன்று. அவற்றின் மொத்தத் தொகை 23,000. அதனுள் ‘அமுதன் அடிகள்’ விருதுப் பணம் பத்தாயிரம் அடக்கம். கண்ணதாசன் விருது பெற்ற பின்னரே வீட்டில் உட்கார மர நாற்காலிகளும் இரண்டு ஒற்றைக் கட்டில்களும் வாங்கினேன். 2009ல் தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ பெற்றபோது, இருபத்தி நான்கு கிராம் பொற்பதக்கம். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் – என்றாவது அதை ஏலம் விட்டு சில ேகாடிகள் திரட்ட இயலாதா? சாகித்ய அகாதமி விருது 2010ல் பெற்றபோது மகளுக்கு ஒரு நகை வாங்கினேன். கனடா நாட்டு இயல் விருது வந்தபோது, கல்யாணத்துக்கு வாங்கிய ஒரு கடன் தீர்த்தேன்.
பற்பல விருதுகளாகப் பெற்ற மெமென்டோக்களை, புதிதாய்க் கட்டிய வீட்டில் மாடிப் படிக்கட்டில் அடுக்கி வைத்துள்ளேன். அவற்றை என்ன செய்வது? நாமென்ன நடிகர் நடிகையா, வரவேற்பறையில் பதினைந்துக்குப் பன்னிரண்டு அடி நீள அகலத்தில் ஷோ கேஸ் செய்து அடுக்கி வைக்க? எடைக்குப் போடவும் மனசில்லை. வெளியே வீசவும் திறனில்லை.image1 (4) கனடா நாட்டிலிருந்து வெளியாகும் ‘காலம்’ இரு மாத இலக்கிய இதழில் ‘வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை’ என்று கும்பமுனிக் கதையொன்று எழுதினேன். அதன் தகவல்கள் பெரும்பாலும் என் அனுபவங்கள். திரும்பவும் இங்கே எழுதும் உத்தேசம் இல்லை.என்ன செய்ய? எல்லோருக்கும் எல்லாப் பெருந்தன்மையும் இருப்பதில்லை.‘இவனுக்கு இது போதும்’ என நினைப்பார்கள் போலும்.
தம்பி கொலை செய்து விடுவான் என்று காட்டுக்குள் தப்பியோடி, மறைந்து வாழ்ந்த குமணனிடம் ஒரு புலவன் பரிசில் யாசித்துப் போனான் என்றால் புலவனின் வறுமையை நினைத்துப் பாருங்கள். தீ அசைந்து ஆடுகின்ற அவன் அடுக்களையின் கோட்டை அடுப்பு, தீயை மறந்துவிட்டதாம். அடுப்புச் சாம்பலில் காளான் பூத்துவிட்டதாம். பசியினால் முலைக் காம்பின் துவாரங்கள் தூர்ந்து போன மனைவியின் மார்பு சுவைத்துப் பார்த்து, பால் வராமல், தாய் முகம் பார்த்ததாம் குழந்தை. தாய், புலவன் முகம் பார்த்தாளாம். புலவன் குமணன் முகம் பார்த்து வந்தானாம்.
அன்றைய புலவன் நிலைதான் இன்றைய எழுத்தாளன் நிலையும். சிலர் அதிலிருந்து தப்பிக்க அரசியல் சார்பெடுத்து, பட்ட மரம் பச்சை பிடித்தாற் போல ஆகிவிடுகிறார்கள். எல்லோருக்கும் அது சாத்தியம் இல்லை. இதில் முற்போக்கென்ன, பிற்போக்கென்ன, நற்போக்கென்ன? அவர்கள் குப்பிக்கு எட்டாயிரம் கொடுத்து போதை பாவிப்பார்கள். சாமான்ய எழுத்தாளன் குப்பி முன்னூறுக்குக் கிடைக்கும் மிலிட்டரி ரம்மில் போதை பாவிப்பான். அவ்வளவுதானே! சாவது என்று முடிவெடுத்த பின் ஏ.கே. 47 ஆனால் என்ன? நாட்டுத் துப்பாக்கியானால் என்ன?
ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த சிறுகதைக்குப் பரிசளிக்கும் புகழ்பெற்ற அமைப்பு ஒன்று, பரிசுத் தொகையாக இன்று ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். ஆண்டில் வெளியான சிறந்த சிறுகதைக்கான வெகுமானம்! கோவையின் அருகிருக்கும் நகர் ஒன்றில் விருது என வழங்கும் தொகை ஒரு ேஜாடி பேன்ட், சட்டை வாங்கப் போதுமானது! பல அமைப்புகள் ‘விருது’ எனும் பெயரில் பிளாஸ்டிக் ஸ்டாண்ட் தந்து அனுப்பி விடுகிறார்கள்.
சேலத்தில் புகழ்பெற்ற கல்லூரிக் குழுமங்களின் இலக்கிய அமைப்பு ‘சரசுவதி’ பெயரால் விருதொன்று தந்தார்கள், எனக்கும் நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும். நாலடி அகலம்,  மூன்றடி உயரம், முக்காலடி கனத்துக்கு பிளாஸ்டிக் டப்பா போல இருந்தது. அதன் நடுவே துளையிட்டு, தலைகீழாகப் பேனா ஒன்றைப் பெரிய அளவில் செருகி இருந்தனர். விருதைப் பார்த்து பயந்து போனேன்.
