விளம்பரம் – கைம்மண் அளவு 23

kaimman 23 1 kaimman 23 2நாஞ்சில் நாடன்
தான் தற்புகழ்தல் தகுதி அன்றே’ என்கிறது பன்னரும் சிறப்பின் பவணந்தி இயற்றிய நன்னூல். ‘தானே தன்னைப் புகழ்ந்துகொள்வது தகுதியுடையவர் செயலல்ல’ என்பது பொருள். எனில் காசு கொடுத்தும், காரியங்கள் நடத்திக்கொடுத்தும் பிறரைக் கொண்டு புகழச் செய்தல் தகுதியானவர் செயலா?
அப்படிப் பார்த்தால், தகுதியானவர் என்று பகலில் விளக்கு கைக்கொண்டு தேடினாலும் வெகு சிலர்கூட கிட்ட மாட்டார்கள். பொருள் பெறும் விதமாக தமிழ்ப் புலவர் ஒருவர், ‘போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்’ என்று பாடியதற்கு வருந்துகிறார். இந்து மாக்கடலே என்பதும் மன்னும் இமயமலையே என்பதும் இந்தப் புகழ்ச்சியிலேதான் சேரும்.
சீர்காழி அருணாசலக் கவிராயர் சொல்கிறார், ‘தன்னைப் புகழ்வானும் சாட்சி சொல்லி நிற்பானும் பொன்னை மிகத் தேடிப் புதைப்பானும் பேய்’ என்று. தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறவன் – அது அடியாள் வைத்துப் புகழ்வதாயினும் ஆயிரங்கள் கொடுத்துப் புகழ்வதாயினும் – பொய் சாட்சி சொல்கிறவன், அளவுக்கு அதிகமாகப் பொன் தேடிப் புதைத்து வைப்பனும் பேய் என்கிறார்.
பொன் தேடிப் புதைத்து வைப்பது பேய்த்தனம் என்று கருதித்தான், இன்று எவரும் மண்ணில் புதைப்பதில்லை. ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குகிறார்கள். பினாமி பெயரில் சொத்து வாங்கிக் குவிக்கிறார்கள். நகத்தின் அழுக்கு போல நுண்ணளவுக்குப் பொருள் செலவில் சமூக அல்லது இலக்கிய சேவை அமைப்புகள் ஏற்படுத்தி, காலம் கருமை பூசிய வஞ்சக முகங்களைக் கழுவிக்கொள்ள முனைகிறார்கள்.
சிலருக்கு சொந்தமாகக் கப்பல்கள் இருக்கிறதென்றும், தீவுகள் வாங்கி வைத்துள்ளனர் என்றும், வெளிநாட்டில் ஓட்டல்கள் உண்டென்றும், நகைக் கடைகளுக்கு சொந்தக்காரர்கள் என்றும், அண்டை நாடுகளில் மலைத் தோட்டங்கள் உண்டு என்றும், சாயாக்கடை பெஞ்சுகளிலும் மதுச்சாலை டேபிள்களிலும் உரையாடுகிறார்கள். அவர்தம் பெருமைகளை இங்கே பாடியும் நடக்கிறார்கள் பாணர்கள்.
நாம் தற்புகழ்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்ேதாம். மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் ஆற்றிய அவை உரைகளை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தார். அதில் பத்திக்குப் பத்தி தம் தலைவர் பற்றிய பாமாலை, புகழ் மாலை. அந்த மூத்த தலைவரின் பல மடங்கு இழிந்த வடிவங்களைத்தான் இன்று நாம் பேரவை உறுப்பினர் உரைகளில் காண்கிறோம்.
கழிப்பறையில் நின்றால் கூட, ஒரு நிமிடம் தம் தலைவர் புகழ் பரவிய பின்தான் மடை திறப்பார்கள் போலும். சைவர்கள் சோற்றுக்கு முன்னால் உட்கார்ந்து ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று திருநாவுக்கரசர் தேவாரம் பாடும் பய பக்தி தோற்றுவிடும் போலும் தலைவர்கள் மீது சிறு தலைவர்களும் குறு தலைவர்களும் கொண்ட பக்தி.
