தரகு – கைம்மண் அளவு 33

kai33aநாஞ்சில் நாடன்
பத்தாண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்க வரும் வாடிக்கையாளரைச் சில சமயம் மதிய உணவுக்கு அழைத்துப் போக நேரும். சிலர் சோறேதான் வேண்டும் என்பார்கள். சிலர் பியரே போதும் என்பார்கள். சிலர் அசைவம் இல்லாமல் உண்பதில்லை என்பார்கள். சிலருக்கு சுக்கா ரொட்டி, புல்கா என்று விருப்பம் இருக்கும். விருப்பத்துக்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்வதுதானே விற்பனைத் தந்திரம்.
எங்கள் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலேயே எல்லா ஏற்பாட்டுக்கும் இடங்கள் இருந்தன. மாதத்தில் நான்கைந்து நாட்கள் இப்படி ஆகி, எமக்கும் தொந்தி பெருத்து விடும். பத்து, பன்னிரெண்டு நாட்கள் வெளியூர்ப் பயணங்களிலும் இருப்போம்.நம்மிடம் வாங்க இருப்பவரை உணவுக்கோ, மதுவுக்கோ அழைத்துப் போவது வணிக நோக்கம் கருதித்தான்.

சும்மா பேருந்து நிறுத்தத்தில் காத்து நிற்பவரை சாப்பிடக் கூப்பிடுவோமா என்ன? என்றாலும் நாம் முனைந்து உணவுக்கு அழைத்துப் போகும் பலரில், நூற்றுக்கு இரண்டு பேர் எம்மை பில் கொடுக்க அனுமதிக்காமல் தாமே வல்லந்தமாகக் கொடுப்பார்கள். அவர்களது நேர்மை அரும்பொருள் என்பதால் வியப்பு ஏற்படும். ஆனால் வேறு சிலரோ, ‘இரவில் தனியாக உறங்க முடியவில்லை, ஒரு துணை ஏற்பாடு செய்ய முடியுமா?’ என்றும் கேட்பார்கள். அது மாமா வேலை என்பதால் நாமதைச் செய்ததில்லை.

தொழில்துறையில் அதையும் செய்கின்ற நிறுவனங்கள் உண்டு. சினிமாவிலும் அரசியலிலும் அதையே தொழிலாகச் செய்வோரும் உண்டு.image3 எவரும் ‘இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன?’ என்றிருப்பது இந்திய மனசாட்சி ஆகிவிட்டது.மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும், தமது மருந்தை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருத்துவரை எதற்குத் தாய்லாந்து அனுப்புகிறார்கள்?

கேட்பீர்களேயானால் விநோதமான பதில்கள் வரும். ‘யோகா பயில’ என்பார்கள். ‘மருத்துவ உபகரணங்கள் பார்வையிட’ என்பார்கள். கடற்காற்று வாங்க, கடல் நீராட, நீர் விளையாட்டுக்கு என்பார்கள். Flesh Trade என்றொரு சொல்லாட்சி உண்டு ஆங்கிலத்தில். ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்கிறார் வள்ளலார். ஆனால் அவர்கள் உறவு இல்லை என்றால் வணிகம் இல்லை.

பம்பாயில் நான் இருந்தபோது, தொழிற்சாலைக்குத் தேவையான சில்லறைப் பொருட்கள் விற்க, துடிப்பான மார்வாடி இளைஞர் ஒருத்தர் வருவார். பஜ்ரங்லால் என்று பெயர். எங்கள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர், அவருக்கு உறவு.‘‘ஏம்பா! அவருட்டே ஒரு வார்த்தை சொன்னா இன்னும் ரெண்டு ஃபேக்டரிக்கு சிபாரிசு செய்வாரில்லே?’’ என்றேன்.‘‘போயி கேட்டேன்ல!’’ என்றார் பஜ்ரங்லால்.

‘‘என்ன சொன்னாரு?’’‘‘அரே பாய்! து ஜே தோ பேஜ்னா ஹை! உன்கோ தோ லே னா ஹை! பீச் மே மைன் கியோங்?’’ என்றாராம். ‘அட சகோதரா! உனக்கு விற்கணும், அவனுக்கு வாங்கணும், இடையிலே நானெதற்கு?’ என்று அதற்குப் பொருள்.இன்றோ, வாங்குவதானாலும், விற்பதானாலும் இடைத்தரகர்கள் செல்வாக்கே கோலோச்சுகிறது. உற்பத்திச் செலவைப் போல மூன்று மடங்கு
ஆதாயம் இடைத்தரகனுக்குப் போய், மொத்த விலையும் வாங்குபவன் தலையில் விடிகிறது. மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே?

