நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

Harani thi
முனைவர் ந.பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-1
.Added: January 13th, 2014
நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக இருந்து இயக்கி செல்வது கதையாடலில் அவர் பயன்படுத்தும் அங்கதம் என்னும் உத்தியாகவே உள்ளது. நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதினைப்  பெற்றது. இத்தொகுப்பிலுள்ள கதைகளை மையமாகக்கொண்டே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.  கதைக்கான உள்ளடக்கத்தை தேர்ந்தெடுக்கும் நுட்பத்தைவிட கதை உணர்த்தும் உத்திகளிலும் கதையைக் காட்சிப்படுத்தும் விவரணையிலும் இவரது கதை புனைவுத்திறன் வெளிப்படுகிறது. உருவம்,உள்ளடக்கம்,முரண்,முடிவு,நடை என்னும் ஒவ்வொரு உத்திகளிலும் தமது சிறுகதைகளுக்கான இலக்கிய வளமையைக் கூட்டிக்கொண்டே செல்கிறார். இவ்வுத்திகளால் கதையைக் கட்டமைப்பதுடன் வாசகனையும் அக்கதையோடு கட்டுவித்துவிடுகிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. பல உத்திகளைப் படைப்பில் இவர் கையாண்டாலும், வாசிக்கும் உதடுகளில் இளநகையைத் தவழ விட்டு அதே கணத்தில் உள்ளத்தில் அச்சித்திரிப்பு ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தி  வாசகனையும் தன்தலையில் கைவைத்து உட்காரும்படி செய்துவிடுவதே அங்கதச்சுவை ஆகும். இச்சுவை இவரின் கதைநடையில் மிக அதிகமான இடங்களில் சாட்டையாகச் சுழல்கிறது.
கதையாடல் உத்திகள்:
நவீன எழுத்தாளர்கள் தொடக்கக்காலத்து சிறுகதையாளர்களிடமிருந்து படைப்புத்தியாளுமையால் மிகப்பெரும் மாற்றத்தை படைப்புலகத்தில் ஏற்படுத்தியுள்ளனர். நாஞ்சில்நாடன் தமது சிறுகதைகளில் நடப்பியலை மிகமிக எதார்த்தத் தன்மையுடன் சித்தரித்துக் காட்டுவதில் வல்லமைப் பெற்றவராக உள்ளார்.
“முக்கால் நூற்றாண்டாக வளர்ந்து செழித்து வகைத்
திரிபு வளம் பெற்று வந்திருக்கிறது சிறுகதை இலக்கியம்.
சிறுகதை என்றில்லாமல் நவீனசிறுகதை என்று வழங்கப்
பெறுகின்ற நிலையை எய்திவிட்டிருக்கிறது. நவீன
இலக்கியங்கள் சமயம்,அரசியல் முதலிய
தளைகளிலிருந்து விடுபட்டு நடப்பியலை சார்ந்து
புனையப்பட்டதோ அன்றிலிருந்துதான் நவீனத்துவக்
கூறுகள் புனைகதை இலக்கியஙகளில் புனைந்து
உரைக்கப்பட்டன.”1
என்ற அ.மாதவியின் கூற்று நடப்பியலை முன்னிறுத்துவது நவீனபடைப்பின் தலைமையாவதை வலியுறுத்துகிறது. இதன்படி நாஞ்சில்நாடன் சிறுகதைகள் நடப்பியலையேப் பிரதானப்படுத்தி வெளிவருகின்றன.
தலைப்பு-உட்தலைப்பு-முடிபு உத்திகள் :
பதிற்றுப்பத்து என்னும் சங்கஇலக்கியப் பனுவலின் அமைப்பைப் போன்று சிறுகதைக்கும் உட்பிரிவுகள் தந்து பிரித்துள்ளார்.இதனை ‘படுவப்பத்து’2 என்ற சிறுகதையில் செய்துள்ளார்.இச்சிறுகதையைக் களம்உரைத்தது,குணம்உரைத்தது,காலம்உரைத்தது,வினைஉரைத்தது என்று பல உட்தலைப்புகளாப் பிரித்து எழுதியுள்ளார்.கதைக்கான முடிப்பை எழுதும் நாஞ்சில்நாடன் அதில் புதியஉத்தி அமைப்பைப் படைத்துக்காட்டியுள்ளார். ஒரு கதைக்கு முடிவை எழுதும்போது அதற்குப் ‘பாதம’; என்று பெயரிட்டு நான்கு வகையான முடிவுகளைப் படைத்துக் காட்டுகிறார்.இந்நான்கு முடிவுகள் அல்லாத ஒரு புதிய முடிவைக்கூட வாசகர் வருவித்துக்கொள்ளலாம் என்ற நவீனக் கட்டமைப்பை வடித்துக்காட்டுகிறார்.இதனை,
“அவரவர் கற்பனைபோல் வெளியீட்டு வசதிகள் சார்ந்து
முற்போக்கு கொள்கை விதிப்படி வாசிப்பு சுதந்திரம்
தந்து கீழ்க்கண்டவற்றுள் எந்த முடிவை பொருத்திக்
கொண்டாலும் இந்த கதாசிரியனுக்கு அதில் முரணோ
பகையோ இல்லை,ஏனெனில் எந்த கதையும் நமது வசதிக்கு
பேசி வைத்ததுபோல நடந்து முடிவதில்லை.மனிதமனம்
எந்த சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டது அல்ல”3
என்ற கதையாடல் கூற்றுகளினூடேயேப் படைத்துக்காட்டுகிறார். இதன்வழி, வாசகனைப் பொறுப்பு மிக்கவனாக ஆக்குவதுடன் அவனுக்குப் படைப்பாளனுக்குரிய தகுதிப்பாட்டையும் வழங்குகிறார். இன்றைய நவீனசிறுகதைப் புனைவுகள் முடிவுகள் இல்லாமலும் வெளிவருதும் படைப்பு உத்தியாக்கப்பட்டுள்ளதும் எண்ணத்தக்கதாகும்.
