எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30

image1 (7)

நாஞ்சில் நாடன்
‘தூது’ என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. செய்தி சொல்லவும் மறு செய்தி வாங்கி வரவும் தூது அனுப்பப்பட்டது. நட்பு நாட்டு, பகை நாட்டு வேந்தருக்கும், குறுநில மன்னர்களுக்கும் அரசர்கள் தூது அனுப்பினார்கள். எந்தச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்கள். ‘தூது’ என்பது தொல் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு ஆகிய நூல்கள் ‘தூது’ எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளன.
திருக்குறளில் ‘தூது’ என்றொரு அதிகாரமே உள்ளது. ‘தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது’ என்கிறது திருக்குறள். ‘செய்திகளைத் தொகுத்துச் சொல்வதும், தேவையற்ற செய்திகளை நீக்கிச் சொல்வதும், எதையும் மனம் கொள்ளுமாறு சுவைபடச் சொல்வதும், நலம் தேடித் தருவதுமே தூது’. தூது போன இடத்தில் இழவு இழுத்து விடுபவன் தூதுவன் அல்ல. 1969 வரை தமிழில் தெரிய வந்துள்ள தூது நூல்கள் 127. அவற்றுள் எத்தனை அச்சு வடிவம் பெற்றன, இன்று அச்சு வடிவத்தில் கிடைப்பன எத்தனை, அவற்றுள் எத்தனை வாசிக்கப் பெறுகின்றன என்று பேசப் புகுந்தால் அது முனைவர் பட்ட ஆய்வு ஆகி விடும். அதைக்கூட வாசித்து விடுவோமா நாம்? மனிதர்களைத் தூது அனுப்பியது போக பலவற்றையும் தூது அனுப்பிய செய்திகளை இலக்கியங்கள் பேசுகின்றன. ‘தூதுக்கான பொருட்கள் பத்து’ என மரபு இலக்கணம் பேசுகிறது. ஆனால் இலக்கியம் என்பதே மரபை மீறுவதுதானே!image2 (3)
பறவைகளில் அன்னம், கிளி, குயில், மயில், பஞ்சவர்ணம், காக்கை எனத் தூது அனுப்பி இருக்கிறார்கள். வண்டு தூது போயிருக்கிறது. மேகம், தென்றல், காதல் நெஞ்சம், தமிழ், மான், மாரி, அன்பு என்பன தூது நடந்திருக்கின்றன. ஆடலும் பாடலும் அறிந்த விறலி தூது போயிருக்கிறாள். மறலி எனப்படும் யமன் தூது போயிருக்கிறான். கமலம், சவ்வாது, துகில், தாதி, நங்கை, மாது, பணம், பாக்கு, பாவை, பிள்ளை, புலவர், பூவை, பொன், மலர், வஞ்சி, வெற்றிலை என தூது அனுப்பப்பட்டிருக்கின்றன. நெல்லும் பழையதும் தூது போயிருக்கிறது. படுக்கையும் புகையிலையும் தூது போயிருக்கிறது. கழுதைகூட தூதுக்குப் பயன்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தந்தி தூது போயிருக்கிறது. இவ்வாறு கண்டது கடியது யாவும் தூதுப் பொருட்களே!
காதலுக்கும், காமத்துக்கும், பொன் – பொருள் வேண்டியும், மனைவியின் ஊடல் தீர்க்கவும், இறையருள் வேண்டியும் தூது அனுப்பினர். ‘பாண்டவர்க்காய்த் தூது நடந்தானை’ என்று பார்த்தனைப் பாடி இருக்கிறார்கள். தூதுவனின் இலக்கணங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
எவரால் எவருக்குத் தூது அனுப்பினாலும், நோக்கம் செய்தி சொல்வதுதான். ஓட்டக்காரர்கள், குதிரைக்காரர்கள் என ஓலை சுமந்து சென்ற காலம் போக, தபால் இலாகா வந்தது. பிறகு தந்தி வந்தது. தனியார் நடத்தும் தூதஞ்சல் வந்தது. மின்னஞ்சல் வந்தது. பின்னர் குறுஞ்செய்திகள் அனுப்பும் முறையும் வந்தது. வேகம், சுருக்கம், உடனடி என்பன குறுஞ்செய்திகளின் தீவிரப் பயன்கள். முன்பெல்லாம் இது போன்ற வசதிகள் இல்லை. இன்று நினைத்தால், நினைத்த மாத்திரத்தில் ஆயிரக்கணக்கான கல் தொலைவுக்கு அனுப்பி விட முடிகிறது. ஊராட்சி மன்றத்தின் உள் எல்லை ஆனாலும் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டியும். தூர தொலைவில் இருக்கும் நண்பருக்கு, மக்களுக்கு plz call என்று செய்தி அனுப்புவது சாத்தியம் ஆகிறது.
