நாஞ்சில் நாடன்
‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு மாமா’ என்றொரு திரை இசை சாகித்தியம் உண்டு தமிழில். நேரான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டும். ஆட்காட்டி விரலுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டு, நடுவிரலுக்கு எதிர்மறையான இன்னொன்றை நினைத்துக் கொண்டு, தனது எதிர்பார்ப்பை உறுதி செய்துகொள்ள, முன்னால் நிற்கும் தோழன் அல்லது தோழியிடம் கேட்டுக்கொள்வது,
‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு’ என்று. தேர்வு முடிவுகள் வர இரண்டு நாட்கள் இருக்கும்போது, ‘ஆட்காட்டி விரலைத் தொட்டால் வெல்வேன்’ என்றும், ‘நடுவிரலைத் தொட்டால் தோற்பேன்’ என்றும் நினைத்துக் கொள்வார்கள். வெல்வேன் என்று நினைத்த விரல் தொடப்படாமற் போனால், மறுபடி விரல்களை ஆட்டி மாற்றி நினைத்துக்கொள்வதும் உண்டு.
இதனைப் பலதுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். சாதகம் பார்க்காமல், சாமி சந்நிதியில் பூக்கட்டிப் போட்டுப் பார்த்து முடிவெடுப்பது போல! சிவப்பு வந்தால் கல்யாணம் நடத்தலாம், வெள்ளை வந்தால் நடத்த வேண்டாம். மாற்றியும் நினைத்துக் கொள்வதுண்டு. அஃதே போல்தான் சீட்டு எழுதிப் போட்டு எடுக்கச் சொல்வதும். சாதகம் பார்ப்பது, ஆரூடம் பார்ப்பது, நிமித்தம் பார்ப்பது, பிரசன்னம் பார்ப்பது… யாவுமே அடிப்படையில் நம்பிக்கை சார்ந்தவை. நாளும் கோளும் எனும்போது விஞ்ஞானம் சற்றுக் குறுக்கிட்டாலும் நம்பிக்கைதான் மூல பலம்.
இது ஒருவகையான மன உறுதிக்கான செயல்பாடு எனலாம். நம்பிக்கை இன்றேல் வாழ்க்கை ஏது? பண்டைக் காலத்தில் காதல் வயப்பட்ட பெண்கள் கூடல் இழைத்துப் பார்த்திருக்கிறார்கள். கூடல் இழைப்பது என்றால் என்ன? தலைவன் மேல் காதல் வயப்பட்ட பெண், புன்னை மர நிழலில் அல்லது தாழம் புதர் நிழலில் ஆற்று மணல் மேல் உட்கார்ந்திருப்பார். அன்றெல்லாம் ஆற்றில் மணல் இருந்தது. ஆனால், கல்வித் தந்தைகள் இல்லை. இன்று ஊருக்கு நான்கு கல்வித் தந்தைகள் உண்டு, ஆனால் ஆற்றில் மணல் இல்லை.
ஆற்று மணல் அல்லது கடல் மணல் மேலே, மர நிழலில் உட்கார்ந்திருக்கும் பெண், கண்களை மூடிக் கொண்டு தனது ஆட்காட்டி விரலால், மணலில் வட்டம் வரைவாள். வரையும்போது நினைத்துக்கொள்வாள். வட்டம் கூடுமேயானால், தான் விரும்பும் தலைவனைக் கூடுவாள். வட்டம் கூடாமற் போனால், கூட மாட்டேன் என்று கருதுவாள்.
வட்டம் வரையும் பெண்ணுக்கு, பாதி வட்டம் வந்தவுடன் சந்தேகம் வந்து விடும். ஒருக்கால் வட்டம் கூடாமற் போனால், தலைவனைச் சேர முடியாமற் போகுமே! அது மிகவும் துன்பம் அல்லவா? எனவே வட்டம் வரைவதை நிறுத்தி விடுவாளாம்.கூடல் இழைத்துப் பார்க்கும் பண்டைத் தமிழ் வழக்கம் பற்றி முத்தொள்ளாயிரம் பேசுகிறது.
முத்தொள்ளாயிரம் என்பது, சங்க இலக்கியங்கள் என்று அறிஞர்கள் வரையறுத்த 41 நூல்களில் நாற்பதாவது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டிருந்த பாடல்களில் இன்று கிடைப்பது 108 நேரிசை வெண்பாக்கள் மட்டுமே! 1905ல் இரா.இராகவையங்கார் இதனை முதன்முறையாகப் பதிப்பித்தார். கிடைத்தவற்றுள் 82வது பாடல் மேற்சொன்ன விரலால் சுழி போட்டுக் குறி பார்ப்பதைப் பேசும் பாடல்.
