சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29

kaimman29aநாஞ்சில் நாடன்
நாள்தோறும் பல சொற்கள் தமிழுக்கு அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. பழைய சொற்கள் காலாவதி ஆகிக்கொண்டும்! ‘கணினி’ என்றோ, ‘முகநூல்’ என்றோ, ‘குறுஞ்செய்தி’ என்றோ சொற்களை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எவரும் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற சொல் தமிழுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும். காலத்தைக் கருதிக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் அந்தக் காலத்தின் சொற்களிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பார்வைக்கு வந்த இராசேந்திர சோழன் காலத்து நாவல் ஒன்றில் மாவட்ட ஆட்சித் தலைவர் எனும் சொல்லொன்று கண்டு எமக்கு வியப்பேற்பட்டது. ஒருவேளை தமிழின் தீவிர எழுத்தாளரும் போராளியும் ‘எட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பின் மூலம் புகழ்பெற்றவருமான இராசேந்திர சோழன் பற்றிய நாவலோ எனில், அங்ஙனமும் இல்லை.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பது நன்னூல் நூற்பா. நன்னூல் சுவாரசியமான வாசிப்புக்கானதோர் இலக்கண நூல். தமிழாசிரியர் பலர் இலக்கணம் கற்றுத் தந்தும் கெடுத்தனர், கற்றுத் தராமலும் கெடுத்தனர். ‘இல்லாத பொருளுக்குச் சொல்லேதும் இல்லை’ என்று இரண்டு கிழமை முன்பே சொன்னோம். எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டென்கிறது தொல்காப்பியம். அந்த நூற்பாவை முன்பு வேறெங்கோ ஒரு கட்டுரையில் கையாண்டபோது, மெத்தப் படித்து மேதையாகி விட்ட கவிதாயினி ஒருத்தர் ஐயம் எழுப்பினார், ‘ஐயோ’ எனும் ஒலிக்குறிப்புக்குப் பொருள் உண்டா என்று! ‘ஐயோ’ மாத்திரம் என்றல்ல, தமிழில் அந்தோ, மன்னோ, அம்மா, அம்ம, அரோ, மாதோ, அன்றே, அடா, ஆல், அன்னோ, கொல், எல்லே எனக் கணக்கற்ற அசைச் சொற்கள் உண்டு. செய்யுளின் ஓசை கருதி அவை ஆளப்பட்டாலும், சூழலைப் பொறுத்து வியப்பு, அச்சம், மகிழ்ச்சி, துயரம் என இடம் சார்ந்த பொருள் உண்டு. வான் முட்டப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, வாசிக்கப் பழக வேண்டும். தமிழின் சொற்பரப்பு அத்தகையது. நவ படைப்பாளிகளின் சொல் ‘இலம்பாடு நாணுத் தரும் எனக்கு!’
தமிழ்ச் செய்யுளுக்குள் எச்சொல் வரலாம் என்பதற்கு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம், எச்சவியல் நூற்பா ஒன்று இலக்கணம் கூறுகிறது, ‘இயற்சொல், திரிசொல், திசைச்ெசால், வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே’ என்று. பாடல் யாப்பதற்கான சொற்கள் நான்கு வகை. அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. நான்கு வகைச் சொல்லையும் விரித்து எழுதினால் அவை தனித்தனிக் கட்டுரை ஆகும்.