நக்கீரன் ஆசிரியரிடம் கேட்டேன், ‘‘சென்னைலேருந்து நீங்க கார்லேதானே வந்திருப்பீங்க?’’ என்று. அவர் புரிந்து கொண்டார். நானோ பேருந்துப் பயணி. இதை எப்படிப் பேருந்தில் கொண்டு செல்வது என்பது என் கவலை. விருது வழங்கும் விழாவுக்கு என்னுடன் கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார். அவர் சேலத்துக்காரர். ‘‘சிபி, இதை வீட்டுக்குக் கொண்டு போயிருங்க. பேனாவை மட்டும் உருவி எடுத்தீங்கன்னா இருபத்தஞ்சு கிலோ அரிசி தட்டி வைக்கலாம்’’ என்றேன். அப்படித்தான் ஆயிற்று.
அண்மையில் தொலைக்காட்சிச் சேனல் ஒன்று தகுதியானவர்க்கு விருதுகள் வழங்கிற்று. விருதுப் பொருள், ஓராள் உயரமுள்ள பித்தளை நிலை விளக்கு. மிக நல்ல வேலைப்பாடு. காணவே கவர்ச்சியாக இருந்தது. விருதாளர்களில் ஒருவர், ஆயுர்வேத மருத்துவர் எல்.மகாதேவன். நாகர்கோவில் அருகே தெரிசனங்கோப்பு எனும் ஊரில் தலைமுறைகளாகச் சேவை புரியும் சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் பிரதான மருத்துவர். ஏற்புரையில் அவர் சொன்னார், ‘‘விருதுப் பொருளை மட்டும் கூரியர்லே அனுப்பிருங்க’’ என்று.
தாம் பெற்ற பரிசுப் பட்டயம் பற்றி மிக சுவாரசியமாகப் பிரபஞ்சன் எழுதி இருக்கிறார். சில சமயம் எழுநூறு ரூபாய் போக்குவரத்துக்கு செலவு செய்து இருநூறு ரூபாய் பெறுமதியுள்ள பிளாஸ்டிக் ஸ்டாண்ட் ஒன்றை விருதாக நான் பெற்று வந்திருக்கிறேன். அதைப் பொதிந்துகொள்ள ஒரு ஜிகினாப் பொன்னாடையும். ‘சுண்டைக்காய் கால் பணம், சுமட்டுக் கூலி முக்கால் பணம்’ என்பார்கள்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் பவள விழாவின்போது, ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்ற என் நூல் வெளியாயிற்று. கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட்டார். கம்பனின் சொல்லாட்சி சிறப்புப் பேசும் நூல் அது. பாண்டிச்சேரி கம்பன் கழக விருதுக்கு எனது பதிப்பாளரான உமா பதிப்பகத்தினர் அதனை அனுப்பியிருப்பார்கள் போலும். அந்த நூலுக்கு விருது அறிவித்தார்கள். உமா பதிப்பக லெட்சுமணன், ‘‘சார், வராம இருந்துராதீங்க’’ என்றார்.‘‘தங்க இடம், போக்குவரத்து எல்லாம் தருவாங்களா?’’ என்றேன்.
‘‘அதெல்லாம் நீங்களே பாத்துக்கணும்!’’ என்றார்.சற்று யோசனையாக இருந்தது. சரி, போய்த்தான் பார்ப்போமே என்று தீர்மானித்தேன். இரண்டு இரவுகள் எண்ணூறு கிலோ மீட்டர் பயணம் செய்து, நேரத்தையும் பணத்தையும் செலவழித்துத் தங்கி விருதைப் பெற்றேன். விருதுத் தொகை ரூபாய் 5,000. செலவு போக மிச்சத்தை காசாக வீட்டுக்குக் கொண்டு போக வேண்டாம் என்று பேரனுக்கு கால் கிலோ ரவை கேக்கும் எனக்கு ஒரு குப்பி பிளாக் டாக்கும் வாங்கிக்கொண்டேன்.
நல்லவேளையாக விருது பொறித்த பிளாஸ்டிக் ஸ்டாண்ட் எதுவும் தரவில்லை. வழவழ காகிதத்தில் வண்ணங்களில் அச்சிடப்பட்ட சான்றிதழ் ஒன்று தந்தார்கள். சான்றிதழைத் திருப்பிப் பார்த்தேன். காலியாக இருந்தது. நான் ஒரு பக்கம் எழுதப்படாத தாள்களை நேசிப்பவன் என்பதால் பெருத்த சந்தோஷம் ஏற்பட்டது.
கற்போம்…
ஓவியம்: மருது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to விருது – கைம்மண் அளவு 36

  1. Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

    அனுபவப்பூர்வமான நல்ல பதிவுதான், ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தருணம் உங்களுக்கு சில எதிர்ப்பு குரல் வருகிற வாய்ப்பிருக்கிறது. நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s