தமிழாய்வு – கைம்மண் அளவு 22

kaimmaN 22 1நாஞ்சில் நாடன்
உவப்பானவற்றைப் பேசிவிட்டு, துவர்ப்பானதைப் பேசாமல் போவது எழுத்தாளனின் அறம் அல்ல. தமிழ் கற்றார்க்கு கல்வித் தந்தையர் செய்யும் அநீதி பற்றிப் பார்த்தோம். தமிழ் கற்பிப்பவருக்கும் சில நீதி சொல்வது நமது கடமையாகும். அவர் அதைக் கைக்கொள்வதும் தள்ளுவதும் அவர்களது மனவார்ப்பு. பல்கலைக்கழக வளாகங்களும்,கல்லூரி வளாகங்களும் தமிழ் கற்போருக்கு தமிழைச் சரிவர போதிக்கின்றனவா, போதிப்பதைக் கற்ேபார் சரிவர வாங்கிக் கொள்கிறார்களா, வாங்கிக் கொண்டதை அடுத்த தலைமுறை மாணாக்கருக்கு அவர்கள் திரும்பத் தருகிறார்களா என்பவை தமிழறிஞர்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்.

எனது தீவிர வாசகரான இளைய மாணவர் ஒருவரிடம் கேட்டேன். ‘‘உங்க தமிழாசிரியர் எப்பிடிப் பாடம் நடத்தறார் தம்பி?’’ அந்த மாணவரின் தமிழாசிரியர் எனக்கு அறிமுகமானவர். மேடைகளில் பெரும்பேச்சு பேசுகிறவர். மாணவர் சொன்ன பதில் எனக்கு வியப்பளிக்கவில்லை.

‘‘சட்டியிலே இருந்தாத்தானே, அகப்பையிலே வரும்?’’ – இது கொஞ்சம் கவலைக்கிடமான நிலைமை.ஆசிரியர்கள் எத்துறை சார்ந்தவராக இருப்பினும், பாடத்திட்டங்களுக்கு வெளியேயும் வாசித்தல் வேண்டும். மொழி கற்பிப்போர் அதற்கு விலக்கு அல்ல. தமிழோ, மலையாளமோ, கன்னடமோ, களி தெலுங்கோ எதுவானாலும்! kaimmaN 22 2

எம்மொழி கற்பிப்போராயினும் அவர்கள் கற்பது அவசியமாகிறது. பிறமொழிகளில் எவ்வாறு என்று தெரியவில்லை. தமிழ் கற்பிப்போர், தாம் கற்கும்போதும், கற்பிக்கும்போதும், பாடத்திட்டங்களுக்குப் புறம்பாக வேறு ஏதும் வாசிக்கிறார்களா என்பது நமது நீண்ட நாள் கேள்வி.

எனது ஐந்தாவது நாவல் ‘சதுரங்கக் குதிரை’ 1995ல் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பாடமாக இருந்தது. அதனால் நான் பெரும் பொருள் ஈட்டிவிட்டேன் என தயவுசெய்து எண்ணி விடாதீர்கள். அந்த ஆண்டில் பல்கலைக்கழக கல்லூரித் தமிழாசிரியருக்கான பயிற்சி முகாமில், ‘சமகாலத் தமிழ்ப் புதினம்’ என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

புதினம் என்றால் என்ன என்று கேளாதீர். நாவல் எனில் ஆங்கிலச் சொல். நூற்றாண்டுகளாகப் பல்கலைக்கழகங்கள் மட்டும் புதினம் என்றே பயன்படுத்துகின்றன. எனது உரை முடிந்த பிறகு, நடந்த கேள்வி நேரத்தில் வந்த கேள்விகளில் முக்கியமானது, ‘‘பாடம் நடத்துவதற்கு சதுரங்கக் குதிரை புரியவில்லை’’ என்பது.