தீவிர இலக்கிய வாசகரும் பள்ளித் தலைமையாசிரியரும் நவீன விவசாயியுமான எனது நண்பர் தங்கமணி ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். எனக்குக் கொஞ்சம் காட்டு நெல்லி கொண்டு வந்தார். நான் ஒளவை மூதாட்டியும் இல்லை; அவர் தகடூர் அதியமானும் இல்லை என்றாலும்.‘‘ெராம்ப சந்தோஷம் தங்கமணி… கால் கிலோ முப்பது ரூபாய் விக்கிறானுக!’’ என்றேன்.‘‘என்னத்தைப் போங்க… எங்களுக்கு கிலோவுக்கு பதினஞ்சு ரூவா தந்தா அதிகம்’’ என்றார். மொரப்பூர் பக்கம், மூக்கனூர்ப்பட்டியில் கிலோ பதினைந்து ரூபாய்க்கு கொள்முதலாகும் பண்டம், கோயம்புத்தூரில் நடைபாதைத் தள்ளுவண்டியில் கிலோ நூற்றிருபது ரூபாய். இடையில் பலருக்கு பிழைப்பு நடக்கிறது என்றாலும், விவசாயி வாழ முடியவில்லை என்பதுதானே காலத்தின் கசப்பு!
kai33b
நாஞ்சில் நாட்டுக்காரர்கள் மலையாளிகள் போல, கோவாக்காரர்கள் போல, தேங்காய் அதிகம்பாவிப்பவர்கள். இந்திய நாட்டின் இதய மருத்துவ வல்லுனர் அனைவரும் ஒரு மனதாகத் தேங்காய்க்கும் எண்ணெய்க்கும் எதிராகப் புனிதப்போர் நடத்தியபோதும் நாங்கள் அதனைப் பொருட்படுத்தியதில்லை. இன்று கேரள நாட்டு ஆய்வுகள், அறுபது எழுபது ஆண்டுகளாக தேங்காய்க்கு எதிராக நடந்த பரப்புரையைத் தகர்த்து எறிந்துள்ளன. தென்னையே வளராத நாட்டின் பாமாலினுக்கு ஆதரவாகவும், உள்ளூர்த் தேங்காய்க்கு எதிராகவும் செயல்பட்ட மேநாட்டு சூதுக்குப் பகடைக்காயான சங்கதி இன்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இதன் தரகுத் தொகையைக் கொள்ளை கொண்டு போனது எவர்?
image4
வாரத்துக்கு ஏழு காய்கள் எனச் சராசரியாகத் தேங்காய் சுமப்பேன், இருபது ரூபாய் மேனிக்கு வாங்கி. ரசம், மோர், தேநீர் தவிர மற்றெதுவும் தேங்காய் இன்றி அமையாது எமக்கு. தென்னை விவசாயி சொல்கிறான், தனக்குக் காய்க்கு ஐந்து ரூபாய் கிடைத்தால் அதிகம் என்று. கடந்த ஓராண்டாக நாங்கள் கோவைப்புதூரில் வாழ்கிறோம். எம் புறக்கடை மண்ணில் தெங்கு வைத்தால் காய்க்க ஏழாண்டுகள் ஆகும்! வைத்துப் பராமரிக்கும் சிரமம் இன்றி அண்டை வீடுகளில் நூறு ரூபாய் கொடுத்தால் பன்னிரண்டு காய்கள் தருகிறார்கள். எனக்குப் பாதி விலை, அவர்களுக்கும் நியாய விலை.

எரிவாயுக்கான மானியத்தைத் துறந்து தேசக் கட்டுமானத்துக்கு உதவும்படி மாதந்தோறும் குறுஞ்செய்தி வருகிறது. ஈரோடு புத்தகக் கண்காட்சி சென்று 7000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி, பேருந்தில் திரும்பும்போது சக எழுத்தாள நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் அதுபற்றிப் பேசிக்கொண்டு வந்தேன். மாதம் நமக்கு ஒரு எரிவாயு உருளை ஆகும். தேச நிர்மாணத்துக்கு என்று மாதம் 200 ரூபாய் மானியத்தைத் துறப்பதும் சாத்தியம்தான். மாதம் இருபது முறையேனும் நகருக்குச் சென்று திரும்புபவன் நான். போனால் ஒரு காபி குடிப்பது அத்தியாவசியம். சேவை வரி அடங்கலாக ஒரு காபி 27 ரூபாய்.