இப்படித் தன்னைத்தானே புகழ்வதையும், அடியாட்களைக் கொண்டு புகழச் செய்வதையும் ஒரு வகையில் வணிகச் செயல்பாடு என்றே சொல்லலாம். அதாவது விளம்பரம். சுயமோகிகள் என்றொரு சொல்லும் உண்டு. சுயமோகத்தில் வணிகம் இல்லை; விளம்பரம் என்றால் வணிகம் வந்து புகுந்துகொள்கிறது. பூவுக்கு வண்டுகளைத் தேடிக் கொண்டு விட எவரும் விளம்பரம் செய்கிறாரா? அது இயற்கையானது.
அது வியாபாரம் அல்ல. இரு தரப்புக்கும் ஆதாயம் உண்டு. விற்பவன்பால் வாங்குபவனின் மோகத்தைப் பெருக்குபவை விளம்பரங்கள். இன்று வாக்குகள் பொறுக்கி அள்ளவோ அல்லது பெரும் பொருள் சேர்க்கவோ விளம்பரங்கள் பயன்படுகின்றன. அதில் பயனடைகிறவர்கள், ஊடகங்களும் விளம்பர மாடல்களுமே. இழந்து நிற்போர் சாதாரணக் குடிமக்கள் தவிர வேறு யார்?
‘யாவுமே விற்பனைக்கு’ என்று ஆகிவிட்ட சூழலில், விற்பனையைப் ெபருக்கவும் அதிகப் பணம் ஈட்டவும் நிறுவனங்கள் துணிந்துவிட்ட நிலையில், விளம்பரம் என்பது அதற்கான பெருவழிப்பாதை ஆகிவிட்டது. தேநீர் அல்லது சாயா அல்லது டீ என்ற ஒன்றே தமிழனுக்கு அறிமுகம் இல்லாத காலத்து, எப்படித் தேநீரை அறிமுகம் செய்து விளம்பரப்படுத்தினார்கள் என்பதைக் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர், 92 வயதான கி.ரா கட்டுரை எழுதி இருக்கிறார்.
‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ என்பது பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் நூலின் தலைப்பு. இன்று சராசரித் தமிழன், தினமும் 4 தேநீர் குறைந்தது அருந்துகிறான். இரண்டும் ஒன்று இல்லை என்றாலும், மது பற்றிப் பேசுகிறவர்கள் டீ அல்லது காபி பற்றி வாய் திறப்பதில்லை. விளம்பரங்களின் மூலம்தானே தேயிலை எஸ்டேட்டுகளும் தேயிலை தயாரிப்பு நிறுவனங்களும் இதனைச் சாதித்து எடுத்தன!
நான் கல்லூரி மாணவனாக இருந்த 1966 வாக்கில், கோக கோலா குளிர்பானம் பருகிப் பார்க்க கல்லூரிகளுக்குள் நுழைந்து, முகவர்கள் இலவச கூப்பன்கள் விநியோகித்தார்கள். அதைக் கொடுத்து எந்த ஓட்டலிலும் பானம் பருகலாம். ‘அதில் ஆஸ்ப்ரோ மாத்திரை போட்டுக் குடித்தால், ஒரு கட்டிங் அடித்தது போலிருக்கும்’ என்றோர் பேச்சு நாடெங்கும் இருந்தது. அதையும்தானே முயன்று பார்த்தோம்!
இன்று இந்தியாவில் குளிர்பானங்களின் விற்பனை எத்தனை ஆயிரம் கோடிகள் என்று யாரேனும் சொல்வீர்களா? அவர்களின் விளம்பரச் செலவு என்ன என்று சொல்வீர்களா? இந்தக் கோடிகள் யாருடைய பணம் கனவான்களே! ரேஷன் கார்டுகளைக் கூட அடமானம் வைக்கிற தேசத்தில் நாம் வாழ்கிறோம் என்பது உமக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் ஒரு விளம்பரம் கண்ணுற நேர்ந்தது. ஒரு இளைஞர் ஒரு பெட்டிக் கடையில் போய் ஒரு குளிர்பானம் கேட்கிறார். கடைக்காரர் ‘வண்டி வரவில்லை’ என்கிறார். இளைஞர் தனது முக்காலமும் உணரும் ஞான திருஷ்டியால், குளிர்பானம் ஏற்றி வரும் வண்டி, எந்த ஊரில், எந்த சிக்னலில், டிரா ஃபிக் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறிகிறார்.
