நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18

image1 (3)

நாஞ்சில்நாடன்
அடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக..!
image2 (2)
இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் நடந்து கொண்டிருக்கிறது, தண்ணீர் தாவா தீர்க்க. ஒரு மாநிலத்துக்கு உள்ளேயேகூட இப்படி நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தபோது, தாமிரபரணி தண்ணீரைப் பங்கு வைக்கக் கூடாது என்று போராட்டம் நடந்திருக்கிறது. ஒரே மாவட்டத்தினுள்ளும் காரைக்குடி தண்ணீரை தேவகோட்டைக்கு அனுப்பக்கூடாது என்று போராட்டம் நடந்ததுண்டு.
2012ம் ஆண்டில் 58 நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் 20 மாநிலங்களுக்கும் அதிகமாக சுற்றித் திரிந்தபோது, நண்பர்களுடன் சில ஆயிரம் மைல்கள் காரில் பயணம் செய்திருக்கிறேன். கலிபோர்னியா மாநிலத்தின் ஃப்ரிமாண்ட் கவுன்ட்டியில் வசித்த சடகோபன் திருமலைராஜன், என்னை கிராண்ட் கேன்யான் அழைத்துப் போனார், லாஸ் வெகாஸ் தாண்டி. அந்தப் பயணத்தின்போது சில விவசாயப் பண்ணை முகப்புகளில் பெரிய அறிவிப்பு எழுதி வைத்திருந்தனர். ‘அண்டை மாநிலத்துடனான தண்ணீர்த் தாவா காரணமாக, இந்தப் பண்ணை இந்த வறண்ட கதியில் கிடக்கிறது’ என்பதாக.
Screen Shot 2015-06-15 at 6.37.25 pm
கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பதை எதிர்த்து நாம் போராடும் வேளையில், கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் பீஜப்பூர் மாவட்டத்தில் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க, நீண்ட வரிசையில் 200 குடங்கள் கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கு தங்கும் விடுதியில், பல் துலக்க, முகம் மழிக்க, கழிப்பறை போக, குளிக்க என்று யாவற்றுக்குமாக அறையில் இரண்டு வாளித் தண்ணீர் அளந்து தந்தனர். டார்ஜிலிங் எனும் சொல் கேட்ட உடன், தானே மனதிலும் உடம்பிலும் பனிக்குளிர் ஊடுருவும். அங்கே தள்ளுவண்டியில் கூலிகள் 20 லிட்டர் கேன்கள் பல வைத்துத் தள்ளிக்கொண்டு போவதைக் காணலாம். பெட்ரோல் அல்லது டீசல் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம், தண்ணீரேதான்!
‘பணத்தைத் தண்ணீர் போலச் செலவழிக்கிறான்’ என்று சொல்வார்கள், ஊதாரித்தனம் புகல! ஆனால் இன்று ‘தண்ணீரைப் பணம் போலச் செலவு செய்ய வேண்டும்’ என்று சொல்லும் இடத்துக்கு நகர்ந்து வந்திருக்கிறோம். இந்தச் சூழலில், தண்ணீரை வீண் செய்ய வேண்டாம் என்று மன்றாடுவதற்காகவே இந்தக் கிழமையின் எழுத்து. இது பற்றி ஏற்கனவே பிரபல வார இதழின் வாசகருடன் நான் உரையாடி இருக்கிறேன்.
எல்லோரது வீட்டுக்கும் விருந்தினர்கள் வருவார்கள். நான்கு பேர் என்று வைத்துக்கொள்வோம். வந்து அமர்ந்தவுடன், மின் விசிறி சுழல விடுவோம். இல்லத்தலைவி முதலில் நான்கு பெரிய தம்ளரில் தண்ணீர் கொண்டு வைப்பார். காய்ச்சி வடிகட்டிய சிறுவாணி. தேவையற்றவர் தொடுவதில்லை. சிலர் ஒரு வாய் குடித்து வைப்பார்கள்.
சிலர் அரைத் தம்ளர் குடிப்பார்கள். பிறகு சிறு தீனியோ, தேநீரோ வழங்கப் பெறும். அவர்கள் விடைபெற்றுப் போன பிறகு, மீத
மிருக்கும் தண்ணீரை மறுபடி குடிநீர்ப் பானையில் கொண்டு போய் ஊற்ற மாட்டோம் உறுதியாக. ஆனால், அந்தத் தண்ணீரைக் கழிவுநீர்க் கோப்பையில் கொண்டு போய்க் கொட்டுவது நியாயமா?