540 ரூபாய் போய் விடும் மாதத்துக்கு. கோவையில் தற்போது 5 ரூபாய்க்குத் தேநீரும் 5 ரூபாய்க்கு வடை அல்லது பஜ்ஜி அல்லது போண்டாவும் கிடைக்கிறது. அந்தக் கணக்குக்குப் போனால் மாதம் 200 ரூபாயே ஆகும். காபி குடிப்பதை நிறுத்தினால் 340 ரூபாய் மிச்சம். எரிவாயு மானியம் வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்ப இன்னும் மனத்துணிவு வரவில்லை என்றாலும், மனதின் ஓரத்தில் உட்கார்ந்து கிடக்கிறது அந்த யோசனை.

கூடவே துணைக் கேள்வியொன்று வருகிறது. சமூகநீதி பேசும் நமது அரசியல் வியாபாரிகள், சினிமாக்காரர்கள், கல்வி-மருத்துவ-உணவுத் தந்தைகள் எவரேனும் இன்று வரை எரிவாயு மானியம் துறந்தார்களா? ஒருவேளை வெள்ளித் திரையிலும் மேடைகளிலும் மட்டும்தான் சமூகத்துக்கு முன்மாதிரிகளாக இருப்பார்களோ!
சமீபத்திய செய்தி ஒன்று… நாட்டின் அழுக்குகளைப் புளி போட்டு விளக்க வந்த, டெல்லி மாநில அமைச்சர் ஒருவர் வீட்டுக்கு மாதம் மின்சாரக் கட்டணம் 1,25,000 ரூபாயாம். அதை மாநில அரசே செலுத்துகிறதாம்.

நான்கு பேர் வாழும் வீட்டில், குளிர்சாதனமும் வென்னீர் குளியலும் இல்லாத நடுத்தர வர்க்கத்தினருக்கு, குளிர்சாதனப் பெட்டி, துவைப்பு இயந்திரம், அரைப்பு இயந்திரம், கலப்பு இயந்திரம், துணி தேய்க்கும் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, விளக்குகள், மின்விசிறிகள் என உபயோகிப்பவருக்கு உத்தேசமாக மாதம் நானூறு ரூபாய் மின் கட்டணம் ஆகிறது. எப்படி ஐயா, மாநில அமைச்சரே ஆனாலும், மாதம் ஒன்றே கால் லட்சத்துக்கு மின்சாரம் பயன்படுத்த இயலும்? ஒருக்கால் ஈர விறகை, ஈரத்துணியை, வற்றல் – வடகத்தை மின்சாரம் கொண்டு சூடாக்குவார்களா? அல்லது வீட்டின் மொத்த சாக்கடைத் தண்ணீரையும் மின்சாரம் செலுத்தி ஆவியாக்குவார்களா? ஒருக்கால் சப் மீட்டர் போட்டு தெருவுக்கே விற்பார்களோ?

நாடே இடைத்தரகர்களால் நிறைந்து செழிக்கிறது. ஊழியம், சேவை, ெதாண்டு, பணி எனும் சொற்கள் யாவும் பொருள் இழந்துபோய் ரத்தம் கடித்துறிஞ்சும் நீண்ட பேய்ப் பற்கள் காட்டுகின்றன. இந்திப்படம் ஒன்றில் ஒரு சிரிப்பு நடிகர், தன் முன்னால் வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை, வெள்ளை கோட், வெள்ளைக் காலணியுடன் வந்து நிற்கும் மனிதனைப் பார்த்து ஒரு வசனம் சொல்வார், ‘‘சஃபேத் சஃபேதி திக்தா ஹை… ஜரூர் ஸ்மகிளர் ஹோ கா!’’ என்று. ‘வெள்ளையும் சொள்ளையுமாகத் தெரிகிறான், நிச்சயம் கடத்தல்காரனாகவே இருப்பான்’ என்பது பொருள்.