அங்கத உத்தியமைப்பு:
அங்கதம் என்பது  கவிதைக்கான உத்தியாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கதம் இன்றைய நவீனத்தமிழ்ப் படைப்புலகத்தில் அனைத்துக்குமான உத்தியாகவே விளங்கிவருகிறது. நாஞ்சில்நாடனின் கதைப்புனைவுகள் எதார்த்தத்தை மையச்சரடாகக்கொண்டு இயங்குவதால் அங்கதத்துடன் கூடிய எள்ளல் கலந்த அங்கதநடை அவரின் தவிர்க்க முடியாத படைப்பு உத்தியாக விளங்குவதை உணரமுடிகிறது.தமது கதையில் ‘கும்பமுனி’ என்ற கதாப்பாத்திரத்தை படைத்துக்கொண்டு அதன்வழி தமது அங்தச்சுவையை வடித்துக்காட்டுகிறார்.இதனை,
“உள்மூலங்கான் வெளிமூலங்கான்…என்ன மூலமோ      எழவு…கந்தமூலம்,ஆதிமூலம்,நதிமூலம்,ரிஷிமூலம்…
எல்லாம் நிர்மூலம் கும்பமுனிக்கு,,,”4
“தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால்
காணப்படும் என்றார் தமிழ்முனி ஆனால் பலருக்கு
நம்நாட்ல எச்சங்கறத காக்காஎச்சம்,வெளவால்எச்சம்,
மாட்டுசாணி,பன்னிவிட்டை,யானைலத்தி…”5
“உயிர்பேணும் குடியை அங்கீகரித்து குடிக்கு நன்றி
தெரிவித்து எல்லா மக்களும் குடிமக்கள் என அறிவித்து
அரசு ஆண்டுக்கு ஒருநாள் குடியரசு தினமும் கொண்டாட
விடுமுறை அளிக்கிறது.”6
“அரசு அலுவலகங்களில் தாமதமாக வந்து பலர் தங்களின் சொந்த வேலைகளைப் பார்க்க செல்கிறார்கள். ஒருத்தர் ரெண்டுபேர் அலுவலகம் முடிந்தும் பணி செய்துகொண்டிருக்கிறார்கள். அரசு அலுவலக இயந்திரசக்கரம் பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டே இருக்கின்றது. அரசு சக்கரங்களுக்கு எண்ணெயும் கிரீசும் வாங்க நாடாளுமன்றத்தில் சட்டதிருத்த மசோதா நிறைவேறிக்கொண்டே உள்ளது.”7
என்ற கதையாடலின்வழி கதைகளுக்கானக் கரு தேர்ந்தெடுத்தல், பாவபுண்ணியங்களை விளைவிக்கக்கூடிய வினை,குடிப்பழக்கம்,அரசு நிறுவனம் போன்றவற்றினை அங்கதச்சுவைக்கு உட்படுத்தி அவற்றின் உண்மைநிலையினைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
புகழ்பெற்ற ஓர் எழுத்தாளனுக்கு பத்திரிகையிலிருந்து படைப்புகேட்டு வரும்; கடிதத்தைப்பற்றி எழுதும்போது,
“தீபாவாளி மலருக்கு கதை கேட்டுக் கடிதம். ஆயிரம்
சொற்களுக்கு  மிகாமல் இருக்க வேண்டுமாம்.’தாயோளி’ பள்ளிக்கூடத்துல வாத்தியாராஇருந்திருப்பான் போல…மார்க்கு போடுகத்துக்கு கேள்வி கேக்குறான்.அவனுக்கு அம்மை எழுதுவா கதை. ஆயிரம் வார்த்தை எண்ணி கணக்குபார்த்து. சவம் சுட்ட செங்கல்லு பாரு… வரிவரியா அடுக்கத்துக்கு…”8
என்று காட்டுகிறார். படைப்பு என்பது ஒரு வரையறைக்குள் அடங்காது என்பதையும் இதை உணராத பலர் பத்திரிகை நடத்துகிறோம் என்ற பெயரில் இலக்கிய வியாபாரம் செய்து கொண்டிருப்பதையும் சாடுகிறார்.
