கைம்மண் அளவு 12 அச்சம்

image1 (1)நாஞ்சில் நாடன்…
38 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழத் தலைப்பட்ட பிறகு விடுமுறையில் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது, எழுத்தாளர் நகுலனை முதன்முறையாக திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். எனது எண்ணிறந்த குருக்கன்மார்களில் அவரும் ஒருவர்
அவர் காலமாவது வரை அது தொடர்ந்தது. நான் திருவனந்தபுரத்தில் பெண் கட்டியதும் வசதியாகப் போய்விட்டிருந்தது. ‘அனந்தபுரம்’ என்பதைச் சொல் மாற்றி, நீல.பத்மநாபன் ‘பள்ளிகொண்டபுரம்’ என்று தலைப்பிட்டு அவரது சிறந்த இரண்டாவது நாவலை எழுதினார். நெருக்கமான எனது நண்பர், திரைப்பட இயக்குநரின் சொந்த ஊர் ‘பள்ளி கொண்டா’ பக்கம். அது வேலூர் மாவட்டம்.
image2 (2)ஓவியம்: மருது
ஒருமுறை நகுலனை அவர் வீட்டில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். எழுத்தாளர்களே மதித்துப் போற்றும் மிக முக்கியமான தமிழிலக்கியப் படைப்பாளி அவர். அந்தக் காலத்து தமிழ் எம்.ஏ., ஆங்கில எம்.ஏ. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். கல்லூரி போய் வர சைக்கிள் பயன்படுத்தினார். சிக்கலான போக்குவரத்து இடைஞ்சல்களில் சைக்கிளை உருட்டிக்கொண்டே அவர் நடப்பதைப் பார்த்ததுண்டு.
கேசவதாசபுரம் தாண்டி, பருத்திப்பாறை சந்திப்பிலிருந்து சற்றே சாய் கோணத்தில் குன்று ஏறினால் அவர் பயிற்றுவித்த மார் இவானியஸ் கல்லூரி. நான் 1968-1970ல் எம்.எஸ்சி வாசித்த மகாத்மா காந்தி கல்லூரி, கேசவதாசபுரத்தில் மற்றுமோர் குன்றின் மேலிருந்தது. அவர் பயிற்றுவித்த கல்லூரி, அவர் வீடு இருந்த கௌடியார் கொட்டார சாலையிலிருந்து அதிக தூரம் என்று சொல்ல இயலாது.
படிக்கிறபோது அவரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்துப் பேசிப் பழகியது கிடையாது. பிற்காலத்தில் நட்பு பூண்ட பின்னர் யதேச்சையாக ஒருநாள் கேட்டேன், ‘‘ஏன் சார்? பஸ்ஸிலே போகலாம்லா?’’ அவர் இயல்பாகச் சொன்னார், ‘‘பயம்மா இருக்கு!’’அவர் இயல்பும் குணச்சித்திரமும் தெரியும்.
பிற்கால எனது கதாபாத்திரம், 19 சிறுகதைகளில் ஆட்சி செய்த கும்பமுனி, நகுலனின் சற்றே சாய்ந்து திரிந்த கோலம். என் வினாவுக்கு உத்தரம் சொன்னது என்னைப் பகடி செய்ய அல்ல என்றறிவேன். சரியான நேரத்தில், சரியான பஸ் ஸ்டாப் தெரிந்து, சரியான பஸ் பிடித்து, சரியான இடம் சொல்லி டிக்கெட் கேட்டு, சரியான சில்லறை கொடுத்து, சரியான நிறுத்தத்தில் இறங்கி… எத்தனை சிக்கல்கள்?
யோசிக்கலாம் நீங்கள், ‘பின்னே அவர் எப்படி ஆங்கில இலக்கியம் கற்பித்தார்’ என! ஞானியாக இருப்பது வேறு; Street Smartness என்பது வேறு. ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளர் பற்றிச் சொல்வார்கள்… உண்மையோ, கற்பனையோ, யாமறியோம் பராபரமே! ஒரு பாடலுக்கு அவர் மெட்டுப் போட்டுக் கொண்டிருந்தபோது, இசை வரம்புக்குள் அடங்காமல் பாடலின் சொல்லொன்று முரண்டு பிடித்து நின்ற வேளையில், இசையமைப்பாளர் சொன்னாராம் –
‘‘கூப்பிடு இந்தப் பாட்டு எழுதியவனை!’’ என்று.
‘‘சார், அது பாரதி பாட்டுங்க..!’’ என்றார்களாம் பதிலாக.‘‘எவனா இருந்தா என்னய்யா? கூப்பிடுய்யா அவனை’’ என்று கர்ஜித்தாராம் இசையமைப்பாளர். அவர் இசைச்சிற்பி, ஆனால் பாரதியாரைத் தெரிந்திருக்கவில்லை. அதுபோல் எண்ணிக் கொள்ளலாம் நகுலனின் பயத்தையும்.‘திருவருட்பா’ வழங்கிய ராமலிங்க வள்ளலார் தமக்கே நாணமும் பயமுமாக இருந்தது; ‘கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்’ என்கிறார். ‘காட்டுயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன், காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன், பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன், பஞ்சணை படுக்கவும் பயந்தேன், நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால் கீழே நீட்டவும் பயந்தேன், நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தேன் எந்தாய்!’ என்று பாடும் வள்ளலாரின் மனநிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