எம்மொழியினுள்ளும் சொல்லுக்குப் பொருள் உண்டு, இலக்கணம் உண்டு, பயன்பாடும் உண்டு. பெருங்கவிகள் என்று தம்மைப் பாவித்துக் கொள்கிறவர்கள் எவராயினும் இதை உணர்வது அவசியம். சொல்லுக்கு எந்த வறுமைப்பாடும் இல்லாத மொழி தமிழ் மொழி. ‘சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !’ என்று தமிழ்க் கவிஞர்களைப் பார்த்து நானெழுதிய கவிதையும் ஒன்றுண்டு. எடுத்துக்காட்டுக்கு ஒரு சொல் பற்றிய நூற்பா, நன்னூலில் இருந்து. இன்று முன்னுரை என்று வழங்குகிறோம் அல்லவா, அந்தச் சொல்லின் மாற்றுச் சொற்கள் பற்றியது.
‘முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம்’ என்கிறார் பவணந்தி முனிவர். இச்சொற்களோடு பணிந்துரை சேர்த்துக்கொள்ளலாம். நூல் முகம் என்பதை முகநூல் என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள், சுவாரசியமாக இருக்கும்.
உலகத்து மொழிகளின் மேதமைப் புலமைகள் ஆண்ட சொற்கட்டுமானங்களை விஞ்ஞானம் இன்று கேலி செய்கிறது. விஞ்ஞானம் இன்றியும் மானுட வாழ்வு இல்லை. விஞ்ஞானத்தில் வளர்ந்து வளர்ந்து வானத்து வெளிகளை ஆளும்போது, மொழியைச் சிதைத்து, ெசால்லை உருமாற்றி ஆதிமனிதனின் ஒலிக்குறிப்புகளுக்குள் சென்று சேர்ந்து விடுவார் போலும்.
Thanks எனும் சொல்லை Tx என்றும் You எனும் சொல்லை u என்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் பாணியிலேயே சகல மொழிகளிலும் புதுமொழி ஒன்று உருவாகி வருகிறது. பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் வரை, எழுதும் அலுவலகக் கடிதங்களைக் கையினால் எழுதி Typing Pool-க்கு அனுப்புவேன். எழுத்துப் பிழைகள் வராது. பின்பு பதவி உயர்ந்து, பவிசு கூடி, எனக்கென சுருக்கெழுத்தாளர் அருளப் பெற்று, கடிதங்களை dictate செய்ய ஆரம்பித்தேன். இப்போது, தேவை கருதி மறுபடி எழுதும்போது spelling-ல் ஏகப்பட்ட சந்தேகங்கள் வருகின்றன. Tough, Cough, Vogue போன்ற எளிய சொற்களில் கூட. இன்று குறுஞ்செய்தி அடிப்பவர், எதிர்காலத்தில் கடிதம் எழுத நேரும்போது u என்றும், Tx என்றும் urs என்றும் பயன்படுத்தும் நிலைமை வரும்.
அண்மையில் ‘உயிர் எழுத்து’ இலக்கிய இதழில், எனக்கும் மூத்த படைப்பாளி – ஒரு வகையில் எனக்கு வழிகாட்டியுமான – வண்ணதாசன் ‘நாபிக்கமலம்’ என்றொரு கதை எழுதி இருந்தார். மிக அற்புதமான கதை. அது போன்றதொரு கதையை, அது போன்றதொரு ஆளுமைதான் எழுத இயலும். எனது மகிழ்ச்சியைச் சொல்ல, அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், ‘It is a great feet’ என்று. அவர் மறுமொழி தந்தார், ‘நாஞ்சில், நல்லாருங்க… Feat என்பதை Feet என்று Type செய்து விட்டீர்கள்’ என்று.
kaimman29bதமிழை நாம் எத்தனை முயன்று சேதப்படுத்தினாலும், அதன் சொந்த முயற்சியில் அது வளர்ந்து செழித்துக்கொண்டுதான் இருக்கும். பலருக்கு ல, ள, ழ குழப்பம் ஆண்டுகள் பலவாகத் தீராமல் இருக்கும்போது, காலம், சோளம், ஆழம் போன்ற சொற்களில் வரும் ல, ள, ழ எனும் எழுத்துக்களுக்கு ஆங்கிலத்தில் L எனும் எழுத்தையே பயன்படுத்துகிறார்கள். ஆங்கில லிபியில் தமிழ்க் குறுஞ்செய்தி அனுப்பும்போது மொழியறிவு பல்கிப் பெருகி விடும்!
