நாஞ்சில் நாடன்
சில ஆண்டுகள் முன்பு, கோவையின் இலக்கிய மேடையில் சிலம்பொலி செல்லப்பனார் ஒரு சம்பவம் சொன்னார். அவரை எனது பம்பாய் நாட்களில் இருந்தே அறிவேன். அப்போது அவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராக இருந்தார். கோடை விடுமுறையில், குடும்பத்துடன் பம்பாயில் இருந்த அவரது இஸ்லாமிய நண்பர் வீட்டில் வந்து தங்குவார்.
ஒரு முறை அவ்வாறு வந்து தங்கியபோது, பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் மூன்று தனிச் சொற்பொழிவுகள் செய்தார்; ஒரு பட்டிமன்றத்துக்குத் தலைமையும் வகித்தார். அவர் தலைமையில், ஓர் அணியில் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. மரபிலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சியும் வாசிப்பும் உண்டு அவருக்கு. பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார்.
அவரைப் போலவே தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற ம.ராசேந்திரன் அவர்களுக்கும் படைப்பிலக்கிய அனுபவமும், நவீன இலக்கிய வாசிப்பும் மரபிலக்கியத் தேர்ச்சியும் உண்டு. ஒரு பருவம் அவர் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.
அமரர் ஜெயகாந்தன், மூத்த தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி ஆகியோரின் அருமை நண்பர் அவர். சிலம்பொலியாரைப் போலவே ம.ராசேந்திரனும் பண்பாளர். சிலம்பொலியார் குறைந்தது அறுநூறு தமிழ் நூல்களுக்குமுன்னுரை எழுதிக் கொடுத்திருப்பார். அவை நான்கு தொகுதிகளாக வெளியாயின. அந்த நூல்களில் பல பொக்காகிப் போனதற்கு, சிலம்பொலியார் பொறுப்பல்ல.
கோவை மேடையில், சிலம்பொலியார் தனது தமிழாசிரியர் குறித்துச் சொன்னார். பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் நாளில் பிரிவு உபசாரம் நடத்தும் முகத்தான், அவரைக் கண்டு தாக்கல் சொல்லி இருக்கிறார்கள். ‘‘எதுக்குப்பா வீணா?’’ என்றாராம். ‘‘இல்லீங்க ஐயா! மாணவரெல்லாம் அறுவது ரூபா வசூல் செய்து, உங்களுக்கு ஒரு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டைக்குத் துணியும் வாங்கி வச்சிருக்கிறோம்.’’
‘‘அறுவது ரூவாயா? எனக்கு ஒரு மாசச் சம்பளம்பா… நெல்லு வாங்கிப் போட்டா ரெண்டு மாசம் சாப்பிடுவோம்!’’ அது அன்றைய தமிழாசிரியர்கள் நிலைமை. பிற துறை ஆசிரியர்களை விட அவர்களுக்கு சம்பளம் குறைவு. தலைமையாசிரியராகவோ, கல்வி அதிகாரியாகவோ ஆகும் தகுதி கிடையாது. என்றாலும் வஞ்சமில்லாமல் தமிழை வாரிக் கோரி ஊட்டினார்கள், தமது மாணாக்கருக்கு.
