பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27

palli aandu vizaaநாஞ்சில் நாடன்
யாவர்க்குமே பள்ளிப்பருவம் என்பது முன்பு காணக் கிடைத்த, இன்று காணாமற் போன உதகமண்டலத்துப் புல்வெளிகள் போலப் பசுமையானவை. அது குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, தேநீர்க் கடை வாசலில் ஒரு சாயா யாசகம் கேட்டு நிற்கும் பரதேசியாக இருந்தாலும் சரி, காலம் கொள்ளை கொண்டு போக இயலாத பெருஞ்செல்வம் பால்ய காலம். பள்ளிகளின் அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஆண்டு விழாக்கள் கொண்டாடுவது அன்றும் இன்றும் இயல்பு.
பள்ளி வாழ்க்கை எனக்கு மூன்று ஊர்களில் நடந்தது. அதன் பொருள் எமது அப்பா ஊர் ஊராக மாற்றலாகிப் போனார் என்பதல்ல. ஒரே ஊரில்தான், தனது 55 வயது வரை விவசாயக் கூலியாக வாழ்ந்து மாண்டார். உள்ளூர் வீரநாராயணமங்கலத்தில் ஆற்றங்கரை ஆலமரம் முன்பிருந்த ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையே இருந்தது.
அடுத்து எட்டாம் வகுப்பு வரையே இருந்த நடுநிலைப்பள்ளி, 2 கி.மீ தூரத்தில் இறச்சகுளம் கிராமத்தில், குன்றின் அடிவாரத்தில் தாமரை பூத்த தடாகத்தின் பக்கம். உயர்நிலைப் பள்ளியோ, ஊருக்குக் கிழக்கே இரண்டு கிலோமீட்டரில். நாச்சியார் புதுக்குளம் என்று அல்லியும் ஆம்பலும் பூத்த பெரியகுளம் தாண்டி தாழக்குடியில். எப்படிப் பள்ளிக்குப் போவோம் என்று கேட்பீர்களேயானால் கால் நடையாகத்தான்.
இங்கு ‘கால்நடை’ என்று சேர்த்து எழுதினால் கன்றுகாலிகள் என்று பொருள். நான் உயர்நிலைப் பள்ளியில் வாசித்துக் கொண்டிருந்தபோது காமராசர் கால் நடையாகப் போனார் என்ற செய்தியை மாற்று அணி நாளிதழ் ஒன்று, ‘காமராசர் கால்நடையாகப் போனார்’ என்று எழுதியது. அது தமிழ் தெரியாத காரணத்தால் அல்ல.
kaimman 27 a
சிறு பிராயத்தின் ஒவ்வொரு வகுப்புக் கல்வியும் துல்லியமாக நினைவில் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடிய நினைவில்லை. எட்டாம் வகுப்பில் வாசித்தபோது கொண்டாடியது நினைவில் உள்ளது. அன்றுதான் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கும், முதல் மதிப்பெண்ணுக்கும் பரிசுகள் தருவார்கள். பரிசு என்றால், சான்றிதழ்கூட கிடையாது.
பென்சில், சோப்பு டப்பா, கேமல் கம்பெனியின் ஊற்றுப் பேனா என்பன. அன்று கலை நிகழ்ச்சிகள் நடக்கும், பாட்டு, நாட்டியம், மாறுவேடம் மற்றும் ஓரங்க நாடகங்கள். பாடத் தெரிந்தவர் பாடுவார்கள். ஆட்டம் என்பது பெரும்பாலும் குறவன், குறத்தி ஆட்டம். மாறுவேடப் போட்டியில் காந்தித் தாத்தா, பாரதியார், தொழுநோயாளி, பிச்சைக்காரன். போட்டிகளில் பங்கேற்போர் பொருட்செலவு செய்து ஆடை அணிகள் வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து வேடமிடும் வசதி இல்லாதவர்கள். எனவே, பிச்சைக்காரர்களே அதிகமாக வருவார்கள். அன்று முதலீடு இல்லாத தொழில் பிச்சை கேட்பது.
எட்டாவது படிக்கும்போது நாங்கள் ஒரு சின்ன நாடகம் தயாரித்தோம். சேரன் செங்குட்டுவன். கனக விசயர் தலையில் கல் ஏற்றி, ஏர் மாடுகளை ஓட்டி வருவதைப் போல் அவர்களை செங்குட்டுவன் ஓட்டி வருவான். எவர் எழுதியது என்று நினைவில் இல்லை. ஒரு வேளை எங்கள் எட்டாம் வகுப்புத் தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – அவர் தான் எங்கள் நாடகத்தின் டைரக்‌ஷன், மேக்கப், பேக்கிரவுண்ட் மியூசிக், சீனடிப்பவர் எல்லாமும் – எழுதியிருக்கக் கூடும்.