சட்டங்களுக்கு மீறிய அநீதிகள் நாட்டில் நடப்பது இயல்பாக உள்ளது.இதனை,
“சட்டத்துக்கு ஒற்றைக்கண் எனில் ஓட்டைகளுக்கு
ஓராயிரம் கண்கள். சட்டத்தின் பாதுகாப்பில் ஓட்டைகளில்
உயிர்வாழும் தேசம் நமது தேசம்.”9
என்ற கதையாடலில் மிக இயல்பாக அங்கதத்தை அமைத்துக்காட்டுகிறார்.
பள்ளி,கல்லூரி அளவிலான் இன்றைய பாடத்திட்டங்களின் நிலைப்பற்றிய எதிர்நிலை விமர்சனங்கள் மக்களிடமிருந்தும்,கல்வியாளர்களிடமிருந்தும் முன்வைக்கப்படுகின்றன.இன்றைய பாடங்கள் மாணவர்களிடம் சுயசிந்தனை,பகுத்தறியும் பாங்கு,வாழ்வியல் தெளிவு,எதிரதாக் காக்கும் அறிவு போன்றவற்றை விதைக்கத் தவறிவிட்டன என்பவை இவற்றுள் அடங்குகின்றன.இதனை,
“எப்போதும் பாடப்புத்தகங்கள் என்பது பால் எடுத்த
தேங்காப்பூ கோருகளைத்தான் உண்ணத் தருகின்றன”10
என்ற எளிமையான உவமையால் இன்றைய கல்விப்பாடத்திட்டத்தின் உள்ளீடற்றத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சத்தைப்பற்றியும் அதனால் விளையும் தீமைகள் பற்றியும் இன்றைய சமூகவியல் படைப்பாளர்கள் அனைவரும் தங்களின் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.நாஞ்சில்நாடனும் அதனை தமது புனைகதைகளில் பதிவுசெய்துள்ளார்.இதனை,
“அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியும்.காட்டிக்கொடுக்க
மாட்டார்கள்..இது இரகசியகாப்புறுதி,அமைச்சர்கள் வாக்குறுதி
இரகசியமும் இது தானோ,எல்லோருக்கும் உபதொழில்
மீன்பிடித்தல்- அவரவர் மீன் அவரவரக்கு-பெரியமீன் எனில்
பெரிய துண்டு மேலதிகாரிக்கு-சிறிய துண்டு தூண்டில்
காரனுக்கு-நடுமுள் -தலை பூமிநாதனுக்கு-நடு துண்டு,அதிகாரி,மேலதிகாரி,மேலுயரதிகாரி,அமைச்சர்,
உயர் அமைச்சர் என மேலேறி செல்லும்…இன்றெல்லாம் மீனும் நாறுவதில்லை,கறுவாடும் நாறுவதில்லை,”11
என்ற சொற்சித்தரிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இதில் மீன் என்பதை குறியீடாகக்கொண்டு விவரித்துள்ளார்.மீன் என்பதை லஞ்சமாகவும் தூண்டில்காரனாக லஞ்சம் வாங்கும் சில அரசு அலுவலர்களையும் அதில் பங்குபெறுகின்றவர்களாகக் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைவரை உள்ள அலுவலர்கள் அனைவரும் இதனை பங்கு போட்டு பிரித்துக்கொள்ளக் கூடியவர்கள் என்பதையும் காட்டியுள்ளார். மனரீதியாகவும்,சட்டரீதியாகவும் லஞ்சத்தைத் தடுப்பதற்கான நடைமுறைகள் பல இருப்பினும் முழுமையான அளவில் அதனை ஒழித்தப்பாடில்லை. இதனை,மிக நுட்பமாக தமது புனைகதையின்வழி நாடன் வெளிப்படுத்தியுள்ளார்.
நாஞ்சில்நாடன் மரபில் முழுமையும் தோய்ந்து நவீனத்துவத்திலும் ஆழமாகக் கால்பதித்துப் படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். நாஞ்சில்பகுதியின் மண்வாசனையைக் கலந்து எள்ளல்தொனியில் ஏதார்த்தத்தை அள்ளித்தருபவராக உள்ளார். அங்கதஉத்தியில் சமூகநிறுவனத்தின் அனைத்து அங்கங்கத்தினையும் தோலுரித்துக்காட்டுபவராக புனைகதையாளர்களில் சிறந்து விளங்கிவருகிறார்.
பயன்பட்ட நூல்கள் :
1.சூடிய பூ சூடற்க – நாஞ்சில்நாடன்.
2.வளர்ச்சிப்பாதையில் மொழியும் இலக்கியமும் – அ.மாதவி.
நாள் : நவம்பர்-7,2013.
இடம் : கடலூர்-1.
    8.11.13இல் இக்கட்டுரை சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி: http://puthu.thinnai.com/?p=24146

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s