பழமொழி- கைம்மண் அளவு 20

image1 (5)
நாஞ்சில் நாடன்
பழமொழி, சொலவம், சொலவடை யாவும் ஒரு தாய் மக்கள். அவை மக்கள் மொழியின் நயமும் சுவையும் ஆழமும் கூட்டுபவை. ஒன்றைச் சொல்லி, மற்றொன்றைப் புரிய வைப்பவை. விரிவான பொருளைத் தேடிப் போகப் பணிப்பதே அவற்றின் பண்பும் பயனும் ஆகும். தமிழ் இலக்கணம் பேசும் குழூஉக் குறி, இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு யாவற்றுக்கும் பழமொழிகளில் எடுத்துக்காட்டு்கள் உண்டு.
மொழிக்குள் புதைந்து கிடக்கும் பழமொழிகள் பற்றி விரிவான ஆய்வுகள் நடத்திய பல்கலைக்கழகங்கள், தடித்தடியான ஆய்வேடுகளைத் துறை நூலகங்களில் பதுக்கி வைத்திருக்கின்றன. புத்தகங்களில் தொகுப்பது என்று வரும்போது, பழமொழி களைக் கழுவித் துடைத்து, பூ வைத்துப் பொட்டிட்டு, அவற்றின் மண் வாசமும் மொழி வாசமும் நீக்கி, இயற்கை அழகை ஆபாசப்படுத்தி விடுவார்கள். வடநாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘கர் கா முர்கி, டால் பராபர்’ என்று. பொருள் ‘வீட்டுக்கோழி, பருப்புக்குச் சமானம்’ என்பது.
பழமொழிகள் தமிழ் மொழிக்கேயான சிறப்பு என்று இல்லை. எம்மொழி பேசும் மக்களானாலும் மிகத் தாராளமாகத் தமது உரையாடல்களின்போது பழமொழி பயன்படுத்துகிறார்கள். நகர்வயப்பட்டவர், தமது சொந்த வேர்களைத் துண்டித்து அந்நியப்பட்டுப் போனதனால், அவர்களிடம் பழமொழிகள் தமது செல்வாக்கை இழந்து நிற்கின்றன. அவர்கள் நகரத்துக் கொச்சை வழக்கில் புழங்குகிறார்கள்.image2 (1)
சங்க இலக்கிய நூல்களின் அங்கமான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அறியப்படும் பதினெட்டு நூல்களில் மூன்றாவது நூல், ‘பழமொழி நானூறு’. நேரிசை வெண்பாக்களும் சில இன்னிசை வெண்பாக்களுமாக நானூறு பாடல்கள். முன்றுரை அரையனார் இயற்றியது. அற்புதமான பழமொழிகள் நானூறைப் பாடல்கள் மூலம் விளம்பும் நூல்.
‘மரம் குறைப்ப மண்ணா மயிர்’ என்கிறது ஒரு பாடல். மரத்தினை வெட்டிக் குறைக்கும் வல்லமை உடைய கருவிகள், மயிர் வெட்ட உதவ மாட்டா என்பது பொருள். தொழில் வெட்டுவதுதான் என்றாலும், கருவிகள் வேறு வேறுதானே! இன்னொன்று ‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ எனும் பழமொழியைக் கையாள்கிறது. தெங்கம் பழம் எனில் ‘தேங்காய் நெற்று’ என்று பொருள். தென்னையின் மாற்றுச் சொல் தெங்கு.
சங்க இலக்கியங்களில் தென்னையைத் தேடிக் காணாமல், ‘சங்க காலத்தில் தமிழகத்தில் தென்னை மரம் இல்லை’ என்று ஆய்வு நடத்துகின்றன தமிழ்த் துறைகள். ஒரு நாயிடம் முதிர்ந்த தென்னை நெற்றுக் கிடைத்தால் அதை வைத்து நாய் என்ன செய்யும்? உடைத்துத் தின்ன இயலுமா? சும்மா உருட்டிக் கொண்டிருக்கும், அவ்வளவே!
சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது, ‘நாய் பெற்ற தெங்கம் பழம்’ எனும் தலைப்பில் நீண்ட கட்டுரை எழுதினேன். சமீபத்தில் கோலாலம்பூரில் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது சிறப்பு மலர் வெளியிட்ட புகழ்பெற்ற இதழ் ஒன்று, எனது கட்டுரையை முழுமையாக மறு பிரசுரம் செய்தது. தெங்கம் பழம் என்று நான் தொல் தமிழ் மொழியைச் சொன்னேன். மேற்கொண்டு உரை எழுதுவது உங்கள் ஆற்றல்.