அன்று பிற நிகழ்ச்சிகள் நடந்தேற, நேரம் போய்விட்டது. எங்கள் நாடகமும் பரிசளிப்புமே பாக்கி. பரிசை முன்னால் கொடுத்துவிட்டால் மாணவரும் பெற்றோரும் போய் விடுவார்கள் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியம் செட்டியாருக்குத் தெரியும். அவசரமாக மேக்கப் ரூமுக்கு வந்தார். ‘‘ரொம்ப நேரமாயிட்டுப்பா… பரிசு வழங்கல் வேற இருக்கு? ஒங்க நாடகத்திலே ஒரேயொரு சீன் மட்டும் நடிங்க, போரும்!’’ என்றார். எங்களுடன் பிரம்மநாயகத் தேவர் என்றொரு எட்டாம் வகுப்பை மூன்றாண்டுகளாய் மூழ்கி முத்தெடுப்பவன் இருந்தான். அவனுக்கு சேரன் செங்குட்டுவன் தளபதி வேடம்.
பெயர் வில்லவன் கோதை என்றிருக்கலாம். ‘‘வாள் பிடித்த கை மன்னா, வாள் பிடித்த கை’’ எனும் டயலாக் ஒன்றுண்டு அவனுக்கு. ராப்பகலாய் மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். ஆண்டு விழாவுக்குப் பத்து நாட்கள் முன்பு, ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அவனிடம் கேள்வியொன்று கேட்டார். பிரம்ம நாயகம் தாயாட்டைப் பிரிந்த மறி போல விழித்தான்.
ஆங்கில ஆசிரியர் சந்தோஷம் நாடார் வெள்ளை மல் வேட்டி, வட்டக் கழுத்து முழுக்கை வெள்ளை ஜிப்பாவில் அருமையாக நடத்துவார். முக்கியமான குறிப்புச் சொல்லும்போது, கால் படங்களை ஊன்றி, உப்புக் குத்தியைத் தூக்கி, ஒரு எழும்பு எழும்புவார், இரண்டு கைகளையும் இணையாக ஆட்டிக் கொண்டு. இன்று என் ஆங்கிலத்துக்கு அவரது பங்களிப்பும் உண்டு. ஆனால் சந்தோஷமான ஆசிரியர் அல்ல. அவர் உடல்மொழி – உடல்மொழி என்பது கவிதாயினிகளுக்கு மட்டுமேயான சொல்லா என்ன? – கடுத்த முகபாவம் யாவும் அச்சம் கிளர்த்திக்கொண்டே இருக்கும்.
கேட்ட கேள்விக்கு, வகுப்பில் முதல் மாணவரான எம்மனோரே விழித்துக் கொண்டிருக்க, பாவம் பிரம்மநாயகம் என்ன செய்வான்? அந்தக் காலத்தில் ஆசிரிய தர்மம், ‘அடியாத மாடு பணியாது’ என்பது. எனது ஆசிரியப் பெருந்தொகையில், அதிகமும் பிரம்பை நம்பியவர் சந்தோஷம் நாடார். அடி வாங்கிய பிள்ளைகளின் பெற்றோர் பள்ளி வாசலுக்கு வந்து, ‘‘எம் பிள்ளையை எப்பிடிவே அடிக்கலாம்’’ என்று கறட்டு வழக்கும் பிடித்ததில்லை.
வாட்ட சாட்டமான பிரம்ம நாயகம் அடிவாங்கும்போதெல்லாம் ஓவர் ரியாக்‌ஷன் கொடுப்பான். நடிப்பின் நெற்றிப் பொட்டுக்கள் தோற்றுப் போவர். அடி வாங்காத மாணவருக்கு எல்லாம் அது நகைச்சுவைக் காட்சி. வகுப்பு முடிந்ததும் இங்கு எழுத இயலாத கெட்ட வார்த்தை ஒன்று சொல்லி ஆசிரியரைத் திட்டிச் சிரிப்பான்.
வடக்குமலை மணிப் பிரம்பால் அன்று மூன்று சாத்து வாங்கியும் வழக்கமான எந்த மெய்ப்பாடும் இன்றி, மேலும் கையை நீட்டியவாறு, மாவீரன் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான். ஆங்கில ஆசிரியர் கேட்டார், ‘‘ஏம்லே எழவெடுப்பான், இன்னும் ைகயை நீட்டுகே! இங்க என்ன கோயில் சுண்டலா தாறாவ? எடத்துக்குப் போயி ஒக்காருலே மயிராண்டி!’’
