ராஜவீதி

untitledராஜவீதி

அ முத்துலிங்கம்

ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் இல்லை. பயணிகள் தள்ளுவண்டிகளை தள்ளிக்கொண்டு நிரையாக வெளியே வந்தனர். ’இவராயிருக்குமோ இவராயிருக்குமோ’ என்று எங்கள் கண்கள் பரபரத்தன. வெள்ளைக்கார முகங்களையும், கறுப்பு முகங்களையும் கழித்துவிட்டு இந்திய முகங்களில் கவனத்தை செலுத்தினோம். அவரை வரவேற்க வாங்கிய பூமாலை வேகமாக வாடிக்கொண்டு வந்தது. அவரைக் காணவில்லை.
நாஞ்சில் நாடனை நான் காலம் கழித்துத்தான் கண்டுகொண்டேன். 20 வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை அமெரிக்காவில் திரு சுந்தர ராமசாமியை கண்டு பேசியபோது அவர் நாஞ்சில் நாடன் முக்கியமாக படிக்கவேண்டிய ஏழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். அதன் பின்னர் கையில் கிடைத்த நாஞ்சில் நாடனின் புத்தகங்களை எல்லாம் படித்தேன். சிறுகதைகள் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று நிறையவே எழுதிக்கொண்டிருந்தார். வாசிக்க ஆரம்பித்த காலத்திலேயே இத்தனை பெரிய ஆளுமை தமிழ் இலக்கியத்தில் இருக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டது.  நான் அத்தனை காலமும் படித்தது எல்லாமே வேறு வகையான எழுத்துக்கள். அவரோ நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் எழுதினார். அது புதுமையாக இருந்தது. நகைச்சுவையும் சமூக அக்கறையும் கொண்ட படைப்புகள். முக்கியமாக என்னைக் கவர்ந்தது மரபிலக்கியத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி.
எப்படியோ தொலைபேசி எண் பெற்று அவருடன் ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். கடிதம் எழுதியதும் உண்டு. எட்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு பித்துப் பிடித்ததுபோல அலைந்தது நினைவுக்கு வந்தது. இப்படியும் தமிழில் எழுதமுடியுமா என்ற வியப்பு. இரண்டு நாட்களாக மனம் அமைதி இழந்து தவித்தது. முழு மனித வாழ்க்கையும் ஒரு சிறுகதையில் அடங்கிவிட்டது. சாதாரண கதை போலத்தான் அது ஆரம்பித்தது ஆனால் முடிவுக்கு வந்தபோது மனதின் தவிப்பு அடங்கவில்லை.desktop11
’கொங்குதேர் வாழ்க்கை’ என்பது கதையின் தலைப்பு. 2000 வருடங்கள் பழமையான சங்கப் பாடல்களில் இருந்து ஒரு வரி. 473 புலவர்கள் பாடிய 2381 சங்கப்பாடல்கள் உள்ளன. அதிக பாடல்கள் பாடியவர் கபிலர். ஒரேயொரு பாடல் பாடியவர் இறையனார். அதுதான் ’கொங்குதேர் வாழ்க்கை’ என்று தொடங்கும் பாடல். தமிழ் இலக்கியத்தில் அதிக மேற்கோள்கள் காட்டப்பட்ட பாடல் இது ஒன்றுதான். தும்பி மலர் மலராகச் சென்று தேனைத் தேர்ந்து சேகரிப்பது போலத்தான் மனிதன் தன் வாழ்க்கையை தேர்ந்து தேர்ந்து அமைக்கிறான். அவன் சேர்த்த மூட்டையையே அவன் இறுதிவரை சுமக்கிறான்..