நான் இறச்சகுளத்தில் நடுநிலைப்பள்ளி வாசிக்கும்போது (1958-1961), எங்களுக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் எங்கோடிச் செட்டியார் இருந்தார். ‘அதென்ன… எங்கோடி என்றா பெயர்?’ எனக் கேட்பீரேயானால், அது எங்கள் பகுதியின் சாஸ்தா பெயர் என்பேன். ஆரல்வாய் மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா,
சுசீந்திரத்தில் சேரவாதல் சாஸ்தா மற்றும் பூலா உடைய கண்டன் சாஸ்தா, ஒழுகினசேரியில் எங்கோடி கண்டன் சாஸ்தா, என் சொந்த ஊர் வீரநாராயண மங்கலத்தில் நீர் நிறை காவு கொண்ட சாஸ்தா, இறச்சகுளத்தில் எருக்கலை மூட்டு சாஸ்தா, சித்தூரில் தென்கரை மகராஜன் சாஸ்தா என சில சாஸ்தாக்கள் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள். சபரிமலையின், பந்தளத்தின், குளத்துப்புழையின், எரிமேலியின், ஆரியங்காவின், அச்சன்கோவிலின் சாஸ்தாக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எங்கோடி வாத்தியார் என்றழைப்போம் நாங்கள். பெரிய பித்தளைத் தூக்குவாளியில் மதியச் சாப்பாடு கொண்டு வருவார். மதிய இடைவேளை மணி அடித்ததும் கூவிச் சொல்வார், ‘‘சாப்பாடு கொண்டு வராதவன் எவனாவது ஒருத்தன் வாங்கலே!’’ என்று. எங்கள் பள்ளி இறச்சகுளம் பொத்தை அடிவாரத்தில், தாமரைத் தடாகங்கள் சூழ அமைந்திருந்தது. பொத்தை எனும் சொல் அர்த்தமாகவில்லை என்றால் ‘திரடு’ அல்லது ‘குன்று’ என்று ெகாள்ளுங்கள். அகன்ற தேக்கு இலையோ, தாமரை இலையோ பறித்துக் கொண்டு ஒருத்தன் ஓடுவான்.
தூக்கு வாளியைத் திறந்து சோறு அள்ளி வைத்து, குழம்பு ஊற்றி துவரனோ, பொரியலோ, அவியலோ வைத்துத் தருவார். மதியம் பழையது கொண்டு போக வக்கற்ற நாட்களில் சில முறை நானும் வாங்கித் தின்றிருக்கிறேன்.
அதைச் சொல்ல நானொருத்தன் இருக்கிறேன் இன்று.நான் எட்டாவது வாசிக்கும்போது, வகுப்பில் முதன்மை மாணாக்கராகிய நானும், இறச்சகுளம் கிராமத்துப் பார்வதியும், மரம் நடும் வாரத்தின்போது எங்கோடி வாத்தியார் எடுத்துக் கொடுக்க நட்ட மருத மரமும் அரச மரமும் வானோங்கி வளர்ந்து நிற்கின்றன இன்று. பேரக் குட்டிகள் எடுத்த பார்வதி, பெங்களூருவில் வசிக்கிறாள்.
என் வயதொத்த அனைவருக்கும் இது போல் வாத்தியார்கள் இருந்திருக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் வாங்கித் தந்தவர், பள்ளிக் கட்டணம் செலுத்தியவர், பள்ளி நேரம் முடிந்த பிறகு கட்டணம் ஏதுமற்று டியூஷன் எடுத்தவர், பேச்சுப் போட்டிக்கும் பாட்டுப் போட்டிக்கும் கைக்காசில் டிக்கெட் வாங்கி மாவட்டத் தலைநகருக்கு இட்டுப் போனவர், தேர்வு மையத்துக்கு சைக்கிளின் பின்புறம் வைத்து மிதித்தவர்…
‘திசை நோக்கித் தொழுகின்றேன்!’ என்றொரு கட்டுரை உண்டு என் கணக்கில். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரும்முன்பு, கான்வென்ட் பள்ளிகள் பற்றி அறியும் முன்பு, கேந்த்ரிய வித்யாலயா கேள்விப்பட்டிராதபோது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறியப்படும் முன்பு, அரசுப் பள்ளிகளில் படித்து ஆளாகிய தலைமுறையும் இருந்தது. அன்று எங்கள் ஆசிரியர்கள் சம்பளத்து க்கு மட்டுமே உழைத்ததில்லை. ஏனெனில் அவர்கள் பார்த்தது தொழில் அல்ல, ஊழியம்!
‘ஊழியம்’ என்பதும் ‘பணி’ என்பதும் ஆழ்ந்த பொருளுடைய சொற்கள். உழவாரப் படையாளி திருநாவுக்கரசர் சொன்னார், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று. சேவை எனும் சொல் போல. ஊழியமும் பணியும் சேவையும் கடமையும் ஆற்றுபவர்கள் ஊதியம் பெறக்கூடாது என்பதல்ல. ஆனால், ஊதியம் மட்டுமே கருத்தில் பற்றிக்கொண்டு செயல்படுவது ஊழியம் அல்ல.