‘கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல்இழைப்பாள் போல் காட்டி இழையாது இருக்கும்பிழைப்பில் பிழை பாக்கு அறிந்து!’‘மதுரை நகர் மன்னனை, கூடல் நகரத்தார் கோமகனான பாண்டியனை என்னால் கூட இயலும் என்றால், வளையமே நீ கூடுவாயாக’ என்று நினைத்து, கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, வட்டம் வரையத் தொடங்கி, வட்டத்தை முடிக்காமல் தயங்கி நிற்பாள். ஏனெனில் வளையம் கூடாவிட்டால், பாண்டியனைக் கூட முடியாமல் போகும் பிழை நேருமே என்ற அச்சம் காரணமாக.
பல கோணங்களில் இன்று நாமும் மனத்தினுள் கூடல் இழைத்துப் பார்க்கிறோம். மழை வருமா, வராதா? மின்சாரம் வருமா, வராதா? பேருந்து வருமா, வராதா? விரும்பிக் கேட்ட இடத்துக்குப் பணியிட மாறுதல் கிடைக்குமா, கிடைக்காதா? மேற்படியான் திரைப்படம் வெளியாகுமா, வெளியாகாதா? வெளியானால் வெல்லுமா, கொல்லுமா? நகரத்து வீடு எனில் தண்ணீர் வருமா, வராதா? ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வருமா, வராதா?
ஆங்கிலத்தில் ‘Caught in between devil and deep sea’ என்றொரு சொல்வழக்கு உண்டு. பொருளாவது, ‘பேய்க்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் சிக்கிக்கொள்வதைப் போல’ என்பது. இதில் என்ன ஒத்தையா, ரெட்டையா வைப்பீர்கள்? உயிர் உறிஞ்சத் துரத்தும் பிசாசா அல்லது ஆழ்கடலா? எது மேலானது ஐயா?
உயிர்க்கொல்லி நோயா அல்லது அதிநவீன மருத்துவமனையா? கல்லாமை எனும் பேயா அல்லது பெற்றோரின் அரை வேட்டியையும் உரித்து விடும் கல்வித் தந்தையரின் கொள்ளைக்கூடங்களா? பெண்டும் பிள்ளைகளும் அருகே இருந்து வாழக் கொடுத்து வைக்காத பணியிடங்களா, அல்லது மாறுதல் ஆணைக்கு இரண்டாண்டு சம்பளத்தைச் சன்மானமாகக் கேட்கும் சொந்தத்துறை மேலதிகாரிகளா?
பி.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி என்று தமிழ் கற்றபின் மாதம் ஏழாயிரம் ரூபாய் ஊதியத்துக்கு வேலைக்குப் போவதா, அன்றேல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் குட்டை மண் சுமக்கப் போவதா?இரண்டில் எந்த ஒன்றைத் தொடுவீர்கள்?
கதையொன்று சொல்வார்கள்… வேங்கைப் புலி ஒன்று துரத்தி வந்ததாம் ஒருவனை.
ஓடிவந்து, கிணற்றுக்குள் தொங்கி ஆல மரத்து விழுதினைப் பற்றி கிணற்றினுள் இறங்க யத்தனித்தானாம். ஆழம் தீர்மானிக்க, கிணற்றினுள் குனிந்து பார்த்தானாம். அங்கே கொடிய விஷ நாகம் ஒன்று படம் எடுத்து நின்றதாம். என்றாலும் ஆலமரத்துக் கிளையில் அண்ணாந்து பார்த்தால், கிளையில் இருந்த தேன்கூட்டிலிருந்து செந்தேன் சொட்டு விழாதா என்ற அங்கலாய்ப்பு.
பாயும் அரசியல் புலிக்கும் படமெடுத்து நிற்கும் அதிகார நாகத்துக்கும் நாம் பயந்து நடுங்கும் வேளையில் சொக்கி நிற்பதோ தமிழ் சினிமா எனும் மாயத் தேன் சொட்டுக்கு…இருமுனை என்றில்லை, பல் முனைப் போராட்டமாக இருக்கிறது வாழ்க்கை. பகிர்ந்து கொள்ள முடிகின்றவை, பிறரிடம். மனதினுள்ளே வைத்துப் புழுங்குகின்றவை? தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு அடுத்தபடியான எண்ணிக்கையில் இன்று அரசு ஊழியர்களின் தற்கொலைகள் அமைந்து விடும் போலும்!
இருதலைக் கொள்ளி எறும்பு என்பார்கள் முன்பு. மூங்கில் போன்று உட்குழாய் உடைய சிறு துண்டு மரத்தில் இருபுறமும் தீப்பற்றிக் கங்கு பாய்ந்து கிடக்க, குழாயின் நடுவே சிக்கிக் கொண்ட எறும்பின் சிக்கல். இந்த இரண்டு முனைகளில் எந்தத் தலையைத் தொடும் கட்டெறும்பு, சிற்றெறும்பு, கடியெறும்பு, பிள்ளையார் எறும்பு, செவ்வெறும்பு, மொசறு எறும்பு, கருத்துவா எறும்புகள்?