அந்த நாவல், 1995ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நாவல் என்று தமிழக அரசாலும், கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையாலும், புதிய பார்வை – நீலமலைத் தமிழ்ச் சங்கத்தாலும் பரிசளிக்கப்பட்டது.இந்த இருபது ஆண்டுகளில் ஏழு பதிப்புகள் கண்ட நாவல். ஆனால், கல்லூரி மாணவருக்கு அந்த நாவல் அர்த்தமாகவில்லை. எளிதில் புரிந்துகொள்ள முடியாத நாவல்கள் தமிழில் சில உண்டு. என் நாவல்கள் எதுவுமே அப்படி அல்ல. அந்த அரங்கில் நான் சொன்னேன், ‘நீங்கள் மந்திரக்கோல் மாயாவி, சிந்துபாத் போன்ற படக்கதைகளைப் பாடமாக வைப்பது நன்று’ என்று.

ஒரு சராசரி தமிழ் நாவல் புரியாமல் போனால் நற்றிணையும் குறுந்தொகையும் எவ்விதம் புரியும்? தொல்காப்பியமும், நன்னூலும், யாப்பருங்கலமும் எவ்வாறு புரியும்? அல்லது சமகால நாவல்களுக்கும் கோனார் கைடு எழுதிவிடுவது நல்லது. மாணவரும் பாடமாக இருக்கும் நாவலை வாங்காமல் கைடு மட்டும் வாங்கிக்கொள்வார்கள்.

நான் பம்பாயில் வாழ்ந்த நேரம் அது… ஆண்டு விடுப்பில் சொந்த நாட்டுக்கு வரும்போது, திருவனந்தபுரம் சாலைக் கடைத்ெதருவில் இருந்த மூத்த எழுத்தாளர் ஆ.மாதவன் பாத்திரக்கடையில் இருந்தேன். முன்பே ஏற்பாடு செய்தபடி, கேரளப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார்.

‘‘ஐயா! நாஞ்சில் நாடன் படைப்புலகம்னு ஆய்வுத் தலைப்பு… ’’‘‘வண்ணதாசன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், பூமணி, ராசேந்திர சோழன் எல்லாம் வாசிச்சிருக்கேளா தம்பி?’’

‘‘ஐயா! அந்தப் பேருல எல்லாம் நீங்க எழுதறீங்களா?’’
நான் உத்தேசித்தது, என்னை விடவும் சிறப்பாக எழுதும் எனது சம கால எழுத்தாளர் பற்றி ஆய்வு மாணவருக்குப் பரிச்சயம் உண்டா என்பதறிய.

அவரோ அவை எல்லாமே எனது புனைப்பெயர்களோ என்று மயங்குகிறார். பத்மநாபசாமி கோயிலின் கிழக்குக் கோட்டை வாசலில் போய் முட்டுங்கள் என்பது போலப் பார்த்தார் ஆ.மாதவ அண்ணாச்சி. எனது படைப்புகளில் இதுவரை இருபத்தைந்து பேர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார்கள்.

முனைவர் என நான் சொல்வது Ph.D. என்பதைக் குறிக்க. எம்.ஃபில் ஆய்வாளர் பற்றிய கணக்கு என்னிடம் இல்லை. அவருள் ஒரு சிலர் தவிர்த்து, பலருக்கும் சமகாலத் தமிழ்ப் படைப்புலகம் பற்றிய எந்த அறிமுகமும் இல்லை. கற்பிக்கும் உலகுக்கும் படைக்கும் உலகுக்கும் பாரதூரமான இடைவெளி இருக்கிறது என்பதைத்தானே இது சாற்றுகிறது?

2002ம் ஆண்டில் நான் ‘பாம்பு’ என்றொரு சிறுகதை எழுதினேன். தமிழ்ப் பேராசிரியர் வீட்டு வளாகத்தில் வசித்த நாகப்பாம்பு ஒன்று, தற்செயலாக வழி தவறி அவரது வாசிப்பு அறைக்குள் நுழைந்து விட்டது. அவர் என்ன வாசிப்பார் என்பது தமிழ்த் தாய்க்கே உறுதி! வாசிப்பு மேசை மேல் விரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியரின் ஆய்வேடு ஒன்றின் சில பக்கங்களைப் பாம்பு வாசிக்கவும் செய்தது.

பாம்புக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்பீர்கள்! தமிழ் சினிமாவில் ஒற்றை உதையில் ஒரு டாடா சுமோ பனைமர உயரம் பறக்குமானால், பாம்பும் தமிழ் படிக்கும்! ஆய்வேடு வாசித்த பாம்பு, மனதுக்குள் கருவிக் கொண்டது, ‘இவனைப் போட்டுத் தள்ளாமப் போகக் கூடாது’ என்று. மிச்சக் கதையை என் தொகுப்பில் வாசிக்கலாம்.