இன்றைக்குச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ‘சிரிக்கவே மாட்டேன் எனும் பிடிவாதத்துடன், இறுகிக் கனத்த முகத்துடன், தடித்த தொந்தியுடன் முறைத்து முறைத்துப் பார்க்கிறார். எனவே அரசுப் பணியாளராகவே இருக்க வேண்டும்’ என்று. இன்று சேவை, பணி, ஊழியம் எனும் சொற்களுக்கு மாற்றாகத் தரகு எனும் சொல்லை அகராதிகள் பயன்படுத்தும் போலும்.பரபரப்பாகக் கலைச் சேவை செய்யும் பெரியதனக்காரர் பற்றிய செய்தியொன்று காற்றில் உலவுகிறது.

அரசின் மேன்மக்களோடு இறுக்கமான உறவு பூண்ட அவர், கலைவாணிக்குச் செய்யும் கலைச்சேவை காரணமாக ஏற்பட்ட தனது பரிச்சயங்களைப் பயன்படுத்திக் கொண்டு தரகு செய்வாராம். தொழில் முனைவோரை மேன்மக்களிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பதுடன் அவர் பணி முடிந்து போகுமாம். பிறகென்ன, வாயுள்ள பிள்ளைகள் பிழைத்துக் கொள்ளும்! தரகுத் தொகையோ, தொழில் முதலீட்டின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருக்குமாம். ஆயிரம் உண்டிங்கு தரகுச்சாதி, எனில் அந்நியன் வந்து புகலென்ன நீதி?
image5
இன்று லஞ்சம், ஊழல், கையூட்டு எனும் சொற்கள் பழசாகிப் போய் அலுத்துவிட்டன. அச்செயல்பாடுகள் ஊழிக்கால முடிவில்தான் ஒழியும் போலும்! எத்தனை ஆயிரம் பக்கங்களில் சட்டங்கள் இயற்றினாலும், எவரின் எந்த ரோமத்தையும் அது பிடுங்குவதில்லை. இருபதாண்டுகளுக்கு முன்பு ரோமம் பிளந்து பார்ப்பதுபோல், மேற்கத்தியப் புரட்சிகளை இங்கு பாடம் நடத்தியவர்கள் இன்று மயில்களைக் கொன்று ஆய்ந்த பீலிப் படுக்கைகளில் உறங்குகிறார்கள். குளிர்பதன இல்லங்களில் வாழ்கிறார்கள். கோடி பெறும் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள்.
குப்பிக்கு இருபதினாயிரம் விலையுள்ள மதுபானங்கள் பருகுகிறார்கள். இடப்பக்கம் ஒன்றும் வலப்பக்கம் ஒன்றுமாய்த் துயில்கிறார்கள். எல்லாம் இடைத் தரகுதான்.
தரகர்களால்  தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது.
இருபதாண்டுகள் முன்பு  நானோர் கவிதை எழுதினேன். ‘எல்லாம் வசப்படும்’ என்ற தலைப்பில்.

‘குற்றாலத்து அருவியின் பாய்ச்சலை அறைக்குள் நிறுத்தலாம்,
வங்காளத்து விரிகுடா ஓசையை அகழ்ந்து கொணரலாம்,
சுந்தர வனத்துக் காட்டின் இருட்டை முன்றில் படர்த்தலாம்,
பெரிய கோயில் பிரகாரக் குறிகளைப் படுக்கையில் புணரலாம்,
சிங்கக் குட்டியின் செவியைத் துளைத்து சங்கிலி கோர்த்து நடத்தித் திரியலாம்,

ஆதிகேசவன் கோயிலில் பெயர்த்த பாளம் பதித்து அழுக்குத் துவைக்கலாம்,
கனகவிசயர் சுமந்த கல்லில் அம்மியும் குழவியும் அடித்துப்போடலாம்,
சந்தனக் காட்டின் வைரம் இழைத்து கக்கூசுக்குக் கதவு பூட்டலாம்,
வரவேற்பறையின் வளைவில் நிறுத்த ரோடின் சிற்பம் செதுக்கித் தருவார்,
உணவுக்கூட அகலத்துக்கென சால்வடோர் டாலி வரைந்து தருவார்,
அடிப்படையாக அறிக நீ ஒன்று!