‘மச்சேற்றி ஏணி களைவு’ என்கிறது இன்னொரு பாடல். மச்சின் மீது ஏணி வைத்து ஏற்றி விட்ட பின் ஏணியை எடுத்து விடுவது என்று பொருள். ‘ஏற விட்டு ஏணி எடுப்பான் ஆம்பிளைச் சாதி’ என்று பழைய சினிமாப் பாடல் வரியொன்று நினைவில் ஓடுகிறது. ‘உமிக் குற்றக் கை வருந்தும் ஆறு’ என்பது வேறொரு பாடலின் வரி. உலக்கை போட்டு நெல்லைக் குத்தி, அதனால் கைவலி எடுத்தால் அதற்கு அர்த்தம் உண்டு. உமியைக் குத்தி எவரேனும் கைவலி தேடிக் கொள்வார்களா? இன்று தமிழ்க் கவிதை எனும் பெயரில் பெரும்பாலும் உமியைக் குத்தி நமக்குக் கைவலி எடுக்கிறது!
மராத்தி மொழியில் அடிக்கடி சொல்லும் பழமொழி, ‘நாச் ந ஆலா, ஆங்கணு தேடா’ என்பது. ‘நாட்டியம் ஆடுவதற்குத் திராணியில்லை, முற்றம் கோணலாக இருக்கிறது என்று சொன்னாளாம்’ என்பது வெளிப்படையான பொருள். செய்யும் தொழிலில் தேர்ச்சி இல்லை. ஆனால் கருவியை, வாகனத்தைப் பிறரைக் குறை கூறுவார்கள் அல்லவா, அதற்கான பழமொழி இது.
இதற்கு இணையான தமிழ்ப் பழமொழி உண்டு. ‘ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்’ என்பது அது. இந்தப் பழமொழியில் ஒரு சொல்லை நீக்கிப் பயன்படுத்துகிறேன். நமக்கு எதற்கு வம்பு, ஏற்கனவே நம் எழுத்தை வாசிக்காமலேயே விலையில்லாப் பட்டங்கள் வழங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் இன்றும் பரவலாகப் பேசப்படும் பல பழமொழிகளை நாம் இங்கு பேசவியலாது. ஒன்று, ‘பாலியல் வக்கிரம்’ என்ற பகுப்பில் சேர்த்து விடுவார்கள், அல்லது ‘சாதியை இழிவுபடுத்துகிறான்’ என்ற கற்கள் எறியப்படும். பழமொழிகளில் இருந்து எந்தவொரு சாதியும் தப்ப முடியாது. ‘வெள்ளாளன் போன இடமும் வெள்ளாடு போன இடமும் வெட்டை’ என்று எழுதினால் சங்கங்கள் என் தலைக்கு விலை வைக்கும். இதைவிடக் கடுமையான பழமொழி கள் கைவசம் உண்டு. எவையும் நான் கண்டுபிடித்ததல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு புழக்கத்தில் இருப்பவை.
கொங்கு நாட்டில், ‘கோமணம் பீ தாங்குமா?’ என்றொரு பழமொழி. வேண்டுமானால் ‘கௌபீனம் மலம் தாங்குமா?’ என்று வாகீசக் கலாநிதி கி.வா.ஜகந்நாதன் பாணியில் சுத்தப்படுத்தலாம். பழமொழி கோவணத்தையும் மலத்தையும் பேசினாலும், அது உணர்த்தும் பொருள் அதுவல்ல. ‘தேவையற்று எதற்கு எடுத்தாலும் அச்சப்படாதே’ என்கிறது மலையாளப் பழமொழி.
பழமொழி என்பதை மலையாளிகள் பழஞ்சொல் என்கிறார்கள். ‘ஆனைக்கு பேடிக்காம், லொத்திக்குப் பேடிக்காமோ?’ என்பதந்தப் பழமொழி. அதாவது யானைக்கு பயப்படலாம் அது நியாயம், ஆனால் யானை விட்டைக்கு அஞ்சலாமா? ஆனால் அஞ்சுகிறோம், நாட்பட்ட யானை லொத்திகளுக்கும்.
‘சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் – ஊர்ச்சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பார்’ என்கிறார் பாரதியார்.என் தோழர் ஒருவர், மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் காரோட்டினார். தேவைக்கு ஏற்ப பெரிய பையைத் தூக்கிக்கொண்டு சந்தைக்குப் போய், வேண்டிய காய்கறிகளை இலவசமாக வாங்கித் தன் வீட்டுக்குக் கொண்டு போய் விடுவார். இதில் அந்த ஆட்சித் தலைவரைக் குறை சொல்ல முடியாது. லொத்திக்கும் அஞ்சுபவரை என்ன செய்ய இயலும்?