அது பாம்பின் கோபமல்ல. ஒரு ஆய்வேட்டை வாசிக்க நேரும் ஒரு படைப்பாளியின் சோகம். அவனால் அதுதானே முடியும்? ஆற்றில், குளத்தில் வீழ்ந்து சாக முடியாதல்லவா? ஆற்றில், குளத்தில், கிணற்றில் விழுந்து சாகத் தண்ணீர் வேண்டாமா? நான் சொல்ல வருவது, தமிழிலக்கிய ஆய்வேடுகள் பெரும்பாலும் ஆரம்ப நிலை ஆய்வுகளாக உள்ளன என்று.

இன்று, கல்லூரித் தமிழாசிரியர்களின் ஆய்வுகள் சில இதழ்களில் கட்டுரைகளாக வெளிவருகின்றன. அவை, அவர் பெயரில் புத்தகமாக வந்தால், SET அல்லது NET மதிப்பெண்கள் கிடைக்கக்கூடும். ஆனால், வாசிக்கும் நமக்கு மெத்த வருத்தம் ஏற்படுகிறது. அலுப்பூட்டும் மொழி நடை, உப்புச் சப்பில்லாத வெளிப்பாட்டுத் திறன்… ஒரு பத்தியில் ஆறு சொற்றொடர்கள் எனில், ஆறுமே ‘சுட்டிச் செல்கிறார்’ என்றா முடிவது?

ஆதிகாலத்துக் கட்டுரை மொழி! இந்த ஆய்வாளர்களில் பெரும்பாலோர் சம கால நவீன படைப்பு மொழியோடு ஒரு தொடர்பும் அற்றவர் என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த பத்தாண்டுகளில் வெளியான சிறந்த பத்து நாவல்களோ, சிறுகதைத் தொகுப்புகளோ, கவிதை நூல்களோ, கட்டுரை நூல்களோ சொன்னால் பெரும்பாலான தமிழாசிரியர்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள்.

பிறகெங்கே வாசிப்பது? நண்பர்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் தமிழின் சிறந்த நூறு நாவல்களை, சிறுகதைகளை பட்டியல் இட்டுள்ளனர். இவற்றுள் எத்தனை அறிந்திருப்பார்கள்? இந்தக் கேள்வியை ஒரு வங்கி அதிகாரியை, மருத்துவரை, கட்டுமானப் பொறியாளரை நோக்கி நாம் கேட்கவில்லை! மொழி பயிற்றும் ஆசிரியர்களை நோக்கி முன் வைக்கிறோம்! பிறகெப்படி தமிழ் இலக்கியம் கற்பிப்பது? பிறகு எப்படி நவீன தமிழ் இலக்கியம் அர்த்தமாகும்?

நான் இங்கு பேச முற்படும் சில செய்திகள் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடும். முனைவர் பட்டத்துக்கான ஆய்வடங்கல்கள் இன்று ஒரு லட்ச ரூபாய் கொடுத்து எழுதி வாங்கப்படுகின்றன என்கிறார்கள். சில வழிகாட்டிகளே எழுதித் தந்துவிடுகிறார்கள் என்கிறார்கள்.

சில பேராசிரியர்களும் சில அறிஞர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். முனைவர் பட்ட ஆய்வேடு, வழிகாட்டியின் நண்பர்கள் பணியாற்றும் பல்கலைக்கழக அல்லது கல்லூரித் தமிழ்த் துறைக்கே மதிப்பீட்டுக்கு அனுப்பப்படுகின்றதாம். ஆய்வு மாணவர் அவரையும் கண்டுவர வேண்டுமாம்.

ஆய்வுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்பு, பட்டம் வழங்குவதற்கு முன்பான ‘நேர்முகம்’ காண்பதற்கு வரும் பேராசிரியர்களுக்கு மாணவரே பஞ்சப்படி, பயணப்படி தருவதுடன் சிறப்பான விருந்தும் ஏற்பாடு செய்ய வேண்டுமாம். இவை தவிர பலருக்கு இங்கு எழுதத்தரமற்ற நெருக்கடிகளும் தரப்படுகிறதாம்.