சொல் என்பது சாதாரண விடயம் அல்ல. அது மந்திரம். ‘சொல் ஒக்கும் சுடு சரம்’ என்கிறார் கம்பர். ‘சொல்லை ஒத்த எரிக்கும் அம்பு’ என்ற பொருளில். ஒரு சொல்லைப் பயன்படுத்தினால், அதை வெல்லும்படியான மற்றொரு சொல் இருக்கக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். ‘சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து’ என்பது குறள். சொல்லை மண்ணை உழுது பண்படுத்தும் ஏருக்கு உவமை சொல்கிறார்.
‘வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ என்பது குறள். வில் எனும் ஏர் கொண்டு உழும் வில்லாளியின் பகை கொண்டாலும், சொல் கொண்டு உழும் சொல்லாளியின் பகை கொள்ளாதே! இடது முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தாள் கற்பின் கனலி கண்ணகி என்றால், ‘எல்லையற்ற இந்த உலகங்கள் யாவற்றையும் ஒரு சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்’ என்கிறார் கற்பினுக்கு அணியான சீதை. சொல்லின் தீவிரத்தைப் புலவன் கையாளும் தீவிரம் இது.
சொல் எனும் சொல்லே இன்றைய நேற்றைய பயன்பாடல்ல. அகநானூறும், ஐங்குறுநூறும், கலித்ெதாகை யும், குறுந்தொகையும், திருமுருகாற்றுப்படையும், பதிற்றுப் பத்தும், பரிபாடலும், புறநானூறும், மதுரைக் காஞ்சியும் பயன்படுத்திய சொல் அது. ‘சொற்கள்’ எனும் சொல்லைக் கலித்தொகை சொல்கிறது. சொல்லுக்கு ‘நெல்’ என்ற பொருளும் உண்டு. சீவகசிந்தாமணி ‘சொல்’ எனும் சொல்லை, ‘நெல்’ எனும் பொருளில் பயன்படுத்துகிறது. திருவள்ளுவரும் நாம் முன்பு எடுத்தாண்ட குறளில் அந்தப் பொருளில்தான் பயன்படுத்தினாரோ என்னவோ? மாற்றிப் போட்டுப் பார்ப்போமா?
‘வில்லேர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க நெல்லேர் உழவர் பகை’ என்று. இது திருக்குறளைத் திருத்துவதல்ல; ரசிகமணி பாணியில் மாற்றியும் பொருள் கொண்டு பார்ப்பது. சொல்லின் பொருள் ஆழம் குறிக்க, ‘சொல்லாழம்’ என்றொரு சொல்லுண்டு தமிழில். தமிழில் இறந்து பட்ட எத்தனையோ நூல்களில் ‘சொல்லகத்தியம்’ எனும் இசை நூலும் ஒன்று. திறமையாகச் சொற்களைக் கையாள்பவரைக் குறிக்க, ‘சொல்லின் செல்வன்’ என்றொரு சொற்றொடர் உண்டு நமக்கு. அனுமனைக் குறித்து வினவ, ராமன் வாயிலாகக் கம்பன் பயன்படுத்திய சொற்றொடர் அது. ‘யார் கொல் இச் சொல்லின் செல்வன்?’ என்று. ‘கொல்’ என்பது வியப்புப் பொருளில் வரும் அசைச்சொல். சொற் பிரயோகத்துக்கான அழுத்தம் ஏற்படுத்துவது. ஓசை நிறைப்பது! இரண்டு முறை சொல்லிப் பாருங்கள்! ‘யார் இச்சொல்லின் செல்வன்?’ என்றும், ‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்?’ என்றும்! வேறுபாடு புரியும். வேறுபாடு புரியாதவர் சொல்லிக் கொண்டிருக்கலாம் அதெப்படி ‘எல்லாச் சொல்லும் பொருள் உடைத்தனவே!’ என்று. தொல்காப்பிய நூற்பாவைக் கேள்வி கேட்கும் ஆற்றல் அவர்க்கு உண்டு!
ராமன் கேள்விக்கு அனுமன் சொல்லும் பதிலும் அற்புதமானது. ‘காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன்!’ வாயு புத்திரன் என்றோ, வாயு பகவானின் வாரிசு என்றோ சொல்ல வராதா கம்பனுக்கு? எதற்காகக் காற்றின் வேந்தர்க்கு எனும் சொல்லாட்சி? அது கம்பனின் சொல்லாட்சி!