பொருள்மேல் பொருள் செயும் ஆறு எதுவென?(அரும்பொருள்: ரோடின் – புகழ்பெற்ற சிற்பி, சால்வடோர் டாலி – புகழ்பெற்ற ஓவியர்,
ஆறு – வழி.)கல்விக்கு, தொழிலுக்கு, வீடு கட்ட எனக் கடன் தரத் தயாராக இருக்கின்றன வங்கிகள். ஆனால் இடையில் ஒரு தரகு உண்டு. நோய் வந்தவனுக்கு மருத்துவமனை வைத்தியம் பார்க்கும். இடையில் ஒரு தரகுண்டு. கமிஷன் என்றும் சேவைக் கட்டணம் என்றும் கன்சல்டன்சி சார்ஜ் என்றும் பற்பல நாமங்கள் உண்டு தரகுக்கு. பிறகென்ன, தெள்ளேணம் கொட்ட வேண்டியதுதானே!

வள்ளுவர் சொல்கிறார், ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்று. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவேளை அது சரியாக இருந்திருக்க வேண்டும். இன்று ‘உழுதுண்டு’ எனும் சொல்லைத் ‘தரகாய்ந்து’ என்று மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். இந்தியப் பெருங்குடியினர் தொழுதுண்டு பின் செல்வார்கள். அவர்களால் வேறென்ன செய்யக்கூடும்! மேய்ப்பவர்களுக்குப் பிறகுதானே செம்மறிக் கூட்டம் நடக்கும். ஆயர்பாடிக் கண்ணன் பின் சென்றதுபோல் தரகர்பாடி மன்னன் பின் செல்லும் மந்தைகளாக…‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனில் கூரியது இல்’ என்கிறது வள்ளுவம்.

‘பொருளை ஈட்டுங்கள். பகைவரின் செருக்கை அறுத்து எறியும் கூரிய ஆயுதம் வேறு ஒன்றும் இல்லை’ என்பது பொருள். ‘செய்க பொருள்’ என்பதற்கு ‘நல்ல வழியில் நின்று, அறம் பிறழாது பொருள் ஈட்டுக’ என்றுதான்  திருக்குறளுக்கு உரையெழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உரைக்கிறார்கள்.

கழுத்தை அறுத்து, வயிற்றில் மிதித்து, கொள்ளையடித்து, கொலைகள் புரிந்து, காட்டிக் கொடுத்து, கூட்டிக் கொடுத்து, தரகு வாங்கிப் பொருள் ஈட்டுக என்றெவரும் போதிக்கவில்லை.திருக்குறளை வேதம் எனப் பேசும் அனைத்து அரசியலாளர்களும் திருக்குறளுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். இந்தியத் தொல்மரபின்  அனைத்து அறநூல்களையும் திருத்தி எழுதும் சாமர்த்தியம் உடையவர்கள் அவர்கள்.

–கற்ப்போம்
ஓவியம்: மருது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தரகு – கைம்மண் அளவு 33

 1. பாலா சொல்கிறார்:

  {மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பலவும், தமது மருந்தை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருத்துவரை எதற்குத் தாய்லாந்து அனுப்புகிறார்கள்?} அனுப்புகின்றன என்று இருக்கவேண்டும்.

 2. பாலா சொல்கிறார்:

  இறுதிச்சொல் ‘கற்ப்போம்’ என்பதும் தவறு. கற்போம் என்பதே சரி.

 3. Harikarthikeyan Ramasamy சொல்கிறார்:

  நல்ல பகிர்வு சிலது என் சொந்த அனுபவம் போல உள்ளது, நன்றி உங்கள் பணி தொடரட்டும்

 4. சகபயணி சொல்கிறார்:

  இத்தரகுத் திறமைகள் இல்லாத, பிழைக்கத் தெரியாத சாமானியர்கள் பலர்… (இவர்களை நேர்மையாளர்கள், உத்தமர்கள், சான்றோர்கள் என்றெல்லாம் இவ்வுலகம் ஒருகாலத்தில் போற்றியதுண்டு!) இல்லை! இல்லை! மன்னிக்கவும் ‘சிலர்’ இன்று சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்துத் தவிக்கும் கோமாளிகளெனப் பார்க்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற பெண்களோ, பிள்ளைகளப் பெற்று பொறுப்பில்லா இச்சமூகத்திடம் பலி கொடுப்பதா என மனம் நொந்து பிதற்றித் திரிகிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s