என்ன செய்யலாம்? தற்சமயம் பெரிய உணவு விடுதிகளில் ஆர்டர் செய்து தின்ன முடியாமல் மீதம் ஆவதைக் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போவதைப் போல, வந்த விருந்தாளிகளிடம் பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொடுத்து விடலாமா? நடைமுறைச் சாத்தியம் இல்லை. ஆகவே வீணாக்கி விடலாமா? ரயில் பயணங்களில் வாங்கும் தண்ணீர் பாட்டிலின் மிச்சத்தைப் பலரும் கையோடு எடுத்துப் போகிறார்கள். அவர்கள் பொறுப்புணர்வு வாழ்க! சிலர் அலட்சியமாக வண்டியிலேயே விட்டுப் போவார்கள். ரயில் பெட்டியைச் சுத்தம் செய்வோர், தண்ணீரைக் கொட்டி விட்டு, காலி பிளாஸ்டிக் சேமித்துக் கொள்கிறார்கள்.
நீங்கள் முனகுவது கேட்கிறது, ‘என்னதான் செய்யச் சொல்கிறார்’ என்று. மாற்று வழியொன்று தோன்றுகிறது. வீட்டு மனைகளில் மண் உடையவர் செடியொன்று நட்டு, எச்சில் தண்ணீரைச் செடியின் வேரில் விடலாம். வீட்டைச் சுற்றி மண்ணே இல்லாமல் கான்க்ரீட் போட்டவர்கள், அடுக்குமாடிகளில் வசிப்போர் தொட்டிச் செடி வளர்க்கலாம். சாக்கடைக்குப் போகும் நீரை அதற்கு உயிர்த் தண்ணீராய் ஊற்றலாம். மூத்த தமிழ் எழுத்தாளர் அம்பை, தனது மும்பை வெர்ஸோவா பீச் சாலையில் இருக்கும் ஃபிளாட்டில் இருபது, முப்பது தொட்டிச் செடிகள் வைத்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரும். அவற்றுள் பல செடிகளுக்குத் தமிழும் கற்றுத் தந்திருக்கிறார், உரையாட.
அண்மைச் செய்தியொன்று, மத்திய அமைச்சர் ஒருவர் தனது சொந்த சிறுநீரைச் சேமித்துச் செடிகளுக்கு ஊற்றுகிறார் என! அவர் தன்னைக் காண வரும் பார்வையாளர் சிறுநீரையும் சேமிக்கலாம். அல்லது என் இரண்டரை வயதுப் பேரன் சித்தார்த்தன் செய்வதைப் போல, நேரடியாகவே செடிகளுக்குப் பாய்ச்சலாம். நான் என்ன செய்கிறேன் என்பதை இடக்கரடக்கல் கருதி இங்கே தவிர்த்துச் செல்கிறேன்.Screen Shot 2015-06-15 at 6.38.18 pm
அண்மையில் புதுச்சேரியில் ‘வட கரை’ நூல் அறிமுக விழாவுக்குச் சென்றிருந்தபோது, புதுவை திருக்குறள் மன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் பேசிக்கொண்டிருந்தார். எண்பது வயது கடந்த பெரியவர், காந்தியவாதி, தீவிர வைணவர், கிருஷ்ண தேவராயரின் படைத்தளபதி போலத் தோற்றப் பொலிவு கொண்ட அவர் சொன்னார், ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கோப்பையில் 7 லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது என்று. அவர் ஜெயராம் ஓட்டலின் பொது மேலாளர், எனவே தகவல் சரியாகவே இருக்கும்.
அனைத்து உணவு விடுதிகளிலும் வைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில், குடிக்கப்படாத தண்ணீர் கீழே கொட்டப்படுகிறது. திருமண விருந்துகளில் குடிக்க என 300 மி.லி அல்லது 500 மி.லி பாட்டில்கள் வைக்கப்படுகின்றன. ஒரு வாய், அரை வாய் குடித்த பின் வீணாக்கப்படுகின்றன. தண்ணீர் சிரமம் உணர்ந்த சிலர் மட்டும் மிச்சத் தண்ணீரைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். புத்திசாலிகளான சிலர், கை கழுவி வாய் கொப்பளிக்கப் போகும் தண்ணீர் அசுத்தமானதாக இருக்கும் என்று அறிந்து, அங்கே பாட்டிலைக் கொண்டு சென்று பயன்படுத்துகிறார்கள்.
வறண்ட பூமியில் வாழும் கிராம மக்கள், மழைத் தண்ணீரை வடிகட்டிச் சேமிக்கிறார்கள். அதற்காகவே தோதாக, கூரையின் ஓவுகள் இருந்தன. கலங்கிய ஊருணி நீரைத் தேத்தாங்கொட்டை போட்டுத் தெளிய வைத்துக் குடிக்கிறார்கள். இன்றும் செட்டிநாட்டில், வட இந்தியாவின் பல மாநிலங்களில் தலைமேல் இரண்டு குடமும் இடுப்பில் இரண்டு குடமுமாக நடக்கிறார்கள் பெண்கள், தூரம் கடந்து.