‘இச்சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ எனப் பாடும் பாரதி, முற்றிலும் வேறான மனநிலையில். அவர், ‘காலா, என்னெதிரே வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன்’ என்று அறை கூவியவர். ஆனால் வள்ளலாரின் பயம் வேறு வகை.மாணிக்கவாசகர் ‘அச்சப் பத்து’ என்றே பத்துப் பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்றை, இசைஞானி இளையராஜா குரலில் இன்றும் கேட்கலாம், ‘திருவாசகம்’ எனும் ஆல்பத்தில். ‘புற்றில் வாள் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்’ என்பது அந்தப் பாடல்.
‘புற்றில் வாழ் அரவும்’ என்றுதானே இருக்க வேண்டும் என அவசரப்பட்டுத் ‘திருவாசக’த்தைத் திருத்தப் போகாதீர்கள். ‘வாள்’ என்றால் ஒலி என்று பொருள் சொல்கிறார் நீ.கந்தசாமிப் பிள்ளை. ஒளி என்றும் பொருள் தருகிறார் பேராசிரியர் கா.சு.பிள்ளை. மாணிக்கவாசகர் ‘எதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்; ஆனால் எவற்றுக்கெல்லாம் அஞ்சுவேன்’ என்று பட்டியல் தருகிறார் ‘அச்சப் பத்து’ பகுதியில்.
‘வன்புலால் வேலும் அஞ்சேன்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்’
வலிமையான கொலைக் கருவியான வேலை அஞ்சமாட்டேன்.
வளையணிந்த வளரிள மாதர் கடைக்கண் வீச்சுக்கு அஞ்சேன்.
‘பிணி எலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்’
எப்பிணி வந்தாலும் அஞ்சேன். பிறப்புடன் இறப்புக்கும் அஞ்சமாட்டேன்.
‘வாள் உலாம் எரியும் அஞ்சேன்;
வரை புரண்டிடினும் அஞ்சேன்’
பேரொலியுடன் உலாவும் தீயை அஞ்சமாட்டேன். மலை புரண்டாலும் அஞ்சேன்.
‘தகைவு இலாப் பழியும் அஞ்சேன்
சாதலை முன்னம் அஞ்சேன்’
பொருத்தமில்லாத பழி வந்தால் அஞ்சேன். சாவுக்கு எப்போதும் அஞ்சேன்.
‘தறி செறு களிறும் அஞ்சேன்
தழல் விழி உழுவை அஞ்சேன்’
கட்டுத்தறியை அறுத்து சினத்துடன் ஓடிவரும் யானையை அஞ்சேன். தீப்போலக் கண்களை உடைய புலியை அஞ்சேன்.
‘மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்
மன்னரோடு உறவும் அஞ்சேன்’
மேகக் கூட்டங்களிடையே உலாவும் இடியை அஞ்சேன். மன்னர்களின் உறவும் அஞ்சேன்.
‘கோள் நிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்’
கொல்ல வரும் நிலை பெற்ற அம்புக்கு அஞ்சேன். யமனின் சீற்றத்துக்கு அஞ்ச மாட்டேன்.
‘இவை எவற்றுக்கும் அஞ்ச மாட்டேன். ஆனால் அம்பலத்து ஆடுகின்ற இறைவனை ஏத்தி, அவன் அருளை அள்ளிப் பருக மாட்டாத அன்பு இலாதவரைக் கண்டால் நான் அச்சமடைகிறேன்’ என்கிறார். இது வேறு ஒரு நிலை. ‘கடவுளுக்கே அஞ்சாதவன் வேறு எவர்க்கு, எதற்கு அஞ்சுவான்’ என்பது அவர் கவலை.
கடவுள் என்பவன், அல்லது என்பவள், அல்லது எனப்படுவது ‘ஆணாகிப் பெண்ணாகி அலியும் ஆனவனா’ என்றெனக்குத் தெரியாது. கருப்பொருளா, உரிப்பொருளா என்றும் அறியேன். எண்ணமா, ஆற்றலா என்பதும் அறிய மாட்டேன்.
ஆனால், எனக்குத் தோன்றுகிறது, கடவுளுக்குப் பயப்பட்ட மக்கள் தப்பு செய்யாமல் இருந்தார்களோ என! குற்றம் செய்தால் பெண்டு, பிள்ளைகள் நன்றாக இருக்காது; அநியாயம் செய்தால் மாடு, கன்று நன்றாக இருக்காது; அறம் பிறழ்ந்து நடந்தால் தோட்டம், துரவு நன்றாக இராது என்றெல்லாம் பயம் இருந்தது மனிதனுக்கு! பாவம், புண்ணியம் என்பன சரியா, தவறா என்ற கேள்வியை ஆன்மிகவாதிகளிடம் விட்டுவிடலாம். ஆனால் அறமற்ற செயல் செய்பவர்களுக்கு எதிராகவே சைவ, வைணவ, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய இலக்கியங்கள் பேசுகின்றன.
‘அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலப்பதிகாரம். அறத்தின் நாயகனாகக் கடவுளையும், அறத்தின் வழியாகச் சமயங்களையும் கண்டார்கள் ஞானிகளும், துறவிகளும், சித்தர்களும். தப்புச் செய்தால் கடவுள் கேட்பான் என்று நம்பினார்கள் சகல தேசத்தவரும், இனத்தவரும். God Fearing என்றே ஒரு சொல்லாட்சி உண்டு ஆங்கிலத்தில்.இன்றோ கோடி கோடியாகக் கொடுக்கிறான் கோயிலுக்கு. ஆனால் கொலைக்கு அஞ்சுவதில்லை, கொள்ளையே வாழ்க்கை நெறி. சூதும், களவும், வஞ்சனையும், வன்புணர்ச்சியும் செய்பவன் அஞ்சுகிறானா இறையை?