கர்நாடக இசை மேதை, மதுரை சோமசுந்தரத்தின் சொந்த சாகித்தியம் ஒன்றுண்டு. அவர் குரலிலேயே உருகி, நைந்து, குழைந்து பாடும் கீர்த்தனை… ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை…’ என்று கடவுளை நோக்கி யாசித்த பாவம். இன்றோ என்ன கவி பாடினாலும் இரங்காத அதிகாரம், இரங்காத குடிமக்கள் நல்வாழ்வுத் துறைகள்… கவிக்கு இரங்காதவை, காசுக்கு மட்டுமே இரங்குகின்றன. எங்கு குறை இரந்து போய் நின்றாலும் அங்கே குரல்வளையை அறுக்கிறார்கள், ஆட்டுக்கு அறுப்பதைப் போன்று.
தனிப்பாடல் திரட்டில், தொண்டை நாட்டு ராமச்சந்திரக் கவிராயர் பாடல்கள் என 27 தொகுக்கப் பெற்றுள்ளன. எல்லீசு துரை அவரது கல்வித் திறமையைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இனி, கவிராயர் பாடல்:
‘ஆவீன, மழை பொழிய, இல்லம் வீழ,
அகத்தடியாள் மெய் நோவ, அடிமை சாக,
மாவீரம் போகுதென்று விதை கொண்டு ஓட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்ல,
தள்ள ஒண்ணா விருந்து வர, சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே!’
பொருள் சொல்ல வேண்டும் என்றில்லை. எளிமையான பாடல்தான். என்றாலும் தேவைப்படும் சிலருக்காக… சினைப்பசு கன்று ஈன, அடை மழை பொழிய, வீடு இடிந்து விழ, மனையாட்டிக்கு பிரசவ வலி எடுக்க, எப்போதும் கூடவே இருக்கும் வேலையாள் செத்துப் போக, வயலில் ஈரப்பதம் போய்விடும் என்று அவசரமாய் விதை நெல் கொண்டு ஓட, வழியில் பார்த்த கடன்காரன் வசூலாகாத பாக்கி கேட்டு மறித்து நிற்க,
நெருங்கிய உறவினர் பக்கத்து ஊரில் செத்துப் போனார் என்று சாவுச் செய்தி கொண்டு ஒருவன் எதிரே வர, தள்ள முடியாத விருந்தாளிகள் வீடு தேடி வர, விஷ நாகம் தீண்ட, உழுது பயிர் செய்த நிலத்தின் வரி தரச் சொல்லி மண்ணாளும் வேந்தர் ஆள் அனுப்ப, குருக்களோ ‘எனக்குத் தர வேண்டிய தட்சணைகளைக் கொடுத்து விடு’ என்றாராம்.
பன்னிரண்டு வகையான துன்பங்கள், ஒன்று சேர்ந்தும் அடுத்து அடுத்தாகவும் அந்த ஏழைக் கிராம விவசாயிக்கு… இதிலெங்கே அவர் இரண்டில் ஒன்றைத் தொடுவது?
இன்று அரசாங்கம் உழுதுண்ட கடமை கேட்கிறது. வியாபாரி அவனது உடல், பொருள், ஆவியும் கேட்கிறான். ராமச்சந்திரக் கவிராயரின் இன்னொரு பாடலும் இறைவனை நொந்து கொள்கிறது.
‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?’
என்றெல்லாம். யார் கற்பித்திருக்க வேண்டும்? யார் ரட்சித்திருக்க வேண்டும்? கடவுள்தான், வேறு யார்?ஆனால், கடவுளுக்குத்தான் எத்தனை அலுவல்கள்?
அரசியல் செய்வோருக்கு முன் ஜாமீன் எடுக்க வேண்டும், முறையான ஜாமீன் எடுக்க வேண்டும், நிபந்தனை ஜாமீன் எடுக்க வேண்டும், விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எத்தனை எத்தனை கவலைகள்!நாம் என்ன செய்யலாம்? வாழ்வேனா அல்லது சாவேனா என்று ‘ரெண்டிலே ஒண்ணைத்’ ெதாடச் சொல்லலாம்!
– கற்போம்..
ஓவியம்: மருது
முந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை படிக்க:- கைம்மண் அளவு
good post. thanks. vanakkam
nice
ayya vanakkam kannan. itha rendile ondrai thodu katturai aagaaruami. thanipadal thogthi ondril Ramachandra Kavirayar padal pathivugal miga arumai avarin padalana “Kallaithan Mannaithaan Kaichitthan” Tamilaga Arasup padaputhagam 6m vagupil ullathu aanal athai alagura solli kodukkum aasiriyargal ularo enbathu kelvikuriye..!
நன்றி!