1972ம் ஆண்டின் நவம்பர் மாத மத்தியில் என்னைத் தனியாக பம்பாய்க்கு அனுப்பினார்கள், இரண்டாயிரம் கிலோ மீட்டர் தாண்டி. எம்.எஸ்சி தேறியிருந்தும், ஊரில் பிழைக்க வழியில்லாத ஊழல் சூழல். வீரநாராயணமங்கலம் என்னும் 120 வீடுகள் கொண்ட ஆற்றங்கரைச் சிற்றூரில் இருந்து, இந்தியாவின் பெருநகரம் பம்பாய்க்கான எனது பயணம். ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து திரும்பும் டவுன் பஸ் பிடித்து நாகர்கோயில். அங்கிருந்து திருநெல்வேலி பஸ். கண் கலங்கி, தோள் தட்டி, ‘பாத்துப் பத்திரமாப் போ… போய்ச் சேந்து கடுதாசி போடு தாயமாட்டாம’ என்று கையசைத்துச் சென்று விட்டனர் வழியனுப்ப வந்தவர் எல்லாம். 89 கிலோமீட்டர் தூர திருநெல்வேலிக்கு, மூன்று மணி நேரம். அங்கிருந்து ரயில் நிலையம், ரயில் புறப்படும் தளம், பெட்டி தேடி இருக்கை அடைந்து… மாலை அமர்ந்தால் மறுநாள் காலை சென்னை எழும்பூர். எழும்பூரிலிருந்து பஸ் பிடித்து சென்னை சென்ட்ரல். அங்கு தளம் தேடி, ரயில் தேடி, ெபட்டி தேடி, இருக்கை தேடி… மாலை புறப்பட்ட ரயிலில் முப்பத்தாறு மணி நேரப் பயணம். பம்பாய் சென்ட்ரல் ரயில்வேயின் இறுதி ஸ்டேஷனான விக்டோரியா டெர்மினஸில் இறங்கும்போது மூன்று நாட்கள் ஆகிவிட்டிருந்தன. நினைவில் கொள்ளுங்கள், புறப்பட்ட அன்று காலை ஊரில் குளித்ததுதான். இன்று விமானத்தில் 24 மணி நேர அமெரிக்கப் பயணத்துக்கு ஆயாசப்படுத்துகிறார்கள் நம்மை.
ஊரில் கையசைத்த பெற்றோருக்கு மூன்றாவது நாள் பொறுத்து பம்பாயில் இறங்கி, தெரிந்தவர் குடியிருப்புக்குப் போய், உள் நாட்டுக் கடித உறை வாங்கி, எழுதித் தபாலில் சேர்த்து, ‘நலமாக பம்பாய் வந்து சேர்ந்தேன்’ என்ற தகவல் போய்ச் சேர பத்து நாட்கள். ஊரில் அன்று தொலைபேசி எவர் வீட்டிலும் இல்லை. வேண்டுமானால் தந்தி அடித்திருக்கலாம். நாம் பேச வந்த விடயம், 1972ல் இது எங்கள் நிலைமை என்பதைச் சுட்ட.  இன்றைய அறிவியல் வளர்ச்சி நம்மை வாய் பிளக்க வைக்கிறது. பிளந்த வாயினுள் குழவி புகுந்து வெளிப்போந்தும் விடுகிறது. வீட்டில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து பேருந்து பிடித்தவுடன், ‘Got Bus’ என்று குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். வீட்டுக்கு வர நேரமாகும், சாப்பிட்டுவிட்டு வருவேன், கேட்ட பொருள் கிடைக்கவில்லை என்று மணிக்கு மணி அனுப்பலாம். தகவல்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் மலிவும்! பள்ளி மாணவர் இருபாலரும் வீட்டை விட்டு இறங்கி, தெரு முக்குத் தாண்டியதும் அலைபேசியைக் கைக்கொள்கிறார்கள். பள்ளித் தோழர்-தோழியருக்குச் சேதி சொல்வார்களாக இருக்கலாம்.