அன்று பிரம்மநாயகத்தின் மறுமொழி பள்ளிப் பிரசித்தமாயிற்று. ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் சென்றும் அதை ஞாபகம் வைத்து எழுதுகிறேன் என்றால் கணக்காக்கிக் கொள்ளுங்கள். பிரம்ம நாயகத்தின் உடம்பினுள் வில்லவன் கோதை ஆவி புகுந்து ஆட்கொண்டது போலும். வகுப்பையும் ஆங்கில ஆசிரியரையும் பார்த்துச் சொன்னான், அந்தப் புகழ்பெற்ற டயலாக்கை… ‘‘வாள் பிடித்த கை சார்! வாள் பிடித்த கை!’’ என்று. சந்தோஷம் நாடார் முகத்தில் முதலும் கடைசியுமான ஒரு சிரிப்பைப் பார்த்தோம்.
சரி, ஆண்டு விழாவுக்கு வருவோம்! மூன்று மாதம் ரிகர்சல் பார்த்து, டயலாக் மனப்பாடம் செய்து, அரச நடை பயின்று பழகிய எங்களுக்கு அழுகை அழுகையாக வந்தது. தமிழாசிரியர் திகைத்து நின்றிருந்தார். வகுப்பில் குள்ளமான, கோழையான, ஏழையான, சேரன் செங்குட்டுவன் வேடத்தில் இருந்த எனக்குக் கொஞ்சம் வீரமும் வந்தது. ‘‘வேண்டாம் சார் ஒரு சீனும்’’ என்று சொல்லி, ஒப்பனைகளைக் கலைக்க ஆரம்பித்தேன்.
நாடக நடிகர் பலரும் எங்கள் சிற்றூர். நாங்கள் உடனே வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்தோம். வழக்கமாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, முதல் மாணவன் என எனக்கு வர இருந்த பென்சில், சோப்பு டப்பா, ஜாமெட்ரி பாக்ஸ் எல்லாம் துறந்து, புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஊருக்கு நடக்க ஆரம்பித்தோம். எங்களுடன் எங்கள் ஊரில் இருந்து இறச்சகுளம் நடுநிலைப் பள்ளியில் படிக்க வரும் அனைத்து மாணவரும், எனது சேனாதிபதியான பிரம்ம நாயகத் தேவரும்… விளையாட்டுப் போட்டிகளில் அவனுக்கு இருந்த பல பரிசுகளையும் பொருட்படுத்தாமல். எங்களுக்குக் காவலாக எங்கள் ஊரில் இருந்து வந்திருந்த பெற்றோரும்.
மறுநாள் ஞாயிறு விடுமுறை. திங்கட்கிழமை வழக்கம் போலப் பள்ளிக்குப் போனோம். உள்ளுக்குள் அச்சமும் ஆத்திரமும் குமுறிக் கொண்டிருந்தது. வளாகத்தில் நுழைந்ததும் பிரம்ம நாயகம், ‘‘மக்கா, எல்லாத்துக்கும் இன்னைக்கு டி.சி.தான்’’ என்று புளி கரைத்தான். இறை வணக்கம் முடிந்து வகுப்புக்கு மாணவர் கலைய முற்பட்டபோது, தலைமையாசிரியர் அறிவித்தார் – ‘‘நாடகத்துலே நடிச்சவங்களும், வீராணமங்கலத்துப் பிள்ளைகளும் ரூமுக்கு வாங்க.’’
நெஞ்சக் கனகல்லும் திகிலால் எரிந்தது. எல்லோரும் போய் நின்றபின் கோபத்தில் சத்தம் போட்டார். கொஞ்சம் அச்சுறுத்தினார். கொஞ்சம் உபதேசம் செய்தார். வருத்தப்பட்டார். அவமதிப்பு என்றார். ‘‘சரி, போட்டும். இந்த முறை விட்டிருக்கேன்… இனி இப்பிடி நடக்கப் பிடாது… வகுப்புக்குப் போங்க…’’ என்றார். பிரம்ம நாயகத்துக்குக் கொஞ்சம் வருத்தம்தான், எல்லோருக்கும் டி.சி. தரவில்லை என்று.
இப்படித்தான் எல்லாப் பள்ளிகளிலும் அந்த நாட்களில் ஆண்டு விழாக்கள் கொண்டாடினார்கள். இன்று எழுத்தாளனாக ஆகிவிட்ட பிறகு, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தமிழ் மன்றம், மாணவர் தினம் என்று ஆண்டுக்கு இருபது பள்ளிகள், கல்லூரிகளுக்குப் போகிறேன்.