கனடா ஏரிகள் நிறைந்த தேசம். அங்கும் மழை பொய்த்துப் போனதெனில், ‘வாகனங்களைத் தண்ணீர் கொண்டு கழுவலாகாது’ என மாநகராட்சி அறிவிக்கும். மக்கள் அதை பொறுப்பாக அனுசரிப்பார்கள் என்றும் அறிந்தேன். அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிகோவில் அல்புகர்க் மாநகரில் தங்கியிருந்தபோது நண்பர் ராஜன் பிள்ளை சொன்னார், முற்பகல் பத்து மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அனுமதி இல்லை என்று! சூரிய வெப்பத்தால் அதிக நீர் ஆவியாகி விடும் என்பதால் இந்தத் தடை.
நம் நாட்டில் அக்னி நட்சத்திரக் கோடைக் காலங்களில் தண்ணீர்த் தொட்டியில் இருவேளை தினமும் குளிக்கும் கனவான்கள் உண்டு.ஆடம்பரமாக நாம் வீணாக்கும் தண்ணீரை எவ்விதம் சேமிக்கலாம் என நிபுணர் குழு அமைத்துக் கேட்டால் அவர்கள் 47 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்கள் அறிக்கை சமர்ப்பிக்க! அதற்குள் மாந்தர் குடல் கருகிச் சாவார்கள், தாவரங்கள் இலை கருகிச் சாகும். எனவே வீட்டில் தொடங்குங்கள் தண்ணீர் சேமிப்பை!
முன்பு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு லோட்டாவில் தண்ணீர் கொடுப்பார்கள். ‘லோட்டா’ என்பது உருதுச் சொல். ‘நீர்ச் செப்பு’ எனலாம் தமிழில். அதைத் தூக்கி, தண்ணீரை அண்ணாந்து குடிப்பார்கள். மூன்று நான்கு பேர் நோய்த் தொற்று இன்றிப் பகிர்ந்து கொள்வார்கள். எச்சில் படாமல் அண்ணாந்து தண்ணீர் குடிப்பது மூட நம்பிக்கை என்றும், பண்பு அழிந்த செயல் என்றும் கருதியதால், எல்லோரும் தம்ளரில் வாய் வைத்து உறிஞ்சிக் குடிக்கக் கற்றுக்கொண்டோம். சில சமயம் தோன்றுகிறது, நாகரிகம் எனும் பெயரில் வண்டியை மாட்டுக்கு முன்னால் பூட்டுகிறோம் என்று!
Screen Shot 2015-06-15 at 6.37.49 pmஅகில உலகத் தண்ணீர் தாகித்திருப்போர் சார்பாக, என் கோரிக்கை இதுதான். தண்ணீரைப் பயன்படுத்தும்போது சற்று யோசியுங்கள். விரயம் என்பது மனித குலத்துக்கு எதிரான அநீதி.கம்பன் ஒரு சந்தர்ப்பத்தில் உவமையொன்று சொல்வார், ‘அங்கணத்து உகுத்த அமுது’ என்று. அங்கணம் என்றால் முற்றம் அல்லது முன்றில். இந்த இடத்தில் ‘முற்றத்துத் தரையில் கொட்டிய அமுது’ என்று பொருள் தரும். உண்ணீரும் அமுதேதான். அதை முற்றத்தில் சிந்தி வீணாக்குவது முறையன்று.
கிராமத்தில், எங்கள் ஓலைக் குடிசை வீட்டின் பின்புறம் இரு தெங்குகள் நின்றன.
தமிழ்ப் பேராசிரியர்கள் கவனத்துக்கு – தெங்கு என்பது சங்க காலச் சொல், ‘தென்னை’ என்ற பொருளில். எங்கள் தகப்பனார் சாப்பிட்டுக் கை கழுவ, தெங்கு மூட்டுக்குப் போவார். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு தெங்கு. விவசாயிக்குத் தெரியும் தாவரங்களும் தண்ணீரும் பற்றி. திருவள்ளுவர் சொல்கிறார், ‘வான் சிறப்பு’ எனும் இரண்டாவது அதிகாரத்தில்…‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்பது அரிது’மழைத்துளி, அதாவது நீர்த்துளி விழாமற் போனால், பசும் புல்லின் நுனியைக் கூடக் காண இயலாது.
– கற்போம்…
ஓவியம்: மருது
முந்தைய கைம்மண் அளவு கட்டுரைகளை வாசிக்க:-  கைம்மண் அளவு

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18

  1. kannan சொல்கிறார்:

    aiyya vanakkam kannan. thanner patriya sikkana katturai aanal varthaigal kadal pol palamurai eduthu koora vendum thirumba thirumba solli puriya vaikka vendum apothavathu puriyuma…? namathu makkalukku samebathiya ungalathu noolana epadi paaduveno kattruai thoguthiyil ithai pola katturai vanthanthu athu meendum puthup polivudan inge. vasikkum vasaga nanbargal anaivarum unanrnthu kolla vendum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s