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, நாம் யாரை வேண்டுமானாலும் பிளேட்டோ, சாக்ரடீஸ், இங்கர்சால், எமர்சன், பெர்னார்ட் ஷா என்று அழைக்கலாம். அது போலவே எத்தனையோ சொல்லின் செல்வர்களும் உண்டு நமக்கு! திறமையாகப் பேசும் பெண்ணை ‘சொல்லாட்டி’ என்கிறது கலித்தொகை. ‘சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்றகிற்பார் யார்?’ என்பது பாடல் வரி. ‘திறமையாகப் பேசும் உன்னோடு எவரால் சொல்லாட இயலும்’ என்பது பொருள்.
பிறமொழிச் சொற்களின் ஆற்றல் பற்றிப் பேச நான் ஆளில்லை. ஆனால் தமிழ்ச் சொல் பற்றிய அறிவு உண்டு. சொல் ஆக்கும், சொல் அழிக்கும். நந்திக் கலம்பகம் பாடி மன்னனை எரியூட்டியதும் சொல்தான். அடைத்த கதவைத் திறக்கச் செய்ததும் சொல்தான். கூழைப் பலா தழைக்கப் பாடியதும் சொல்தான். பாரதி, ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்கிறார்.
தமிழ்க் கடவுள் முருகன், ‘நற்றமிழால் சொற்றமிழால் நம்மைப் பாடு’ என்கிறான். நமச்சிவாயத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர், ‘சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என்கிறார். திருத்தாண்டகத்தில், ‘சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச் சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்க்கு எளியானை’ என்கிறார். ‘சொல்லாய், பொருளாய், வேதமாய் விளங்குபவன். சுடர் போன்ற சக்கரப் படையை நெடுமாலுக்கு அளித்தவன். இரவாகப் பகலாக விளங்குபவன். ஆனால் அடியவர்க்கு எளியவன்’. அப்பரின் எடுப்பில் முதல் பதம், ‘சொல்லானை’ எனும்போது சொல்லின் உயர்வு பொருளாகும்.
கம்ப ராமாயணத்தில் 6 காண்டங்களும் 118 படலங்களும், 10,368 பாடல்களும், 1,293 மிகைப் பாடல்களும் எழுத்தெண்ணிப் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, வாலியைத் தெரிந்து வைத்திருக்க. ஈண்டு நாம் வாலி என்பது சினிமாவில் ஆன்மிகப் பாடல்களும் ஆபாசப் பாடல்களும் எழுதிய பாடலாசிரியர் வாலியை அல்ல. ராமாயணத்து வாலியை. சிவபெருமானின் வில்லையே உடைத்த, தீ உமிழ்கின்ற கொடிய செஞ்சரங்களைத் ெதாகுத்துத் தொடுக்கவல்ல, கரிய செம்மலான ராமன் நேருக்கு நேர் நின்று போர் செய்ய அஞ்சிய குரங்கு இனத்து வேந்தன், மாவீரன் வாலியை.
மறைந்து நின்று ராமன் எய்த அம்பினைக் கைகளால் பற்றி, அது மேற்கொண்டு துரந்து உள்ளே செல்வதைத் தடுத்து நிறுத்தி, ‘அழுத்தும் இச்சரம் எய்தவன் ஆர் கொல்?’ என்று வலியும் கோபமும் வருத்தமும் வியப்புமாக ஐயுற்ற வாலியின் கூற்றாகக் கம்பனில் பாடல் ஒன்றுண்டு. பாடல் எண்-4007, கோவை கம்பன் கழகப் பதிப்பு. கவிச் சக்கரவர்த்தி கம்பனின் சொற்களில் சொன்னால், ‘ ‘‘வில்லினால் துரப்ப அரிது, இவ்வெஞ்சரம்’’ என வியக்கும் ‘‘சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார்’’ என்னும்;’ வலிய வாலியின் ஆற்றலைத் துரந்து செல்லும் இக்கொடிய அம்பு, எந்த மாபெரும் வில்லாளியின் வில்லிலிருந்து ஏவப்பட்டதாக இருக்க வழியே இல்லை. இந்த அம்பு வாலியின் உரம் கிழித்து ஏக வல்லதாக இருக்கிறது. எவனோ ஒரு நெடிய தவத்தினை உடைய முனிவன் தனது சொல்லினால் தூண்டப்பட்ட அம்பாக இருக்க வேண்டும்!