அரசு ஊழியர் எனும் சொல் இன்று எதிர்மறைப் பொருள் தரும் அளவுக்கு நீட்சி அடைகிறது. ஊழியத்தின் பண்பு நலன்கள் எதுவுமேயற்ற பல தொழில்களையும் இன்று ‘ஊழியம்’ என்றே அழைக்கிறோம். இன்னல் யாதெனில், லஞ்சம், ஊழல், செயல்திறன் இன்மை, செய்நேர்த்தி இன்மை, கடனுக்கு மாரடித்தல் இவற்றையும் ஊழியம் என்கிறோம். எதிர்காலத்தில் பிக்பாக்கெட், சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி இவற்றையும் ஊழியம் என்பார் போலும்.
பின்னாட்களில் தமிழாசிரியர்களும் தலைமை ஆசிரியர்கள் ஆனார்கள்; மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளாயும் ஆனார்கள்; தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆனார்கள். சமமாகச் சம்பளம் பெற்றார்கள். நல்ல ஆசிரியர்களாக இருந்தார்கள். நூற்றைக் கெடுத்த குறுணி போன்ற ஒருசிலரை நாம் தள்ளி விடலாம். அவர்கள் எல்லாத் துறைகளிலும் இருப்பார்கள்தானே!
இன்றைய நிலைமையைச் சற்றுக் கறாராக அணுகுவதுதான் இந்தக் கட்டுரை. தனியார் துறை நிறுவனங்களுக்கு ‘மினிமம் வேஜஸ்’ என்ற ஒன்றை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி சம்பளம் தருகிறார்களா எனப் பரிசோதிக்க தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் உண்டு. அவர்கள் ஆய்வு செய்து முடிந்த பின்பு என்ன வாங்கிக் கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பிரமுகர்கள் கல்வித் தந்தைகளாக இருந்து நடத்தும் தனியார் கல்லூரிகளில் பி.ஏ.(தமிழ்), எம்.ஏ.(தமிழ்), எம்.ஃபில், பிஹெச்.டி என்று பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளமும் உதவிப் பேராசிரியர் எனும் பதவியும் தருகிறார்கள்.
தோராயமாக மாதம் 25 நாட்கள் வேலை என்று கொண்டால், தினத்துக்கு என்ன ஊதியம்? 280 ரூபாய்! நகரில் கட்டிட வேலைக்குப் போய் செங்கல்லும் ஜல்லியும் மணலும் சுமக்கும் கூலிக்கு சம்பளம் 400 ரூபாய். அவர்கள் எம்.ஃபில், பிஹெச்.டி தேறியிருக்க நிர்ப்பந்தமும் இல்லை.
அண்மையில் மூன்று மாவட்டங்களின் ஓவிய ஆசிரியர்களுக்கான முகாம் ஒன்றில் உரையாற்றப் போயிருந்தேன். எனது அமர்வுக்குத் தலைமை தாங்கியவர், ஒரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி. ஓவிய ஆசிரியர்களை வாழ்த்திப் பேசிய அவர் மிகுந்த மனக்குறை யுடன் சொன்னார்… ‘நான்கு மணி நேர வேலைக்கு மாதம் 5000 ரூபாய் கொடுக்கிறது அரசாங்கம்…
ஆனால் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை’ என்று. அதிகாரத்தின் அண்டையில் நிற்பவரின் பார்வை அது. நான்கு மணி நேர வேலை என்பது நான்கு மணி நேர வேலை மட்டும் அல்ல. அலுவலகத்தில் உதவி, தெருவுக்குப் போய் தேநீர் வாங்கி வருவது, மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு தபால் கொண்டு போவது, தபால் வாங்கி வருவது எனப் பல சோலிகள். தினக்கூலி சுமாராக 200 ரூபாய். நான் கேட்டேன், ‘‘ஏன் நீங்கள் செங்கல் சுமக்கப் போகக்கூடாது?’’ என்று. அதிகாரிக்கு முகம் சிவந்துவிட்டது!