சிறுகதை நாலு வரிகளில் சொல்லக்கூடியதுதான். லைன் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டு வரிசையாக நிற்கின்றன. கதைசொல்லி ஒரு வீட்டில் வாழ்கிறார். சண்டைகள் சச்சரவுகள் என்று குடித்தனக்கார்கள் தினமும் சந்திக்கும் வாழ்க்கை. அதே சமயம் அங்கே கொண்டாட்டங்களும் இல்லாமல் இல்லை. ஒருநாள் முன்னிரவு ஒவ்வொரு வீட்டிலும் தூங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது திடீரென்று நாதஸ்வரத்தில் சங்கதி சுத்தமான தெய்வீக இசை எழுகிறது. தியாகய்யரின் ’சக்கனி ராஜா’ கீர்த்தனையின் இரண்டு வரிகள். ஏதோ பெரும் இழப்பை சொல்ல வந்ததுபோல அத்தனை சோகமாக அந்த இசை கிளம்புகிறது. ‘ஓ, மனமே! ராமனின் பக்தி எனும் ராஜவீதியை விட்டு வேறு சந்துகளில் ஏன் நுழைகிறாய்.’
நாதஸ்வரத்தை வாசித்த கிழவர் சமீபத்தில் மனைவியை இழந்தவர். பிரிவு என்ற கொடிய காற்று அவரை அலைக் கழித்திருக்கலாம். முறையிடுவது போல நாதஸ்வரத்தை மேலே உயர்த்திப்பிடித்து மனதை வருடும் இசையை பொழிகிறார். அவருடைய மகள் எங்கிருந்தோ ஓடிவந்து நாதஸ்வரத்தை பிடுங்கிவிடுகிறாள். கிழவர் மன்றாடுகிறார். அவருடைய ஆற்றாமையை வெளிப்படுத்த அவருக்குள் இருந்த ஒரே கலை அதுதான். மகள் அவரை வீட்டினுள்ளே கூட்டிப்போகிறாள். அந்த வாத்தியத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இசை அதுதான். நாதஸ்வரம் தொலைந்ததோ, கடைக்கு வைத்துவிட்டார்களோ அல்லது விறகானதோ என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.
அமெரிக்காவின் ஹார்ப்பர் லீ, மார்கிரெட் மிச்செல் போன்றவர்கள் ஒரே ஒரு நாவல் எழுதி புகழ் பெற்றவர்கள். இந்தியாவின் அருந்ததி ராயும் அப்படித்தான். நாஞ்சில் நாடன் 25 க்கு மேற்பட்ட கட்டுரை, சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் என்று எழுதியிருந்தாலும் அவருடைய ’கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதை ஒன்றே அவருக்கு தமிழ் இலக்கியத்தில் நிரந்திரமான ஓர் இடத்தை தருவதற்கு போதுமானது. பல மொழிகளில் எழுதிய பல சிறுகதைகளைப் படித்து ஒப்புநோக்கியபோது ’கொங்குதேர் வாழ்க்கை’ உலக இலக்கியத்தில்  தனி இடம் பெறக்கூடிய கதையாகவே எனக்கு தோன்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்ற சொற்றொடர் எங்கே, எப்போது  பிரயோகிக்கப்பட்டாலும் அது உடனே நாஞ்சில் நாடனை என் நினைவுக்கு கொண்டுவரும்.
நண்பர் முழங்கையால் இடித்தார். நாஞ்சில் நாடன் இரண்டு பயணப் பெட்டிகள் நிறைந்த தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார். பள்ளிக்கூடம் விட்டு வெளியே ஓடிவரும் சிறுவனின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி. 20 மணி நேர பயணக் களைப்பு அவர் முகத்தில் தெரியவே இல்லை. அவர் வெளியே வந்த பின்னர் அவர் செய்த காரியம்தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  அப்படியே என்னை ஆலிங்கனம் செய்தார். கண்கள் கலங்கியிருந்தன. இவருக்கு நான் என்ன செய்தேன்? இத்தனை அன்புக்கு நான் அருகதையானவன்தானா? இருபது வருடங்கள் பிரிந்திருந்த அண்ணரைச் சந்திப்பதுபோல உணர்ச்சிகளால் நிறைந்து அவர் முகம் இருந்தது. அத்தனை நாட்களும் பேச்சிலும் எழுத்திலும் நடந்த சந்திப்பு அன்று நேரிலே நிகழ்ந்தது.