இவற்றை ஆய்வு மாணவர்களே பேசித் திரிகிறார்கள்.எல்லோராலும் இப்படி முனைவர் பட்டங்களை ‘வாங்க’ முடியுமா? சிலர் கடினமாக உழைத்து, அவர்களது வழிகாட்டிகளின் ஊக்கத்தால் கற்று, ஆய்ந்து, எழுதிப் பட்டம் வாங்குகிறார்கள். சிலர் ‘வாங்குகிறார்கள்’. கையோடு, பெரும்பணம் கொடுத்து அரசு வேலைகளும் ‘வாங்குகிறார்கள்’.

‘மக்களே போல்வர் கயவர்’ என்பார் திருவள்ளுவர். அஃதாவது, ‘கயவரும் மக்களைப் போலவே தோற்றம் கொண்டிருப்பார்கள்’ என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பொருள் எழுதுகிறேன். பால் வடியும் முகம் கொண்ட எத்தனை கயவர்கள் சாமான்யரின் ரத்தத்தை வலி உணரவிடாமல் உறிஞ்சுகிறார்கள்? ‘பயிர்களே போலும் களை’ என்றும் சொல்லலாம். அது போல் ஆகிவிட்டது தமிழின் ஆய்வுப் படிப்பு.

இந்தக் கோராமையில், சிரமப்பட்டுத் தேர்வுகள் எழுதிப் பட்டங்கள் வாங்கி வேலைக்கு நடக்கும் ஏழை மாணவர் பற்றிய கவலை எதிரேறி வருகிறது. பெரு நகரங்களில் சில குறிப்பிட்ட சந்திகளில், கொத்தனார்களும் தச்சர்களும் தத்தம் தொழில் தளவாடங்களுடன் குழுக்களாக உட்கார்ந்திருப்பார்கள்…

வேலைக்கு எவரும் கூப்பிட வருவார்கள் என எதிர்பார்த்து! கூப்பிட்டால் வேலைக்கும், கூப்பிடாவிட்டால் வீட்டுக்கும் போவார்கள். அதுபோல் ஆகி விடக்கூடாது நேர்மையாகத் தமிழ் கற்றவர் நிலைமை என்பது எம் ஆயாசம். அதைத்தான் நாம் சென்ற வாரம் பேசினோம்.

இந்த வாரம் நம் கவலை வேறு!

தரமற்ற கல்விக்குத் தரமற்ற ஆசிரியரும் பொறுப்பு இல்லையா? இதில் சேதம் யாருக்கு? ‘முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான்’ என்பார் கண்ணதாசன். பணம் கொடுத்துப் பட்டம் பெற்றாலும், படிக்காமல் போதிக்க வந்தாலும், சீரழிந்து போவது எவருடைய எதிர்காலம்? விதை நெல்லில் கலப்படம் அனுமதிக்கத் தகுந்ததா?

பாடப்புத்தக வரிகளுக்கு உள்ளே மட்டும் நின்று கால் மாற்றி ஆடுகிற ஆசிரியர்கள், மாணவருக்கு என்ன பரிமாறுவார்கள்? அவர்கள் பரிமாறும் தமிழ் மீது மாணவருக்கு என்ன ஆர்வம் வரும்? ஐ.நா. சபை அறிக்கை கூறுகிறது, நூறாண்டுகளுக்குள் அழிந்து போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ் எட்டாவது இடத்தில் இருக்கிறது என்று. புலம்பி என்ன பொருள்?

இன்றைய இளைய சமூகத்தினரின் தமிழறிவு பற்றி மண்டை புண்ணாகும் படி யோசிக்கிறார்களா என்ன நமது கல்வி அமைச்சர்களும் கல்வித்துறை அதிகாரிகளும்? எத்துறை ஆனால் என்ன, சில்லறை என்ன மிஞ்சும் என்பதல்லவா அதிகாரத்தின் கணக்கு? அருகாமை நகரின் கல்லூரி ஒன்றில் நடந்த, அனைத்திந்திய சங்க இலக்கிய மூன்று நாள் கருத்தரங்குக்குப் போயிருந்ேதன்.