மலையாளத்தில் இன்னொரு பழமொழி, ‘அண்ணான் சாடிந்நு மண்ணான் சாடாமோ?’ என்று. அண்ணான் என்றால் அணில்; மண்ணான் எனில் வண்ணான்; சாடி என்றால் குதித்தது எனப் பொருள். உயர்ந்த மரக்கிளையில் இருந்து அணில் குதித்தது என்று வண்ணான் குதிக்க இயலுமா? அண்ணானுக்கு மண்ணான் எதுகை அவ்வளவே! ஏன் வண்ணானை ‘மண்ணான்’ என்றனர். உவர் மண்ணைக் கொண்டு துணி வெளுப்பவன் என்பதனால். இதை மனதில் கொண்டுதான், ‘துணி வெளுக்க மண்ணுண்டு தேச முத்துமாரியம்மா’ என்று பாரதி பாடினார்.
எல்லோருக்கும் தெரியும் கடுக்காய் என்பது மலமிளக்கி என்பது. ‘அவன் எனக்குக் கடுக்கா கொடுத்திட்டான்’ எனும் வழக்கு அது கருதி ஏற்பட்டதுதான். கடுக்காய் பொடியைக் கரைத்துக் கொடுத்தால் அவசர அவசரமாக டாய்லெட்டுக்கு ஓட வேண்டியதிருக்கும். பாரதி மணி அண்ணா சொல்வார், ‘கடுக்காயைத் தொட்டானாம்… கோமணத்தை அவிழ்த்தானாம்…’ என்று. அதன் பொருள், ‘கடுக்காய் அரைத்துக் குடிக்கக் கூட வேண்டாம், அதைத் தொட்டாலே போதும், பேதியாகும்’ என்பது.பாவலர் இரணியன் சொன்னார் ஒரு நாள், ‘ெசப்பு வனைய மாட்டாத கொசவன், மொடாவுக்கு அச்சக்கிரயம் வாங்கின மாதிரி’ என்று.
குயவன் எனில் கலயம், தோண்டி, சட்டி, பானை, குடம், குலுக்கை, மொடா யாவுமே வனையத் தெரிந்த தொழிலாளி. ஒருவனுக்கு மண் செப்புக்கூட வனையத் தெரியாதாம், அவன் ஆகப்பெரிய மண்பாண்டமான மொடா வனைவதற்கு அச்சாரம் – அட்வான்ஸ் – முன்பேறு வாங்கினானாம். இங்கு அச்சாரம் எனும் சொல்லுக்கு ‘முன்பணம்’ என்று பொருளைத் தாண்டி, ‘அச்சக்கிரயம்’ எனும் சொல் ஆளப்படுகிறது.
மொடா வனையச் சொல்லி விட்டு, பின்பு வனைந்தான பிறகு, காசு கொடுத்து வாங்கிக் கொள்ளாமற் போனால் என்ன செய்வது எனும் அச்சத்தின் காரணமாகப் பெறப்பட்ட கிரயம் அல்லது விலை, அச்சக்கிரயம். ஆகா, இவைதான் மொழிக்குள் புதைந்திருக்கும் தங்கக் காசுகள் என்பேன். இங்கு குயவன் என்பது குயவனல்ல, மொடா என்பதும் மொடாவல்ல.
திருநெல்வேலிச் சீமையில் சொல்வார்கள், ‘நக்குகிற நாய்க்கு செக்கென்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா?’ என்று. எண்ணெய் ஆட்டிய செக்கை நாய் நக்கப் போவது அதில் ஒட்டியிருக்கும் புண்ணாக்குத் துணுக்குகளுக்காகவும், வாசமான எண்ணெய்ப் பிசுபிசுப்புக்கும். அதற்கு ஆசைப்பட்டே, செக்கென்று நினைத்துக் கொண்டு நாய் சிவலிங்கத்தையும் நக்கப் போகும். இலக்கிய உலகிலும் சிலர் செக்கென்று நினைத்துத்தான் என்னையும் நக்கிப் பார்க்கிறார்கள்.
நாஞ்சில் நாட்டில் சொல்வார்கள், ‘எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீருவான்’ என்று. ஒரு கருப்பட்டியையே பதினாறாக உடைத்துத்தான் கடிக்கவே முடியும்! இதிலெங்கே விழுங்குவது? சிலர் பீற்றிக் கொள்வார்கள் தமது அதிக சாமர்த்தியம் குறித்து! அதற்கான எதிர்வினை இந்தப் பழமொழி. கருப்பட்டி பார்த்தே இராதவர்களுக்கு இது தகவல்…
ஒரு கருப்பட்டி அரைத் தேங்காய் அளவுக்கு இருக்கும், சின்னதானால். பதநீர் அல்லது தெளுவு அல்லது நீரா எனப்படும் பனைமரத்தின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துப் பாதுகாப்பது. அதன் உத்தேசமான மறு சொல், பனை வெல்லம். கருப்பட்டியில் சிறப்பானது, சின்ன வட்டு, உடங்குடிக் கருப்பட்டி. கிலோ ரூ.240 முதல் ரூ.280 வரை. எந்தக் கலப்படமும் ரசாயனமும் சேராத, நோயாளியும் பயன்படுத்தும் நாட்டார் இனிப்பு. நமக்குத்தான் கிலோ ஆயிரம் ரூபாய் விலையில் இனிப்புகள் உள்ளனவே!