அவருடைய நூல்களைப் படிக்கும்போது அவர் பற்றிய ஒரு கற்பனை உருவாகி மனதிலே படிந்திருக்கும். அப்படி ஒன்று என்னிடம் இருந்தது. ஆனால் நேரிலே பார்த்த ஆளுமை மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. என் கற்பனை உருவத்தை பலமடங்கு வியாபிக்க வேண்டியிருந்தது. காலம் கழித்து இவரைச் சந்திக்கிறோமே, எத்தனை வருடங்கள் வீணாகிவிட்டன என்ற நினைப்பே எனக்குள் எழுந்தது. கர்வம் செருக்கு என்ற வார்த்தைகள் நாஞ்சில் நாடன் அறியாதவை. ரொறொன்ரோவில் தங்கிய காலத்தில் அவர் இளம் எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்தித்தார். ஆர்வமாக பார்க்க வந்த எழுத்தாளர்களுடனும், வாசகர்களுடனும் நிறைய நேரம் உரையாடினார். அவருடைய பெருந்தன்மை வேறு பிரபல எழுத்தாளர்களில் நான் காணாத ஒன்று.
அவர் ரொறொன்ரோவில் தங்கிய நாட்களில் நடந்த முக்கியமான விசயம் தொடராக ஐந்து நாட்கள் அவர் செய்த கம்பராமாயண விரிவுரைகள்தான். இந்த வாய்ப்பு ரொறொன்ரோ வாழ் மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடியது அல்ல. நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமும் அதே சமயம் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த அறிவும் கொண்டவர்கள் எத்தனை அரிது என்பது தெரிந்த விசயம். நாஞ்சில் நாடன் கம்பராமாயணம் முழுவதையும் முறையாகப் பாடம் கேட்டவர். கம்பரின் முக்கியமான பாடல்களை எடுத்து அவர் விளக்கிய காட்சி மறக்கக்கூடியது அல்ல.
ராமாயணம் பாடிய கம்பரைப் பற்றி ஒரு கதையுள்ளது. சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். ஒருமுறை சடையப்ப வள்ளல் கம்பர் வீட்டுக்கு விருந்துக்கு வந்தபோது அங்கே ஏற்கனவே கூட்டம் சேர்ந்துவிட்டது. சடையப்பருக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. கம்பருக்கு பெரும் சங்கடமாகிவிட்டது. கம்பர் சொன்னார், ’இங்கே இடம் கிடைக்காவிட்டால் என்ன? நான் அவரை வைக்கும் இடத்தில் வைப்பேன்.’ 10,000 பாடல்கள் கொண்ட கம்பருடைய ராமாயணம் திருவரங்கத்தில் அரங்கேறியது. நூறு பாடல்களுக்கு ஒரு பாடலில் கம்பர் சடையப்ப வள்ளலை வைத்து பாடியிருப்பார். ’நூற்றுக்கு ஒன்று கொஞ்சம் அதிகமில்லையா?’ என்று ஒருவர் கேட்டபோது கம்பர் சாதுர்யமாகப் பதில் சொன்னார். ’ உண்மைதான். சடையப்பர் நூற்றில் ஒருவர் இல்லை. ஆயிரத்தில் ஒருவர்.’ அப்படியே 1000 பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயர் வரும்படி கம்பர் பாடல்களை அமைத்தார்.
நாஞ்சில் நாடனுடைய இடம் தமிழ் இலக்கியத்தில் எங்கே நிற்கும்? அவர் நூற்றில் ஒருவரா, ஆயிரத்தில் ஒருவரா? நிச்சயமாக லட்சத்தில் ஒருவர்தான். இன்னும் பல சிறப்பிதழ்களுக்கு அவர் தகுதியானவர். நாஞ்சில் நாடனுக்கும் பதாகைக்கும் என் வாழ்த்துக்கள்.
நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியம் எனும் ராஜவீதியில் பயணிக்கிறார். அந்தப் பயணம் வெற்றிகரமாக அமையட்டும். அவர் முன்னே. மற்றவர்கள் பின்னே.
நன்றி:  http://padhaakai.com/2015/04/27/rajaveethi/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s