இறைவனுக்கு அஞ்சாதவன் நீதித்துறைக்கு அஞ்சுவானா? காவல்துறை பற்றிக் கவலைப்படு வானா? லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கலங்குவானா?
நான் தினசரி பயணம் செய்யும் சாலையின் மருங்கிருக்கும் வட்டாட்சியர் அலுவலகச் சுவரில் பல வண்ணங்களில் கொட்டை எழுத்துக்களில் அறிவிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள், ‘இந்த அலுவலகத்தில் எவரும் லஞ்சம் கேட்டால் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று. எனக்கு பேருந்தில் நிர்வாணமாக உட்கார்ந்திருப்பது போலிருந்தது.
பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்… இரு பாம்புகள், வட்ட வடிவமாக ஒன்றன் வாலை இரண்டாவது பாம்பு கவ்விக் கொண்டிருக்கும். இரண்டாவதன் வாலை முதலாவது கவ்விக் கொண்டிருக்கும். உங்களில் பலரும் கண்ணுற்றிருப்பீர்கள். அந்தச் சிற்பத்தின் பொருள் விளங்கியதில்லை எனக்கு. இப்போது பொருளாகிறது, ஒருவன் மற்றவனைத் தின்ன முயல்வதன் குறியீடு அது என.
சுற்றி வளைக்காமல் சொல்வதானால்… அமைச்சர், முதன்மை அதிகாரியைக் கவ்வுகிறார்; முதன்மை அதிகாரி, கீழதிகாரியைக் கவ்வுகிறார்; அவரோ ஊழியரைக் கவ்வுகிறார்; ஊழியரோ எனில் குடிமக்களைக் கவ்வுகிறார். குடிமக்கள் என்ன செய்வார்கள்? கொல்லும் நச்சுக் குப்பியைத்தான் கவ்வ வேண்டும்?
எதற்காகக் கொலை மிரட்டல், எதற்காகத் தற்கொலைகள், எதற்காக பெண்டு, பிள்ளைகளைத் தூக்கிப் போய் விடுவோம் என்ற அச்சுறுத்தல், எதற்காகக் குடிமக்களை வாட்டி, வதைத்து, முறுக்கிப் பிழிந்து, செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்தல்?
‘தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’ என்று கேட்கிறார் வள்ளுவர். நானந்தக் குறளின் பொருளை சற்று விரித்துப் பார்க்கிறேன். தன் சதையைப் பெருக்கிக்கொள்ள அடுத்தவன் சதையைத் தின்கிற சமூகம்… பிழிந்தெடுத்த எண்ணெயில் ஏற்றும் தீபங்களில் கோயில் விளக்குகள் எரிகின்றன.
எங்ஙனம் பிறன் சதை வெட்டித் தின்பவனுக்கு ஆண்டவனிடம் அச்சம் ஏற்படும்? ஊழலை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்களிடம் ஆண்டவனே கையூட்டில் பங்கு பெற்றுக்கொள்ளும்போது?
அச்சமாக இருக்கிறது எனக்கு! சுவரொட்டிகளில் சிரிக்கும் மனிதர்கள், மருந்து கண்டுபிடிக்கப்படாத நோயின் மொத்த உருவமாகத் தெரிகிறார்கள்.
நகரப் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய காலம் வெகுதூரத்தில் இல்லையோ என்று பயமாக இருக்கிறது ஐயா!
இது வள்ளலாரின் அச்சமா, மாணிக்கவாசகரின் அச்சமா என்றெனக்குத் தெரியவில்லை. குடிமக்களைப் பகை போலப் பார்க்கிறார்கள். அறிதுயிலில் இருந்த ஆண்டவர்கள் கூட, உறக்கத்துக்கு மாத்திரை போட்டுவிட்டு ஆழ்ந்த துயிலுக்குப் போய்விட்டார்கள் போலும்!
உண்மையில், இங்கே நான் எழுத நினைத்திருந்த வரிகள் இவையல்ல. எழுத அச்சமாக இருக்கிறது. வள்ளுவர் சொல்கிறார், ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ என்று.
உங்களில் சிலர் கேட்பீர்கள், ‘நல்லவர் என்று எவருமே இல்லையா’ என்று. இருக்கிறார்கள் ஐயா! அவர்களைத் தெய்வம் போல் தொழலாம், கொண்டாடலாம். அவர் பொருட்டுத்தானே எல்லோர்க்கும் மழை பெய்கிறது!
பிறகு யார்தான் காப்பார்கள் குடிமக்களை? ‘ஊதியம்’ என்பது முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் டிவிடென்ட் என்றும், ‘லஞ்சம்’ என்பது பிறப்புரிமை என்றும் கருதுபவர்களிடமிருந்து சாமான்யர்களைக் காப்பவர் எவர்?
அதிவீர ராம பாண்டியன், ‘நறுந்தொகை’ எனும் நூலில் கூறுகிறார்… ‘எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்’ என்று! ஏழு நிலைகளையுடைய மாட மாளிகைத் தூண்கள் சாய்ந்து, உத்தரங்கள் இற்று, கழுதை மேயும் பாழ்நிலமாக ஆனாலும் ஆகும்!
‘ஆகுமா’ என்று கேட்பீர்களேயாயின், ‘ஆகும்’ என்றே சொல்வேன்.
(கற்போம்…)
 கைம்மண் அளவு: பிற கட்டுரைகள்:-    கைம்மண் அளவு  