நாகர்கோவிலில் ஒரு நாள் தம்பி வீட்டில் இருந்தபோது, முழு ஆண்டுத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், பதினொன்றாம் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்த தம்பி மகனுக்கு ஒரு குறுஞ்செய்தி, ‘Today what exam?’ என்று. நல்லவேளை அன்று என்ன தேர்வு என்று மட்டுமே ஞாபகத்தில் இல்லை அவனுக்கு. அவன் வாசிக்கும் வகுப்பு நினைவில் இருந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு உரையாற்றச் செல்லும்போது பொதுவாக மாணவியருக்கு நான் சொல்லும் அறிவுரை, ‘குறுஞ்செய்தியாளரிடம் கவனமாக இருங்கள்’ என்பது. சீருடை அணிய வேண்டும் என்ற நெருக்கடி இல்லாத சில நாட்களில் வண்ண ஆடைகள் அணிந்து போகும் அவருக்கு முதலில் ஒரு குறுஞ்செய்தி போகும், ‘ur dress good’ என்று. பதிலாக ‘Tx’ என்றால் அடுத்த செய்தி ‘u r beauty’. அதற்கும் ‘Tx’ என்று பதிலிறுத்தால் மூன்றாம் செய்தி ‘u r angel’. தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தால், ஏழாவது நாள் ‘L u’, எட்டாவது நாள் ‘Kis u’. ஒன்பதாம், பத்தாம் நாள் என்பன சூரபதுமன் தலைபோல் வெட்ட வெட்டக் கிளைக்கும்.
பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் கன்னிகை தனது அந்தரங்க ஆடைகளுடன் ெசல்ஃபி எடுத்து அதே வகுப்பில் படிக்கும் காதலனுக்கு அனுப்பிய முன்னுதாரணங்கள் உண்டு. போன ஆண்டில், கத்ேதாலிக்கத் திருச்சபைப் பிரிவு ஒன்றின் இல்லத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து 18,000 மாணவ மாணவியருக்கு அசெம்பிளியின்போது பேசினேன். உரை முடிந்த பின் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக இருந்த அருட் சகோதரிகளுடன் உரையாடியபோது அவர்கள் கவலையுடன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் தந்த வருத்தத்தில் பேசுகிறேன் இவற்றை.
எனது இரவு நேர ரயில் பிரயாணங்களில் இரவு இரண்டு மணிக்கும் பெர்த்தில் படுத்துக் கொண்டு குறுஞ்செய்தி அனுப்பும் இருபால் இளைஞரைக் கண்டதுண்டு. ‘நீரு எதுக்கு வே அதுவரைக்கும் ஒறங்காமக் கெடந்தேரு?’ என்று கேட்கக் கூடாது. அத்தனை நேரம் விழித்திருந்து என்ன ஐயம் தெளிவார்கள்? பென்டகனுக்கும் நாசாவுக்கும் ஆலோசனை சொல்வார்களா? அல்லது இந்திய தேச நலனுக்காக முக்கிய முடிவுகள் எடுப்பார்களா?