பிறகென்ன? தனது மாய, மந்திர ஆற்றலால், ஹெலிகாப்டர் ஒன்றில் தொங்கிக் கொண்டு, குளிர்பானம் ஏற்றிய வண்டி நிற்கும் இடத்துக்குப் பறந்து போய், நான்கு நீள இரும்புச் சங்கிலிகளால் கொக்கி போட்டு, ஹெலிகாப்டரில் இருந்தபடியே, வண்டியைப் பிணைத்துத் தூக்கிக் கொண்டு போய் பெட்டிக் கடை அருகில் நிறுத்தி, ஒரு பாட்டில் வாங்கி, பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தைக் குடித்து, சாகாவரம் பெற்று, பேரானந்தத்துடன் நடக்கிறார்.
நமக்குத் தோன்றுகிறது, அந்தக் குளிர்பானம் கிடைக்காவிட்டால் வடக்கிருந்து உயிர் நீப்பாரா அல்லது பக்கத்துக் கடையில் கேட்பாரா எவரும்? நடுச்சாலையில், விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடும் ஒரு இளைஞரைக் காப்பாற்ற துரும்பு எடுத்துப் போடுவாரா? இது போன்ற விளம்பரங்களை பாரத மக்கள்தொகை வாய் பிளந்து பார்த்துக் கிடக்கிறது. எனக்குக் கேட்கத் தோன்றுகிறது, இவ்விதம் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் ஏழை மக்களின் கல்விக்கோ, மருத்துவத்துக்கோ எத்தனை தருவார்கள்?
குப்பிகளில் அடைத்து விற்கப்படும் அனைத்துக் குளிர்பானங்களைவிடவும் பன்மடங்கு சத்தும் சாரமும் நிறைந்தது உள்ளூர் இளநீர், தெளுவு எனப்படும் பதநீர் அல்லது நீரா. அது உணவும், மருந்தும் ஆகும். ‘விலை இருபது ரூபாயா’ என வாய் பிளக்கிறார்கள்.
முதலுக்கு வட்டியும் உழைப்புக்கு கூலியும் ஆதாயமும் எந்தப் பன்னாட்டுக் கம்பெனியும் கவர்ந்து போவதில்லை. ஆனால் தென்னந்தோப்புக்காரரும் பனை விளைக்காரரும் ஹெலிகாப்டர் கொண்டு வந்து விளம்பரம் செய்ய முடியுமா?இப்படித்தான் இரண்டே நிமிடங்களில் நூடுல்ஸ் என்றார்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிச் சிறார் எல்லாம் பாய்ந்து பாய்ந்து தின்றனர்.
இன்று அதனை நச்சுக் கடல் கடைந்த நாசம் என்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக விளம்பரங்கள் மூலம் விஷம் உண்ணத் தூண்டினோம்தானே! அரசாங்கம், அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் யாருக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தனர்? இன்று தடை செய்யப்பட்ட அந்த உணவுக்காக சென்ற ஆண்டின் விளம்பரச் செலவு 445 கோடி என்றும் தரக்கட்டுப்பாட்டுச் செலவு 19 கோடி என்றும் தலையங்கம் எழுதுகிறது ‘அம்ருதா’ மாத இதழ்.
இந்த விளம்பரங்கள் மூலம் சிறுவருக்கு விஷம் ஊட்டி அவர் உடல்நலம் பாழாக்கியதற்கு என்ன நஷ்ட ஈடு தருவார்கள்? ‘தின்றவன் எல்லாம் தின்றான் போனான், திருக்கணங்குடியான் தெண்டமுறுத்தான்’ எனலாமா?பள்ளி விட்டு வரும் சிறுவருக்கு கொண்டைக் கடலையோ, நிலக்கடலையோ, பாசிப்பயிறோ, தட்டைப்பயிறோ, உளுந்தோ, காணமோ வேக வைத்துச் சுண்டல் செய்து, சிறு கொட்டானில் போட்டு சிறு தீனியாகத் தர நமக்கும் நேரம் அற்றுப் போயிற்று. எட்டு மாதத்துக்கு முன்பே, வேக வைத்து உலர்த்திக் கலந்த காய்கறித் துண்டுகளை, சிக்கன் துணுக்குகளை கிண்டிக் கிண்டிக் கொடுத்தோமே ஐயா! எவ்வளவு பெரிய பாவிகள் நாம்?