பல பள்ளிகளில் எனது உரை முடிந்த பின்பு, எனக்குச் சலிக்கும் வரை அமர்ந்திருந்து கலை நிகழ்ச்சிகள் பார்க்கிறேன். இளைய மாணவத் தலைமுறையின் அளப்பரிய ஆற்றல் கர்வம் கொள்ளச் செய்கிறது. ஆடல் என்றாலும் பாடல் என்றாலும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தரம் தாழ்ந்த பொறுக்கிப் பண்பாட்டின் சினிமாப் பாடல்கள் மட்டுமே முகச்சுளிப்பை ஏற்படுத்தும். இசைக் குழுவுக்கும் ஒலி – ஒளி அமைப்புக்கும் ஒப்பனைகளுக்கும் உடையலங்காரத்துக்கும் பெரும் பொருள் செலவு செய்வார் போலும். அதனை மாணவர் தாமே செய்து கொள்வார்களா அல்லது பள்ளிகளே செய்வார்களா என்று எனக்குத் தெரியாது.
அண்மையில் வெளியூரில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். அனைத்துக் கலை நிகழ்ச்சி களையும் பொறுமை காத்துப் பார்த்தேன். பிரமாதமான ஆடல் பாடல்கள். அற்புதமாகப் பயிற்சி பெற்ற மாணாக்கர். ஆனால், ஆபாசமான சினிமாப் பாடல்கள். இதய நோயாளிகளை எந்த நேரமும் சாய்த்து விடலாம் போன்ற வல்லிசை. நிகழ்ச்சி முடிவில், ஆட்டக்காரர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஒருவரை கௌரவப்படுத்தினார்கள். அவர் நடப்பும் உடுப்பும் குரலுமே அவர் ஏதோ ஒரு சேனலில் குத்தாட்டங்கள் போடுபவர் என்பது தெரிந்தது. அவர் ஓர் அறிவிப்புச் செய்தார், அந்தப் பள்ளியின் அறுபது மாணவரைத் தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் விரைவில் ஆட வைப்பார் என்று.
பார்வையாளரும் பெற்றோரும் விருந்தினரும் மாணாக்கரும் கனத்த கரவொலி செய்து குத்தாட்ட பயிற்சியாளரை ஊக்குவித்தபோது எனக்குத் தோன்றியது, அந்த ஆண்டு விழாவுக்கான நாட்டியப் பயிற்சிக்காக அவர் கட்டாயம் சில வாரங்கள் எடுத்துக் கொண்டிருப்பார். சில லட்சங்கள் ஊதியமும் பெற்றிருப்பார். சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கான TRB rating போல, பள்ளிகளுக்கும் சந்தை மதிப்பு இருக்கும் போலும். தமது பள்ளியின் பொது மதிப்பீட்டை உயர்த்த, அதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நன்கொடையும் கல்விக் கட்டணங்களும் வசூலிக்க, பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ளும் உபாயம் அதுவென அறிந்துகொண்டேன். எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மதிப்பீட்டுப் புள்ளிகள் போல இது உயரவும் வாய்ப்பு உண்டு.
செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுப்பது போல, ேதர்வு விகிதத்துக்கு ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது போல, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் படம் வெளியிடுவதைப் போல, பள்ளி ஆண்டு விழாக்களின் கலை நிகழ்ச்சியும் விளம்பர உத்தியாகி விட்டது. எதைச் செய்தும் வணிகம் பெருக்கு என்பதுதான் குறிக்கோள். இப்படியே போனால் கலையாற்றல் மிகுந்த மாணவியரை ரெக்கார்ட் டான்ஸ் தரத்துக்கு இறக்கி விடுவார்கள் என்று கவலையாக இருக்கிறது.
சென்ற ஆண்டு ஒரு பொறியியல் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு நடத்திய பேச்சுப் போட்டிக்கு பரிசளிக்கப் போயிருந்தேன். நகரின் பல பள்ளிகளின் மாணாக்கர் பெற்றோருடன் பரிசு வழங்கும் விழாவுக்கு வந்திருந்தனர். கல்லூரியின் பொதுநல சேவையை மனம் பாராட்டியது. பின்னர் புலனாகியது, இத்தகு போட்டிகளைப் பொறியியல் கல்லூரிகள் நடத்துவதன் நோக்கம் தமிழ்ப் பணியோ, பொதுப் பணியோ அல்ல என்பதும், நல்ல மாணவரையும் பெற்றோரையும் தமது வளாகத்தினுள் வரவழைத்து, அவர்கள் மனதில் கல்லூரி பற்றிய மதிப்பீட்டை ஏற்றுவது எனும் வணிக நோக்கு தான் என்பதும்.