எனது பேருந்துப் பயணங்களில், பக்கத்து இருக்கையில் அமர்ந்து அசாதாரண வேகத்துடன் குறுஞ்செய்தி அனுப்பும் இளைஞர்களைக் கவனித்திருக்கிறேன். பத்து பெண்களுக்கு தூண்டில் வீசுவதைப் போல, படபடவெனக் குறுஞ்செய்திகள் பறக்கின்றன. மூன்று மீன்கள் கடிக்கின்றன. ஒன்றேனும் சிக்கும். அன்றைய பயணப் பொழுதுபோக்குக்கு ஆயிற்று. ‘ஓய்ந்த வேளையில் விபசாரம் செய்தால் உப்புப் புளி மிளகுக்காச்சு’ என்றதைப் போல… வெளியே வேடிக்கை பார்க்கக்கூட பொழுதில்லை. சந்தையில் குண்டு வெடித்து எத்தனை பேர் செத்தால் யாருக்கு என்ன?
ஒரு குறுஞ்செய்தி அனுப்ப முப்பது நொடிகள், மறுமொழி வாங்க முப்பது நொடிகள் என்று தோராயமாகக் கணக்கில் கொண்டாலும், நாளுக்கு ஒன்றரை மணி நேரம் செத்துப் போகும். தவிர நேரடியாக வெட்டியாகப் பேசும் நேரம். நகரப் பேருந்துகளில் ஏறிய உடன் செல்பேசியை எடுத்து, எண்ணைத் தடவி, தொடர்பு கிடைத்ததும் கேட்கும் முதல் கேள்வி, ‘என்னடா மச்சி, படத்துக்குப் போலாமா?’
குறுஞ்செய்தி அனுப்பியும், பேசியும், படம் பார்த்தும், சேனல்கள் தாவியும், நள்ளிரவுக் கிரிக்கெட் பார்த்தும் போக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்வின் பெரும் பகுதியை! திரும்ப வாய்ப்பே இல்லாத நேரங்களை! ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்ட மணித்துளிகள் மீண்டு வருமோ மாநிலத்தில்? ‘அரிது, அரிது, மானுடராகப் பிறத்தல் அரிது’ என்கிறாள் ஒளவை. அரிதாகப் பிறந்த மானுடப் பிறப்பை, உதவாத குறுஞ்செய்திகள், வெட்டிப் பேச்சு, எப்பயனும் இல்லாத திரைப்படங்கள், சேனல்களில் தொலைக்கிறோமா? ‘நீரழிவு, சீரழிவு’ என்பார்கள். இங்கு நீரழிவு என்பது பாழாய்த் தண்ணீரைச் செலவு செய்தல். நீரிழிவு என்றால் டயாபெடிக். பாழாகத் தண்ணீரைச் செலவு செய்தலே சீரழிவு எனில், பாழாய் நேரத்தைச் செலவு செய்தல் எந்த வகையான இழிவு.
பேரிழிவு அல்லவா? குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்பதல்ல. செய்தியாக என்ன அனுப்புகிறோம் என்பதுதான். பிலாஸ்பூரில் இருந்து நண்பர் ஒருவர் கோவையில் வாழும் எனக்கு மத்தியானம் மூன்று மணிக்குச் செய்தி அனுப்புகிறார், ‘சாப்டாச்சா?’ நான் சாப்பிட்டிராவிட்டால் அவரால் என்ன செய்ய இயலும்? ஒரு தயிர் சாதம் வாங்கித் தர இயலுமா? இப்படித்தான் போகிறது நம்பொழுது நமச்சிவாயா!
எனக்குத் தோன்றும்… தினமும் எதற்காக, ‘இனிய காலை வணக்கம்’ பொருளற்று? செப்டம்பர் முதல் நாளன்று ‘இனிய காலை வணக்கம் x 30’ என்று ஒரே செய்தியாக அனுப்பினால் உமக்கும் எமக்கும் எவ்வளவு நேரம் மிச்சம்?
கிராமங்களில் ஐம்பது வயது தாண்டிய பலருக்கும் பிறந்த நாள் என்றே ஒன்று நினைவுக்கணக்கில் இல்லை. அவர்கள் ‘ஹேப்பி பெர்த் டே’ என்று கூவுவதும் இல்லை, கேக் வெட்டுவதும் இல்லை. இன்று பிறந்த நாள், மணநாள், ஆசிரியர் தினம், தாயார் தினம், தந்தையர் தினம், காதலர் தினம்… குறுஞ்செய்தி அனுப்ப என்றே தினங்கள் கண்டுபிடிப்பார்கள் போலும்! இப்படியே போனால் 365ல் எத்தனை மிச்சம் இருக்கும்?