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கைம்மண் அளவு 12 அச்சம்

  1. Chitra சொல்கிறார்:

    நீங்கள் குறிப்பிட்ட பேருந்து நிர்வாணத்தை, நான் இன்று உணர்ந்தேன்.

  2. rhsarma65 சொல்கிறார்:

    ஆம்.இன்று நமக்கு எதற்கும் அடம்.பஸ்ஸில் பொகணுமென்றால் அச்சம்.ரயிலில் போகணுமென்றால் அச்சம் விமானத்தில் போகணுமென்றால் அச்சம். நடந்து போகணுமென்றால்க் கூட அச்சம்.இந்த அட்டம் இருப்பது வரை பாம்புகள் நம்மை கவ்வத்தான் செய்யும். இந்த அச்சத்திற்கு யர் காரணம்? நம் தான்! அச்சத்தை த்விர்ப்போம்; விழித்தெழுவோம்

  3. kannan சொல்கிறார்:

    vanakkam aiyya tamilil idugaigal evvaru seivathu kurippugal tharavum
    adipadai lanjam engum paranthu irukindrathu oxygen pola pothuvaga nam oru veedu katta pogirom endru vaithu kolvom. muthalil veedu kattum kotthanr istapatta kadayil allathu therinthavargalidam cement, kambi, kal, sengal, jalli, manal pondra chathangal vanga vendum nam avar sonnavaridathirlirunthu konjal vera all allathu kadayil vanginal ethir vinaigal kandippaga undu. avantaya vangunenga nalla irukkathu ipadithan 3 masathukku munndi avanta vanguna chathanam tharam illa apdi endru solvathu nam arinthathe. pin electician, plumber, painter, endru ellavarum avaravarku kidaikkum commission ku than solvargal ithe oru vagai lanjam kaikooli seyal thanae ithu endru maarum mattrapadum. virivaga eluthuven

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s