விளம்பரம் என்றால் அது சற்று மிகையாகவே இருக்கும். ஆனால், மிகை என்பது பொய் அல்ல. கவிதைக்குத்தான் பொய் அழகு. உணவிலும் மருந்திலும் கல்வியிலும் பொய் ஆபத்தானது. எந்தக் காலத்திலாவது மருத்துவமனைகளுக்கு ஆங்கில, பிராந்திய மொழித் தினசரிகளில் நான்கு பக்கங்களில் விளம்பரங்கள் வந்ததுண்டா? நோய் வந்தால் நோயாளி தேடிப் போவான் தன்னைப் போல. ஐந்து நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகள் வாரம் ஒரு முறை மீட்டிங் போட்டு, தமது விடுதிகளின் தங்கும் அறைகளின் Occupancy Rate பற்றி விவாதிப்பார்களாம்.
இன்று மருத்துவமனைகளும் அந்த வேலையைச் செய்கின்றன என்கிறார்கள். மணல் கொள்ளை பற்றிப் பேசுகிற நாம் மருத்துவக் கொள்ளை பற்றிப் பேசுகிறோமா? திறமையும் சேவை மனோபாவமும் மூப்பும் கொண்ட மருத்துவர்களைப் பார்த்துச் சீறுகிறார்களாம் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள், ‘‘ஏன்யா ஆறு ரூம் காலியா கெடக்கு?’’ என்று.
‘பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றான் பாரதி, கல்விக்கூடங்கள் யாவும் இறை வழிபாட்டுத் தலங்கள் எனும் பொருளில். இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர் ஆயத்தம் ஆகும் முன்பே கல்வி நிறுவனங்கள் ஆயத்தம் ஆகிவிடுகின்றன.
நாளிதழ்களில் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், பெரும் பொருட்செலவில். நாட்காட்டிகள் அச்சிட்டு விநியோகிக்கின்றன. பேருந்து நிலையங்களில் துண்டுப்பிரசுரங்கள் இறைந்து கிடக்கின்றன. யாருடைய காசில் இந்த விளம்பரங்கள்? கல்வித் தந்தையரின் தோட்டம் துரவு, காடு கரை, வீடு மனை விற்ற பணத்திலா? கல்விக் கட்டணம் என்று மாணவரிடம் கொள்ளைப் பணம் வசூல் செய்யும் வசதியில்!
என்றாலும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிப் படிப்புக்கான இடங்கள் காலியாக ஓடுகின்றனவாம். சில ஆண்டுகளில் பல பொறியியல் கல்லூரிகள் மணல் கொட்டி வைக்கும், கிரானைட் பாளங்கள் அடுக்கி வைக்கும், போலி மதுபானப் பெட்டிகள் அடுக்கி வைக்கும் கோடவுன்களாக மாறிவிடும் என்கிறார்கள். யாரோ சொல்வது எனக்கும் கேட்கிறது, ‘அவர்கள் பலரின் ஆதித் தொழிலே அதுதானே?’ என்று.
பிறவா நெறிப் பெற்றியாளனான சிவனாரின் திருவிளையாடல்களில் ஒன்று, பிச்சாடனம். தாருகா வனத்து முனிவர்களின் கர்வம் அடக்கிய திருவிளையாடல். தன்னை மதிக்காமல் தருக்கித் திரிந்த ரிஷிகளின் கர்வம் பங்கப்படுத்த, சிவனார் பிச்சாடனராகப் போனாராம். அதாவது ஆடைகளற்ற பிச்சைக்காரனாக. அவரது நிர்வாண தரிசனத்தில் மயங்கிய ரிஷி பத்தினிகள், மோகமுற்று மனதால் சிவனாரைச் சார்ந்து கற்பு நிலை அழிந்தார்களாம். ஆயர்பாடிக் கண்ணன் பின்னால் ஆநிரைகள் நடந்ததைப் போல நடந்தார்களாம்.