அண்மையில் எனக்கொரு குறுஞ்செய்தி. ஒரு கார் கம்பெனி, அவர்களுடைய வாகனத்தை நான் தொடர்ந்து பயன்படுத்தி ஊக்குவிப்பதால் எனக்கு 3.80 மில்லியன் டாலர் பரிசு வழங்க முடிவெடுத்திருக்கிறார்களாம். எனது மின்னஞ்சல் முகவரியில் இருந்து என் ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டுமாம். நான் உபயோகிக்கும் நகரப் பேருந்துகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தினருடையது, தமிழ்நாடு அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்கள். மின்னஞ்சல் அவர்கள் எனக்கு எதற்கு அனுப்பப் போகிறார்கள்? மில்லியன் என்றால் பத்து லட்சம்தானே! அமெரிக்கன் டாலர் இன்றைய விலை 65 பணமா? மனம் கணக்குப் போட்டுப் பார்க்கிறது. உத்தேசமாக 24 கோடி.
ஒரு மனம் சொல்கிறது, ‘என்னைப் பெத்த அம்மா! எனது சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் ஐந்து லட்சத்துக்குள் முடிந்து
விடுமே! மிச்சப் பணத்தை என்ன செய்ய?’ என்று. இன்னொரு மனம் சொல்கிறது, ‘ப்பூ… இதெல்லாம் ஒரு பணமா? முட்டாப் பயல்கள் அரசியலில் நுழைந்து ஆயிரக்கணக்கான கோடிகள் அடித்து மாற்றுகிறார்களே’ என்று. மற்றொரு மனம் கேட்கிறது, ‘யானை தூறுவது போல, ஆட்டுக்குட்டி தூற முடியுமா?’ என்று. மறைந்த எழுத்தாளர் நகுலன் சொன்னதைப் போல, ‘இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது!’
இன்னொரு சங்கதி. எனக்கு குறுஞ்செய்தி வந்த மொபைல் எண் இந்திய எண். அவர்கள் எதற்கு டாலரில் பணம் தரவேண்டும்?
நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்திய நிதியமைச்சருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்ததாம், ‘வீடு கட்டக் கடன் வேண்டுமா’ என்று கேட்டு. இந்தியத் திருநாட்டின் அரசியல்வாதி எவரும் கடன் வாங்கும் நிலையிலா இருக்கிறார்? அவர்கள் உலக வங்கிக்கே கடன் தருவார்களே!
பல சமயங்களில் மேடைச் சொற்பொழிவாளர்களின் அலுப்புத் தாங்காமல் வெளியே எழுந்து போகவும் மரியாதை இடம் தராமல், ரத்தம் கசிய உட்கார்ந்திருக்கும்போது, அரங்கில் நமக்குப் பின்னால் இருக்கும் எவரோ குறுஞ்செய்தி போடுவார்கள் – ‘சொற்பொழி வாளரைக் கத்தியால் குத்தலாமா, வாளால் வெட்டலாமா’ என்பது போல. அந்தக் குறுஞ்செய்தி நம் சுவாசத்தைச் சீராக்க உதவும். ‘ஒரு பீரியட் பேசுவாரா’, ‘கட்டுச் சோறு கொண்டு வந்திருக்கலாமோ’, ‘கடைசிப் பேருந்து கிடைக்குமா’ என்று மற்றும் சில எடுத்துக்காட்டுகள். எனது நண்பர், இலக்கிய ஆன்மிகச் சொற்பொழிவாளர் மரபின் மைந்தன் முத்தையா அரங்கில் இருந்தால் பேச்சைக் கவனிக்காமல் குறுஞ்செய்திகளை வாசிக்கலாம். சிலசமயம் நான் ஒலிவாங்கி முன் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது எனக்கே குறுஞ்செய்தி அனுப்புவார் – ‘கும்பமுனி இன்னும் வெளியே வரவில்லையே’ என்று.