கொங்கு நாட்டுப் பழமொழி ஒன்றினை மாற்றிச் சொல்கிறேன். ‘ஆண்டிக்குப் பொறந்தவன் அதிகாரம் செய்கிறான். கனவானுக்குப் பொறந்தவன் கையைக் கட்டிக்கிட்டு நிற்கிறான்.’ இங்கு ஆண்டி எனப்படுபவர் எளிய சாதிக்காரர், கனவான் எனப்படுபவர் வலிய சாதிக்காரர். இந்தப் பழமொழியின் உட்பொருளை யோசித்துப் புரிந்துகொள்ளுங்கள். அசல் பழமொழியையும் அதன் உட்பொருளையும் எழுதி விட்டு நான் கோவையில் குடியிருக்க இயலாது.
மறுபடியும் பாண்டிச்சேரி போனபோது, மூத்த சம்பாதி கி.ரா. வண்டி வண்டியாகப் பழமொழிகள் சொன்னார். நாட்டுப்புறக் கதைகளுக்கும் சொலவடைகளுக்கும் பாலியல் கதைகளுக்கும் அவர் சுரங்கம். 92 வயதானவர் இன்னும் கையினால் எழுதிக் கொண்டிருக்க இயலாது. எந்தக் கூறுள்ள அரசாங்கமும் அவருக்கு இரண்டு உதவியாளர்கள் கொடுத்து, ஷிஃப்ட் முறையில் எழுதிக்கொள்ள வேண்டும், அவர் சொல்லச் சொல்ல. ஆனால் கூறுள்ள அரசாங்கங்களுக்கு நாம் புரந்தரனார் போலத் தவம் செய்ய வேண்டும்.
நடு நாட்டுச் சொல்லகராதி தொகுத்த தம்பி கண்மணி குணசேகரனை அண்மையில் விருத்தாசலத்தில் சந்தித்தபோது, பேச்சுவாக்கில் சொன்னார். ‘சற்று ஏச்சுப் பட்டாலும் பொருட்டில்லை’ என்று, தற்குறிப்பேற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே தருகிறேன். ‘ஆம்படையான் அடிச்சான்னு, கொழுந்தனாரு ………. கடிச்சாளாம்’ என்பதது. இதற்கு நான் உரையெழுத விரும்பவில்லை. ஆழமான பாலியல் உறவுகள் பேசும் பழமொழி இது. பழமொழியை திருப்பிப் போட்டும் வாசிக்கலாம்.
தமிழ்நாட்டுப் பழமொழிகள் தனி நூலாக எழுதப்பட வேண்டியவை. ‘குங்குமம்’ வாசகர்களுக்காக ஒரு விள்ளல் மட்டுமே! ‘மரத்தின் கீழ் ஆகா மரம்’ என்பது நமக்குத் தெரியும். ‘யானை போனால் அதன் வால் போகாதா?’ என்பதும் தெரியும்.பழமொழிகள் பல அபூர்வமான தமிழ்ச் சொற்களைத் தங்கரியம் செய்து வைத்திருக்கின்றன. அந்தச் சொற்களை அகராதிகளில் காண இயலாது. இலக்கியச் சான்றுகளும் தர இயலாது.
‘அவனவனுக்கு ஆயிரத் தெட்டு வேலை,அவயானுக்கு மண்ணு பறிக்கப்பட்ட வேலை’என்பதோர் எடுத்துக்காட்டு. இங்கு அவயான் என்றால், நடுநாட்டில் அகவான், மலையாளத்தில் பெருக்கான், தமிழில் பெருச்சாளி. இப்போது பழமொழி அர்த்தமாகும்.ஒரு நாளிதழின் கேலிச் சித்திரப் பகுதியில் சமீபத்தில் கண்ட பழமொழி, ‘பேய்க்குப் பேன் பார்த்த கதை’ என்ற ஒன்று. இந்திய நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பேய்களுக்குத்தானே பேன் பார்க்கிறோம்!
– கற்போம்…

ஓவியம்: மருது

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to பழமொழி- கைம்மண் அளவு 20

  1. Senthil சொல்கிறார்:

    இப்படி பயந்து பயந்து பாதி பாதியாக பழமொழி, படிக்க வேண்டியது இருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s