அஃதேபோல், இன்றொருவன் உடலில், குறிப்பாக அக்குளில் வாசம் தெளிப்பானாம். அவனது டியோடரன்ட் வாசம் மோந்து பார்த்துக்கொண்டே பிறகாலே போவார்களாம் பெண்கள். பெண்களை மயக்கி எடுக்க எத்தனை எளிய வழி பாருங்கள்… அந்தக் கம்பெனியின் தெளிப்பான் ஒன்று வாங்கினால் போதும்! பெண்ணியவாதிகள் இதுபோன்ற விளம்பரங்களுக்கு எல்லாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்களா? செல்லா இடத்து சினம் காப்பார் போலும்!
மாதிரிகளுக்காகச் சில சொன்னேன். இன்று மருத்துவம், கல்வி, அரசியல் என எந்தத் துறையும் சேவை அல்ல. பெரும் பணம் ஈட்டும் வணிகம். நூடுல்ஸ் விற்பவருக்கும், குளிர்பானம் விற்பவருக்கும், கேளிக்கை விற்பவருக்கும், மருத்துவமனைகள், பொறியியற் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் நடத்துபவருக்கும், மணல் கொள்ளை அள்ளுபவனுக்கும், மலைகளை வெட்டிச் சாய்ப்பவனுக்கும், செம்மரம் சந்தன மரம் வெட்டிக் கடத்துபவனுக்கும் நகைக் கடைக்காரருக்கும் தொழில் எனும் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை. என்ன முதலீடு, எத்தனை மடங்கு லாபம் என்பதே கணக்கு! எனவே மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
விளம்பரம் என்பதே தப்பான செயல்பாடு அல்ல. ஆனால் எங்கு அளவுக்கதிகமான பொருட்செலவில், பெரும்பணம் நடிகருக்குக் கொடுத்து விளம்பரம் செய்யப்படுகிறதோ, அங்கு ஏதோ ஆபத்து கரந்துறைகிறது என்று பொருள். அது சினிமாவானால் என்ன, பல மாடிக் குடியிருப்பு மனைகள் என்றால் என்ன, பருகும் தின்னும் பொருளானால் என்ன, உணவுக் கூடங்களானால் என்ன, கல்விக் கூடங்களானால் என்ன, மருத்துவமனைகள் ஆனால்தான் என்ன, ஆன்மிக வழிகாட்டும் மையங்களானால் என்ன?
வெகு விரைவில் சிவனாரும் திருமாலும் நான்முகனும், மலைமகளும் திருமகளும் நாமகளும் பென்னம் பெரிய விளம்பரங்களில், ‘என் கோயிலுக்கு வாருங்க… உண்டியலில் பணம் போடுங்க…’ என்று கெஞ்சினாலும் வியப்படைய மாட்டேன்.
– கற்போம்…
ஓவியம்: மருது

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to விளம்பரம் – கைம்மண் அளவு 23

  1. naanjilpeter சொல்கிறார்:

    மிகைப்படுத்தி மக்களை ஏமாற்றும் விளம்பரங்கள் குறித்த ஓர் அருமையான பதிவு. நன்றி அய்யா நாஞ்சில் நாடன்.
    ஓர் இலக்கியவாதின் சமூக அக்கறையும், அநீதிக்கு எதிரான கருந்த்துகளும் அடங்கிவுள்ளது. நமக்குள் பலபேருக்கு இந்தத் தீவினைகளை கண்டு சினம் எழுவது உண்டு. ஆனால் அதை ஆவணப்படுத்துவதில்லை. எழுத்தாளரின் இந்தச் சமூகச் சிந்தனை இலக்கியவாதிகள் நடுவில் அரிது.
    இந்த அறச்சீற்றம் சிந்தனை வறட்சியில் வாடும் நம்மிடை ஊக்கத்தை உருவாக்க வேண்டும்.
    சதுரங்க வேட்டை திரைப்படம் பார்த்தேன்.
    இப்பொழுது ஓர் இலக்கியவாதியின் கடைமை உணர்வை காண்கிறேன்.
    நன்றிகள் அய்யா.
    நாஞ்சில் பீற்றர்
    http://www.fetna.org

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s