நம்மை எந்தக் கட்சி ஆள வந்தாலும் தமிழ்தான் அவர்கள் மூச்சு. ஆனால், முதுமுனைவர் பட்டம் பெற்ற கல்லூரித் தமிழாசிரியருக்கு தினக்கூலி 280 ரூபாய். சில தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ்த்துறை இருக்கும்…
ஆனால், தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களாம். ஆங்கில ஆசிரியரோ, விளையாட்டுகளுக்குப் பயிற்சியாளராக இருப்பவரோ தமிழ் வகுப்பை நடத்தி விடுவார்களாம். ஆனால், எல்லா அரசு அலுவலகக் கூரையிலும் ‘தமிழ் வாழ்க’ என போர்டுகள் மின்னுகின்றன.
இப்படி மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் முதுமுனைவர்தான், கல் தோன்றி முள் தோன்றாக் காலத்து மூத்த ெமாழியை இளைய மாணவருக்கு வஞ்சனையில்லாமல் கற்றுத் தர வேண்டும். அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் கால்வாசி கூட இல்லை இது. அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்தில் ஏழில் ஒரு பங்கு. பட்டினி கிடந்தும் தமிழ் கற்றுத் தரவேண்டிய கட்டாயம் அந்த இளைஞர்களுக்கு. தமிழ் கற்ற மாணவருக்குப் பிழையறத் தமிழ் எழுத வரவில்லை என்ற கணக்கை நாம் வேறொரு கட்டுரையில் நேர் செய்வோம்!
எனக்கு அறிமுகமானதோர் இளைஞர், தன்னாட்சிப் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பேரு எல்லாம் பெத்த பேருதான். ஒரு அகில இந்தியக் கருத்தரங்கம் நடத்த, அவர் பெயரையும் கையெழுத்தையும் போட்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது நிர்வாகம்.
நிதி உதவ அனுமதிக் கடிதம் வந்தபோதுதான் இளைஞருக்கே தெரியும், தனது கையெழுத்தையும் நிர்வாகமே போட்டுவிட்டது என்பது. ‘ஏன்?’ என்று கேட்கப் போனார். தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தின் கல்வித் தந்தை – அவர் ஒரு சைவத் தந்தையும் கூட – இளைஞரை அழைத்து, அந்த நாள் வரைக்குமான கூலி கொடுத்துத் தீர்த்து அனுப்பி விட்டார்.
மற்றொரு கல்லூரி தமிழ் விரிவுரையாளர் புலம்பினார்… மாணவர்கள் தம் ஆசிரியர்களை ‘ஃபிஸிக்ஸ் போகுது’, ‘கெமிஸ்ட்ரி போகுது’ என்று சொல்ல மாட்டார்கள், ஆனால் காது படவே ‘தமிழ் போகுது’ என கிண்டல் செய்கிறார்கள் என்று.
எல்லாக் காலங்களிலும் மாணவருக்குத் தமிழ் போதிப்பது மட்டுமல்லாமல், பொது அறிவும், தமிழ் உணர்வும், அரசியல் அறிவும் ஊட்டுபவர்கள் தமிழாசிரியர்களே! தகுதியுள்ள பலருக்கும் இன்று வேலை இல்லை. வேலை கிடைத்தாலும் நேரான ஊதியம் இல்லை. பலர் இன்று நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விழாக்களிலோ தமிழ் காது கிழிபட அலறுகிறது!
very good and nice expressions towards moral society
கட்டுரையை படிங்க….கொஞ்சம் உறுத்தும்… நிறைய வலிக்கும்…தமிழ்ச்செல்வன் ன்னு பேரு வச்சிருக்கிற எனக்கு தாங்கவே முடியலை தான்…என் செய்ய???
உண்மை தான் ஆனால் வெட்கக்கேடு. வாழ்க தமிழ்.
vankkam ayya kannan. indriya tamil padithavaargalin unmai nilaiyini eluthukkala valigalal unarthiviteergal. அரசு விழாக்களிலோ தமிழ் காது கிழிபட அலறுகிறது enbathe nitharsanamana unmai. valga thamizh
‘திசை நோக்கித் தொழுகின்றேன்!’ நன்றி!
Idhai than Bharathi Tamiz ini mella sagum enraro ?
Mannikkavum en kaipesiyilirunthu
Tamizhil padhivu seiya mudiavillai.
அவர்கள் முன்னோடிகள் . இப்பொழுது அதுபோல் பார்ப்பது அரிது. வணங்குகிறேன் இவரையும் அவரையும்.