‘அனைத்திந்திய கருத்தரங்கு’ என்றால் தமிழ்நாட்டின் நான்கைந்து கல்லூரிகள் என்று பொருள். மிச்சமெல்லாம் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி பெறும் முயற்சி. தற்சமயம் அதுவும் ஒரு வரும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு. தரமான ஒரு நூல் கூட வெளியானதில்லை. ஒரு ஆய்வாளர் பேசிக்கொண்டே போனார், ‘‘சங்க இலக்கியத்தில் மொத்தம் 2,420 பாடல்கள்’’ என்று.

நான் சொல்ல வேண்டியதாயிற்று, ‘‘ஐயா! 2,420 பாடல்கள் என்பன எட்டுத்தொகை மட்டுமே… அவற்றுள்ளும் இன்று கிடைப்பன 2,350 பாடல்களே… மிச்சமுள்ள 33 நூல்களின் கணக்கை எப்படிக் கூட்டுவீர்கள்?’’ என்று. அந்த ஆய்வாளருக்கு நான் வாழ்நாள் பகையாகிப் போவேன். ஏற்கனவே இதில் எமக்கு முன் அனுபவங்களும் உண்டு.எமது கோரிக்கை, ‘அருள்கூர்ந்து தப்பைப் போதிக்காதீர்கள்’ என்பது.

அண்மையில் மாத இதழ் ஒன்றில், ‘தொல்காப்பியம் காட்டும் உயிரினங்கள்’ என்றொரு ஆய்வுக் கட்டுரை வாசித்தேன். ஆர்வத்துடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஒன்றே கால் பக்கத்தில் கட்டுரை முடிந்து போயிற்று. தலைப்பின் ஆழமென்ன, தீவிரம் என்ன, படைப்பது என்ன? தொல்காப்பியம் 52 தாவரங்களையும், பாசிகள் பற்றியும் குறிப்பிடுகிறது.

உயிரினங்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கி தனி நூலே எழுதலாம். அதற்கான வாசிப்பும் ஆய்வும் ஆற்றலும் வேண்டும். ஆய்வு என்பது சாப்பாட்டு மெஸ்ஸில் வாங்கி வந்த பண்டத்தைச் சூடாக்கிப் பரிமாறுவதல்ல!செம்மொழியின் சிறப்பு என்பது அது ஆண்டுதோறும் பெறும் மானியங்களில் இல்லை. மாநாடுகள் நடத்திக் கோலாகலங்கள் காட்டுவதிலும் இல்லை. அல்லது வேண்டியவர், கட்சிக்காரர், ‘கண்டுக்கினு’ போனவர் பார்த்து விருது வழங்குவதிலும் இல்லை.

இதையெல்லாம் யார் போய்ச் சொல்ல வல்லார்கள்? எழுத்தாளன் கருத்து என்பது இம்மாநிலத்தில் எக்காலத்தும் அம்பலம் ஏறியதில்லை. ஏனெனில் இது கேரளமோ, கன்னடமோ, மராட்டியமோ, வங்காளமோ இல்லை.மருத்துவர்களில், மருந்தில் போலி என்பது எத்தனை அபாயகரமானதோ, அதைவிட அபாயகரமானது ஆசிரியத்தில் போலி என்பது. நமக்கோ அசலை அடையாளம் தெரியாது. ஆனால் போலிகளைக் கொண்டாடிக் கொண்டிருப்போம்!

– கற்போம்.
ஓவியம்: மருது
முந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை படிக்க:-

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to தமிழாய்வு – கைம்மண் அளவு 22

  1. marubadiyumpookkum சொல்கிறார்:

    good post..remembering a news: about doctorate student complaining about her teacher guide to go with bed at least a day to get phd.

  2. வளவ. துரையன் சொல்கிறார்:

    ஒரு புத்தகம் பார்த்து எழுதினால் திருட்டு. ஆனால் பல புத்தகங்கள் எழுதினால் முனைவர் பட்டமென்று சிலர் இன்று வாங்கிகிறார்கள்

  3. rajendranunnikrishnan சொல்கிறார்:

    அருமையான பதிவு.

  4. Naga Rajan சொல்கிறார்:

    நன்றி!

  5. Gopalakrishnan சொல்கிறார்:

    கசையடிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s