விஞ்ஞான வளர்ச்சியில் தொலைக்காட்சி சேனல் என்று இல்லை, சகலவிதமான அத்துமீறல்களையும் சகித்தே வாழ வேண்டியதுள்ளது! என்றாலும் நம் தோட்டத்தில் அடுத்தவன் நாற்றுப் பாவி, பறித்து நட்டு, காய் பறித்துக் கொண்டு போக அனுமதிக்கலாமா?
நாற்பது தாண்டிய முதுமரங்களைப் பற்றி நாம் அதிகம் கவல வேண்டியதில்லை. ஆனால் மாணவரைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம் ஆகிறது. ‘இளையதாக முள்மரம் கொல்க’ என்கிறார் திருவள்ளுவர். முட்செடி, நம் மனையில் வளருமானால், அது சிறு கன்றாக இருக்கும்போதே பிடுங்கி எறிவது நல்லது!
எல்லா மாதமும் நாலாம் தேதி எனக்கொரு குறுஞ்செய்தி வரும். ‘உங்கள் கடன் தவணை ரூ. 4999/- ஏழாம் தேதி வருகிறது. உங்கள் வங்கியில் போதுமான இருப்பு வைத்திருங்கள்’ என்று. பத்தாம் தேதி இன்னொரு குறுஞ்செய்தி வரும். ‘இதுவரை உங்கள் இம்மாதத் தவணை செலுத்தப்படவில்லை. காலதாமதமானால் உங்கள் ரேட்டிங் பாதிப்படையும்’ என்று. பதினைந்தாம் தேதி மூன்றாவது குறுஞ்செய்தி- ‘இன்னும் மூன்று தினங்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் விரும்பத்தகாத சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும்’ என. நான் பதில் செய்தி அனுப்பினால் போகவே செய்யாது. இரண்டாண்டுகளாக எனக்கிந்த துன்பம். நீங்கள் கேட்பீர்கள், ‘கடன் வாங்கினால் திருப்பிக் கட்ட மாட்டீரா?’ என்று. ஓசூரில் இருக்கும் அந்த நிதி நிறுவனத்தின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. எந்தக் கடனும் அவர்களிடம் நான் பெற்றதில்லை. நான்கைந்து சந்தர்ப்பங்களில், அந்த நிதி நிறுவனத்தின் உயரதிகாரிகளின் அலைபேசி எண் வாங்கிப் பேசவும் செய்தேன். ‘இன்னா, அன்னா’ என்றார்கள். இதுவரை கதிமோட்சம் இல்லை.
எனது அச்சம், வழக்கமாக வாராக்கடன் வசூலிக்க அனைத்து நிதி நிறுவனங்களும் அடியாள் கும்பல் வைத்திருக்கிறார்கள். ஒரு நாள் நள்ளிரவில், வீட்டுக்கு முன்னால் டெம்போவில், தமிழ் சினிமாப் பாணியில் அடியாட்கள் வந்து இறங்கி விடுவார்களோ என்பது. அவர்கள் பின்னால் அரசியல்வாதி எவனும் பலமாக இருக்கலாம். சாதாரணக் குடிமகனுக்குத் தெய்வம் அன்றித் துணை எவர்?
கற்போம்….
ஓவியம்: மாருதி

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30

  1. ராம்ஐி சொல்கிறார்:

    மிக நன்றாக உள்ளது. படிக்க படிக்க மிகவும் பிடித்தது. நன்றி

  2. Soundar சொல்கிறார்:

    அருமை, உண்மை, ஆனால் சொன்னால் பிள்ளைகள் கோபப்படுகிறார்கள்.

  3. அசோக் சொல்கிறார்:

    வணக்கம் அய்யா! தங்களின் சமூகப் பார்வை மற்றும் தமிழ் நிலைமைக்கு வாழ்த்துக்கள். வாழிய வாழிய!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s