ஆம்! சொல்லினால் ஏவப்பட்ட அம்பு, வாளி, சரம், ஆவம், கோல், கணை, பகழி…
இதுதான் சொல்லுக்கான ஆற்றல். சொல் என்பது AK-47 போன்ற வலுவான இயந்திரத் துப்பாக்கி. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் Inter Continental Ballistic Missile. அத்தகு ஆற்றல் உடைய சொல்லைத்தான் நாம் மாங்காய் பறிக்கவும் எலியை அடிக்கவும் கண்டாங்கி பாச்சாவைக் கொல்லவும் பயன்படுத்துகிறோம் இன்று. புத்தகக் கண்காட்சி வாசலில் கொடுக்கப்பட்ட விளம்பர நோட்டீசுகள் முகப்பு மைதானம் எங்கும் குப்பை போல இறைந்து கிடப்பதைப் போன்று, பயனற்ற, பொருளற்ற சொற்கள் யாங்கணும் இறைந்து கிடக்கின்றன. அரசியல் மேடைகளில், மதப் பிரசங்க சபைகளில், பட்டிமண்டப வாத அரங்குகளில், பாராட்டு விழாக்களில், புத்தக வெளியீட்டு விழாக்களில் இலையுதிர் காலத்துச் சருகுகள் போல் உதிரும் சொற் குப்பைகள். கூட்டிக் கூட்டி, பெருக்கிப் பெருக்கி, வாரி வாரி அள்ளினாலும் மாயாத குப்பை. அதிகக் குப்பை உதிர்க்கிறவர் சொல்லின் செல்வர், கவிகளின் ஷா-இன்-ஷா, திரு நாக்குக்கு வேந்து, கலைவாணியின் கடைக்கண் பார்வை பட்டவன்.
பெரும் சத்தத்துடன் குப்பை உதிர்க்கிறவனும், அதிகக் குப்பை உதிர்க்கிறவனும், நெடுநேரம் குப்பை உதிர்க்கிறவனும் இங்கு ஆரவாரமான அரசியல் முதலாளிகள். தமிழ் மறை என்றும் பொய்யா மொழி என்றும் பொது மறை என்றும் உத்தரவேதம் என்றும் தமிழனின் சொத்து என்றும் கொண்டாடப்படும் திருக்குறள் சொல்கிறது, பயனில சொல்லாமை அதிகாரத்தில்… ‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்’ என்று. ‘பயனற்ற சொற்களைக் கொண்டாடுகின்றவனை, மனிதன் என்று கூட மதிக்காதே, மனிதப் பயிரில் மணியாகத் தேறாத பதர், குப்பை என ஒதுக்கு’ என்று. நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள், நம் தலைவர்கள் மணிகளா… பதர்களா…
என்பதை!
– கற்போம்…
ஓவியம்: மருது

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to சொல்லுக சொல்லிற் பயனுடைய- கைம்மண் அளவு 29

  1. harikarthikeyanramasamy சொல்கிறார்:

    அருமையான படைப்பு, என் மனம் நிறைந்த பாராட்டுகள், நன்றி

  2. M.S.Rajendiran சொல்கிறார்:

    சிறந்த ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு.

  3. Gomathi சொல்கிறார்:

    Fantastic .Reading your articles introduces me to the greatness of Tamil.This article is superb

  4. லட்சுமிபதி சொல்கிறார்:

    சிறப்பான கட்டுரை, வளர்க உங்கள் தமிழ் பணி.

  5. Naga Rajan சொல்கிறார்:

    அருமை! நன்றி.

  6. கவிதாசனி சொல்கிறார்:

    அருமையான பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s