ஈராண்டு முன்பு, ராஜபாளையத்தில் ஒரு இலக்கிய நிகழ்ச்சி. மறுநாள் தொம்பக்குளம் கீழூர் போக வேண்டியதிருந்தது. ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி தாண்டி, ஆலங்குளம் சாலையில் இருந்தது அவ்வூர். நியூஜெர்சியில் நான் தங்கி இருந்த எனது நண்பர் முரளிபதியின் அப்பா, எண்பதைக் கடந்த ஆசிரியர், திருப்பதி அவர்களைச் சந்திப்பது என் நோக்கம்.
சுமார் ஆயிரம் வீடுள்ள ஊர். அரசு கிளை நூலகம் ஒன்றும் பத்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளியொன்றும் இருந்தது. பெரியவர் திருப்பதியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, பள்ளியின் தலைமை ஆசிரியரும் இன்னொரு ஆசிரியரும் என்னைக் காண வந்தனர். ‘‘எங்க பிள்ளைகளுக்கு அரை மணி நேரம் ஏதாவது சொல்லுங்க’’ என்றார்கள். சற்று நேரத்தில் புறப்பட்டுப் போனேன். என் முன்னால் எட்டாவது முதல் பத்தாவது வரை பயிலும் மாணவ மாணவியர் நூற்றிருபது பேர் தரையில் அமர்ந்திருந்தனர். அங்கு பத்தாம் வகுப்புக்கு ேதர்வு மையம் இல்லை. சில மைல்கள் போகணும், வேறு பள்ளிக்குத் தேர்வு எழுத.
எனக்கு நான் எஸ்.எஸ்.எல்.சி எழுதியது நினைவு வந்தது. பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புப் பயில வேறு பள்ளிகள் நாட வேண்டும். ஒரு தேநீர் மட்டுமே நான் பெற்ற ஊதியம். திருப்பதி ஐயா வீட்டில், நான் கோவைக்கு எடுத்துச் செல்ல என்று விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கிய வெள்ளாட்டுக் கறி ஒரு டப்பா நிறையப் போட்டு அனுப்பினார்கள். அந்த வாசனையும் சுவையும் மறக்க முடியாதது போலவே அந்தப் பள்ளியில் நான் பேசிய பேச்சும்.
இப்போது அந்தப் பிள்ளைகளை நினைத்துக் கொள்கிறேன். அவர்களது பள்ளி ஆண்டு விழா எப்படி இருக்கும்? 1964ல் நான் பதினொன்றாம் வகுப்பில் படித்த பள்ளியின் ஆண்டு விழாவை விட மேலானதாக இருக்க இயலாது. அவர்களுக்கு எந்தச் சேனலின் எந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளனும் குத்தாட்டப் பயிற்சியாளனும் வந்து ஆட்டம் சொல்லித் தர மாட்டான். நகரத்து மாணவருடன் எதிர்காலத்தில் இந்த மாணவரும் நேர்ப்போட்டியில் ஈடுபட்டாக வேண்டும்.
மேற்படிப்பிலும் வேலைவாய்ப்பிலுமான நியாயமற்றதோர் போட்டி! சென்னை, கோவை, நாமக்கல் பள்ளி மாணாக்கருடன் இவர்கள் எப்படி சமம் ஆவார்கள்?
வல்லரசுக் கனவும் ஏவுகணை விடுதலும் லட்சக்கணக்கான கோடிப் பணத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தலும் இவர்களைக் கணக்கெடுத்துக் கொள்கி
றதா? இந்த மாணவர் ‘எதிர்கால வாக்கு வங்கி’, ‘காசு கொடுத்து சினிமா டிக்கெட் வாங்குபவர்’ என்பது மட்டும் தானா?
‘உலகினுள் இல்லதற்கில்லை பெயர்’ என்கிறது பழமொழி நானூறு, உலகத்தில் இல்லாத பொருளுக்குப் பெயர் இருக்க இயலாது என்ற பொருளில். ஆனால் இல்லாத பொருளுக்கு நம்மிடம் ஒரு பெயர் இருக்கிறது, ‘சமூக நீதி!’
– கற்போம்…

ஓவியம்: மருது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27

  1. rajendranunnikrishnan சொல்கிறார்:

    Arumaiyana pathivu..

  2. சகபயணி சொல்கிறார்:

    தாங்கள் உரைக்கும் உண்மை உள்ளத்தைச் சுடுகிறது. ஒரு சிற்றூர் கல்விக் கூடத்தில் ஆரம்பித்த என் கல்விப்பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என்பது போல சிறுநகரம், நகரம், அயல்தேசம் என நான் கடந்துவந்த பாதைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது தங்களின் இப்பதிவு. இன்றளவும் அச்சிற்றூரில், அச்சிறுவயதில் கிடைத்த வாழ்கைப் பாடம் வேறு எந்தத் தளத்திலும் வாய்க்கப் பெறவில்லை என்றே மனம் கூறுகிறது. நகரத்து மாணாக்கரை எதிர்கொள்ளும் திறனும், அவர்களின் நுனிநாக்கு ஆங்கில அங்கலாய்ப்புகளை தகர்த்தெறியும் துணிவும் அச்சிற்றூர் இட்ட அடிஉரம் மூலமும், தாய்த்தமிழ் வழிக் கல்வி மூலமும் கிடைக்கப்பெற்ற காண்டீபம் என்றே உணர்கிறேன்.

  3. Naga Rajan சொல்கிறார்:

    அருமை! நன்றி.

  4. silambu priyavan சொல்கிறார்:

    Nice

பின்னூட்டமொன்றை இடுக